Saturday, February 24, 2007

குழந்தைகள் மீதான வன்மங்கள்...

குழந்தைகள் மீதான வன்முறை பல வடிவங்களில், குடும்பத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நாள்தோறும் நிகழ்த்தப்படுகின்றன.அன்றாடம் ஊடகங்களில், குறிப்பாக பெண்குழந்தைகள் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள் பற்றிய செய்திகள், நம் சமூகம் எவ்வாறு குழந்தைகளை பார்க்கிறது, அணுகுகிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

புதுச்சேரியில் சில ஆண்டுக்கு முன், ஓர்லையன்பேட்டை தனியார் பள்ளியில் படிக்கும் 5 வயது பெண் குழந்தையை, வெளியே இருந்து வந்து தூக்கிச் சென்று பாலியல் கொடுமை நடத்திய இளைஞன் யார்? எவ்வாறு இது நிகழ்ந்தது?

வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டிய காவல் துறை, 'எனக்கு அதிகாரம் இல்லை? உனக்கும் அதிகாரம் இல்லை?' என அக்கறையற்று வழுக்கிக் கொள்ளும் போக்கு முறையானதா? ஏற்புடையாதா? சகித்துக் கொள்ளக்கூடியதா?

அரசு அதிகாரத்தின் முதுகெலும்பான காவல் துறை, குழந்தைகள் உரிமையில் கடமை தவறும் போக்கு சரியானதா? பெரிய குற்றப்பின்னணி உடையவர்கள் காவல்துறையின் அதிகார வரம்பிற்குள் ஏன் கொண்டு வரப்படுவதில்லை?
பணபலம், அரசியல் செல்வாக்கு, அரசு அதிகார அமைப்பை விலைக்கு வாங்கக்கூடிய அளவில் செயல்படுவது சாராசரி மனிதன் வரை புரிந்து கொண்டுள்ள உண்மையாகும்.

நமக்கென்ன வம்பு, எனக்கு பாதிப்பில்லை, என ஒதுங்கிக் கொள்ளும் மனப்பான்மை சரியானதா? நாம் வாழும் சமூகத்தில் நம் கண் முன்னே நிகழ்த்தப்படும் வன்முறையை எதிர்த்து ஒன்றுபட்டு, ஓங்கி குரல் எழுப்பி, மனித உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.

தமிழர்களே சோம்பேறிகள்! சுயமரியாதை அற்றவர்கள்! திரைப்படக் கலைஞர்கள் பின்னாள் திரண்டு நேரத்தை வீணடிப்பவர்கள்! வாழ்க்கையை இழப்பவர்கள்! எனும் விமர்சனங்களுக்கு நம்முடைய பதில் என்ன?

பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்,என அனைவரும் திரண்டு புதுவை அரசை நெருக்கியிருக்க வேண்டும். இதற்கு முன், ரெட்டியார்- பாளையத்தில், ஜெ.ஜெ.நகரில், 7 வயது நிரம்பிய சிறுமிக்கு நிகழ்ந்த வன்முறை; கோட்டக்குப்பத்தில் ஒரு குழந்தை மீது நடந்தேறிய வன்முறைக் கொடுமைகள் நமது நினைவுக்கு மீண்டும் வருகிறது.

பெண் குழந்தைகள் மீதான தொடர்ச்சியான வன்முறைகளை இரக்கம் காட்டும் செய்தியாக மட்டுமே சமூகம் பார்க்கிறது. பல கொடுமைகள் வெளியில் வராமலேயே மூடி மறைக்கப்படுகிறது.

'சட்டத்தின் ஆட்சி' வெறும் முழக்கமாகவே உள்ளது!

'சீருடையில் உள்ள மக்கள் நண்பனே காவல் துறை'
என்பதும் வெற்று முழக்கமே!

No comments: