Sunday, February 25, 2007

அணு ஆற்றல்...!

அணுசக்தி துறையில், அமெரிக்க நாட்டுடன் ஆன ஒத்துழைப்பு, அரசியல் தளத்தில், அரசியல் உத்தியாக, அரச தந்திரமாக, ஆளும் வர்க்கத்தால் பேசப்படுகிறது. பரவலாக, இது ஒரு பெரிய வெற்றி எனவே பேசப்படுகிறது.

ஆக்கப் பணிகளுக்கான அணு ஆற்றல் ஓப்பந்தம் என முதன்மைப் படுத்தப்படுகிறது. அணு மின் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைவது குறிக்கோள் என வலியுறுத்தி கூறப்படுகிறது.

தற்போது, நம் நாட்டு மின்சார உற்பத்தியில், அணு மின்சார உற்பத்தி என்பது, 3% விழுக்காடு அளவிற்கும் குறைவானதே. அதுவும், அணு மின் உற்பத்திக்காக, அணு உலைகளை செயல்படுத்த பயன்படும் பொதுத்தொகுப்பு மின்சார பயன்பாடு சேர்த்து பார்த்தால், அணு மின் பங்களிப்பு மிக சொற்பம் ஆகும்.

அமெரிக்கா, சப்பான், செர்மனி, உருசியா, இங்கிலாந்து போன்ற
நாடுகள் அணு உலைகளின் பாதுகாப்பற்ற தன்மை, அதனால் ஏற்படும் நீண்ட கால சூழல் சீர்கேடு ஆகியவைகளை கருத்தில் கொண்டும், கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள விபத்து அதனை எதிர் கொள்ள முடியாத நெருக்கடி ஆகியவைகளின் அடிப்படையில், ஒன்றன் பின் ஒன்றாக, அணு உலைகளை மூடி வருகிறது. இது நாம் அனைவரும் அறிந்த செய்தியாகும்.

நிலமை இவ்வாறிருக்க, இந்தியா போன்ற வளரும் நாடுகள், தானும் பட்டறிந்து கொள்ள வேண்டும் எனும் துணிச்சல் வாத நடவடிக்கைகளில், மேலை நாடுகளில் செல்லுபடியாகாத, புறந்தள்ளப்பட்ட ஆற்றலை, மக்கள் தொகை நெருக்கம் அதிகம் உள்ள, ஏழ்மைக் கோலத்தில் வாழும், வாடும், இந்தியாவில் சோதனை செய்து பார்க்க நினைப்பது, அறிவுடமை ஆகாது!

அனல் மின்சாரம், புனல் மின்சாரம், காற்றாலை மின்சாரம்,
கழிவுகளிலிருந்து மின்சாரம், சூரிய ஒளியில் இருந்து, என, சமூக நோக்கிலிருந்து, சமூக அளவில், நுண்ணியல் திட்டங்களாக பரவலாக்கப்பட்ட சிறிய அளவில் ஆன திட்டங்கள், பகுதி தேவைகளின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

No comments: