Saturday, March 31, 2007

மயானக்கொள்ளை!

மயானக் கொள்ளை,
வெள்ளாளன் கோட்டை அழிப்பு.
மாகாளி வேடம் தரித்து,
ஆட்டுக் குலை வாயில் கவ்வி,
சூலத்துடன்.


பேச்சாயிகள், வேப்பிலைக் கொத்துடன்,
ஆட்டம் போட்டு,
ராசா வேடங்கள் தரித்து,
கத்தியுடன், கால் சலங்கைகள்
ஒலி எழுப்பி, கூட்டமாக,
உழைக்கும் பெரும்பான்மைச் சமூகம்,
ஊர்வலம்.


வீடு, வீடாக,
தண்ணீர் குடம் சாய்த்து,
தலை வாசல் கோலம் போட்டு,
பூசை செய்து மகிழ்ந்திடும்,
கலாச்சார நிகழ்ச்சி.


இம்முறை,
ஊர் தனியாக, குப்பம் தனியாக,
வெவ்வேறு நாளில் கொண்டாட்டம்.
அனுமந்தை கிராமத்தில்,
அந்தக் காலத்தில் கொண்டாட்டம்.
இரண்டு, மூன்று நாள்.


கிராம மக்கள் சாரி, சாரியாக,
குடும்பம் குடும்பமாக,
சோத்து மூட்டைக் கட்டி,
வந்திறங்கி, மாட்டு வண்டியை,
ஓரம் கட்டி,
இரவு நேரங்களில்,தென்னந்தோப்புகளில்,
விருந்து, கேளிக்கை.


விடிந்த பின்,
இட்லி, தோசை,
குளக்கரையில் சுட்டுத்தருவார்.
துட்டு தந்தாள்.


மறுநாள் மயானத்தில்,
உணவுப்பண்டங்கள் படைத்து,
சாமி ஊர்வலம் வர,
பழங்களும் சேர்த்து,
நாலா பக்கமும் வீசுவார்.


கொய்யாப்பழம், மாம்பழம், கொழுக்கட்டை,
கடலை,
நானாவித பண்டங்களும்.
பந்து பிடிப்பது போல்,
பக்குவமாக பிடித்துச் சேர்ப்பார்,
பைகளுக்குள்.


சிலர் பேய் பிடித்து,
ஆட்டம் போடுவார்.
"என்ன இது"?
என்று கேட்டால்,
அப்படித்தான்.
"நீ சின்னப்பிள்ளை உனக்குத் தெரியாது"
என்று பதில் இருப்பார்,
பக்குவமாக.


தலைமுடியைப் பிடித்து,
இழுத்துச் சென்று,
மரத்தில் அறைவார்,
குறியீடாக.
பேய் ஓட்டுபவர்.


விழா இடையில் வியாபாரம்,
சுறு, சுறுப்பாக.
விளையாட்டு, வேடிக்கை.
சட்டி, பானைகள்,
சமையல் பாத்திரங்கள்,
கண்ணாடி வளையல்கள்,
பொம்மைகள்,போட்டோ நிலையங்கள்.


பஞ்சு மிட்டாய், கடல் பாசி,
கமர் கட்டு, தேங்காய் மிட்டாய்,
ஐஸ் மிட்டாய்,
கழைக்கூத்து.

Friday, March 30, 2007

உச்சநீதி!!

பெண் குழந்தை,
வலக்கை விரல்கள்,
துண்டிப்பு.
பீகாரில்,
வன்கொடுமை.


"இந்து மத",
தாக்குதல்.
"இழிசனர்",
இலக்கில்.
இடைவிடாது,
அரங்கேற்றம்.


கீரைகள்.
கீழ்ச்சாதி பறிக்கலாமா?
"உயர் சாதி"
உச்சநீதி!!

.....கைபேசியடா

கடற்கரையில் நடக்கிறார் காலாற,
கவலைகள் சுமந்து.
காதில் பேசி,
'கல கல'வென்று ரீங்காரம்.
அடுத்தவருக்கும் ஒலிபரப்பு,
செய்தி வாசிப்பு.


எவர் கையிலும், மெய்யிலும்,
கை பேசி.
கழிவறையிலும்,
கட்டில் அறையிலும்,
உண்ணும் போதும்,
ஓயும் போதும்,
ஓயாமல் பேச்சு.


ஓர் நொடியும் வீணாகாமல்,
ஒன்றிரண்டு கருவிகள்,
உள் பையில்,
வெவ்வேறு வடிவங்களில்.
பேச்சாளர்கள் நாம்!


கருவுற்றிருக்கும் தாயானாலும்,
கையில் பேசி,
உள்ளிருக்கும் குழவிக்கும்,
ஒலியுணர்வு அளிக்கிறாள்!


"ஒலியல்" இல்லை, ஆயினும்,
ஓராயிரம் செய்திகள்,
பரிவர்த்தனை,
தகவல் தொடர்பு,
"எங்கெங்கு காணிணும்" கைபேசியடா!

Thursday, March 29, 2007

மலர்கள்..

தூவிய மலர்கள் வாடவில்லை!
கூவிய வாய்கள் ஓயவில்லை!
"குய்யோ", "முறையோ",
"அய்யோ","அப்பா",
"அம்மா",

வாடிய உடலை வாழ்த்தி,
வாசனை செய்து,
வீழ்ந்து கொண்டிருக்கும்.
வீதிகளில் எல்லாம்!
எறும்பு சாரியை,
எண்ண வைக்கும்!

Wednesday, March 28, 2007

மக்கள் எச்சரிக்கை!

விடுதலைக்குப் பின்,
புதுவை கண்டதில்லை,
இப்படியொரு மக்கள் எழுச்சி,
கட்சி அரசியலும்,
சங்க அரசியலும்,
பின் தொடர,
முன்னோடி போராட்டம்!


மீன்பிடித் துறைமுகத்தில்,
ஏமாற்றப்பட்ட மக்கள்,
விழித்துக் கொண்டனர்.
ஆழ்கடல் துறைமுக,
விரிவாக்கத்தில்!


40 ஏக்கர் போனது.
400 ஏக்கரும் போக,
அரசு "புரிதல் உணர்வு",
திரை மறைவில்.
இருட்டறை நாடகம்,
வெளிச்சம்!


அந்நியரும், ஆண்டவரும்,
தோற்பர் சுதேசிகளிடம்.
விடுதலை வேள்விக்குச்
சொந்தக்காரர்,
விட்டில் பூச்சி மக்கள்,
என்ற நக்கல்,
இன்று சிக்கல் ஆனாது!


பெண்ணும், ஆணும்,
சாலை அடைத்து,
கூட்டமாக, ஊட்டமாக,
உயர்த்திக் குரல் எழுப்பி,
பதாகை சுமந்து,
பழைய பேருந்து நிலையத்தில்,
ஊர்வலம்!


ஐய்யாயிரம் பேர்,
அணி அணியாய்,
இயக்கங்களுடன்,
முழக்கங்கள் இணைத்து,
கோரிக்கை அட்டைகளுடன்,
ஆர்ப்பரித்து, பரணி பாடினர்!


நீரைக் காப்போம்!
மண்ணைக் காப்போம்!
மக்களைக் காப்போம்!
புதுவையைக் காப்போம்!


உணவுப் பங்கீட்டு,
அட்டை நகல்கள்,
சட்டை செய்யாமல்,
எரியூட்டினர், போலி அரசு,
கவுரவத்தையும் சேர்த்து.
சரித்திரம் படைத்தனர்.


போராட்டங்களின் வரிசையில்,
இணைத்துக் கொண்டனர்,
எதிர்ப்புணர்வை, வெறுப்புணர்வை,
அலட்சியம் செய்தால்,
இனிமேல்,
இல்லது போகும்,
அதிகாரம், ஆட்சி,
எச்சரிக்கை செய்தார்!!

ஜவகர் மஞ்சி-பீகாரி

கல்யாணக்கடன்,
"நாலு பத்து கிலோ அரிசி"
"மூணு ஒன்பது ஆண்டுகள் உழைப்பு"
கடன் தீரவில்லை!
கொத்தடிமையும் தீரவில்லை!

இன்னும் வேணுமாம்,ஐய்யாயிரம்!
விடுதலைக்கு!
வட்டி,
மாதம் 60 விழுக்காடு,
மட்டுமே!

உபதேசம்..

எல்லாம் சொல்வேன்,
உனக்கு!
எனக்கு...?

அச்சம் தவிர்..!

அச்சம் தவிர்!
ஆண்டுகள் பல வாழ்ந்து என்ன பயன்,அச்சத்துடன்."அஞ்சுவது அஞ்சாமை பேதமை". அஞ்சுவது என்பது யாது?என்ன அதற்கு வரையறை.வள்ளுவர் காலத்து "அஞ்சுவது", மன்னனைக் கண்டு,மன்னனின் சட்டங்களைக் கண்டு. தற்போது,ஆட்சியின், திரைமறைவு அநியாயங்கள், அதிகாரங்கள். 'தடா','என்.ஸ்.ஏ','எஸ்மா','குண்டர் சட்டம்' போன்ற பல புதிய சட்ட வரிசைகள். வளர்ச்சி, முன்னேற்றம் எனும் பெயரில் நிகழ்த்தப்படும் "வளர்ச்சி பயங்கரவாதம்", ஆகிய பல பரிமாண நிரல்களைக் கண்டு.


காலம் உருண்டோடியிருப்பினும், இன்றும் அச்சம் என்பது, நிலவும் சமூகத்தின், விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குகளை மதித்து நடப்பது என்பதாகத்தான் உள்ளது. "அச்சமில்லை,அச்சமில்லை", பாரதி தமக்குத் தாமே தற்கருத்தேற்றம் செய்து கொண்டார். அவருக்கும் தெரிந்திருந்தது, ஆங்கிலேய அடக்கு முறை வடிவங்களைப் பற்றி.


அவற்றை எதிர்கொள்ளும் அஞ்சாமையை ஒரு இயக்கமாக,தேசிய கீதமாக,தெம்பு அளிக்கும் உணர்வாக, அனைவருக்கும் அவரால் தர முடிந்தது. அதுபோன்று, 'ஒலியல்'(டானிக்) அளிக்கும் கவிஞர், இயக்க முயற்சியுடன் இணைந்து செயல்படுவர், 'வெல்ல முடியாத எண்ணிக்கையில்' இன்று தேவை!

Tuesday, March 27, 2007

ஏது பழுது?

எழுத்து,சொல்,எண்ணம்..
எழுது,சொல்..
உன் எண்ணம்..
மனதில் உழுது,
ஏட்டில் எழுது.
ஏது,
அதில் பழுது?

உணர்ச்சிப் பிழம்புகள்!

கோபத்தில், குடும்பச்சண்டையில் பேசும் வார்த்தைகள், மனித உடல் உறுப்புகள், தலையிலிருந்து கால் வரை, சரளமாக வெளியேறும். சமயத்தில் கணவன், மனைவியின் அந்தரங்க செய்திகள், அனாவசியமாக கையாளப்படும். கோபம், பொறுமல், கொந்தளிப்புகள், பயணப்பட தயாராயிருக்கும் புகைவண்டி இரைச்சல் போல், புகைபோக்கி சாயலில்.


விளக்குமாறு, கரண்டி போன்ற சமையல் உபகரணங்கள் தாக்கும் கருவிகளாக, தாங்கி பிடிக்கப்பெறும். ஆட்டம் முடியப்போகும் திரைப்படம் போல, அறுத்துக்கட்டும். ஆணித்தரமான, கறாரான, வெட்டு ஒன்று, துண்டு இரண்டு பேச்சு.


உணர்ச்சிப் பிழம்புகள் இவர்கள்தான்! மறுபடியும் சாதி, சனத்தை அண்டாதவர்கள்! என் அப்பன், ஆத்தா தலைமுறையினர்! என் முறையில் தலை எழுத்து சற்று மாறி உள்ளது. எதிர்காலத்தில் நிரம்பவே மாறும் வாய்ப்பு உள்ளது!


'அவர்கள் வெளியே இருக்காங்க!,'உஸ்', எச்சரிக்கை இருக்கு. ஆம், ஆயாவின், ஆவேசம் அமர்க்களம் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறவன்தானே. புரியாதா அவனுக்கு? மனிதர்களை புரிந்து கொள்ள தெரியாதா?

புதுவையிலும்...

உள்ளூர் பெருமை அறியாமல்,
ஊட்டியின் பெருமை பேசுகிறோம்!
மார்கழியின் மகிமை புரியாமல்,
ஊர்களின் உன்னதம் பேசுகிறோம்!


சில்லென்று காற்று,
பனி மூட்டம்,
கதிரவன் தாமதம்,
டில்லியில் மட்டும் இல்லை!
புதுவையிலும் உண்டு.


அனுபவிக்க மனமிருந்தால்,
அமைதி இருந்தால்,
ஆயிரம் உண்டு,
இங்கேயும்,
அழகின் சிரிப்பு.

அரங்கேறிய அந்த நாள்!!

உழுவார் உலகத்தார்க்கு ஆணி!
கழன்று,கடை நிலையில் உள்ளார்,
தமிழகத்தில்!


பருவ மழை பொய்த்தால்!
பழி போடுகிறார்,
இயற்கையின் மீது!


பருவமழை பெய்யும் போது,
சேமித்து வைக்க,தேக்கி வைக்க,
தடுத்தது யார்!
அணைகளையும் தாண்டி,
அணை போடுவது யார்!


சர்க்கரைப் பொங்கலுடன்,
மதிய உணவு!
கண்ணிய மிக்க,
நடவடிக்கைதானா?


புண்ணுக்கு பூச்சு,
தீர்வாகுமா?
புண்ணியர்களே!
சுயமரியாதை
வழித் தோன்றல்களே!


ஆண்டபோதும்,
ஆள்கின்ற போதும்,
கவர்ச்சி அறிவிப்புகள்!
யாசகம் பெறுபவர்களாக,
தமிழர்கள்,
மாநிலம் எங்கும்.


தன்மான எழுச்சி பெற்று,
தமிழர் எழுந்தால்,
வேலையேதும் இல்லை,
உங்களுக்கு.

Monday, March 26, 2007

புதுவை மக்கள் எழுச்சி- பகுதி..2

இன்று(27.03.07),தேங்காய்த்திட்டு நில கையக எதிர்ப்புக் குழு, மீனவர் அமைப்புக்கள், பெரியார் திராவிடர் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, மீனவ விடுதலை வேங்கைகள், மக்கள் சிவில் உரிமைக் கழகம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், பிற சமூக அமைப்புகள், புதுச்சேரியை ஒட்டு மொத்தமாக பாதிக்கும், ஆழ்கடல் துறைமுகம் அமைப்பதை எதிர்த்த போராட்டத்தின், அடுத்த கட்டமாக, புதுவை பழைய பேருந்து நிலையத்திலிருந்து சட்டமன்றம் நோக்கி, ஊர்வலமாக சென்று தங்களின் உணவுப் பங்கீட்டு அட்டை நகலை அரசாங்கத்திற்கு திருப்பி அளிக்கின்றனர்.

பந்தயக் குதிரைகள்!

நாம் குதிரைகளே!
பந்தயக் குதிரைகள்.
நம் மீதும் எண்கள்,
ஜாக்கிகள்,முதலாளிகள்.
பேசும் குதிரைகள்.


வளவளவென்று,
தொண தொணவென்று.
பந்தய நேரம் அதிகம்.
மிக விசாலமான ஆடுகளம்.பந்தய முடிவின் பலன்,
குதிரைகள் அனுபவிக்கின்றனவா?
ஆட்டத்திற்கு ஆட்டம்,
தள்ளுபடி செய்யப்படும்,
குதிரைகளும் உண்டு.
சொத்தை என்று சொள்ளையென்று.


நாமும்,
கழித்துக் கட்டப்படுகிறோம்.
நீதி மன்றங்கள் எங்கே?
தடை ஆணைகள் எங்கே?
நினைவுச் சின்னங்கள் எங்கே?

மறைந்து போகும் கைவினஞர்.

குயவர்பாளையம், கொசக்கடை, ஆகிய பெயர்கள் கைவினைஞரான குலாளர் சமூகத்தை, நம் நினைவிற்கு கொண்டு வருகிறது.கோட்டக்குப்பத்தில் கூட, குயவர்கள் தொழில் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.புதுவை அரும்பார்த்தபுரத்தில் கூட, மண் கலயங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.கொசக்கடைத் தெருவில், மத்திய சிறைச்சாலைக்கு பின் பக்கத்தில், பானைகள், சட்டிகள் விற்கும் சந்தை இப்போதும் உண்டு.

அலுமினியம் 60களில் ஊடுருவல் செய்தது. அடுத்து, எவர்சில்வர்,(நிலைவெள்ளி) அதற்கடுத்து, பிளாசுடிக்(ஞெகிழி). இவைகள் விடை கொடுத்து அனுப்பின, விரைவாக மண்பாண்டங்களை. புதிய பாணி வாழ்க்கை முறைகள் உலை வைத்தன, பூர்விக மண்ணின் அம்சங்களை. ஒரு காலத்தில் அனைத்து பிரிவு மக்களின் சமையல் பாத்திர தேவைகளை பூர்த்திசெய்த, மிக அடிப்படையான தொழில் பிரிவு மக்களான குயவர்கள்,மண் உடையார் என்றும் அழைக்கப்பட்டனர்.

இம்மக்கள், மதம், கலாச்சாரத் துறைகளில், குறிப்பாக பொம்மைகள், குதிரைகள், வீரர்கள், சாமி உருவங்கள், கோவில் கோபுரங்களில் வைக்கும் கலசங்கள், கும்பங்கள், கரகாட்டத்திற்கு கலயங்கள் என்பன போன்ற பிற படைப்புகளிலும், பண்பாட்டு முத்திரையை, தனிப் பதிவுகளை ஏற்படித்தினர். தற்போது, இவர்கள் முகவரி இல்லாத கடிதங்கள், செல்லுபடியாகத நாணயங்கள்.

Sunday, March 25, 2007

உலகளாவியம்!

ஊட்ட முள்ளவர்களுக்கே!
முந்தி அடித்து,
முதலில் வருபவர்களுக்கே!
அட்டவதானிகளுக்கே!
இரண்டு, மூன்று, ஆறுதல் பரிசு,
எல்லாம் செல்லாத காசுகள்,
சொல்லாத வாக்குறுதிகள்!


பல கலை பட்டங்கள்,
பட்டயங்கள், ஆராய்ச்சிப் பட்டம்,
அனுபவச் சான்று,
பன்மொழித் தேர்ச்சி,


தட்டி தட்டிப் பார்த்து,
"கொட்டிக் கொடுக்க"
உன்னைக் கட்டி,
அழைத்துச் செல்லும்,
வேலை வாய்ப்பு!


தனியார் நிறுவனங்கள்!
சந்தையில் பல்லைப் பார்த்து,
மந்தையில் மடியைப் பார்த்து,
மாடு பிடிப்பது போல்!
ஆள் பிடிக்கும் வேலை!
ஆராவரத்தோடு!


முகவர்களின் கூடாரங்களில்!
முனைவர்களின் ஆசியுடன்!
பொன் விழா சுதந்திரத்தின்,
பொலிவான தோற்றம்!
போற்றுங்கள்! எல்லாம்,
ஜன கன மன!!

"சுனாமி"

சூறாவளிகள் சுழன்றடித்த போதும்,
சுக்கு நூறாக, சிதைத்த போதும்,
சிதையாத, எம் வாழ்க்கை,
சிதைந்தது, "சுனாமியில்",
நொடியில்.
நம்பிக்கையும் சேர்த்து.

பொல்லாதவர்!

நிவாரணங்களிலும்,
அரசியல்.
போட்டி போட்டு,
வெளிச்சம்.
பொல்லாதவர்கள்.

சிலர்...

உதிர்ப்பது யாவும்,
உளறல் என்றறிந்தும்,
உரத்தொலிப்பது ஏன்?
அரத்தம் தலைக்கேற,
ஆர்ப்பாட்டம் ஏன்?
பண்பிலா சொற்கள்,
அன்பிலா மனதில்,
ஆர்த்தெழுவது ஏன்?

கண்ணார்!

கொளுத்துகிறார் கற்பூரம்.
வெளியே, தார்ச்சாலையில்.
கண்ணார் கழிப்பதற்கு.
வாரந்தோறும் வரிசையாய்.
போட்டிப்போட்டு.


வெளிச்சம் என்னவென்று,
வெளியே வந்து பார்ப்பவர்,
துப்பிவிட்டு, தப்பிவிடுவார்.
தம் வீட்டுக்கதவை தாளிட்டு,
வந்த வேகத்தில்.


'இவன் இப்படித்தான்',
'நம் வீட்டுக்கு நேராக',
'செவ்வாய்க் கிழமைகளில்',
'அவள் ஞாயிற்றுக்கிழமைகளில்',
ஓயாது, இவர்கள் ஓலம்.
ஒவ்வொரு நாளும்.

பேசிடும் மனம்...

பார்வை பேசிடும்.
மொழிப் பிரச்னை இல்லை.
புரிகிறது உள்ளம்.
விரிகிறது,
கால வெளிகளைக் கடந்து.
கண் சிமிட்டும்,
ஒளிப்படமாய் ஒளிருகிறது.
ஓடுகிறது, மனத்திரையில்.
பல பரிமாணத்தில்,
பண்ணிடையாய் பசையுடன்.

"விழிப்பு"

கொசுவத்தி சுருள்,
ஏகாதசி விழிப்பு,
"வைகுந்தம்"
எவருக்கு?

Saturday, March 24, 2007

...வாழ்க!!

கார் அரிசி போச்சி!
"கார்" தொழிற்சாலை வந்திடுச்சி!
உழவிற்கு...?
உண்பதற்கு...?
"உலகமயம்" வாழ்க!!

அழிவு...

பிரம்மபுத்திரா,
மோசுகோவா,
இணைந்தால்!
பேராறு! பேரானந்தம்!
ஊருக்கு, உலகுக்கு அன்று.


98ல்,"பிரம்ம,மோசு",
இணைவு ஒப்பந்தம்.
ஏவுகணை உருவாக்கம்.
ஆனந்தம்,ஆர்வம் யாருக்கு?
போருக்கு! அழிவுக்கு!
ஊருக்கு? உலகுக்கு?

மானிடம் வெல்!

அடுத்தவன் செயிப்பதில் ஆர்வம்!
ஆராவரம்!
நீ செயிப்பது எப்போ?
நினைவில் கொள் தோழா!
அடுத்தவனுக்கு கை தட்டி,
ஆள் உயர மாலை சாத்தி!
ஆயுளை முடித்துக் கொள்ளாதே!
உன்னை உயர்த்திக்கொள்!
உயரத்தில் நிறுத்திக்கொள்!
உழைப்பில்,
சுயமாக, மரியாதை கொள்!
மக்களின் நிலை சொல்!
மானிடம் வெல்!

Friday, March 23, 2007

....காட்சிகள்!

வெளிச்சத்திற்கு வந்த பின்,
வேலை எல்லாம் முடிந்த பின்,
ஊடகத்தின் பிடியில்,
'உச்சு' கொட்டும்,
உயர்ந்த காட்சிகள்.


உருப்படியாய் நீதி,
தெருப்படியில் கிடப்பவர்க்கு,
தேறவில்லை!
தேற்றம் இல்லை!

கோழி...?

குப்பையைக் கிளறும் கோழி.
குப்பை இருக்கிறது.
கோழி...?

...இல்லை!

பஞ்சடைந்த கண்கள்,
பழுதடைந்த நெஞ்சம்,
நாம் அவர்கள் இல்லை!
நாம் நாமாகவும் இல்லை!

"நம்மவர்"

அரசியல் வசதி,
அடியாள் வசதி,
அத்தனையும், அன்று.


ஆன்மீகவாதி,
அறக்கட்டளை,
கல்லூரிகள்,
கவின்மிகு மனைகள்,
மருத்துவக் கல்லூரி, இன்று.


அரசியல் ஆசிர்வாதம்,
ஆதாயம்,
அனைவர் முன்னேற்றம்.


நல வழியில் நாடு உயரும்,
நம் பிள்ளைகள் படிப்பர்,
நானாவித நன்மையும்,
நலம் பயக்கும், நம்மவர்.


கால்வாய்,
பாசனம், நட்டமடையாது!
காற்றுக்கு பஞ்சமில்லை!
மின் விசிறி தேவையில்லை!
ஏரிக் காற்று,
"ஏசி"க்கும் தேவையில்லை!


குடிக்கத் தண்ணீர்,
அதற்கும் பஞ்சமில்லை!
இறங்கினால் ஏரி!
"விசாரணையில் மக்கள்"
"வேண்டியவர்"
நக்கல்!!

தானம்!

எவருடைய இரத்தமோ?
குருதி அணுக்கள் திரட்சி,
தெம்பளிக்க
இறங்குகிறது.
துளித் துளியாக,
நாடியில்,
ஏற்றம் காண,
பெறுபவர் வாழ்வில்,
மாற்றம் பேண.

Thursday, March 22, 2007

என்ன வாதம்..?

"சீனாவின் பாதை நம் பாதை"!
முன்னாளில் முழங்கினர், முடுக்கமாக.
"துரோகிகள்","தீவிரவாதிகள்",
வெறுப்பு வலதுசாரிகள்,
பொறுப்பு இடதுசாரிகள் அடையாளம்,
அவமானம், பரிகாசம், அன்று.


வரலாறு திரும்புகிறதா? முழுச்சுற்றில்.
அனைத்து சாரிகளும் ஆதரவு.
"சிறப்பு பொருளாதார மண்டலம்",
"சீனாவின் பாதை நம் பாதை",


ஐக்கியம், முற்போக்கு,
முன்னணி, முழக்கம்.
வங்க மார்க்சிசுட்டுகளும்,
எங்க கம்யூனிசுட்டுகளும்.
வலது சாரிகளும்...

அந்தோ மக்கள்!

ஆள் காட்டும் வர்க்கம்!
அதிகார வர்க்கம்!
ஆள் காட்டி, விரல் அசைவிற்கு,
ஆட்டம் போடும் கூட்டம்!
அந்நியனே தாழ்வில்லை என உணர்த்தும்,
அடிக்கடி.


அடுத்த நாட்டை ஆள்கிறோம்,
அநியாயம், அதிகம் செய்கிறோம்.
இனியாவது நியாயம்,
இதயத்தின் ஓரத்தில் துளிர்த்தது.


நம்மவர், அவரையும் விஞ்சுகிறார்.
நாடகம் தோற்கும், அரங்கேற்றம்.
போட்ட வேடத்திற்கு பொருத்தமாக,
பொதுமக்களை வஞ்சிக்கிறார்.


"பொது மக்கள் விசாரணை",
மூன்றாம் மாடியில்,
"குளு குளு" அரங்கில்.
காவல் துறை பாதுகாப்பில்.
தடுப்பரண்கள் மத்தியில்.


குழப்பம் விளைவிக்க,
குண்டர் படை உதவியுடன்,
சட்ட மன்ற உறுப்பினர்
தலைமையில்,
ஆளூம் வர்க்க ஆசியுடன்,


தனியார்மய முதலாளியை,
தூக்கி நிறுத்த, அரசும், அதிகாரமும்,
ஆர்ப்பரிக்கும்.
ஆவலுடன், காவலுடன்.


அந்தோ மக்கள்!!

Wednesday, March 21, 2007

குத்தகை!

குத்தகை தா! எனக்கும்! அரசே!
குளத்து மேடானாலும், குப்பை மேடானலும்,
செக்கு மேடானாலும், குளமானாலும்.


அரசியல்வாதி நான் இல்லை!
வியாபாரி நான் இல்லை!
அனுசரித்து போகும் ஆளும் இல்லை!
அக்கறையாக கேட்கிறேன்!
எனக்கும் தா!


கோவில் நிலம் ஆனாலும் பரவாயில்லை!
குட முழக்கு என் செலவில் செய்கிறேன்!
99 ஆண்டுகள் மட்டும் எனக்கு போதாது!
ஒரு 100 ஆண்டு வாழ்க்கை,
எனக்கு தா!


ஓட்டல் கட்ட, உல்லாச விடுதி கட்ட,
மனை பிரித்து மாயம் செய்ய.
வேண்டும் போது தருவேன்,
வருவேன், கீழ்க் குத்தகைக்கும் விடுவேன்,
சேர்ப்பேன்.


எனக்கு தா!
கட்சியில் சேரவா?
எதுக்கு?

சிதைவுகள்!

சிதைவு உயிரற்றது!
சிதைவு உயிருள்ளது!
மாற்றம் அடைவது!
மாற்றம் உயிரற்றதா?
நிலை மாற்றமா?
குணமாற்றமா?
தடுமாற்றம்,
தனிமாற்றம்.


ஒழுங்கு,
ஓர் அமைவு,
முறைமை,
சீர்,சரி,
நேர்மறை,
நெறி,
உண்மை.


சிதைவு!
எதிர்மறை,
இன்மை,
முறையின்மை,
மாறானது,
வெறி.

Tuesday, March 20, 2007

புதுவயில் மக்கள் எழுச்சி...பகுதி..1

கலிங்கா! சிங்கூர்! நந்திகிராம்! இவைகளின் வரிசையில், தேங்காய்த்திட்டு, புதுவையில் மக்கள் எழுச்சி!
தேங்காய்த்திட்டு கிராமத்தில் ஆழ்கடல் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, சுற்றுச்சூழல் சட்டப் பிரிவுகளின் கீழ், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த பொது விசாரணை, 14.02.07ல், புதுவை சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுக் குழு நடத்தியது. அ.இ.அ.தி.மு.கவின் அன்பழகன்,சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் மட்டும், வம்பாக்கீரப்பாளையத்தைச் சேர்ந்த சிலருடன் துறைமுகத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இச்சம்பவத்திற்கு முன்பு, துறைமுக அமைப்பது குறித்து பலமான ஆட்சேபணைகளை ஊர் மக்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினர் சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எடுத்துக்காட்டி, வாதிட்டனர். புதுவை மாவட்ட ஆட்சியர் திரு.தேவநீதிதாசு அவர்கள், மக்கள் எழுப்பிய வாதத்தின் நியாயத்தை உணர்ந்து, பொது விசாரணையைத் தள்ளி வைப்பதாக, கூடியிருந்த மக்கள் முன்பு அறிவித்தார்.அதன் பிறகு, மரப்பாலம் சாலையில் அ.இ.அ.தி.மு.க. கட்சியை தவிர்த்து, ஊர் மக்கள், சமூக செயல்பாட்டாளர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து கொண்ட, மிகப்பெரிய, எழுச்சியான பொதுக்கூட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் அடுத்த கட்டமாக, தேங்காய்த்திட்டு கிராம மக்கள் தங்கள் வீடுகள் அனைத்திலும் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தினர்.போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியில், அடுத்த கட்டமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும், "தேங்காய்த்திட்டு நிலம் கையக எதிர்ப்புக்குழு"வினர் சந்தித்து, மக்கள் பிரச்சனயை விவரமாக எடுத்துக் கூறினர். தொகுதி சட்ட மன்ற உறுப்பினர், திரு.ச.சுப்ரமணியன் அவர்களையும் சந்தித்து பாதிப்பு குறித்து எடுத்து விளக்கினர். இதற்கிடையில், புதுவை நகராட்சிக் கூட்டத்தில் ஆழ்கடல் துறைமுகம் அமைப்பதை எதிர்த்து ஒருமனதாக தீர்மானம் இயற்றியும், புதுவை அரசுக்கு அனுப்பி வைத்தனர். மாநிலத் துணை நிலை ஆளூநர், தலமைச்செயலர் ஆகியோரையும் சந்தித்து சுற்றுச்சூழல் கேடு, ஒட்டு மொத்த புதுவையின் நீர் ஆதாரம், கடல் ஆதாரம் அழிந்து போகக்கூடிய நிலமை குறித்தும் விரிவாக விளக்கி, முறையிட்டு, மனுவும் அளித்தனர்.


இந்த கிராமாத்தில் 2500 குடும்பங்கள், "தலைமுறை தலைமுறையாக", பயிர்த்தொழில் நடத்தி, "கொத்தாகவும், கொடியாகவும்" வாழ்ந்து வருகின்றனர்.பசுமையான தென்னந் தோப்புகள், கத்தரிக்காய், வெள்ளரிக்காய், கீரை வகைகள், மரவள்ளி போன்ற பயிர் வகைகள் பயிரடப்பட்டு வரும், வளமான, ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள, நன்னீர் தாராளமாக மக்களுக்கு கிடைத்து வந்த, சிறிய கிராமமாகும். முன்னரே, மீன் பிடித்துறைமுகம் அமைக்க, 40 ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துக் கொண்டதின் காரணமாக, உப்பு நீர் பெருமளவு நிலத்தடி நீருடன் கலந்து விட்டது. கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு 3 கி.மீ அளவிற்கு கடல் உள்ளே புகுந்து விட்டது. இதன் காரணமாக, பல மீனவ கிராமங்கள் பெரும்பாலும் பாதிப்படைந்தன. உப்பளம் சாலையில் இருந்து தேங்காய்த்திட்டுக்குச் செல்லும் பகுதியில் பன்னெடுங்காலமாக நீரோட்டத்துடன் படகு போக்குவரத்து இருந்த பனஞ்சாலை ஆறு, தற்போது சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டு, அதன் மீது தார்ச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.19.03.07ல், "புதுச்சேரி துறைமுகக் கழகம்" எனும் பெயரில் பெயர்ப்பலகை வைத்து, "சுபாசு புராடக்ட்சு மற்றும் மார்கட்டிங் குழுமம்", அமாவாசை அன்று பூசை நடத்தியுள்ளனர். இதைப் பார்த்து தவித்த மக்கள், கொந்தளித்து, சாலை மறியல் செய்தனர். முன்னதாக, கட்டுமான பணிக்காக, பூசை செய்த இடத்தில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி, தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி, உப்பளம் பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திரு.இலட்சுமி நாரயணன், சட்ட மன்ற உறுப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் தோழர்.லோகு.அய்யப்பன் தலைமையில் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழர் தேசிய இயக்க அழகிரி, மக்களுரிமைக் கூட்டமைப்பு சுகுமாரன், தலித் விடுதலைச் சிறுத்தைகள் பாவாணன் ஆகியோரும் மறியலில் கலந்து கொண்டனர். "நில கையக எதிர்ப்புக் குழு"வின் தலைவர், திரு. காளியப்பன், துறைமுக வேலை உயர்நீதி மன்ற உத்தரவை மீறி நடக்கிறது என்று காவல் துறையில் புகார் அளித்தார். துறைமுக எதிர்ப்புக் குழுவின் தோழர்கள் பாலமோகனன் உட்பட பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.நேற்றைய செய்திப்படி, ஊர் மக்கள் 10 பேர் மீது காவல் துறையினர் வழக்கு போட்டுள்ளனர். 14 மீட்டர் கடலை ஆழப்படுத்தினால்,"சுனாமி" போன்ற ஆழிப்பேரலைத் தாக்குதலின் போது கடல் அலையின் விசை அதிகமாகி, 3 கி.மீ அல்லது 5 கி.மீ வரை கடல் நீர் உள்ளே வந்து விடும். தோராயமாக, 90 இலட்சம் கியூபிக் மீட்டர் கடல் மண் தோண்டப்பட்டு மேல் பரப்பில் கொட்டப்பட்டால், கிராமமே மூழ்கிப்போகும். வணிக ரீதியாகவும், இத்துறைமுகம் இலாபகரமாக இருக்காது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி, உலகிலேயே அதிகமான கடல் நீர் ஓட்டம் உள்ளது "கோரமண்டல் பகுதி" என ஆய்ந்து அறியப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறிருக்க, நந்திகிராம் படுகொலகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், பூசை நடத்தி, ஒப்பந்தக்காரர் அரசு ஆதரவுடன் முனைப்பாக நின்று நேற்று (19.03.07) தொடங்கினர் அழிவு வேலையை! ஆற்று கிராமத்தில். ஆழ்கடல் துறைமுக அநியாய வேலையை! மக்கள் எழுச்சியை, எதிர்ப்பை சற்றும் பொருட்படுத்தாது, ஒற்றை ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் 2700 கோடி உருவாய் திட்டம். விளை நிலங்களில் பொதுமக்களை பாதிக்கக்கூடிய திட்டங்கள் குறித்து மிகப்பெரிய விவாதம் நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியும் நடந்து கொண்டிருக்கும் வேளையில். பூனை போல், பூசை போட்டு வேளை தொடங்கியது எவ்விதத்திலும் முறையானதல்ல.

Monday, March 19, 2007

பைய்யில்....!

இன்றைய வாழ்வே,
உன் கையில்.
என்றாலும்,
சென்ற வாழ்க்கையை,
செரித்திட்ட உணவை,
சீண்டிப்பார்க்கும் உள்ளம்.


நாளைய வாழ்வை,
நாடிப் பார்த்திடும்.
இன்னும்,
"கையிலிருப்பதே மெய்யிலிருப்பது",
"பைய்யிலிருப்பது பொய்யிலிருப்பது"

தொடர்பறுப்பர்!

நீர் அணிவார்,
நெடு கோடும் உண்டு,
சமயங்களில்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே"
முணு முணுப்பார்.
சமய ஆசாரியார் போல்!
சொல்லுக்கும், செயலுக்கும்,
தொடர்பறுப்பார்.
தொல்லுலகில்!

கலவைக்கல்லூரி!

குரங்கு!
புளி!
சிங்கம்!
நாய்!
நரி!
பூனை!
கழுதை!
மாடு!
ஆடு!
ஒவ்வொன்றும்,
தனித்தனியான குணங்கள்.
உனக்கோ! அனைத்தும்!
விலங்குகளின் கலவை.
நீ, ஒரு "கலவைக் கல்லூரி"

Sunday, March 18, 2007

"சாவதற்கு தடையில்லை"

உத்தரப் பிரதேசத்தில் மூளைக்காய்ச்சல்!
பெரியவர் முதல், சிறியவர் வரை,
நூற்றுக்கும் மேற்பட்டவர் இறப்பு!
ஈடு செய்ய முடியாத இழப்பு!


உயரிய, சிறந்த மருத்துவ மனைகள்
இருந்தும்,
மக்களுக்கு இல்லை!
நல வழியில் முன்னேற்றம்,
இதுதானா?


மாநிலந்தோறும் மடிகின்றன,
குழந்தைகள், நோய்களால்.
மருந்துக்கும், தடுப்புக்கும் வழியில்லை!


தேசியக் கொடியின்,
கவுரவத்தை இழக்கமாட்டோம்!
சட்டம் வந்து விட்டது!


நோய்களால் சாவதற்கு
தடையில்லை!
தாராளவாதம்!!

நினைப்புக்கும் கூட...

குண்டும், குழியுமாய் இருந்த சாலை!
சேறும், சகதியுமாய் இருந்த சாலை!
மண்ணும், மரங்களும் அடர்ந்த சாலை!
மாடு பூட்டிய வண்டிகள், போய் வந்த சாலை!
மனிதர்கள் நடந்து, கடந்து சென்ற சாலை!


மழைக் காலங்களில் குளங்களாக,
குட்டைகளாக, காட்சி தந்த சாலை!
காகிதக் கப்பல்கள் விட்டு மகிழ்ந்த சாலை!
தவளைக் குஞ்சுகள் தாவிக்குதித்த சாலை!
வெள்ளம் வந்து, மரக்கிளைகள்,
தென்னை மட்டைகள், விழுந்த வேளை,


பச்சைக் கிளிகள் நனைந்து, பறந்தும்,
பறக்காமல், பயந்த வேளை,
தூக்கணாங் குருவிகள், குடைசாய்ந்த காலம்,
தண்ணீர் பாம்புகள், தலையெடுத்து,
தென்னை ஓலை சுருக்கில்,
சிறுவர்கள் விளையாடிய காலம்,


வீழ்ந்த பூவரசம், ஒதியம்,
தென்னை ஓலைகள் வைத்து,
குடில் அமைத்து, பீப்பி செய்து ஊதி,
பூவரசம் பூவை தலையில் சூடி,
தாலிகள் செய்து மாட்டி,


குகை அமைத்து, குதூகலம் காட்டி,
மகிழ்ந்து விளையாடிய,
மழைக்கால சூறாவளிக்குப் பின்,
சுண்டல் செய்து, கிழங்கு வேகவைத்து,
கும்பலாக கூடி தின்ற வாழ்க்கை,


அடை சுட்டு, அடுத்த வீட்டுக்கும் கொடுத்து,
அன்பாக வாழ்ந்த, வாழ்க்கை,
நினைப்புக்கும் கூட, வந்ததின்று பஞ்சம்!

Saturday, March 17, 2007

சிலையும்,குழந்தையும்!

பால் குடிக்கிறது சிலைகள்!
பால் ஊட்டுபவர் கூறுகிறார்!
ஊடக காட்சி!
ஊர் எங்கும்!


இம்முறை, சிவபெருமான்! அம்மை!
பத்தாண்டு பரபரப்பு!
பால் விநியோக தட்டுப்பாடு!
மீண்டும் அரங்கேற்றம்,
மகாராட்டிரத்தில்!


குடிக்கும் குழந்தைகள்,
நொடிக்கின்றனர்,
பால் இன்றி!
பசும்பாலும் இல்லை!
தாய்ப்பாலும் இல்லை!


பிள்ளைகள் கல்லாக அமையவில்லை!
இருந்திருந்தால்,
பல்லானோர் பாக்கியம் கிடைத்திருக்கும்,
பால் ஊட்ட!


பகுத்தறிவுக்கும் வேலை இல்லை!
பச்சிளங் குழந்தைகள்,
பசித் தீயும் ஆறவில்லை!
பாரதத்தில்!!

மெய்மையே!

உனைக் காண ஏங்கும்,
மன விழிகள் உறங்காது!
இமை மூடி இறுகினாலும்,
பிம்ப ஒளிக்கீற்றுகள்,
நுண் துகள்களாய்,
விசையுடன் கலைத்திடும் உறக்கம்!


தொலைவில் உணர்தல் உண்மையாமோ?
தொலைந்திடும் மனங்களின்,
தொடர் வினை நிகழ்ச்சியில்,
தொலைவேதும் இல்லை!
காலம் ஏதும் இல்லை!


உணர்ந்திடும் நிலையும் உண்மையே!
உணர்ந்து, கலந்திடும் நிலையும் மெய்மையே!
வாய்த்திடும் அனுபவம்,
வாழ்வியல் மெய்மையே!

எரிபொருள் மறைவிடம்!

நகர வளர்ச்சி! திட்டமிடாத தன் விருப்ப வளர்ச்சி! போக்கு வரத்து நெரிசல் அதிகம் உள்ள குறுகிய சாலைகள்! குறுக்கும் நெடுக்குமாக செல்லும் பாதைகள்! எதிரே வரும் வாகனங்கள் வளைந்து எங்கே செல்கின்றன? அறிந்து கொள்வதற்குள், வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி மோதலுக்கு தயாராகின்றன!, இராணுவ நடவடிக்கை போல். இந்நிலையில், வளைந்த வாகனம் எங்கே சென்றது? ஆம்! பார்வைக்கு புலப்படாத மறைவிடத்தில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்குள்!


இது போன்ற அமைவிடம் (மறைவிடம்) எரிபொருள் நிரப்பும் நிலையமாக அமைக்கப்பட்டதற்கு யார் பொறுப்பு? எவர் அனுமதி அளித்தார்? நுகர்வோர் அமைப்புகள் என்ன செய்கின்றன? அரசியல் கட்சிகளின் செயல் வரம்பிற்குள். இது போன்ற மக்கள் பிரச்சனைகள் வரவில்லையா? சில வாகன ஓட்டிகளுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்கலாம்! பொதுமக்களுக்கு? பொதுமக்கள் செல்லும் வாகனங்களுக்கு? பல நெருக்கடிகள்! சிக்கல்கள்!!

"வருந்துகிறோம்"!

சத்துக் குறைவால்
செத்து மடியும் குழந்தைகள்,
ஓர் அகவைக்குள், மகாராட்டிரத்தில்.


மலைவாழ் மகவுகள்,
நீதி மன்றம் சென்ற வழக்கில்,
வந்த செய்தி.


நீயும், நானும், மறந்த சேதி.
"ஆண்டவனும்", "ஆள்பவனும்"
அறியா சேதி.


உழைக்கும் மக்களின்
பிழைப்புச் செல்வம்,
உலகை விட்டு உலர்ந்த சேதி.


சில நாட்கள் நாளேட்டில்,
சின்னத் திரையில், பெட்டிச் செய்தி,
பேட்டி, வாதம், எதிர்வாதம்,
வாக்குறுதி வரிசைப் பட்டியல்.


'தடங்கலுக்கு' வருந்துகிறோம்!

"பள்ளாங்குழி"

'பள்ளாங்குழி' போன்ற விளையாட்டு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பழங்குடிகளிடம், குறிப்பாக, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நிலப்பகுதியில் வசித்தவர்களிடமும், 'சுலு' போன்ற பழங்குடி மக்களிடமும் இருந்துள்ளது, குறித்த செய்தி, அறிய வருகிறது. பண்டையத் தமிழ் நாட்டில், ஏன் புதுவையில் கூட, சிறுபிள்ளைகளாக நாம் இருந்தபோது பல்வேறு வடிவங்களில் வேலைப்பாடுகளுடன், மீன் வடிவத்தில், பள்ளாங்குழி விளையாட்டு இருந்து வந்துள்ளது. இதில் விளையாட புளியங் கொட்டைகள் காய்களாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.


கணக்குப் பார்த்து விளையாடும் கலையை, பெரியவர்கள், குறிப்பாக பெண்கள், வீடுதோறும் ஒழிவு நேரங்களில், உணவுக்குப் பின், பிற்பகல் வேளைகளில், விழாக் காலங்களில் குழுவாக விளையாடுவது. இந்த குழியில் இருந்து எடுத்தால், அடுத்தவர் குழியை துடைத்து விட முடியும் என்பது எல்லாம் கணிதத்துடன் தொடர்புடையது.


இக்கலை, அறிவு சார்ந்த தமிழ் மக்களின் விளயாட்டுகளில் ஒன்று என்றால் வியப்பில்லை. தற்போது, 'லூடோ' போன்ற விளையாட்டுகள், 'அபகசு', 'உசிமசு' 'சுகொடா' விளம்பரங்கள், "அறிவுப் பயிற்சி", என்றெல்லாம் தற்போது கூறுவது, பணம் பறிப்பது, வணிகமயத்தின் விரைவான கொடுஞ்சூழலே எனில் மிகையன்று.

Friday, March 16, 2007

ஊடகதாரி!

நக்கலுக்கு குறைவில்லை,
நாள் தோறும்!
நாநெடுகிலும் நயம், வஞ்சம்,
நளினம், நடிப்பு!
நண்பரிடம் கூட,
நம்பிக்கை இல்லை!
நாடகம் தோற்கும்,
ஊடகதாரி!

நிதானம்!

தவறினாய், தள்ளாடினாய்,
தள்ளினாய் குவளையை தண்ணீருடன்!
சிதறவில்லை கண்ணாடிக் குவளை!

சீரான மனிதர், பதறாமல் தடுத்தார்,
காப்பாற்றினார்!
கண்ணாடிக் குவளையுடன்,
உமது கவுரவத்தையும்!

உறக்கம்.

உறங்கிய பொழுதுகளைவிட,
உறங்காத பொழுதுகளே அதிகம்!
இரவுகள் வருவது ஓய்விற்கா!
ஓயாத எண்ணங்களின் விழிப்பிற்கா!
எண்ணங்களுக்கு உறக்கம் இல்லையா!
எண்ணங்கள் சுமக்கும்,
மனிதர்களை சுமக்கும், உறக்கம்!

மாநாடு..!

ஊரெங்கும் தோரணம்! பந்தல்!
மூவண்ணம்! மூலை முடுக்குகளில்!
தொழிற் சங்கத்தின் மாநாடு!
"தேசியம்" அல்லவா?


வீதிக்கு வந்திறங்கும் கூட்டம்,
நீள் கூட்டம், ஆள் கூட்டம்,
வயம் இல்லை!


"பொருள் நயம்"
போய் இறங்கும்!
ஆட்சி அதிகார ஆர்ப்பரிப்பில்!


தொழிலாளர் ஒற்றுமை,
ஓயாத முழக்கம்!
"தொழிற்சாலைகள் தொழிற்சங்க சட்டப்படி"
நடந்திட, ஆலோசனை,
அறிவுரை,
"அண்ணாமலையில்".


"ஐக்கியம்" உடைத்த வரலாறு,
நெஞ்சை விட்டு அகலாது!
தொழிலாளர் மறந்து போனார்!
சரித்திர ச(க)திகளை!


நெஞ்சிருக்கும் நினைவிருக்கும்!
நினைவில் பசுமையாய்,
நீடித்திருக்கும்!

நமன் அழைப்பு!

நாய் குரைப்பு! நமக்கு வேர்ப்பு!
"நமன் அழைப்பு மணி"
நாயின் அழுகை வழி,
"மொழி அறிந்தோர்"
நாள்தோறும் புலம்பல்!


அடுத்தது என்ன?
ஆவலுடன்!
காவலை மிஞ்சும்!

Thursday, March 15, 2007

"நாதியற்ற நந்திகிராம்"

கொல்கத்தா, நந்திகிராமத்தில், உலக மயத்தின் கூறான, சிறப்புப் பொருளாதார மண்டலம் ,மற்றும் வேதியியல் தொழிற்சாலையை, இந்தோனேசியா சலீம் குழுமத்தின் ஒத்துழைப்புடன், வேளாண்மை நிலங்களை அழித்து அமைக்க, மேற்கு வங்க அரசு முனைந்தபோது, எதிர்த்த கிராம மக்களை, காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி, விவசாயிகள் 6 பேரை கொன்றுள்ளது. 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 11 பேர் வரை இறந்திருக்க கூடும்; இவர்களில் மூவர் பெண்கள் என்றும், செய்திகள் கூறுகின்றன.


இதற்கு முன், சனவரியில் நடந்த போராட்டத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் படுகாயம் அடைந்தனர் என்று அறிய வருகிறது. இசுலாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள இக்கிராமம், கொல்கத்தாவிலிருந்து 150 கி.மீ.தொலைவில் உள்ள, கிழக்கு மித்னாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறந்தவர் எண்ணிக்கை 20ஐ தாண்டும் என்றும், பெண்கள், குழந்தைகள் சேர்த்து, 200 கிராமவாசிகள் குண்டு காயம் அடைந்துள்ளனர் என்றும், செய்திகள் கூறுகின்றன. பல ஆயிரம் ஏக்கர் வேளாண் விளை நிலங்களை அழித்து, சிறப்புப் பொருளாதர மண்டலம் மற்றும் வேதியியல் தொழிற்பேட்டை அமைப்பதை எதிர்த்து, 'பூமி உச்சட் பிரதிரோத்'(நில கையக தடுப்பு குழு) கடந்த 3 மாதங்களாக, சாலையில் பள்ளம் பறித்து, காவல்துறையினர் நுழைவதை தடுத்து, தங்கள் நிலங்களை காத்திட, போராடி வந்தனர்.

விவசாய எழை மக்கள், நிலத்தை காப்பாற்ற, தங்கள் வாழ்வுரிமையை பாதுகாத்திட, அறவழியில் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். கண்டுகொள்ளாத, அசையாத, மேற்கு வங்க இடதுசாரி அரசு, ஆயுதப்படையை வைத்து, நிராயுதபாணியான பெண்களை, குழந்தைகளை சுட்டுக் கொன்றது, மிக மோசமான, மனித உரிமை மீறலாகும். சொந்த மண்ணிலேயே இடதுசாரி அரசு மேற்கொண்ட இத்தாக்குதல் இந்திய அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய களங்கம் ஆகும்.

Wednesday, March 14, 2007

வடிவம்..

வன்முறை வடிவம் பல!
புரிந்தவை சில, தெரிந்தவை சில,
அறிந்திலோம்! ஆயிரம், ஆயிரம்,
அரங்கேற்றம்! உயர் தொழில் நுட்பத்தில்,
உலகமயமாக்கலில்!


உயிர் பறித்திடும்! உடமை சிதைத்திடும்!
உலைச்சாலை!
பதட்டத்தை, சிலிர்ப்பை, சிதைவை உரமூட்டும்,
உலக மனசாட்சியை உறைத்திடும்,
பனிக் கட்டியைப்போல்!

அடுத்தது?

உரிமை முழக்கம், ஊர்வலம், மாநாடு,
ஒவ்வொரு நாளும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டம்,
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம்,
மகளிர் உரிமை ஆணையம்.


அமைப்புகள் அத்தனையும்,
பெண் குழந்தைகள் வாழ்வு,
உத்தரவாதம் அளித்திடுமா?


செய்தியாக சில நாள்,
அனைவரின் வாயும் அசைபோடும்,
'இச்' 'இச்' கொட்டும்.
அடுத்தது என்ன?

"குர்கான்" - ஒரு குறியீடு!

பன்னாட்டு குழுமங்களின் குடியேற்ற நாடாகி விட்டதா இந்தியா? தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு உட்பட, தங்களது நியாயமான கோரிக்கைகளை, வலியுறுத்தி நிகழ்த்திய போராட்டத்தை, உலகின் மிகப்பெரிய, சனநாயக நாட்டின் காவல்துறை, மூர்க்கத்தனமாக கொடுங்கரம் கொண்டு, தாக்கியது. இந்திய இறையாண்மையின் குறியீடான பாரளுமன்றத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில், அதிகார மீறல், அருவருப்பான செயல், முன்னெப்போதும் இல்லாத அளவில், குர்கான்,அரியானாவில், நிகழ்ந்தேறியது. நிகழ்ந்த சம்பவம், நாட்டையே உலுக்கி விட்டது.மாநில ஆளும் வர்க்கமும், அதிகாரிகள் வர்க்கமும்,கை கோர்த்து நிகழ்த்திய, ஓண்டா தொழிலாளர்கள் மீதான, மூர்க்கத்தனமான அடக்குமுறை, அனைவரையும் உறைய வைத்துள்ளது.


சப்பான் நாட்டு தூதர், ஒய்.இனோகி, 'ஓண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் சுகூட்டர் இந்தியா தொழிற்சாலை'யில் ஏற்பட்ட தொழிற் தகராறை, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான அளவு கோல், என குறிப்பிட்டுள்ளார். இது, இந்திய தொழிலாளி வர்க்கத்தை, இந்திய அரசாங்கத்தை மிரட்டுகின்ற, அவமதிக்கும் பாணியில், அமைந்துள்ளது.


இந்திய நாடு விடுதலை அடைந்ததிலிருந்து, இந்திய சந்தை சப்பானுக்கு தாராளமாக, பெரிய அளவில் திறந்து விடப்பட்டுள்ள உண்மையை மறந்து, அவர் பேசியுள்ளார். ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக, தங்களது சந்தைகளை சப்பானிய ஆட்டோ தொழிலுக்கு போட்டியாக,தங்களது சொந்த தயாரிப்பான, விலை குறைவான, நவீனமான மோட்டார் வாகனங்களை சந்தைகளில் கொண்டு வருகின்றன.


இது போன்றே, செர்மன் சந்தையும், பிரான்சும், சப்பானிய தொழிலுக்கு மிகவும் போட்டியாக மாறியுள்ளன. 1990ஆம் ஆண்டிலிருந்தே நன்கு முயற்சி செய்து, திட்டமிட்டு, ஆட்டோமொபைல் தொழிலிலிருந்தே, சப்பானை வெளியேற்றுவது எனும் ஐரோப்பிய நாடுகளின் முயற்சியால், 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே, தமது வாகனங்களை சப்பான், ஐரோப்பிய சந்தைகளில் விற்க முடிகிறது.


'நல்லாட்சி', 'இந்தியா ஒளிர்கிறது' எனும் கவர்ச்சிகர முழக்கங்களுக்குள், 'குர்கான்' போன்ற தொழிலாளர் விரோத அடக்குமுறைகள், அத்து மீறல்கள் எவ்வாறு உள்ளடங்கி, தருணம் பார்த்து, சுதந்திர நாட்டின் பாதுகாவலன் என முழக்கமிடப்படும் காவல்துறை, தனது உண்மை அவதாரத்தை, மக்கள் விரோத, காலனியாதிக்க பழிவங்கும் உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் இத்துறைக்கு, சமூக பொறுப்புணர்ச்சி இல்லையா?

வேலை..!

"இலட்சம் பேருக்கு வேலை"
இலட்சிய பேர்வழி நான்!

மிச்சம் பேருக்கு?
"மீந்தால் தருவேன்"

'பக்ரைன்' தமிழர்கள்!

உள்ளூரில் வறட்சி. விவசாயம் கை கொடுக்கவில்லை. பாறை பூமியில் பாடு பட்டாலும் பலன் இல்லை. அதிகம் படிக்கவில்லை. அடுப்பு எரிய ஏதாவது உழைப்பு. வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை. அறிந்தவர்,தெரிந்தவர் மூலம் அண்டை மாநிலத்தில்-கேரளா, சண்டிகார்- போன்ற பகுதிகளில், சாலைகள் செப்பனிடும் வேலைக்குச் சென்றுள்ளார்.


அங்கு கிடைத்த அறிமுகம், விவரத்தின் அடிப்படையில், பக்ரைனுக்கு பயணம். கந்து வட்டிக்கு கடன் வாங்கி உரு.1.50 இலட்சம் முதல் உரு.2 இலட்சம் வரை செலவழித்து, வாழ்க்கையை நகர்த்திட முடிவு செய்து, கொத்தனார், சித்தாள் வேலை செய்து வந்தனர்.


கொட்டடியில் அடைத்து வைப்பது போல், சிறு அறைக்குள் 50 அல்லது 60பேர் , கொட்டி வைத்த கற்கள் போல் திணிக்கப்பட்டதின் விளைவு, மின் கசிவு, தீ விபத்து. அதில் இருந்து தப்பிக்க இயலாது, மூச்சுத் திணறி இறந்தனர்.


பிழைக்கச் சென்ற இடத்திலும் சோகம் துரத்தியடித்து இவர்களின் வாழ்க்கை கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வாங்கிய கடனும் தீரவில்லை, வாழ்க்கைக் கடனும் தீரவில்லை. மனைவி, பிள்ளைகள், பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள், என அனைவரையும் மீளாத சோகத்தில் விட்டுச் சென்றனர், பிழைக்கச் சென்ற தமிழர்கள். சுதந்திர இந்தியாவின் 60வது கொண்டாட்ட சமயத்தில் ஏற்பட்ட கோலம்! அவலம்!


தமிழ் நாடு இவர்களுக்கும் சொந்தம் தான்!!

Tuesday, March 13, 2007

சடங்குகள்..!

சடங்குகள் நம்மிடையே, கிடங்கு கொள்ளும் அளவிற்கு, மலிந்து கிடக்கின்றன. இறப்பிலும் கூட ஏராளம். அவரவர் விருப்பப்படி. காவு கொடுப்பது; பிணத்தை கிடத்தி வைக்கும் திசையை தீர்மானிப்பது; எண்ணெய், சீக்காய் வைப்பது; குளிப்பாட்டுவது; வத்தி,கற்பூரம் ஏற்றுவது; பிணத்தின் வாயில் வெற்றிலை வைப்பது. எண்ணிக்கை மிகுந்த ஏற்பாடுகள்.


காலத்தை விரயமாக்கி, கவனத்தை சிதைத்து, துன்பவியல் சூழலை ஆழப்படுத்தி, விரைவுபடுத்தி, "அய்யோ! அம்மா!, "குய்யோ! முறையோ!, எனக் கூவி அழைத்து, தாலாட்டு பாடுவது, இழவு பாடுவது, ஏக்கங்களை வெளிப்படுத்துவது, ஆகிய உணர்வு வெளிப்பாடுகளின் ஊர்வலங்கள், அனைவரையும் கலங்க வைக்கும், நெகிழ வைக்கும் போக்குகள்.


இறந்தவரின் உடலை, காலங்கடத்தி அடக்கம் செய்வது அல்லது அவரவர் வழக்கப்படி, தகனம் செய்வது என்பது, உயர்சாதியினரின் அணுகுமுறை மனப்பான்மையோடு ஒப்பிடும்போது, பின்தங்கி விடுகிறது. மிக சுருக்கமாக, இறுதி யாத்திரையை அதிக ஆராவரம் இன்றி, அமைதியாக ஏற்பாடு செய்திடும் பழக்கத்தை, பின்பற்றாமல் விட்டு விட்டோம்.


சடங்குக்காக சண்டையிட்டுக் கொள்ளும், தெரு அளவில் வெளிச்சத்திற்கு வரும், நிகழ்வுகளும் ஏராளம். 'கோடி' போடுவது யார்? போட்டவர் முறையல்ல! சாவு சோறு போடுவது யார்? சம்பந்தி எங்கே? எப்படி பங்கு போட்டுக் கொள்வது? 'பணமாக கொடுக்கலாமா'? பந்தியை ஏற்பாடு செய்யலாமா?, ஆலோசனைகள், விவாதங்கள், அனைத்து சாவுகளிலும், தமிழரின் தனிப் பெருமையை, தமுக்கு தட்டும் விளம்பரங்கள் ஆகும்!

பொறுத்து..!

எட்டி உதைத்தாய்!
எகத்தாளம் பேசினாய்!
ஏன் என்றும் கேட்கவில்லை!
கொட்டி தீர்த்தாய்!
பட்டியல் குறைகளை!அவள் நொடிப்பும்,
விமர்சனம்!
வெடித்து தீர்த்தாய்!
வேண்டியவரிடம்!
உம் படிகளில்!


காலங்கழித்து, ஏறினாய்!
படிகளில்! பாங்காய்!
வேண்டி அழைத்தாய்!
விருப்பம் எமக்கு இல்லை!
என்றாலும் சென்றனள்!
ஏளனம் பொறுத்து!

உறங்கும் மனசாட்சி..!

குழந்தைகள் மீதான வன்மங்கள்
குறைவில்லை! குவலயத்தில்!
லெபனான் 'கானா'வானாலும்',
இலங்கை முல்லைத் தீவானாலும்'


இலக்காகி, விமான வல்லாறுகளுக்கு
இரையாகின்றனர்!
இன்னுயிர் சிறார்கள்! குலக்கொழுந்துகள்!


கொடூரத் தாக்குதலில் சிதைக்கப்பட்டனர்!
சின்னா பின்னமாக்கப்பட்டனர்!
சீரழிக்கப்பட்டனர்!


உறவுகளை தொலைத்து!
அடையாளம் இழந்து!

'மகமது டார்விழ்' பார்வையில்...

2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்,
தண்ணீர் 'கொடி முந்திரி மதுவானது',
ஏசுவின் பார்வையில்!


இன்று 'கானா'வில்,
'இசுரேலிய வான்படைத் தாக்குதல்',
குழந்தைகளை பொசுக்கி, சாம்பலாக்கியது.


இவற்றை என்னால்,
ஓவியமாக சித்தரிக்க முடியவில்லை!
பெய்ரூட்டிலிருந்து கொண்டு!

(பாலசுத்தினிய மொழி பெயர்ப்பு கவிதை)

ஒரமாக..!

ஓங்கி ஒலித்திடும் ஓசை கேட்டு
இறங்கி வந்தேன்,
ஊர்வலம் காண,


முகமெங்கும் வண்ணம் பூசி,
டப்பாங்குத்து ஆட்டம் போட்டு,
தனை மறந்து, விசிலடித்து
ஆடும், இளைஞர் கூட்டம்
முன் வர,


செய்யிழை மேளங்கள் பெரிதும், சிறிதுமாக
பேரிரைச்சல் போட்டு
பின்வரும் உருவங்கள்,
கலாச்சார வடிவம் காட்டி,


'முன்னாளில் இப்படியெல்லாம் இல்லை'
சாவுக்கு அடிக்கும் மேளம், ஆட்டம்,
சாமிக்கு அடிக்கிறார்கள்,
இப்போதெல்லாம்?பேசிக்கொண்டே சென்றார்.
ஒரு சிலர், ஓரமாக!

Monday, March 12, 2007

எமிலி சக்கீர் வார்த்தைகளில்..

பொழுது போக்கிற்கான தீவனமா, இவை?
மக்கள் சிலர் எழுதுவதற்கா?
கலைகள் படைப்பதற்கா?
திரைப்படம் எடுப்பதற்கா?
அழுவதற்கா?


ஓவென்று, வாய்விட்டு குரல் எழுப்புவதற்கா?
பின் சென்று, இல்லத்தில்,
குண்டு வீச்சுகளின் மத்தியில், சிதைந்து, எரிந்து,
மண்ணுடன், மண்ணாகிப் போக,
எத்தனை தலைமுறைகள்,


இசுரேலின் பயங்கரத்தினூடே வாழ்வது?
எமது பெற்றவர்கள்,
பரம்பரை வாழ்வு,
நினைவு, மீண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறது,
... மீண்டும்...மீண்டும்...
எத்தனை முறைகள், 1948?

(மொழி பெயர்ப்பு கவிதை)

மனம்...

ஆர்த்தெழும், அமைதியுறும்,
சீறும், சீண்டும்,
அலைக் கழிக்கும்
உலைக்களம், ஆகி நிற்கும்.எஞ்ஞான்றும் எம்பும், எகிறும்,
நெம்பும், வெம்பும்,
வெந்தணல் புழு போல் வாட்டும்,
வதைக்கும்.விதைக்கும் வீரியத்துடன்,
விளைநில, பயிர்போல் முளைக்கும்,
கிளைக்கும்.செடி, கொடி, மரம் போல்,
பூக்களுடன் காய்க்கும்,
காய்த்துக் குலுங்கும்.பழுக்கும், பறிக்காது, பழுதில்லாது,
நிலத்தில் சில வேளையில்,
மீண்டும் முளைக்கும், வீழ்ந்து,
முற்றியதால்.சோதிக்கும், சாதிக்கும்,
புடம் போடும்,
புரியாத புதிராகும்,
புதிருக்கு விடையாகும்.புத்தாக்கம் ஏற்றிடும்!
தொடர் வினயாற்றும்!
தோற்காத படைக்கலன்!

வேண்டாத பண்புகள்..!

கடைத் தெரு நடு வீதியில்,
கால் விரித்து, சாய்வாக,
படுத்திருந்தது குட்டி!
பக்கவாட்டில் சென்று பார்த்தேன்!


ஓடி உறைந்திருந்தது இரத்தம்!
வாகனங்கள், இப்படியும் அப்படியும்,
விரைந்து கொண்டிருந்தன!
மக்களை சுமந்து!
நேயம் மறந்து!


மனிதனே அடிபட்டு, மிதிபட்டு,
சாலையில் கிடந்தாலும்,
மறக்காமல் தன் வினையாற்ற,
விரைந்திடும்,
மனிதர் மத்தியில்,


விலங்குகள் என்ன,
விலை மதிப்பற்றவையா?
மனோநிலை, விரிந்திடும் சமூகத்தில்,
உள்ளுணர்வு
வேண்டாத பண்புகள்!

Sunday, March 11, 2007

பாதாள சாக்கடை!

பாதையெங்கும் கசிந்தது,
பல நாளாக.
கண்டு கொள்ளவில்லை
எவரும்!


காரும், வண்டியும்,
பேருந்தும்,வாகனங்களும்,
விரைந்து கொண்டிருந்தன!
போவதும்!வருவதுமாக!


வாசனை ஊற்றினை,
வாரி இறைத்து,
பன்னீர் தெளித்து.
வாகனங்கள்,மனிதர்கள்,
ஊடாக கடந்தனர்.


கடமையை நினைத்து!
கண்டு கொள்ளவில்லை!
கோபம்,கொப்பளித்தது!
கழிவுகள்,வென்னீர் ஊற்றாக,
பாதையில் தடுப்பு!


தன்னிலை மறந்த,
ஓட்டிகள் யாவரும்,
என்ன இது?
என்ன ஆயிற்று?
உணர்வு பெற்றனர்!!

விண்வெளிப்போர் ?

புதிய போர்க்களம் உருவாகும் போக்கு குறித்து, மக்களின் கவனத்தை திருப்ப வேண்டிய அத்தியாவசிய சூழலில், நாம் இப்போது இருக்கிறோம். சில நாடுகள் விண்வெளியில் ஆயுதங்களை நிலை நிறுத்த, பல ஆய்வுகளை மேற்கொண்டு, திட்டமிட்டு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இதுவே,விண்வெளிப்போர் என நாம் குறிப்பிடுகிறோம்.


மிக விரைவில், இவ்வாறு விண்வெளியில் நிலை நிறுத்தப்பெறும் ஆயுதங்கள், அங்கிருந்து விண்வெளி ஊடாக அல்லது விண்வெளியிலேயே, போர் புரிய பயன்படுத்தப்படும் என்றால், அது வியப்பில்லை. விண்வெளியானது, இராணுவ உபயோகத்திற்காக பயன்படுவது பொதுவாகிப் போன நிலையில், குறிப்பாக ஈராக் மீதான அமெரிக்க போர், முதல் முறையாக உண்மையான "விண்வெளிப்போர்",என சில அமெரிக்க இராணுவ அதிகாரிகளே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர்.


எனினும், "இராணுவமயம் ஆக்கப்பட்ட விண்வெளிக்கும்", "ஆயுதமயம் ஆக்கப்பட்ட விண்வெளிக்கும்" நிறைய வேறுபாடு இருக்கிறது. பிந்திய நிலையை உருசியா, கனடா, சீனா, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றன. இப்போக்கு ஆயுதப் போட்டியை பூமியில் மட்டுமின்றி; விண்வெளியிலும் அதிகரிக்கச் செய்யும் என்பதால்; 1967ஆம் ஆண்டில், 96 நாடுகளால் விண்வெளி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.


அது, எந்த ஒரு நாடும் பேரழிவு ஆயுதங்களையோ, அணு ஆயுதங்களையோ அல்லது இதர ஆயுதங்களையோ, விண்வெளியில் வைத்து வரக்கூடாது, என தடை விதிக்கிறது. மேலும், விண்வெளி மற்றும் அனைத்து விண்வெளிக் கோள்களும், அமைதியான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும்; இராணுவ ஆயுதங்கள் மற்றும் இராணுவ ஒத்திகை நடவடிகைகளுக்கு விண்வெளியைப் பயன்படுத்தக் கூடாது எனவும், தெளிவாக கட்டுப்பாடுகள் விதிக்கிறது.


எனினும், இவ்வொப்பந்தப் பிரிவு ஓட்டைகளின் வழியாக, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள்; விண்வெளியில் வைத்து வரப்படும் "லேசர்எதிர்ப்பு" ஆயுதங்கள் மற்றும் இதர வகையிலான விண்வெளி ஆயுதங்கள்; இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால், பேரழிவு ஆயுதங்கள் நிலை நிறுத்தம் மட்டுமே, தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.


செயற்கைக் கோள் எதிர்ப்பு ஆயுதங்களில், விண்வெளியில் சுற்றிவரக்கூடிய செயற்கைக் கோள்களை அழிப்பதும் அல்லது அவற்றை செயல் இழக்கச் செய்வதும்; விண்வெளி அடிப்படையான "லேசர் கதிர் வீச்சு" பாய்ச்சும் செயற்கைக் கோள்களும்; விண்வெளி கண்ணி வெடிகளாகவும் அல்லது சிறிய அளவிலான நுண்ணிய செயற்கைக் கோள்கள்; குண்டுகளாகவும் செயல்படும் அல்லது செயற்கைக் கோள்களை சுட்டு அழிக்கக்கூடிய இயங்கு ஆற்றல் மிக்க ஆயுதங்களாகவும் பயன்படுகின்றன.


ஐக்கிய அமெரிக்க நாட்டின், விண்வெளி இராணுவத்திற்கு, தலைமைப் பொறுப்பு வகிக்கும் படைத்தளபதி, திருவாளர்.ஆழ்லி அவர்கள், தரையில் இருக்கும் எதிரியின் இலக்குகளை விண்வெளியில் இருந்தும், விண்வெளி இலக்குகளை விண்வெளியிலேயும் எதிர் கொள்ள முடியும், என தீர்க்கமாக கூறியுள்ளார். இதிலிருந்து, அணு ஆயுதப் போரை புதிய மட்டத்திற்கு, அதாவது விண்வெளிப் போர் அளவிற்கு முழுமையாக உயர்த்திட, அவர் உறுதி கொண்டுள்ளார் என்பது நன்கு தெளிவாகிறது.


எனவே, அழிவுக்கான, அச்சுறுத்தலுக்கான விளவுகளை, நம் மீது திணிக்கும் இது போன்ற விண்வெளிப்போர் ஆக்கிரமிப்பை, அமைதியை விரும்பும், சனநாயகத்தை விரும்பும், உலக மக்கள் அனைவரும் எதிர்க்க வேண்டிய கால கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை உணர்ந்து, ஒன்று பட்டு செயல்பட வேண்டும்.

வெளிச்சம் இல்லை!

"கா விளக்கு" வெளிச்சமும் கண்டதில்லை!
கால் இரண்டு நூற்றாண்டில்!
கால் ஒடிய உழைப்பிலும்,
கஞ்சிக்கும் வழியில்லை!
கழனியும் சொந்தமில்லை!


காவிரியில் நீர் வந்தாலும்,
கலயம் நிறைய வாய்ப்பில்லை!
முடக்குத் தண்ணி,
மூச்சிரைக்க, குடிக்க
ஏதும், உறுதியில்லை!


உறுதியாய் ஒழிந்துவிடும்!
ஒரு பத்தாண்டுக்குள்,
வறுமையும்! நாட்டினுள்!
நம்புங்கள்! வாழ்க்கை இதுவே!
நலமுடன், ஒளிரும் இந்தியா!


நாட்டின் தேர்தலை எண்ணி!
தொய்விலா முழக்கம்!
பழகிப்போச்சு எங்களுக்கு!
பாழடைந்த கண்களுக்கு!


கவர்ச்சி பேச்சில்,
உரிமை விட்டெறிந்து,
அடிமையாய்,
அய்ந்தைந்து ஆண்டுகள்,
அதற்கும் குறைவாக,
சாசனம் எழுதி,
விமோசனம் இழந்து
வீதியில்!


விடியாது,வீணாகும் வாழ்க்கை!
வீரத்தமிழர் நாங்கள்!
சூரத்தமிழர்!
நைந்து போகும்,
மண்ணின் மைந்தர்!!

Saturday, March 10, 2007

ஊனம்..!

ஊனமுற்றாய் என்பதால்,
உனை வீசினாள்!
குப்பைத்தொட்டியில்!

உண்மை அறியாது,
ஏன் வளர்த்தாள்?

தன் தொப்பை
தொட்டியினுள்!

மாற்றம்..!

கழிவறை திறக்க,
கடுமயான போராட்டம்!
திறந்தபின்,
திறந்தவெளி கழிப்பிடம்!

எவருக்கும் இங்கு ஏமாற்றம்!
என்ன இங்கு நிலை மாற்றம்!

"கோவா"

குடி தண்ணீருக்கும் வழியில்லை,
"கோவாவில்"
கொண்டாட்டம் குறைவில்லை!
மது தண்ணீருக்கும், மங்கையருக்கும்!
"சுற்றுலா தலம்" பெருமை! பேயாட்டம்!


உவர்ப்பு நீரே ஊருக்குள் ஊடுருவி நிற்க,
காலனியாதிக்க காலத்தில் கூட,
தண்ணீர் நிரப்ப "அகுவாடா" அரண்,
வீரர்களுக்கு அகழி தண்ணீர்,
பாதுகாத்து அளித்த,
போர்த்துகீசிய பெருமையும்,
வற்றி நிற்கிறது,வக்கில்லாமல்!


முந்திரி காடுகள் முடமாகி,
விடுதிகள், கேளிக்கை அரங்குகள்,
சிமெண்ட் தொழிற்சாலை போன்ற
பல தொழிற்சலைகள்,
ஊருக்கு பொருத்தமில்லாது,
உறுதியாய் நிற்கின்றன!


மீன் பிடித்தொழிலும் வளமில்லாமல்,
வணிகமயமாக்கலில்,
விட்டில் பூச்சி வாழ்க்கை,
வனச்செல்வங்கள் சுரண்டல்,
தினம், தினம், தீர்க்கமாக!


இரும்பு,மாங்கனிசு,தாதுக்கள்
இங்கிருந்து ஆசுத்திரேலியாவிற்கு,
வளர்ச்சி, முன்னேற்றம் கருதி,


ஆயிரக்கணக்கில் டிப்பர் லாரிகள்,
சாலைகளை மிதித்து,துவைத்து,
சாரை, சாரையாய் விரைகின்றன,
தொழில், வியாபார முன்னேற்றம்.


வன விலங்குகள்,சூழல் தொடர்ச்சி,
பன்முக வளர்ச்சி,
வரலாற்று ஏடுகளிலே
படிப்பதற்கு அணியமாய்!


கலாச்சார அபிவிருத்தி,
விபச்சார வேள்வியில்,
அனைத்து மாநிலங்களும்,
போட்டி போட்டு,
ஒருமைப்பாட்டு கீதம்,
குறுக்கெழுத்து கொலு,


கொண்டாட்டத்தில் குறைவில்லை!!

மேம்பாடு..!

தொகுதி மேம்பாடு!
ஐந்தாண்டு முடியும் வேளையில்!
அவசர அவசரமாக சாலை அமைப்போம்!
சாதனை படைப்போம்!


கோயிலுக்கு,குடமுழுக்கு நடத்துவோம்!
பாப விமோசனம் கோருவோம்!
சாய்க்கடை உடைப்போம்!
ஒரே நாளில்,
புதியன படைப்போம்!


குழிகள்,வழிகள் தோறும் தோண்டி,
கூட்டம் நடத்துவோம்!
கொள்கை முழக்குவோம்!


தன் பெருமை போற்றி,
தம்பட்டம் அடிப்போம்!
தமிழன் எனும் சங்கம் ஊதுவோம்!
தன் முன்னேற்றம் புதுக்குவோம்!

Friday, March 9, 2007

பாதை...!

போட்ட பாதை மேல்
புதுப்பாதை,
'கேக் மீது ஊற்றும் கிரீம் போல்',
வேண்டும் போது வழித்துக் கொள்ளலாம்,

விழாக்கால முன்னேற்பாடு,
உட்கட்டமைப்பு வளர்ச்சி,

கிழிந்த கந்தலாடை போல்,
பொக்கையும் போரையும் ஆக,
சாலைகள்,

குண்டும், குழியுமாக,
வருவோர் போவோரை வதைக்கும்.

இவைகளுக்கு இல்லை பொசுப்பு,
விழாக்காலம் முடிந்தாலும்,
விடியாது!

வரலாறு...

"வெள்ள நிவாரணம் பெற
விடிவதற்கு முன்,
முண்டியடித்து,
இடம் பிடிக்க,
சென்ற மக்கள்,
நெரிசலில் வரிசையாய்,
எழுவர் மிதிபட்டு மாண்டனர்"- செய்தி.


மீண்டும் மழை, வெள்ளம்,
நிவாரணம் வேண்டி,
இரவில் இடம் பிடிக்க,
இங்கும் அங்கும் கூடிய கூட்டம்,
இழுத்து தள்ளி,
வரிசையில் நிற்க,


டோக்கன் வாங்க,
அடுத்தவரை தள்ளி,
மிதித்து, துவைத்து,
முன்னேறிய கூட்டம்,
பலி வாங்கி பழி தீர்த்தது 42 பேரை,


நிவாரணம் கிடைத்தால் போதும்!
நிலவரம் இப்படி!!

எண்ணிப்பார்!

சொல்வதை புரிந்து கொள்ள மறுக்கும்,
சோம்பேறி உள்ளம்!
உள்ளதை வெளிப்படுத்த மறுக்கும்,
உதவாக்கரை மனம்!


மறுப்பதினால் மகிழ்ச்சி எவருக்கு?
வெறுப்பதினால் இகழ்ச்சி எவருக்கு?
வெறுப்பதினாலும், மறுப்பதினாலும்,
வெற்றி உனக்கா?


எண்ணிப்பார் ஏமாளியே!
எதிர்காலம் இருண்டு போகும்!

விழுமியம் !!

நாய்கள் இணை நிழற்படம்,
செய்தித்தாளில்.

திரைப்பட மெட்டுகள்
குறிப்பு எழுதி,

பாலியல் கோளாறு
முன்னிறுத்தி,

விலங்குகள் வாயிலாக
உணர்வுகள், வன்மங்கள்.

மாலை வெளியீடாக,
முரசு அறிவிக்க,

கண்டேன்!! நொந்தேன்!!

வாக்கு மூலம்..!

ஒதுக்கீடு அரசியல்,
ஓயாமல் பேசினேன்!


"அறைகூவல் கல்வி மையத்தில்"
அன்று,
ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி
அறிந்து,


சமூக நீதிக்காக,ஆர்த்தெழுந்த,
மண்ணின் மைந்தர்கள்,
89 களில் இருந்து பரப்புரை,
நடத்திய கூட்டமைப்பினர்!
நல்லவர்கள்!


உணர்வின்றி,விழிப்பின்றி,
அவர் உறங்கிய வேளை,
வந்தேறினேன்! வளத்திற்காக!
எம் மக்கள் நலத்திற்காக!


அரவணைத்தார் என்னை!
நேர் மறை உணர்வுடன்,
உள்ளீடு அறியாமல்,
உயர்த்தினர் என்னை!
அமைப்பாளர் ஆனேன்!


உள் ஒதுக்கீடு என்றதும்,
உள்ளதும் போகும் என்றேன்!
உள்ளூர் மக்கள்,
ஒற்றுமை உடைத்தேன்!
ஊதியம் அடைந்தேன்!


உழைத்தவர் எவரும்
இல்லை,
பேரவையில் இன்று!


"பிரித்தாளும் பிரித்தானியர்"
தோற்றார்,
எம் முன்னே!

Thursday, March 8, 2007

"சிங்கிலியா, சிங்கிளியா"

அப்பாவுடன் வாழ்ந்த வாழ்க்கை அனுபவங்களை எவராவது நினைவு கூர்ந்தால், அவரைப்பற்றி கூறிடும் பண்புகளில், அம்மாவின் பேச்சுக்களில் வந்து விழும் சொற்களில், "ஒன் அப்பன் ஒரு சிங்கிளி, அவங்கிட்ட பேசமுடியுமா? எடுத்தெதுக்கல்லாம் அடி, உதை. அத வுடு ஓன் வேலெயப்பாரு". பெருமூச்சுடன், முடியாமல் முணகுவார்.


கோபக்காரர், தண்ணி போட்டுட்டா, தகராறு, வேகம் அதிகம். சாப்பிட முடியுமா? படிக்கமுடியுமா? படுக்கத்தான் முடியுமா? வீட்டில் உள்ள பண்டு பாத்திரங்கள், பானை சட்டிகள், வெளியில் தான். வீதிக்கு விருந்து!


இரு பத்து ஆண்டுகள், நினைவு நாள் இன்று. 'சிங்கிலியா','சிங்கிளியா என்ற ஆராய்ச்சி. தமிழ் அகராதியை வேறொரு சொல்லுக்கு பொருள் தேட முனந்த போது விழிகளை முன்னிறுத்தி, நினைவு அலைகளை, கடிகார சுற்று வட்டத்தில், பின்னோக்கி சுழல வைத்தது.


தொட்டாற் சிணுங்கியா அவர்? இல்லை, சில வேளைகளில் தொடாமலேயே சிணுங்குவார்! ஒரு வில் போல், வில் நாணாக, மிடுக்குடன், நிமிர்ந்த நடையுடன் வாழ்ந்த அவருக்கு 'சிங்கிலி' என்பது நிச்சயமாக பொருந்தாது. 'சிங்கிளி' என்பதுதான் பொருந்தும்.


இச்சொற்கள் வெளிப்பட்ட காலம், இடம், எல்லை ஆகிய பரிமாணங்களை ஆயும் போது, பண்ருட்டியைச் சேர்ந்த செந்திலும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பாவும் திடீரென என் முன்னே தோன்றினார்கள். அவர்களிடமும் பரிசீலனை தொடர்ந்தது. பண்ருட்டி பகுதிகளில், 70 வயதும் அதற்கும் மேல் உள்ள பெரியவர்களின் பேச்சில் 'சிங்கிளி நாய் போல் விழறான்' என்று குறிப்பிடும் பேச்சு வழக்கில் உள்ளது என்பது அறிய நேரிட்டது. ஆனாலும், திருச்சி மாவட்டங்களில், இது போன்ற சொல் வழக்குகள் பழக்கத்தில் இல்லை என்பதும் புலப்பட்டது.

நன்றி..!

மரணிக்கும் மனிதர்கள்
சுமக்கின்றனர்
யதார்த்தவாதிகளாய்!

இழுக்கின்றனர் பிழைப்பிற்காக!
இன்றைய பொழுது
இலகுவானது,
டயர் வண்டிகளால்!

நாளைக்கு வேலைவாய்ப்பு!
அதிக போட்டியில்லை!
எமனுக்கு நன்றி!

மறை!

அறவுரை!
அறிவுரை!
தெளிவுரை!
விரிவுரை!
முடிவுரை!
எதுவரை!


கருவறை!
இருட்டறை!
ஒளியறை!
உயிர் அறை!
உயிரியல் பட்டறை!
உலகியல் மெய்மறை!

கடந்து விடவில்லை!

தன்னை அறிதலே
தள்ளிப்போன வாழ்வில்!
தடுமாறிய பின்
தன்னுணர்வு!

காலம் இன்னும்
கடந்து விடவில்லை!
கவனமுடன் பயணப்பட்டால்!

சேர்த்து!

"ரெண்டு நாள் வரலே
நாறுது"

துப்புரவு செய்கிறார்!
நம் கவுரவத்தையும்
சேர்த்து!

Wednesday, March 7, 2007

அசீத் குமார் பட்டாச்சார்யா.

வயோதிகம் தடையில்லை!
நடக்கிறார் நாள் ஒன்றுக்கு
இருபது மைல்,

பத்து கடற்கரை மாநிலங்களை
கடக்க, பற்று கொண்டு,
இரு பத்து கிலோ
உடமைகள் சுமந்து,

வங்க 'பட்டச்சார்யா'
மேற்கு,தெற்கு, கிழக்கு
வடக்கு, என திசைகளைக்
கடந்து,

மலையேற்றம் செய்து,
உடல்வளம் குன்றியவரை
ஒருங்கிணைத்து,
மன வளம் கூட்டுகிறார்.

அருணாசலம் முதல்
இராவணேசுவரம் வரை,
ஒருமைப்பாடு,மதச்சார்பின்மை
கண்டிடும் முயற்சியில்,

தீண்டாமை
தீயைக் கண்டார்,
ஒரிசா மாநிலத்தில்.

'ஓயவில்லை சாதிய ஒடுக்குமுறை',
ஓய்வு பெற்ற ரயில்வே பொறியாளர்
கிழக்கின் வெளிச்சத்தை

செய்தியாளர் மன்றத்தில்
சேர்ப்பித்தார்
உணர்வுடன்.


நூற்றாண்டு வங்கப் பிரிவினை
முன்னேற்றம் கண்டனரா?
விடுதலைக்குப் பின்
'கடவுளின் குழந்தைகள்'
குறைந்த பட்சம்
கடற்கரை மாநிலங்களில்.


உப்பங்காற்றும், உயர்வளிக்கவில்லை!
தென்னங்காற்றும், தெம்பளிக்கவில்லை!
அரசியல் காற்று மாறி,மாறி
அலைக்கழித்ததைத் தவிர!

'சனநாயகத் தலைமை'

ஈடில்லா வாழ்வு! உழைப்பால் உயர்வு!
ஊரெல்லாம் வளமனை!
வணிகம்! வாகனங்கள்!
அணிவகுப்பு!


ஆனை நுழையும் அந்தப்புரம்!
ஆலய வாயில்!
அரச மரபை நினைவூட்டும்!

'சனநாயகத் தலைமை',
மக்களுக்கு,
இவர்களின்றி வாழ்க்கையேது!
பிழைப்பேது!

Monday, March 5, 2007

காணாமல் போகும் விளை நிலங்கள்-1

"காணாமல் போகும் வேளாண் நிலங்கள்". மு.முத்துக்கண்ணு, மக்கள் குடியுரிமைக் கழகம்.

1961ல், புதுச்சேரியின் மொத்த விளை நிலங்கள் 39,225 எக்டேராகும்.

அ) 0.5எக்டேர் நிலத்திற்கு குறைவாக நில உரிமை உள்ளவர் : 61%
ஆ) 0.50எக்டேர் முதல் 1எக்டேர் நிலம் உரிமை உள்ளவர் : 18%
இ) 1 எக்டேர் முதல் 2 எக்டேர் வரை நில உரிமை உள்ளவர்: 11%


இதில், 90% விழுக்காட்டினர், அதிக பட்சம் 2 எக்டேர் நிலம் மட்டுமே உடையவர்களாக இருந்தனர். 10% விழுக்காடு நில உடமையாளர்கள், 52% விழுக்காடு நிலத்தை உடமையாக கொண்டிருந்தனர். 90% சத நிலம் உயர்சாதி இந்துக்களிடம் இருந்தது. பெரும்பான்மை உழைக்கும் மக்கள் நிலமற்ற தாழ்ந்த வகுப்பினராகவே இருந்துள்ளனர். புதுவைப்பகுதி, நிலவுடமைச் சமூகமாக, கூர்மையான முரண்பாடுகளை உள்ளடக்கியதாக விளங்கிய உண்மை, புலப்படுகிறது.


ஐந்தாண்டுத் திட்டங்களின் கீழ் வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி உதவிகள், மான்யங்கள், சலுகைகள் மேல்தட்டு, நிலவுடமை வர்க்கத்திற்கே சென்றடைந்தது.


1961ல், மாநிலத்தின் மொத்த வருவாயில், 28.6% விழுக்காடு, வேளாண்மையிலிருந்து கிடைத்தது. 44% விழுக்காடு மக்களுக்கு வேலை வாய்ப்பும் அளித்துள்ளது. 1971ல், நிலத்தில் பாடுபட்ட வேளாண்மைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, கூலித்தொழிலாளர் மற்றும் பயிரிடுவோர் சேர்த்து, 47,125ஆகும். இது, மொத்த தொழிலாளர்(1,05,203) எண்ணிக்கையில், 44.80% ஆகும். இவ்வாண்டில், பயிரிடப்பட்ட நிகர நில அளவு 19,032 எக்டேர் ஆகும்.


1960 களிலேயே நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய, சமூக நலச்சட்டங்களில் முக்கியமான, நில உச்சவரம்பு சட்டம், அரசியல் உள் நோக்கங்களுக்காக , காலந் தாழ்த்தப்பட்டு 1973ல் அமுலாக்கம் செய்யப்பட்டது. செல்வாக்கு படைத்த உயர் சாதியினர், சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள போதிய கால அவகாசம் அளித்தது .அவர்களும் ஏட்டளவில், வேளாண்மை நிலங்களை, குடும்பத்திற்குள் முதலில் பகிர்வு செய்து கொண்டனர். பின்னர் விற்கவும் தொடங்கினர்.


1968-69ல், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பொய்த்தது. வறட்சியின் பிடியில் புதுவை சிக்கி தவித்தது. மத்திய நிலத்தடி நீர் வாரியம், ஆழ் துளை கிணறுகளை மூலக்குளம், மணப்பட்டு, கரசூர், மதகடிப்பட்டு, அகரம், மடுக்கரை மற்றும் காலாப்பட்டு பகுதிகளில் விவசாய, பாசன தேவைகளுக்காக அமைத்தது. முன்னதாக, பாசன வசதிகளுக்காகவும், குடி தண்ணீர் தேவைக்காகவும், பல இடங்களில் திறந்த வெளி கிணறுகள் தோண்டப்பட்டன.1971ல், புதுச்சேரி மாநிலம் தொழில் துறையில் பின் தங்கிய பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பே, சில பகுதிகளை அரசு கையகப்படுத்தி,தொழிற்பேட்டைகளை அமைத்தது.

1.தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை 1962 51.00 ஏக்கர்
2.காட்டுக்குப்பம் தொழிற்பேட்டை 1969 15.50 ஏக்கர்இதே கால கட்டத்தில், சிறு தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம், சலுகைகள் அளிக்கப்பட்டு, கழனி நிலங்களிலும், தோப்புத்துரவுகளிலும் கீழ்க்காணும் பகுதிகளில் அரசாங்கத்தால் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன.

3.மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை 1976 176.00 ஏக்கர்
4.சேதராப்பட்டு தொழிற்பேட்டை 1982 62.19 ஏக்கர்
5.கிருமாம்பாக்கம் தொழிற்பேட்டை 25.00 ஏக்கர்
6.திருபுவனை மின்னணுவியல் தொழிற்பேட்டை 50.00 ஏக்கர்

1974ல், புதுவை தொழில் முன்னேற்ற வளர்ச்சி மற்றும் முதலீட்டுக்கழகம் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக பிற மாநிலங்களிலிருந்து குடியேற்றம் அதிகமாகியது .குறைந்த வாடகையில் தொழிற் பேட்டைக்குள் கிடங்கிகள், குறைந்த வட்டிக்கு கடன்கள், போன்ற நிதி உதவி, தடையில்லா மின்சாரம், தண்ணீர், அரசின் வரிச்சலுகை, மான்ய உதவிகள் போன்ற பல சலுகைகள் பெறுபவர் எண்ணிக்கை அதிகமாகியது. இவ்வாறு விளை நிலங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைப்பதில் அரசாங்கம் எடுத்துக்காட்டாக விளங்கியது.

வேளாண்மை நிலங்கள் பெருமளவில் சில பெரிய நிலவுடமையாளர்களிடமே இருந்தது. விவசாயம் செய்யக்கூடிய வேளாண்மை மக்களிடம், மிகக்குறைவான நிலமே சொந்தமாக இருந்தது. மிகப் பெரும்பான்மையினர் விவசாயத் தொழிலாளர்களாக புதுவையில் இருந்தனர். அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில், உடமை வகுப்பினர், பூர்வீக உணவுப் பயிர்கள் உற்பத்தியில் இருந்து விலகினர். கரும்பு, மணிலா, தென்னை போன்ற பணப்பயிர்களை உற்பத்தி செய்ய முற்பட்டனர்.


மான்ய விலையில் உரங்கள், பூச்சி மருந்துகள், டிராக்டர் போன்ற எந்திரங்களை பயன்படுத்தவும் தொடங்கினர். வேளாண்மையை எந்திரமயமாக்கி, பயிர்த்தொழிலில் செறிவாக ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளர்களை விலக்கி வைத்தனர். நில அடமான வங்கிகள், வணிக வங்கிகளின் குறுகிய கால, நீண்ட கால கடன் உதவிகள் பெற்று, வணிக ரீதியில் பயிர்த்தொழிலில் ஈடுபட்டனர்.


இக்கட்டான, இக்கால கட்டத்தில் வேளாண்மையை மட்டுமே சார்ந்திருந்த, வேளாண்மை கூலித் தொழிலாளர்கள் வாழ்க்கை வறுமையிலேயே இருந்தது. கரையாம்பத்தூர், பனையடிக்குப்பம் போன்ற கிராமங்களில், இவர்கள் தம் வாழ்க்கைப் போராட்டமாக, கூலி உயர்வு கோரி பல நெடிய, தீரமான போராட்டங்களை நடத்தினர்.

Friday, March 2, 2007

ஒழுங்கற்ற நகர வளர்ச்சி..!

துணை நகர விரிவாக்கம் என்னும் பெயரில் வேள்ராம் பட்டு ஏரி பகுதியிலிருந்து, ஒழந்தைவெளி ஏரி, முருங்கப்பாக்கம் பேட், கொம்பாக்கம் பகுதி, ஒதியம்பேட் பகுதி, அரும்பார்த்தபுரம் தொடர் வண்டி நிறுத்த கதவு வரை உள்ள வேளாண்மை நிலங்கள் 700 ஏக்கருக்கு மேல் புதுவை அரசு கையகப்படுத்த முனைந்துள்ளது.


புதுவை அரசு, பெருகி வரும் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதனை கட்டுப்படுத்துவது குறித்து, சில நாளுக்கு முன் அதன் நிலைக் குழு கூட்டத்தை நடத்தி, ஆலோசனை செய்தது. காவல் துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் என அறிய வருகிறது.


இக்கூட்டத்தில், பல்வேறு கருத்துக்கள் பல மணி நேரம் பேசப்பட்டன. ஆயினும், முடிவு ஏதும் எடுக்காமல் கூட்டம் முடிவடைந்தது. ஆனால், கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காகவே, துணை நகர திட்டம் கொண்டு வரப்படுகிறது என்றும், போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் முயற்சியில் மக்கள் கருத்தையும், வியாபாரிகளின் கருத்தையும் அறிந்து ஒரு சுமூக முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ள செய்தி பத்திரிக்கையில் வெளியானது.


பிரச்சனையை திசை திருப்பும் பேச்சாகவே இது உள்ளது. நகர மயம் எங்கு நடந்தாலும் வாகன போக்கு வரத்து, மக்கள் நெரிசல் அதிகமாகவே ஆகும். புதுவையில் நகர மயமாக்கல், நகரத்தை மைய்யமாக கொண்ட வளர்ச்சியாக, நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில், உணவகங்கள், நட்சத்திர தகுதி படைத்த பல மாடி விடுதிகள், கல்லூரிகள், தொழிற்கூடங்கள், சாலை விரிவாக்கம் செய்து நகரத்தின் எல்லையை விரிவுபடுத்தி, வேளாண் நிலங்கள் மீது தாக்குதலை, நெருக்கடியை அதிகரித்து, விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை, உடமைகளை இழக்க, விற்க, மக்களை காக்க வேண்டிய அரசாங்கமே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சனநாயகமே கடுமையான நிர்பந்தம் செய்கிறது.வேளாண்மை இலாபமற்ற தொழிலாக வெகு நாட்களுக்கு முன் ஆக்கப்பட்டதின் விளைவாக, வியாபாரிகளே அதிக இலாபம் ஈட்டக்கூடிய போக்கு வெகு காலத்திற்கு முன்னிருந்து வலுவாக நிலை பெற்று விட்டதின் காரணமாகவும்; பருவ மழையை நம்பி விவசாயி பயிர் செய்ய வேண்டிய நிலமை காரணமாகவும்; முதலீடு செய்ய நிதி வசதி இன்மை காரணமாகவும்; தொழில் துறைகளுக்கு அளிக்கப்பட்ட மான்யம், வரிச்சலுகை; மின் சலுகை; ஊழியர் மான்ய உதவி போன்ற அதிக சலுகைகள், அரசாங்கம் கையாண்ட தாரளமான அணுகு முறைகள், விவசாயத்தைப் பொறுத்த அளவில் ஒன்றுமே இல்லை என அடித்துக் கூறலாம். பயிர் பாதுகாப்புத் திட்டம் கூட, ஒரு மாவட்டம் முழுமையாக இயற்கை உற்பாதத்தில் பாதிப்பு அடைந்தால் மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. அத்தொகையும் கூட போதுமானதாகவும், உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கவும் இல்லை.


அரசாங்கம் பாசன வசதிகளை கொஞ்சம், கொஞ்சமாக ஒழித்து கட்டியதின் பயனாகவும்; நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து போனதின் காரணமாகவும்; விவசாய விளை பொருளுக்கு கட்டுபடியாகக்கூடிய ஆதரவு விலையை தொடர்ந்து உயர்த்தி அளிக்காததின் காரணமாகவும்; கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலே வீழ்ந்து, கடனை தம் வாரிசுகளுக்கு உரிமையாக விட்டுச்செல்லும் அவல வாழ்க்கையே விவசாயிகளின் வாழ்க்கை எனில் அது மிகையன்று.


நகரத்தில், சில தொகுதிகளில் மட்டும், உள் நோக்கங்களுக்காக மருத்துவ கல்லூரி, புதிய சட்டமன்ற வளாகம், சரக்குந்துகள் நிறுத்தம் போன்ற எண்ணற்ற வளர்ச்சிப் பணிகள் உண்டாக்குவது, சீரற்ற வளர்ச்சிக்கு வழி வகுக்கும். கணக்கண் ஏரி வெகு அருகில், புதுவை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவ மனை கட்டுவது, ஏரியை பாதிக்கும் மேல் சிதைப்பது, எவ்விதத்தில் முறைமையாகும். சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு செய்வது, சுற்றுச்சூழல் சட்டத்தின் அடிப்படையில் தனியார், அரசினர் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் தயாரித்து புதுவை சுற்றுச்சூழல் குழுவிடம் அளித்து போது மக்கள் கருத்து அறிய, பொது விசாரணை நடத்த வேண்டியது சட்டப்படி கட்டாயம். இருந்தும் கூட அவ்வாறு செய்யாமல் அரசாங்கமே சட்டத்தை மீற முடியுமா? மக்கள் கேட்கிறார்கள். பதில் சொல்லுமா அரசாங்கம்?


நாள் ஒன்றுக்கு 2 இலட்சம் லிட்டர் தண்ணீருக்கு மேல் மருத்துவ மனைக்காகவும் மருத்துவ கல்லூரிக்காகவும் நிலத்தடி நீரை எடுத்துப் பயன் படுத்தினால் கதிர்காமம், சண்முகாபுரம், மேட்டுப்பாளையம் போன்ற பகுதி மக்களின் தினசரி நீர் தேவையை யார் அளிப்பது. மருத்துவ மனையின் கழிவுகளை எவ்வாறு கையாளுவது? மறு பக்கம் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையின் 'அத்தியப்பா வேதியியல் தொழிற்சாலை' போன்ற பல தொழிற்சாலைகள் நிலத்தடி நீர் ஆதாரத்தை திட்டமிட்டு ஒழித்து வரும் போக்கில் நீர் பற்றாக்குறையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த பகுதியில் மருத்துவ மனை கட்டுவது ஏற்புடையதா?நகர மக்கள் வாழ்க்கைக்காக, கிராம மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரமான வேளாண்மையை, நிலத்தை இழக்க, நெருக்கடி செய்யும் அரசாங்கத்தின் திட்டம் ஏற்புடையதல்ல, நியாயமானதல்ல. கடந்த கால வரலாறு, புதுவையில் விவசாயம் , ஆட்சியாளர்களால், எவ்வாறு படிப்படியாக சீரழிக்கப்பட்டது என்கின்ற உண்மை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. சமூக உணர்வு உள்ள, மண்ணை நேசிக்கும் நடு நிலையாளர் அனைவரும் அறிந்த செய்தியும் ஆகும்.


மக்கள் தொகையில் பாதிக்கு மேல் தற்போது நகரத்தில் வாழும் மக்களாக, 92 கிராமங்களில், 3,25,596 பேர் வாழ்கின்றனர். மாறாக, 6 நகரங்களில் 6,48,233 பேர் வாழ்கின்றனர். சராசரியாக 1,08.039 பேர் நகரத்தில் வாழ்கின்றனர் என 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை உத்தேச புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


வரன் முறையற்ற நகர வளர்ச்சியில், மக்களுக்கு தூய்மையான காற்று, குடி தண்ணீர், சுகாதாரமான வாழ்க்கை, குடி இருப்பு வசதி, சாலை வசதி, பொது போக்குவரத்து சாதனங்கள் ஏற்பாடு எவ்வாறு செய்திட இயலும். உலகம் சூடேற்றல் காரணங்களில் ஒன்றாக, திட்டமிடப்படாத நகர வளர்ச்சி கூறப்படுகிறது. இதையெல்லாம் உள் வாங்கி உணர்ந்து, மக்கள் நிலையில் சிந்தித்து, மனிதாபிமான முறையில், நியாயமாக ஆட்சி செலுத்தி செயல்படும், 'சனநாயக காவலர்கள்' நம் நாட்டில் உள்ளனரா?

Thursday, March 1, 2007

தேங்காய்த்திட்டு இராமானுசம்

புதுவைக்கு புகழ் சேர்த்திட்ட
புகழ் மணியே!

இடது சாரி இயக்கத்தின்
இன்றியமையா தலைமையே!

தத்துவ தடுமாற்றங்கள்
உம்மை தடுமாற வைக்கவில்லை!

தனிமைப் படுத்தப்பட்டாலும்,
தனி முயற்சியில்.

தள்ளாட்டம் காணாது!
நிலை மாற்றம் கண்டாய்!
நின்ற இடத்திற்கு பெருமை
சேர்த்தாய்!

சட்டமன்ற பதவி உம்மை
சறுக்கி விடவில்லை!
சிந்தனையை குறுக்கி விடவில்லை!

அரிய நகர் பொறுப்பை
உதறினாய்!
அரசியல் தனிப் பிரிவின்
காரணமாக!

பதவியை துறந்து
பண்பை நிறுவினாய்!

தனியார் தொழிற்சாலைகளில்,
தொழிலாளர் உரிமை காத்திட,
தகுமிகு 'தொழிற்சங்க ஐக்கியம்'
கண்டாய்!

இணைப்பு எதிர்ப்பு
போராட்டத்தில் இளைஞனாய்!
முன்னோடியாய்!
இந்திய அரசிடம் வாதம்
தொடுத்தாய்!
புதுவையின் தனித்தன்மை
காத்தாய்!
பலருக்கு அரசியல் வாழ்வளித்தாய்!

மத்திய அரசு தாமாக
அளித்திட்ட
பட்டயமும், விருதையும்,
தாமதமாக ஏற்றாய்!


தியாகம் விற்பனைச் சரக்கல்ல,
வியாபார பொருளல்ல,
என்றாய்!

சான்று அளிப்பதில்
கறாராய், எவரிடமும்
நடந்து கொண்டாய்!

இடது சாரிகளே வெளிப்படையாய்
ஆதரிக்க தயங்கிய காலத்தில்,
ஈழப்போராட்டத்தை ஆதரித்து
முழங்கினாய்!
ஒடுக்கு முறை வடிவம்
எவ்வகையாயினும்!

அடக்கு முறை அநியாயம்
அன்னிய தேசத்தில் ஆயினும்!
கண்ணியம் காத்திட
வாழ்வுரிமை நிலைத்திட,
ஒருமைப்பாடு ஆதரவு
ஓங்கி ஒலித்தாய்!

ஒத்த கருத்தாளர்களுடன்
ஓடி உழைத்தாய்!
இன்னொரு பரிமாணம்
வெளிப்படுத்தினாய்!
ஓய்விலா உழைப்பில்
சமூக நிலை உயர்த்த
உரத்து சிந்தித்தாய்!


மாற்றுக் கருத்துக்களுடன்
மோதிக் களித்தாய்!
மார்க்சிய, மாவோயிச
வளர்ச்சிப் போக்கின்
மகத்துவம் போற்றிக் களித்தாய்!


'விடுதலை வரலாறு'
புதுவையில் உம்மை
இருட்டடிப்பு செய்த போதும்,
உண்மையும் எண்ணெயும் போல்
வெளிப்பட்டாய்
இறுதியில்!