Friday, March 2, 2007

ஒழுங்கற்ற நகர வளர்ச்சி..!

துணை நகர விரிவாக்கம் என்னும் பெயரில் வேள்ராம் பட்டு ஏரி பகுதியிலிருந்து, ஒழந்தைவெளி ஏரி, முருங்கப்பாக்கம் பேட், கொம்பாக்கம் பகுதி, ஒதியம்பேட் பகுதி, அரும்பார்த்தபுரம் தொடர் வண்டி நிறுத்த கதவு வரை உள்ள வேளாண்மை நிலங்கள் 700 ஏக்கருக்கு மேல் புதுவை அரசு கையகப்படுத்த முனைந்துள்ளது.


புதுவை அரசு, பெருகி வரும் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதனை கட்டுப்படுத்துவது குறித்து, சில நாளுக்கு முன் அதன் நிலைக் குழு கூட்டத்தை நடத்தி, ஆலோசனை செய்தது. காவல் துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் என அறிய வருகிறது.


இக்கூட்டத்தில், பல்வேறு கருத்துக்கள் பல மணி நேரம் பேசப்பட்டன. ஆயினும், முடிவு ஏதும் எடுக்காமல் கூட்டம் முடிவடைந்தது. ஆனால், கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காகவே, துணை நகர திட்டம் கொண்டு வரப்படுகிறது என்றும், போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் முயற்சியில் மக்கள் கருத்தையும், வியாபாரிகளின் கருத்தையும் அறிந்து ஒரு சுமூக முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ள செய்தி பத்திரிக்கையில் வெளியானது.


பிரச்சனையை திசை திருப்பும் பேச்சாகவே இது உள்ளது. நகர மயம் எங்கு நடந்தாலும் வாகன போக்கு வரத்து, மக்கள் நெரிசல் அதிகமாகவே ஆகும். புதுவையில் நகர மயமாக்கல், நகரத்தை மைய்யமாக கொண்ட வளர்ச்சியாக, நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில், உணவகங்கள், நட்சத்திர தகுதி படைத்த பல மாடி விடுதிகள், கல்லூரிகள், தொழிற்கூடங்கள், சாலை விரிவாக்கம் செய்து நகரத்தின் எல்லையை விரிவுபடுத்தி, வேளாண் நிலங்கள் மீது தாக்குதலை, நெருக்கடியை அதிகரித்து, விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை, உடமைகளை இழக்க, விற்க, மக்களை காக்க வேண்டிய அரசாங்கமே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சனநாயகமே கடுமையான நிர்பந்தம் செய்கிறது.



வேளாண்மை இலாபமற்ற தொழிலாக வெகு நாட்களுக்கு முன் ஆக்கப்பட்டதின் விளைவாக, வியாபாரிகளே அதிக இலாபம் ஈட்டக்கூடிய போக்கு வெகு காலத்திற்கு முன்னிருந்து வலுவாக நிலை பெற்று விட்டதின் காரணமாகவும்; பருவ மழையை நம்பி விவசாயி பயிர் செய்ய வேண்டிய நிலமை காரணமாகவும்; முதலீடு செய்ய நிதி வசதி இன்மை காரணமாகவும்; தொழில் துறைகளுக்கு அளிக்கப்பட்ட மான்யம், வரிச்சலுகை; மின் சலுகை; ஊழியர் மான்ய உதவி போன்ற அதிக சலுகைகள், அரசாங்கம் கையாண்ட தாரளமான அணுகு முறைகள், விவசாயத்தைப் பொறுத்த அளவில் ஒன்றுமே இல்லை என அடித்துக் கூறலாம். பயிர் பாதுகாப்புத் திட்டம் கூட, ஒரு மாவட்டம் முழுமையாக இயற்கை உற்பாதத்தில் பாதிப்பு அடைந்தால் மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. அத்தொகையும் கூட போதுமானதாகவும், உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கவும் இல்லை.


அரசாங்கம் பாசன வசதிகளை கொஞ்சம், கொஞ்சமாக ஒழித்து கட்டியதின் பயனாகவும்; நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து போனதின் காரணமாகவும்; விவசாய விளை பொருளுக்கு கட்டுபடியாகக்கூடிய ஆதரவு விலையை தொடர்ந்து உயர்த்தி அளிக்காததின் காரணமாகவும்; கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலே வீழ்ந்து, கடனை தம் வாரிசுகளுக்கு உரிமையாக விட்டுச்செல்லும் அவல வாழ்க்கையே விவசாயிகளின் வாழ்க்கை எனில் அது மிகையன்று.


நகரத்தில், சில தொகுதிகளில் மட்டும், உள் நோக்கங்களுக்காக மருத்துவ கல்லூரி, புதிய சட்டமன்ற வளாகம், சரக்குந்துகள் நிறுத்தம் போன்ற எண்ணற்ற வளர்ச்சிப் பணிகள் உண்டாக்குவது, சீரற்ற வளர்ச்சிக்கு வழி வகுக்கும். கணக்கண் ஏரி வெகு அருகில், புதுவை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவ மனை கட்டுவது, ஏரியை பாதிக்கும் மேல் சிதைப்பது, எவ்விதத்தில் முறைமையாகும். சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு செய்வது, சுற்றுச்சூழல் சட்டத்தின் அடிப்படையில் தனியார், அரசினர் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் தயாரித்து புதுவை சுற்றுச்சூழல் குழுவிடம் அளித்து போது மக்கள் கருத்து அறிய, பொது விசாரணை நடத்த வேண்டியது சட்டப்படி கட்டாயம். இருந்தும் கூட அவ்வாறு செய்யாமல் அரசாங்கமே சட்டத்தை மீற முடியுமா? மக்கள் கேட்கிறார்கள். பதில் சொல்லுமா அரசாங்கம்?


நாள் ஒன்றுக்கு 2 இலட்சம் லிட்டர் தண்ணீருக்கு மேல் மருத்துவ மனைக்காகவும் மருத்துவ கல்லூரிக்காகவும் நிலத்தடி நீரை எடுத்துப் பயன் படுத்தினால் கதிர்காமம், சண்முகாபுரம், மேட்டுப்பாளையம் போன்ற பகுதி மக்களின் தினசரி நீர் தேவையை யார் அளிப்பது. மருத்துவ மனையின் கழிவுகளை எவ்வாறு கையாளுவது? மறு பக்கம் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையின் 'அத்தியப்பா வேதியியல் தொழிற்சாலை' போன்ற பல தொழிற்சாலைகள் நிலத்தடி நீர் ஆதாரத்தை திட்டமிட்டு ஒழித்து வரும் போக்கில் நீர் பற்றாக்குறையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த பகுதியில் மருத்துவ மனை கட்டுவது ஏற்புடையதா?



நகர மக்கள் வாழ்க்கைக்காக, கிராம மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரமான வேளாண்மையை, நிலத்தை இழக்க, நெருக்கடி செய்யும் அரசாங்கத்தின் திட்டம் ஏற்புடையதல்ல, நியாயமானதல்ல. கடந்த கால வரலாறு, புதுவையில் விவசாயம் , ஆட்சியாளர்களால், எவ்வாறு படிப்படியாக சீரழிக்கப்பட்டது என்கின்ற உண்மை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. சமூக உணர்வு உள்ள, மண்ணை நேசிக்கும் நடு நிலையாளர் அனைவரும் அறிந்த செய்தியும் ஆகும்.


மக்கள் தொகையில் பாதிக்கு மேல் தற்போது நகரத்தில் வாழும் மக்களாக, 92 கிராமங்களில், 3,25,596 பேர் வாழ்கின்றனர். மாறாக, 6 நகரங்களில் 6,48,233 பேர் வாழ்கின்றனர். சராசரியாக 1,08.039 பேர் நகரத்தில் வாழ்கின்றனர் என 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை உத்தேச புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


வரன் முறையற்ற நகர வளர்ச்சியில், மக்களுக்கு தூய்மையான காற்று, குடி தண்ணீர், சுகாதாரமான வாழ்க்கை, குடி இருப்பு வசதி, சாலை வசதி, பொது போக்குவரத்து சாதனங்கள் ஏற்பாடு எவ்வாறு செய்திட இயலும். உலகம் சூடேற்றல் காரணங்களில் ஒன்றாக, திட்டமிடப்படாத நகர வளர்ச்சி கூறப்படுகிறது. இதையெல்லாம் உள் வாங்கி உணர்ந்து, மக்கள் நிலையில் சிந்தித்து, மனிதாபிமான முறையில், நியாயமாக ஆட்சி செலுத்தி செயல்படும், 'சனநாயக காவலர்கள்' நம் நாட்டில் உள்ளனரா?

No comments: