Monday, February 26, 2007

தேங்காய்த்திட்டு மக்கள் அரசியல்!

புதுவையின் வரலாற்றிலே வளர்ச்சி, முன்னேற்றம்,வேலை வாய்ப்பு, இழப்பீடு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, வேளாண்மை செய்யும் நிலங்களை உழைக்கும் மக்களிடம் இருந்து பறித்துக் கொள்ளும், ஆளும் வர்க்கத்தின் வஞ்சக சூழ்ச்சியை, மக்கள் புரிந்து கொள்ள தொடங்கி விட்டனர். துறைமுக விரிவாக்க திட்டத்தின் மோசடியை, அரியாங்குப்பம் மீன் பிடி துறைமுகம் அமைத்தபோது புரிந்து கொள்ள இயலாத மக்கள், தேங்காய்த்திட்டு பிரச்சனையில் நன்கு விளங்கிக் கொண்டனர்.

தாய் மண்ணின் உறவை, அதனுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கை அடையாளத்தை, பாதிக்கப்பட்ட மக்கள் நிலையில் இருந்து, பண்பாட்டு பெருமைகளை, உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்திய போராட்ட களத்தில் உள்ள பெண்கள்தான் நாட்டின் விடியலுக்கு தேவை. ஒப்பனை இன்றி, கற்பனை இன்றி, உள்ளத்தின் கொந்தளிப்பை, இயல்பாக உரத்து ஒலித்த தமிழச்சி தான், நம் தமிழ் மண்ணின் இன்றைய தேவை!


கட்சி அரசியலை புறந்தள்ளி, ஓரணியில் திரண்டு, தங்கள் வழ்விடத்தை காக்க கறுப்புக்கொடி வீடெங்கும் ஏற்றி, விரிவாக்கத்திற்கு சாவுமணி அடித்திட்ட போராட்ட பாதையில் அடுத்த கட்டமாக, தேங்காய்த்திட்டு மக்கள், 26, பிப்ரவரி 2007, மாலையில், மரப்பாலம் அருகில், அனைத்து சமூக இயக்கங்களையும் அரசியல் கட்சிகளையும் தம் பக்கம் திருப்பிய கண்டன ஆர்ப்பாட்டம், புதுவையின் போராட்ட வரலற்றில் இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வரிசையில் வைத்து பதிவு செய்யப்பட வேண்டிய 'மக்கள் அரசியல்' நிகழ்வாகும்.

புதுவையின் பிற பகுதி மக்கள் பிரிவினரும், தங்கள் வாழ்விடங்களை பறிக்கும், வாழ்வுரிமையை குலைக்கும் அரசின் முயற்சிகளுக்கு எதிராக பரந்த அளவில் திரண்டு போராட வேண்டும்.


'இப்போது இல்லை என்றால் எப்போது'? 'நம்மால் முடியவில்லை என்றால் வேறு எவரால்'?

No comments: