Friday, November 16, 2018

ஏரிடஸ்
கவிஞர்.எஸ்ரா பவுண்ட்

நாணம் கொண்ட ஏரிடஸ்
அழகற்ற ஒருத்தியை மணந்தான்,
வாழ்க்கை குறித்து எரிச்சல்,
ஊக்கம் கெட்டு, ஆர்வமிழந்து
தன் நெஞ்சுக்குள், 'எனக்கு நான் பயனில்லை,
'அவளுக்கு தேவையாயின், எடுத்துக் கொள்ளட்டும்'.
பேரழிவுக்குள் தன்னை  அணைத்துக் கொண்டான்.

(மொழியாக்கத்தில்)

Thursday, November 15, 2018

ஒரு ஒப்பந்தம் கவிஞர். எஸ்ரா பவுண்ட்

உம்முடன் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன், வால்ட் விட்மன்_
நீண்ட காலம் உம்மை வெறுத்துள்ளேன்.
பிடிவாத தந்தையின்,
வளர்ந்த குழந்தையாக நான் உம்மிடம் வருகிறேன்

நட்பு நாடும் அகவை இப்பொழுது.
புதிய தடம் உடைத்தவன் நீ,
செதுக்கும் காலம் இது.
நம் வசம் இளங்கன்று ஒரு வேர்.
இடையே கொடுக்கல் வாங்கல் நடக்கட்டும்.

(எமது மொழியாக்கத்தில்)

Wednesday, November 14, 2018

நாட்களில் முழுமை இல்லைஇரவுகளில் முழுமை இல்லை
வாழ்க்கை நழுவுகிறது ஒரு வயல் எலியாக
புல்லை அசைக்காது

எஸ்ரா பவுண்ட்

(எமது மொழியாக்கத்தில்)

டோரா டில்லர்


கவிஞர்.ஜேக் பிரிலட்ஸ்கி

'என் வயிற்றில் நிறைய பட்டாம் பூச்சிகள்!'
புலம்பினாள் டோரா டில்லர்,
அவள் தாய் பெருமூச்சிட்டாள். ' அதில் வியப்பேதுமில்லை
நீ கம்பளிப்பூச்சு உண்டாய்!'

(எமது மொழியாக்கத்தில்)

Tuesday, November 13, 2018

சுவர்க்கத்தின் இருள்

 கவிஞர்.மாட ஜோ சாய் ஸ்கொய்ர்

தனித்து, வெறிச்சோடிய தெருக்களில்,
நான் நடந்தேன்.
குளம் போல் தேங்கிய,
இரத்தத்தின் ஊடாக,
விரிந்த  வளமான, விளைச்சல் மிக்க நிலத்தில்.
கிளர்ச்சியாளர் பெற்ற சமாதானம்
இதுவா ?


எமது தாய், தமக்கைகள்
 நம்பிக்கை இழந்து
அவர்கள் விருப்பத்திற்கு எதிராக,
அறியாமையை சீர்குலைத்து, அத்துமீறி,
கற்பழிப்பவராக, கொள்ளையராக,
குருதி வெறி, குற்ற மூர்க்கராக
அமைதியான நிலத்தில் தடம் பதித்தனர்.

காற்று இனிமை இழந்து
வலியுடன், வலிமை இழந்து.
சொந்த நாட்டிலேயே பிணைக் கைதிகளாக,
முட்கள் அடர்ந்திட,
 மந்தமான எதிர்காலத்துடன்.


இது ஒரு அச்சமான தருணம் அன்றி
 வேறல்ல.
வல்லூறுகள் கொண்டாடும் தினமாக.
 மெச்சத்தக்க நினைவு உடல்கள்,
 குப்பை கூளமாக,
எமது இதயங்கள், ஆன்மா இரத்தம் சொரிய.

ஓ! சிதலமடைந்த,
பிளவுபட்ட, தாய் நாடே! 
உமது ஆறுதலுக்காக, 
அமைதியை தக்க வைத்திடு.
உமது பெண்கள், பிள்ளைகளின்
விருப்ப ஆசை து:
உம்மிடம் வேண்டுகிறோம்,
இனிமையான தாயே,
எம்மீது இரக்கம் காட்டு!

(எமது மொழியாக்க முயற்சியில்)

Monday, November 12, 2018

வேனிற்காலம்

காத்திருக்கிறோம் நாங்கள்.
நீங்கள் இங்கே,
எம்மை உயிர்ப்புடன் வைத்திட,
கொடுங் குளிர்கால கொடுமையிலிருந்து.
பறவைகள் மீண்டன.
நடவடிக்கைகள் உயிர்ப்புடன்.
அவரவர் ஆர்வக் கிளர்ச்சியில் விளையாட்டு.
ஆம்! கோடை மீண்டும் வருகை.
ஆயினும், எமது சிந்தனைகள் அலைகளாக.
மழை ஏன்?
எமது வகுப்பறை தவிர்த்திட.
நடவடிக்கைகள் விலக்கி.

உம்மை புரிந்து கொள்ள எம்மால் இயலவில்லை.
நீ கோடைக் காலமா?
கோடை மழை என்று விளிக்கலாமா?
தயை செய்! தயை செய்!  விடை சொல் .

*சொந்த நாடான சியோரா லியோனிலிருந்து, போட்ஸ்வானாவிற்கு புலம் பெயர்ந்து, கவிஞர்.மாட ஜோ சாய் ஸ்கொய்ர், வேனிற்கால அனுபவத்தை, தனது நாட்டு பருவ நிலையோடு, ஒப்பிட்டு எழுதியது.

(எமது மொழியாக்க முயற்சியில்)

Sunday, November 11, 2018

நாட்டுப்பற்று
நாட்டை விரும்பு, விசுவாசமுடன் இரு;
சக நாட்டினர் மெச்ச, விருப்பத்தை வெல்,
ஆக்க விமர்சனத்தை மதிக்க கற்க.
தவறாக வழிநடத்தக் கூடும் வசீகரிப்புகள் தடுத்திடு.
உமக்குரியதை ஏற்றுக்கொள்,
பிறரிடம் காண் நற்பண்புகளை.
உமது நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்து,
நல் மாற்றம் கொண்டு வா.
பலவிதங்களில் உம்மால் இயலும்.
விசுவாசமிக்க போர்வீரனாக,
சுயநலமற்ற அரசியல்வாதியாக
சமூக தரத்தின் மேம்பாட்டில்.
புவியில் நீ உதித்ததின் நோக்கம் அறிந்து,
நாட்டுப் பற்றே ஒரே வழி
உம் நற்பணிகளால் நின்றிலங்கிடும் என்றென்றும்.
நாட்டுப்பற்று!  நாட்டுப்பற்று! நாட்டுப்பற்று!

கவிஞர். மாடா ஜோ ஜாய் ஸ்கொயர்

*எமது மொழியாக்கத்தில்.

மே 25


ஒளிரும் அழகிய நாள் அது,
அதன் குளிர்ச்சியும் மென் தென்றலும்.
தெருவெங்கும் வண்ணகோலங்கள் மின்னும்.
ஞாயிறு காலை என்றொருவர் கூறிவிடலாம்.

அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சி ஒளியாக,
இறை வழிபாடு உற்சாகம் அளித்திடும்.
விரைவில்,விரைவில், அனைத்தும் அமைதியாக.
துப்பாக்கிகள் ஓசை காற்றில் கலந்தது.

ஒவ்வொரு ஆன்மாவும்  அடைக்கலம் சென்றது.
வண்ணங்கள் புலப்படா தடுமாற்றம்.
சண்டையிடும் பையன்கள் அணிவகுப்பில்.
இருப்பினும் இது, முதல் இராணுவப் புரட்சி.

வாழ்க்கையே சலனமற்று அமைதியாக.
வீரர்களின் குரல் செவிகளை துலைத்தது,
அதிகாரிகள் குன்றுகளை நோக்கி ஓட்டம்,
ஆட்சிக் குலைவுக்கு இட்டுச் செல்ல.

நாம் யாவரும் தடகள வீரர்கள்,
வாழ்க்கையைக் காத்திட ஓட்டம்,
இரக்கமற்ற கொள்ளையர் பிடிகளில்,
கெட்ட நினைவாக அது.

செவிகளில் ரீங்காரம் எழுப்பிக் கொண்டிருக்கிறது,
கடப்பது சிரமம் ஆயினும்.
அதன் கொடூரம் வலி,
வேண்டாம் இவை யாவும் யாம் வேண்டுகிறோம்.

*சியேரா லியோன் நாட்டில், சனநாயக ஆட்சி 1996ல் மீட்டெடுக்கப்பட பிறகு, நிகழ்ந்த இராணுவப் புரட்சி ஒட்டி, நிகழ்ந்த நடவடிக்கைகள் பற்றி, கவிஞர். மாடா ஜோ ஜாய் ஸ்கொயர், எதிரொலிப்புகள்.

*எமது மொழியாக்கத்தில்.

Saturday, November 10, 2018

ஒரு கன்னியின் அறிவுரை


எச்சரிக்கை, ஓ ஏந்திழையே
தேசத்தின் பெருமை நீ
குதறும் ஓநாய்கள் குதூகல உணர்ச்சியில்
உம்மை மலிவாக எண்ணும்
அவர் பசப்பு வார்த்தைகளை செவி மடுக்காதே
பொய்யுறுதிகளை ஏற்காதே
வழுக்கு விலாங்கு அவை
நல்லுணர்வில் தேர்வு செய்
உள்ள வெளிப்பாட்டில் அவரை ஆய்ந்து கொள்
உள்ளடக்கத்தை முகத்தில் வாசிக்க இயலாது
ஒளிந்திருக்கும் ஏமாற்று, எச்சரிக்கையாய் ஓ,
இம் மண்ணின் மகளே
பணி அனைத்தையும் பரிசீலனை செய்திடு
வார்த்தைகளை அல்ல
வீழும் உடல் ஒவ்வொன்றையும் தேடிடு
நீண்ட கூரிய பற்களின் பதிவுகளைத் தேடி
அவை கண்டபின் உண்மையாயிரு
மிதக்கும் காற்று கனவுகளை நீக்கிடு
காற்றாடியாய் பறந்திடு, உண்மையில்
அன்பு காலப் போக்கில் வளர்ந்திடும்.

(கவிஞர்.மாடா ஜோ ஜாய் ஸ்கொயர். 8, மார்ச், 2003ல் உலக மகளிர் நாளையொட்டி, சியாரா லியோன் பல்கலைக் கழக மாணவிகளுக்காக அளிக்கப்பட்ட கவிதை.மொழி பெயர்ப்பில்.)

கனவுகள்நான்காண்டுகளுக்கு பதிலாக ஆறாண்டுகள் கழிந்தன
பேரச்ச அனுபவங்களில்
பேரச்சம் தவிர்த்து ஏதும் இல்லை எம் நிலத்தில்
நான் வாழ்ந்தேன்
குடும்பத்தை விட்டு நீங்கி
தியாகங்கள் சேர்த்தேன்
இன்றைய வெளிச்ச, ஒளிர் நாட்கள்
வசப்பட: கனவுகள்
மீப்பெருமை முந்தியிருக்க காண்கிறேன்
நெடிய பாதையாயினும்
அங்கு சேர்வேன் என்பதறிவேன், மனிதர் பேராழியைக்
கடந்துள்ளார்
சிலர் கலத்தில்
வேறு சிலர் உள்ளத்தில்
வெகு சிலரே முட்படுகைப் பாதையில் நீந்திக் கடந்தார்;
நான் அறிவேன்
புன் சிரிப்புடன் இறுதியில்
பேராழி பெரும் பரப்பாயினும்
எம்மால் கடந்திட இயலும் என்றறிவேன்.

(சைரா லியோன் நாட்டின்," மாடா ஜோ சாய் ஸ்கொய்ர்", போட்ஸ்வனா நாட்டு பல்கலைக் கழக, இலக்கியக் கல்வித் துறை மாணவர்)

(எமது மொழியாக்க முயற்சி)

தனிமையில்


நிரம்பி, நிகரற்று விளங்கிய
எமது கல்லூரி.
கைம்பெண் கோலத்தில்
தனிமையில் வெறுமையாக
சமம் இழந்து.

இளவரசியாக விளங்கியவள் பண்ணை அடிமையாக,
கண்ணீர் கசப்பு கன்னங்களில் வழிந்தோட.
விருப்பாளி எவரும் நிறைவளிக்கவில்லை.
பகைவராக அனைவரும்.

பொலிவிழந்த முகத்துடன்.
செவித்திறன் இழந்து.
வெளுப்பு கண்களை விழுங்கிட
குன்றிய வலிமை தொடைகளில் படர.

ஓ! எம்மை உருவாக்கிய இனிமை நிறை
ஊற்றே
தனிமை, சோர்வு கொள்ளாதே,
மகிழ்நிறை நாட்கள் உம்முன்னே நான் காண்கிறேன்
வலியும் கண்ணீரும் முடிவுறும்.

(சைரா லியோன் நாட்டின்," மாடா ஜோ சாய் ஸ்கொய்ர்", போட்ஸ்வனா நாட்டு பல்கலைக் கழக, இலக்கியக் கல்வித் துறை மாணவர்)

(எமது மொழியாக்க முயற்சி)

Thursday, November 8, 2018

42 வயதினிலேகாலங்கள் கரைந்தன விரைவாக
விடுதலைக் குளத்தில் எம் அகவை நாற்பத்திரெண்டு
உடானாளிகளுக்கு காண்பிக்க என்ன இயலும், எம்மால்?
வலியாகினும், உறுதியான, வளமான பெற்றோரில் ஒருவனாக குரல் எழுப்புவேன்
பசி வாட்டிட, ஆசை அலைக் கழிக்க, ஏழ்மை முகத்திரையில்
எம் குழந்தைகள்
தற்கணம்! அகன்று விட்டனர் அனைவரும் எங்கோ.

தொலை வெளியில் வாழ்க்கை தொங்கலாட
நன் மருத்துவராக சிலர்,  நொடிதொறும் நோய் நொடியில்
தொலைந்து கொண்டிருக்கின்றனர், நோயுற்றோர் இங்கே
நல்லாசிரியனாக அங்கே, பலமிழந்த பள்ளிகள் இங்கே,
தொலை தேசங்களில் அடுக்களை சுத்தம், கார் கழுவி உழைப்பை விற்று ஊழியம்,
எமது நிலங்கள் தரிசாக கேட்பாரற்று,
மீண்டும் தொடர்வேன் கட்டாயம், சார்பு வாழ்க்கை தெரிவு செய்வேன்.

(சைரா லியோன் நாட்டின்," மாடா ஜோ சாய் ஸ்கொய்ர்", போட்ஸ்வனா நாட்டு பல்கலைக் கழக, இலக்கியக் கல்வித் துறை மாணவர்)

(எமது மொழியாக்க முயற்சியில், மற்றுமொரு படி)

Tuesday, November 6, 2018

புதையல்வீட்டிற்கு கீழே, விடிவெள்ளியென்று!
எவர்க்கும் ஆசை உண்டு.
ஏக்கம்  மொண்டு,

கட்டிய வீட்டடியில் கதிமோட்சம் என்று
கொட்டிய சேதி,
கோடி சேர்க்கும் என்று,
உப்பிய வயிறு ஒட்டவில்லை.

ஓயாத ஆசை உறக்கம் கலைக்க,
சொப்பன வாழ்க்கை,
நடப்பியல் கடந்து,
மறப்பியலில் மல்லாந்து.

தும்புக்குதும்புக்கு ஆளவில்லை!
தூசுக்கு குறைவில்லை!
குப்பைக்கு பஞ்சமில்லை!
குண்டும் குழியும் ஏமாற்றவில்லை!

வெட்டவும் கட்டவும்,
தோண்டவும் மூடவும்
ஒப்பந்தம் தொய்வில்லை!

நெடுஞ்சாலை, நீள்சாலை,
குறுக்கு வெட்டில் கோணல் இல்லை!
விழுந்தால் என்ன? உடைந்தால் என்ன?

மூடும்போது பார்க்கலாம்!
முக்காட்டில் பணிமுடிப்பு!

Monday, November 5, 2018

திரைஒரு நூறு தடவைக்கு மேல் கண்டேன்,
சிலர் உரிமை கோரிய இசைக் காட்சி
நெடிய திரை முடிவுக்கு வந்தது,

 தொலைக்காட்சி செய்தியில்,
அதன் இறுதி திரை இறக்கம் அறிந்தேன்.

பூக்கள் சொரிய, குதூகல குரல்கள் ஒலிக்க,
அழுகை சேர, இடி முழக்க இறுதி காட்சி.

குறிப்பிட்ட இக்காட்சியை நான் காணவில்லை
ஆனால் நான் அறிவேன்,
நான் கண்டிருந்தால் என்னால் பொறுத்திருக்க முடியாது,
 என்னை நோயில் தள்ளியிருக்கும்.

என்னை நம்புவீர்,
உலகம் அதன் மக்களும்,  கலாபூர்வ பொழுதுபோக்கு
எனக்கு எதையும் அளிக்கவில்லை.

ஆனாலும், அவர்கள் மகிழட்டும்,
அவர் என்னை விட்டு அகன்றிருப்பர்,
என்னுடைய இடிமுழக்க பாராட்டுகள்,
அவர்களுக்கு.

('கர்டைன்' தலைப்பில் ஆங்கிலத்தில்" சார்லஸ் புகோவ்ஸ்கி" இயற்றியது. தமிழில்)

Sunday, November 4, 2018

லிங்கன் நினைவுச் சின்னம்: வாசிங்டன்.


நாம் சென்று காண்போம் பண்டைய போர்த் தலைவனை
நிலவொளியில் பளிங்கில் வீற்றிருப்பானை,
தனிமையில் பளிங்கில் நிலவொளியில்,
பத்தாயிரம் நூற்றாண்டுகள் அமைதியில்,போர் மறவன்,
இலட்சம்,பல இலட்சம் ஆண்டுகள் அமைதியில்.

அமைதியாக--

ஆயினும் ஓர் அழியாக் குரல்
காலத்தின் காலமற்ற சுவர்களை எதிர்த்து-
பண்டைய போர்த் தலைவன், இராசாளி பறவையாக.

(லாங்ஸ்டன் அக்ஸ் ஆங்கிலத்தில்" Lincoln Monument: Washington")

தமிழ் மொழியாக்கத்தில்.

" மவுண்ட் செயின்ட் மிசல்"

07.08.18, காலை 7 மணிக்கு தொடங்கிய பயணம், " மவுண்ட் செயின்ட் மிசல்", நோக்கி.130 கி.மீ. வேகத்தில், பயணக் கட்டண தேசிய நெடுஞ்சாலையில்,விரைவாக. பல ஊர்களைக் கடந்து பக்கவாட்டில்; மர அடர்த்திகள்; சோலைகள்; கோதுமை வயல்கள்; சூர்யகாந்தி விளைச்சல்கள்; சோளப் பயிர்கள்; இவைகளை துரிதமாக கடந்திட, செங்குத்தான சாலைகள்.

ஏற்ற இறக்கங்கள், சில நேர்வுகளில் வளைவுகள்.ஊர்களின் ஊடாக, கிராமங்களைத் தொட்டு, வேகம் குறைத்து, எண்ண வேகத்திற்கு ஈடளிக்க இயலாத விரைவு வாகனங்கள், முறையாக முந்திச் செல்ல, ஒருவாறு சமதளப் பகுதியை தொட்டது எங்கள் வாகனம்.

தொடுவானத்தில், உயர்ந்து நிற்கும் நெடுங்குன்றத்தில், "செயின்ட் மிசல் கோட்டை", கோவில் தென்பட, அனைவருக்கும் உற்சாகம், மகிழ்ச்சி எல்லை கடந்து."யுனஸ்கோ", அங்கீகரிப்பில் வரும், 'மரபுரிமைச் சின்னம்',அது.

வாகன நிறுத்தத்திற்கு அகர வரிசை ஏற்பாட்டில், அடுத்தடுத்து நிறுத்தம்.ஊழியர் ஒழுங்குபடுத்த, எமது வாகனத்தை நிறுத்தி, பார்வையைச் சுழல விட்டோம்.சுள்ளென்ற வெயில், சற்று சுணங்கியது.

அண்மையில், மக்கள் கூட்டம் வண்ண,வண்ண ஆடைகளில். பல நாடுகளிலிருந்து வரிசையாக, ஒழுங்கமைவிற்குள்.இலவயப் பேருந்து நோக்கி, ஒவ்வொன்றாக ஊர்ந்து கொண்டிருந்தது.அவ் வரிசை ஒழுங்கில் எங்களையும் இணைத்துக் கொண்டோம்.

காலை சிற்றுண்டி விடுத்து, ஒன்றிரண்டு பிசுகட் எடுத்துக் கொண்டது போதவில்லை.பசி எடுத்திட, மீண்டும் சில சில்லுகள் கொரித்துக் கொண்டே, மெல்ல,மெல்ல கடந்து வண்டியில் ஏறினோம்.

சொகுசு வாகனம், துப்புரவுடன். இரைச்சல் இல்லாத இனிய ஓட்டம்.செல்லும்பாதை இரு மருங்கிலும், உணவுக் கூடங்கள்,விடுதிகள், 'கேம்ப் ஏற்பாடுகள்', அலங்கரித்திட, சில நூறு மீட்டர் சொகுசு வாகன அனுபவம்.

நெளிந்து செல்லும் பாலத்தை தொட்டு, இருபது நிமிட பயணத்தில், பாலத்தின் கீழே, ஆற்றுப்படுகை. பின்னோட்ட நீர்ப் பகுதி; பின் வாங்கி இருக்க; இரு புறமும் விழிகளைச் சுற்றி; விரிவானம், விசாலக் கோணம் கண்டு; வியந்து , பல மொழி பேசும் மக்கள் உணர்வுகளோடு கரைந்து, என்னை மறந்தேன்!

நிறுத்தம் வந்த போது, தானியக்க கதவுகள் திறந்திட, வரிசையாக இறங்கி,பாலத்தின் நடைபாதையில் பயணப் பட்டோம்.செல்போன்கள் சொடுக்குப் போட, கேமராக்கள் சுழன்று பல காட்சிகளை படத்திற்குள் கவர்ந்திழுத்திட, ஆற்றுப்பகுதியில் இறங்கினோம்.

இடையிடையே சிற்சில பாறைகள், பச்சை படர்ந்து, உலர்ந்தும், உலராமல்,நாங்கள் உட்கார்ந்து, அன்னாந்து பார்த்திடும் கோட்டை!களிப்பு மண் வரி கோடுகள் காய்ந்தும், காயாமல், கவுச்சி வாசம்.

சில் நீர்த்திட்டுகள் எம்மை அழைத்திட, ஆடை சுருட்டி, மூடணி அவிழ்த்து, முட்டி கால் உயர்த்தி நடை பயின்றோம்.சில்லென்ற காற்று, தூய்மையாக, உடலைத் தழுவ, உன்னத உற்சாகம்.மகிழ்ச்சி தாலாட்ட, கடற் காக்கைகள் வியக்கும் ஒலி எழுப்பி, எம்மை நோக்கி தாழப் பறந்து, தளர்நடை பயின்றது.

இரை தேடி, பாறை இடுக்குகளில் இறங்கிய பறவை அச்சம் தவிர்த்து, தாழ்நிலை பறந்திடும் வானூர்தி போல் ஒலி எழுப்பாது ஒய்யாரமாக ஒப்பிலா காட்சி! நண்பகல் கடந்ததும், நினவின்றி.உணவுப் பொட்டலங்கள் வாகனத்தில்.அழைப்பதும், கேட்காமல், ஒருவாறு நிலை உணர்ந்து, மீண்டும் சொகுசுப் பேருந்தில் வரிசை காத்து ஏறினோம்.இலக்கு சென்றதும், இறங்கி, காரில் அமர்ந்து, சாப்பிட முனைந்தபோது, மழைத்துளிகள் நனைத்திட, உள்ளிழுத்து அமர்ந்து, எலுமிச்சை சோறு, உருளை கலந்து, பிசைந்து, உடன் வந்த விருந்து அளித்திட்ட உணவும் சேர்த்து, மதிய உணவு முடிந்தது.

அடுத்த கட்ட பயணத்திற்கு அணியமானோம்! இலவச சொகுசு வாகனம் மீண்டும் ஈர்த்திட, ஏக்கத்துடன் பின் நின்ற வளமான கறுப்பு நிறக் குதிரைகள் பூட்டிய பழமை வாகனத்திற்கு கட்டணம் செலுத்த இயலாது, பயணம் நீண்டது.

மலைப்பாக செம்மாந்து நின்ற மலை நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்திட தயாரானோம். அதற்கு முன், பின் வாங்கியிருந்த ஆற்று நீர் ஓட்டம், சீராக தன் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது.இயற்கை நீர் ஊட்ட சூழல் கண்டு களித்தோம்.மலைக்கோட்டை வலப்பக்கத்தில், வளைந்து, நெளிந்து செல்லும் படிக்கட்டுகளில் ஏறுவது எவ்வாறு என்ற திகைப்பும்; எப்படியாவது ஏறிட வேண்டும் என்கின்ற உந்தமும் போட்டியிட; கால்கள் முன்னேற சாய்தள பாதையில் சறுக்கு மரம் ஏறுவதுபோல்.இரு பக்கங்களிலும் எண்ணற்ற கடைகள்; அங்காடிகள்;உணவகங்கள்; வணிகம் செய்திட திருவிழாக் கூட்டம் போல் ஏறுவதும், இறங்குவதுமாக.சில தொலைவு கடந்து, ஆசுவாசப்படுத்தி, மகளுடன், ஊன்றுகோல்போல் குடை துணை நிற்க.

எனக்கு முன்னே, மனைவி உற்சாகமாக படிக்கட்டுகளில் முன்னேறி, திரும்பி என்னைத் தேட. படப்பிடிப்பில், கவனத்துடன் எம்மையும் கண்காணித்து பாலா, அப்படியும் இப்படியுமாக சுழல, மச்சியின் உச்சியை அடைவதுபோல்.இடையிடையே உள்ள கோட்டை சந்துகளை, பொந்துகளை கண்டு, அவற்றிடையே காப்பாக பராமரிக்கப்படும் மரங்களை, செடிகளைக் கண்டு, உள்வாங்கிட முடியாத திணறல் காட்சிகள் பதிவேற்றத்துடன்.

மலைக்கோட்டை இடது பக்கமும் நீர் சூழ்ந்து கொண்டிருந்தது.காலையில், ஓடியாடி உட்கார்ந்து களித்து பகுதி, ஆற்று நீர் படர்ந்து சூழ்ந்திருந்தது.நேரம் சென்றிட, மலையை வளைத்திடும் நீர்ச் சூழல். ஒரு நாளைக்கு இருமுறை உள் வாங்குவதும், வெளிப்படுவதும், இயற்கைச் சூழல் கண்டிட, ஆர்வத்துடன் மக்கள் கூட்டம், நாங்கள் நற்பேறு பெற்றோம்."யுனஸ்கோ" மரபு பட்டியலில் இடம் பெற்ற சிறப்புக் காட்சியை கண்டு உற்சாகம்.சலிக்க கண்டு களித்த பெருமை வருட இறங்கினோம்.

எம்மை வரவேற்கும் உற்சாக உணர்வோ! அறியேன்! காற்று சுழன்றது, உடன் மணல் பறந்தது.சுழற்சியில் முகத்தில் அப்பிட, கோட்டை மதில் பக்கமாக, கண்ணாடி அணிந்து, திரும்பி நின்ற கூட்டம் அதிகரித்திட,வானம் கருத்தது.

வண்டின நிறம் சேர்த்து, கும்மிருட்டு மழை மேகம், குளிர்ந்த காற்று, சூறைக்காற்று சுழன்றடிக்க, விசை வேகம் சுருதிசேர்த்திட எம்மை நெட்டித் தள்ள, கைகள் கோர்த்து, ஒருவருகொருவர் ஒத்தாசை சேர்த்து, பாலத்தைவிட்டு தூக்கி எறியப்படுவோமோ, பயம் சேர்த்து, பெரும்பாலான மக்கள் கூட்டம் நடைகூட்டியது.

 விரைந்து முண்டியடித்து, பேருந்தில் ஏறி இடம் சார்ந்திட முண்டியடுத்தும், ஒழுங்கிழக்காமல், வெளிறிய முகத்துடன்.மழைத்துளிகள், ஆலங்கட்டித் துளிகளுடன் கொட்டிட, எம்மீது அங்கி போர்த்தி, குடை பிடுத்து காத்திட்டனர் பிள்ளைகள்.

பனி மழைத்துளிகள் பஞ்சு நிறத்தில், சில்லென்று உடைந்த கண்ணாடித் திவளைகளாக, சில மணித்துளிகள் நீடித்தது. செய்வதறியாது, திகைத்து வண்டியில் ஏறிட, ஒன்றிரண்டு வண்டிகள் விரைந்திட, காவல்துறை, இராணுவம் வண்டிகளில் விரைந்திட, மேலும் இலவசப் பேருந்துகள் பணியில்.

நெருக்கி வண்டியில் ஒழுங்காக உள் ஏறி நின்றோம். ஒரு வழியாக.
அலறிய பத்மினியும், வெளிறிய முகம் இயல் நிலைக்குத் திரும்ப முயன்று கொண்டிருந்தது.

அச்சம் எமக்கில்லை என்று சொல்ல முடியாது.இருப்பினும், நம்பிக்கை மேலோங்கிட, பயணம் தொடர்ந்தது.தருணங்கள் கரைந்திட, புயல் திசை மாறியது.வானம் மேற்றிசையில் வெளுக்கத் தொடங்கியது. வண்டி நிறுத்தம் நோக்கி, மனதில் அசை போட்டு,

 'அச்சமில்லை! அச்சமில்லை!

Friday, November 2, 2018

ஒருக்கலி


வந்த பொழுது, வாழ்ந்த பொழுது
திறந்த பொழுது, நிறைந்த பொழுது
எண்ண ஓட்டம், இயல் நிலைக் கூட்டும்
சூழல் மாற்றம், சூழ்ந்திடும் ஊட்டம்.

ஒத்தாசை உணர்வு, ஒன்றிணை உறவு
பகல், இரவு பகடை, மகிழ்வுடன் உருட்டி,
பள்ளாங்குழி விழும், புன்னகை கூட்டி,
பொழுது சாயினும், சாயாத உள்ளுணர்வு
ஊன்றி,

ஒருக்கலித்து உறங்கி, கனா தொலைத்து
வினா களைந்து, விடியல் வெளியில்
விழா உணர்ச்சியில்.

பூர்வீக புல்லாங் குழல்

அயலகச் செலவில் ஒரு நாள், செவ்விந்தியர்- பூர்வீகக் குடியினரின், புல்லாங் குழல் இசைக் கேட்டேன்.படக் காட்சிகள்/ஓவியக் கோலங்கள் பின்புலத்தில் அடுத்தடுத்து  வரிசையாக, மனங் கவர்ந்திட.

அமெரிக்காவின் மண்ணின் மைந்தர் வாழ்விடம்! 

விலங்குகள், பறவைகள், சூழல் அமைதி, எழில் கொஞ்சும் இயற்கை, மண், மரங்கள்,  அருவிகள், நீர்வீழ்ச்சி, கழுகுகள், குதிரைகள், கூடாரங்கள், புல்வெளிகள்,  மாடுகள்/எருதுகள் மேய்ச்சல் நிலங்களில்.

காட்சிப் படுத்திய விதம், முறை, கண்ணுக்கும், மனதுக்கும் விருந்து.பனிமூட்டம்; உயர்ந்த மரங்கள்; மலை முகடுகள்; குன்றுகள்; ஓநாய்கள்; மகளிர்; நிலவு; இரவு; ஒநாய் உலா. குன்றின் மீது.

பறவைச் சிறகுகள் அலங்கரிக்கும் தலைமுடி அணியுடன்; பின்னப்பட்ட இருக்கை; விறகு மூட்டிய நெருப்பு முன் அமர்ந்து; தியானிக்கும் பெண், குதிரை மீது அமர்ந்த வீரன்.

 மிக மெல்லிய குழல் ஓலி. இதுவரை நான் கேட்டறியா நிலை.அகக் கரணங்களில் சிற்றோடை சிலிர்ப்பு; ஆழ்ந்த அமைதி; தாயின் தாலாட்டு இசையாக; இன்னியல் இன்ப ராகம். எவரையும் வயப் படுத்தும்/ வசப்படுத்தும் இதய கீதம்!

'எதிரித்தா குன்று'

பிரான்சின் நார்மண்டி பகுதி- 'எதிரித்தா குன்று', வடக்கு பகுதியில்; ஆங்கில கால்வாய் அருகில், அழகிய கடற்கரை பள்ளத்தாக்கு.
எழில் கொஞ்சிடும் இயற்கை; சில்லென்ற காற்று தாலாட்ட; சிந்தை குளிர்ந்திட; கால்ப் மைதானம்; படகுகள் அணிவகுத்திட; கடைகள் அணி செய்ய; நடைபாதைகளிலும் உணவகங்கள்; கடல் உணவு வகைகள்;மீன், ஆளி, ஒயின், பல்வகை மதுப் புட்டில்களுடன், மக்கள் மகிழ்ச்சியுடன் தன்னை மறந்து.

குழந்தை,குட்டிகள், முதியவர்,இளைஞர் என பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கைகளில் கேமராக்கள், செல்போன்கள்,ஐ-போன்கள் சகிதமாக அடுத்தடுத்து கிளிக் செய்யும் அற்புதம், வெள்ளைக் குன்றுகள் உச்சியில்.மாதாக் கோவில் அடுத்த குன்றுத் தொடரில்.

கூழாங்கற்கள் கொட்டி நிரப்பிய இறங்கும் பகுதி, சிலர் படகில் சவாரி, சிறு கப்பல் பயணத்தில் குடும்பமாக சிலர் செல்லப் பிராணிகளை, படிக்கட்டுகளில். சரிவுப் பாதையில், வளைந்து, நெளிந்து,படிப்படியாக உயர்ந்து, சரளைக் கற்கள் பரப்பி, பாதை ஒழுங்கு செய்து, பக்குவப்படுத்திய, தடுப்பு ஏற்பாடுகள்.பிடித்துச் செல்ல, உட்கார்ந்து, இயற்கை எழில் ரசிக்க, முறையான முன்னேற்பாடுகள்.

 தொடக்க நிலையில் கழிவகங்கள், கார் நிறுத்தம், கட்டணச் சீட்டு/தானியங்கி என ஓர் ஒழுங்கிற்குள், ஒப்பற்ற சூழல். எண்ண ஓட்டத்தை சீர்படுத்திய, வண்ண ஓட்டம், வகை, வகையான காட்சிகள். கடல் பறவை, தாழப் பறந்து நம்மிடம் பேசுவது போன்று, உணவு அளித்த/உண்ட பழக்கத்தில் அச்சம் கொள்ளாது, அணுகி வரும் காட்சி அற்புதம்.அனைத்தும், இதுவரை கண்டிராத காட்சி, இதயத்திற்கு ஏற்ற மீட்சி.

போகும் பாதையெங்கும், குன்றுகளும், சரிவுகளும், வயல்வெளிகளும், கோதுமை நிலங்களும், சூர்ய காந்தி பயிர்களும், மந்தை, மந்தையாக மாடுகள் மகிழ்ச்சியாக மேய்ச்சலில்.

 உழுபடை எந்திரங்கள் ஊர்வலமும், இடையிடையே கடந்து செல்லும் கிராமங்கள், தொகுப்பாக வீடுகள், தனித்தனியாகவும், தோப்புகள், பைன் மரங்கள் என கண் கவரும், குளுமையான சூழல். சாரல் மழை11 டிகிரி செல்சியசுக்கும் குறைவான சூழல்.நெடுந்தொலைவு பயணக் களிப்பு நீக்கும்.

இடை நிறுத்தங்கள் பூங்காக்களாக, கழிவகங்கள் துப்புரவாக, நேர்த்தியான ஒழுங்கமைவு,சாரி,சாரியாக வாகனங்கள் அணி வகுப்பில், அக்கறை ஒழுங்கு.முந்தும், முட்டும் நிலை தொலைந்து, விதி முறைகள் அனுசரிக்கும் போக்குவரத்து. திசைவழி காட்டும் விளம்பரங்கள் தெளிவாக, தானியங்கி கட்டண நிறுத்தங்கள் அடுத்தடுத்து. தனிவழியாக முறையான ஏற்பாடு, முண்டியடித்துச் செல்லும் முணகல் இல்லை!

அயலகச் செலவில் ஒரு பொழுது


காகம் கரைவது போல் காலம் கடக்கிறது. அமைதி தேடி அலைக் கழிந்த மனம், அல்லல் ஏற்றது தினம், அயலகச் செலவில் அமைவுற்றது குணம்.கூட்டுப் பறவைக்கு, தனிமை துயரம் ஆயினும், மாறிய சூழல் உயரம், தோழமை கூட்டியது. தோகை விரி மயிலாக மகிழ்வூட்டியது!

வேலையில்லா வேளை விடிந்திடும் காலை, விரைவுறும் பயண சாலை, விடை தேடும் வினாப் போல் விரிந்திடும், விளங்கிடும் விளக்கொளி குறிப்பில்.

இன்னியங்கிகள் வரிசையாக அணி வகுத்திடும், அரவம் குறைத்து. ஆள் கடக்கும் குறிப்பில், நின்று நிதானித்து தொடர்ந்திடும். கனிவுடன், 'மன்னிக்கவும்' என திடீரென நடைபாதை வளைவில் எதிர்ப்பட்ட பெண்மணியின் வாயில் உதிர்த்த முத்து, வணிக வளாகங்களிலும்.

 எங்கெங்கு எதிர்ப்படும் நேர்விலும், கனிவான சொற்கள். மொழிக்கும், நாட்டுக்கும், மனிதத்திற்கும் அணி சேர்க்கும் ஒழுகலாறுகள். ஒழுங்கியக்க கண்ணியமான போக்குகள்.

நடைபாதையினர் உரிமை;மிதி வண்டியின் உரிமை; மதிக்கப்படுகிறது மகிழ்வுடன், தளர்வின்றி.

Wednesday, October 31, 2018

குறைவில்லை


மாசுக்கு குறைவில்லை,
தூசுக்கும்,
அடிக்கொரு பள்ளம்,
அடிக்கடி வெட்டு
துலங்கா அரசு,
விளங்கா மக்கள்.

நவராத்திரிசப்தங்கள் பிடியில்
நிசப்தம்,
மொட்டை மாடியும்
 தவிக்கிறது.

'ஞாயிறு'

'ஞாயிறு சந்தை', சில பர்லாங் தொலைவில்.பயண தொடக்கத்தில் சேர்ந்த முதல் கிழமை.காலையில் எழுந்து, துரிதமாகி, பாலாவுடன் குடை எடுத்துக் கொண்டு, காரில்.விசும்பின் துளிகள் பரவலாக மேலும் குளிரூட்டியது.

நிறுத்தம் அடைந்து, வரிசையாக கடைகள்:மீன் கடை, காய்கறி கடை,ரொட்டி, இனிப்பு கடை, காலணி/மூடணி கடை, ஒப்பனைப் பொருட்கள், பழக்கடைகள் வரிசையாக பிரஞ்சு மொழியில் கூவி அழைத்தனர், வாடிக்கையாளரை.
வண்டிகளில் இறக்கி, கூடாரம் அமைத்து, வண்ணக் கோலத்தில்.நம் ஊரில் காணாத காய்கறிகள், பழங்கள்.

'அவக்கெடா', போன்ற காய்/பழம், 'அவக்கேடு' என்று நினைக்காதீர். இலத்தின்_அமெரிக்க நாட்டிலிருந்து தோன்றிய வெள்ளரி ஒத்த தோற்றம்.ஆயினும் வெள்ளரி அன்று! அதை நறுக்கி, 'சலாத்' எனும் கலவை, தக்காளி நறுக்கித் துண்டுகள், மிளகுத்தூள் தூவி உணவுக்கு முன் சாப்பிடுகின்றனர்.வெண்ணய் போன்ற குழைவு/சுவை, புளிப்பும்/இனிப்பும் இன்றி, 62 ஆண்டு கால நாவின் சுவைக்கு, புதிய அனுபவம், சுவைத்து அறிந்திட முயன்றோம், முழுமையாக.

அதனூடே, இது என்ன காய்/பழம் என்ற சரித்திரம் அறியும் முயற்சி.மகளும் அளித்ததைக் கூற, மருமகனும் கூடுதல் விவரம் அளிக்க, விடை தேடும் மனம் இணையத்தை நாட; எண்ணங்கள் விரிந்திட, ஆவல் கூடிட.

காய் அல்ல, ஒரு வகை பழம், தெற்கு மத்திய மெக்சிகோவில் தோன்றியது.பூத்து காய்க்கும் தாவர குடும்பம்,'லாராசியே' என்ற தாவரவியல் பெயர் தாங்கியது.100 கிராம் பழத்தில், 160 கலோரி சத்து உள்ளது.

நம்மூர் பப்பாளி போன்ற வடிவம் அல்லது குண்டு சுரைக்காய் தோற்றம் என்றும் கூறலாம்.1.2 கிலோ வரை கூட ஒரு பழத்தின் அளவு இருக்கும்.மூன்று, நான்கு ஆண்டுகள் கழித்து காய்க்கும்/கனியும், சில 15 ஆண்டுகளுக்கு மேலாகவும் எடுத்துக் கொள்ளும்.மேலும், சில காய்க்காது போனாலும், கூடுதலான மரங்கள் தோன்ற, மகரந்த சேர்க்கைக்கு உதவிடும்.

உடலுக்குத் தேவையான, ஆரோக்கியமான கொழுப்பான -'மோனோ சேச்சுரேடட் கொழுப்பு' உள்ளடக்கியது.கொழுப்பை குறைத்து, இதய நலத்திற்கு ஏற்றது.குளிர் நாடுகளில், குளிர்ந்த காலத்தில், பனி தாக்காத வகையிலான, 'அவெக்கெடா' பயிரிட வேண்டும்.

தட்ப-வெட்ப, துணை தட்ப-வெப்ப, பருவ நிலைகளில் மட்டும் பயிரிட தோதானது.20லிருந்து, 40 அடிகள் வரை வளரும்.5 அல்லது 7 ஆண்டுகளில், 200லிருந்து 300 பழங்கள் தரும்..ஓராண்டு விட்டு அதிக மகசூல் அளிக்கும், 'அவெக்கெடோ' மரம்.ஆண், பெண் இரு பாகங்கள் உடையது.

இரண்டு நாட்கள் மட்டும் அதன் பெண் பகுதி மகரந்த சேர்க்கைக்கு இரண்டிலிருந்து, நான்கு மணி நேரம் திறந்திருக்கும்.இந்த ஒரு பழமே நமது சிந்தனையைத் தூண்டும், புரிதல் ஏற்படுத்தும் எனின்; மேலும் சில பழங்களைக் கண்டேன்.

அவை குறித்தும் அறிந்து கொள்ள  ஆவல் கொண்டேன்.அறிவார்ந்த அலசலுக்கு எல்லையேது?

 இது குறித்து அசை போட்டு, தக்காளிகள் பலவகை, பீச் பழங்கள் குண்டாகவும்,தக்காளி வடிவத்திலும்; கிவி பழங்கள்; பருத்த, தடித்த,நீளமான கத்தரிக்காய், ஒவ்வொன்று கால் கிலோவிற்கு குறையாமல்; கோசு நிறை பெரிது, எடை இலகுவாக;வெள்ளை உருளை அனைத்து காய் கறிகளும், ஒரு கிழமைக்கு உகந்த கொள்முதல் 20 'ஈரோ'க்குள் (பிரஞ்சு பணம் ஒரு ஈரோ உரு.85).

நமது ஊர் சந்தை கொள்முதல் ஒப்பீட்டில், சிக்கனமாகவே எமக்குத் தோன்றியது.நடுத்தர/கீழ் நடுத்தர வகுப்பினரின் வரவு செலவிற்கு ஏற்ற/உகந்த சந்தை.

பீச் பழம் தேர்வு செய்யும் தருணம், கொள, கொளவென்று இருந்தது.கடைக்கார பெரியவர், இரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும் என்று எச்சரிக்கை தந்தார்., பக்கத்தில் தக்காளி வடிவ பழத்தை சுட்டினார்.

இவர் கடை பின்னால், ஒரு வெள்ளை நிற 'வேன்', பிரெஞ்சு எழுத்துகளில் பளிச்சிட, "கேட்டலோனியா", என்கின்ற வார்த்தைகள், என்னை நிமிர வைத்தது.

"ஸ்பெயின்" நாட்டில், தன்னாட்சி உரிமைக்காக,, சனநாயக முறையில், வெகுண்டெழுந்து போராடிய மக்களின், உரிமை உணர்வு, எமது நினவலையில் நீண்டது.காய்கறிகள் ஸ்பெயினிலிருந்து விற்பனைக்கு, வருகின்ற விவரம் கேட்டறிந்தேன்.'பிளாஸ்டிக்' குவளைகள் இத்தாலியில் இருந்து விற்பனைக்கு விநியோகம் ஆவதையும் அறிந்தேன்.

சந்தையை இரண்டு, மூன்று சுற்றுகள். உடல் நடைகூட்ட, உள்ளம் சிந்தனை விரைவூட்ட, உணர்வுகள் ஊட்டம் பெற, திரும்பும் வழியில், ஒரு பெண்மணி, கையில் துண்டறிக்கையுடன், விநியோகம் செய்திட, உடன் ஒத்த ஒருவரும் கைகளில் துண்டறிக்கையுடன்.

பாலாவக் கண்டவுடன் அவர் பேசத் தொடங்கினார்.சில மணித்துளிகள் கழிந்த பிறகே, அது உசாவல் என்றறிந்தேன்.தொடக்கத்தில் நம்மூர் மத பிரசாரம் போல் நமக்குத் தோன்றியது.

நானும் ஒரு துண்டறிக்கையை வாங்கி, தத்து, பித்து என்று படிக்க முயன்று புரிந்து கொண்டது, முதாலளித்துவத்திற்கு எதிரான ஒரு கட்சி/அமைப்பு என்பதை"முதலாளியத்திற்கு எதிரான ஒரு புதிய கட்சி", என்பது எமக்கு புரிந்த மொழி பெயர்ப்பு, பிரஞ்சு மொழியில்,"nouveau parti anti-capitaliste",
என்று அச்சிடப்பட்டிருந்தது.

 என் ஆர்வம் அறிந்த பாலா, நடுத்தர வயதைக் கடந்த அப்பெண்மணி, பேராசிரியை என்றும், அவர் பெயர், 'கிளமோன்',பள்ளியில் கிளர்ச்சி எண்ணம் உடையவர் என்றறியப்பட்டவர்.பாடம் நடத்தும் சமயம், பொதுப் பிரச்னை குறித்து தொட்டு விட்டால், மணிக்கணக்கில், மாணவர்கள் பாடத்தை பிடிக்காமல், சில சந்தர்ப்பங்களில் அவரைக் கிண்டி விட்டு, கிளரி விட்டு, வேடிக்கைப் பார்ப்பார்கள் என்றான்.

படிக்கும் மாணவருக்கு "பூர்சு" என்கின்ற உதவித் தொகையை பிரஞ்சு அரசாங்கம் குறைத்தபோது, ஆயுதம் வாங்குவதற்கு நிதி இருக்கிறது.கல்விக்கு உதவிட நிதி இல்லை, என அரசைக் கண்டிக்கும் போராட்டத்தை நடத்தியவர், என்று அவரது அருமை, பெருமைகளை, அடுக்கிக் கொண்டே, காரில், வீடு திரும்பினோம்.

பிரஞ்சுமொழி சரளம் இருந்தால், அவரிடம் என் மனவுணர்வுகளை நேரிடையாக பரிமாறிக் கொண்டிருந்திருக்க இயலும். ஆதங்கம் அலை மோத, இரண்டாவது ஞாயிற்று சந்தை பட்டறிவு, இப்படியாக என்னுள் பலமான ஓட்டம்!

Monday, October 29, 2018

வாண வேடிக்கை!நள்ளிரவு வாண வேடிக்கை, நம் ஊரை மிஞ்சும் வாடிக்கை.ஆற்றங்கரையோரம் அணி,அணியாய் மக்கள் கூட்டம், அலை மோதாமல் அமைதியாக! விழித்திருந்து, விருந்து; மேசை தயாரிப்பில் ஒயின்/மது, உணவு வகைகள் சகிதமாக, இருண்ட சூழலில் மெழுகு வத்தி ஏற்றி, அமர்ந்து ஆற, அமர, உரையாடி, பிரஞ்சு விடுதலை நாள் பிறப்பை விரும்பி, வரவேற்று மகிழும் வெடிகள்.வியத்தகு வகைகள்.இதுவரை கண்டிராத இனிமையில். நம் மீது/நம் பக்கம் ஓடோடி வரும் செந்நிறம், பொன்னிறம்,நீலம், இளஞ்சிவப்பு என எண்ணற்ற வண்ணக் கூட்டில்,எண்ணக் குவியலில் பிசைந்து.

மரம் போன்ற காட்சி,இதய வடிவம், ஈச்ச மரம் போன்று, அவரவர் கற்பனைத் திறனுக்கு ஈடேற்றம்/விளக்கம் கூட்டிடும், விளக்கொளிகள்/விலக்கு ஒளிகள்.அரை மணி நேரத்திற்கு மேலும், அனைவரும், தன்னை மறந்து, விண்னை நோக்கி திருப்பிய விநோதம் அனுபவிப்பில் ஆனந்தம்.எழுத்தில் அவ்வுணர்வுகளை வடிக்க இயலாது.தளர்ச்சி போக்கிய, கிளர்ச்சி.குடைபோல் விரிந்து; காளான் போன்று கவிந்து, ஆல மரம் போல், அரச மரம் போல் தழைத்து; வேர் விழுது விட்டு; நீண்ட காட்சி, நெடிய மாட்சி!

குழந்தைகள், முதியோர், இளைஞர், ஆண்,பெண், நோயுற்றோர், மாற்றுத் திறனாளி உள்ளிட்ட மக்கள் திரள், தமது வாகனங்களை ஒழுங்காக நிறுத்தி, நடந்தே, "சான்த்ரு வீல்",- புளூவா-(பிரான்சின் ஒரு பிராந்தியம்), கடந்து,"லுவார்", ஆற்றங்கரை ஓரம் அமர்ந்து, கண்ணயராது கனிந்த/களித்த காட்சி விவரிக்க எழுத்துக்கள், போதா/ துணை நிற்கா !

Saturday, October 27, 2018

தோட்டம்/ துப்புரவு


மருகன் இல் அமைந்த தோட்டத்தில், ஊட்டத்துடன்
ஓடி,ஆடி, அமைதியாக.
இரைச்சல் என்பதும், கரைசல் என்பதும் புறாக்களின், ஓயாத,'குக்கூம்,குக்கூம்',
மைனாவின் வருகை, பருத்த பழுப்பு நிற அணில் வகுப்பு,தேனீக்கள் ரீங்காரம்; வண்ணத்து பூச்சிகளின் வகை,வகை.இவைகளின் நிரலில் கரைந்த பொழுது.

இடையிடையே,ஒன்றிரண்டு வாகனங்கள் ஒலி,காற்றில் அடைந்திடும், வாயிற் புற வரிசையில்.சாலை மருங்கில், நேர்கோட்டில் நிற்கும் மரங்கள், உயரம் கூட ஒரேயளவு. கழித்து செப்பனிடும் பணியாளர், கவனமாக , களிப்புடன் புதன்கிழமைகளில்.

சாலையோரம் துப்புரவு கவசம் அணிந்து, உறிஞ்சும் கருவி துணையுடன் ஒருவர்.சில மணி நேரம் கழித்து தெருக்களை சுத்தம் செய்திடும் வாகனம், வியாழக் கிழமைகளில்.

 குப்பை வாரும் உந்து, பெரிய அளவில், வண்ணப் பெயர் தாங்கி, ஊழியர் இருவர்- ஒருவர் இயக்க மற்றொருவர் இறங்கி,ஒவ்வொருவர் வீட்டு முன்பும், முதல் நாளே குப்பைகளை, கறுப்புத்தாள் பையில் நன்கு திணித்து, முடித்து வைத்து, 'கிரே' வண்ண அஞ்சல் பெட்டி உயரத்தில், சக்கரங்கள் ஒரு பக்க சாய்வாக உள்ள துப்புரவான பெட்டி. எப்படி வைக்க வேண்டுமோ, அப்படி வைத்துவிட, எடுத்து வண்டியில் ஏற்றுகிறார், சிந்தாமல், சிதறாமல், சீராக, சிறப்பாக; ஈடுபாட்டுடன் இன்பமாக.


சூழல்

" செர்ரி"

காய்த்தாய் அன்று.
கண்டேன் காட்சி: காணொலி.

அடர்ந்த கிளைகளில் அட்டி,
அட்டியாக,
ரொட்டியில் தடம் பதிக்க,
சிவந்தாய், கனிந்தாய்
உருட்சி திரட்சியாக.

வருகிறோம் உம்மையும் காண,
பறந்தோடி வந்தோம்.
ஏமாற்றாமல்.

உன் நிறத்திற்கு வெளிர் நிறத்தில்
இதயம் திறந்தது,
உன் ஏமாற்றம் தவிர்த்திட
தரையில் படர்ந்து,
தளிகர்களின் இடையில்,

ஒன்றிரண்டு என ஒய்யாரமாக,
எடுத்துக் கொள்ளுங்கள்,
பறித்துத் தின்னுங்கள்,

கடைக்குச் செல்ல வேண்டாம் என,
பரிசில் வழங்கிய
'ஸ்ட்ராபெர்ரி'.

இதமான, இனிப்பும், புளிப்பும் கலந்த,
புதுமை சுவை,
நலம் பேணும் நிலை
நாளெல்லாம்,

விருந்தினை ஓம்பி, ஓங்கிய அன்பு
தழைத்திட,
நாள்தோறும் பராமரிப்பு,
நீர் பாய்ச்சி
நானும், அவளும்
நடை பயின்றோம்,
 "புளுவா"வில்

(பிரான்சு, சுற்றுச் செலவில், புளுவா ஊரில், பாரிசில் இருந்து 204 மைல்கள் தொலைவில், தங்கி அனுபவித்த சுற்றுச் சூழல்)

கட்டு


திரும்பிய மெய்
திரும்பாத கை

நிரம்பிய பைய்
நிரம்பாத பொய்

அரும்பிய மொட்டு
அரும்பாத கட்டு

ஊட்டம்காலத்தின் சோகம்
கரவுகளின் ஆட்டம்
உண்மையின் நாட்டம்
உறவுகளின் ஊட்டம்

மகள்

ஓங்கிய உணர்ச்சி!
வீங்கிய கண்களின் வீழ்ச்சி
நீர்த் துளியாக,
தேங்கியும் தேங்காமல்;
தாங்கிய தாயிடம்
தஞ்சமடைந்த மகள்;
அரவணைப்பில்,
மருமகன் வரவேற்பில்.