Thursday, March 15, 2007

"நாதியற்ற நந்திகிராம்"

கொல்கத்தா, நந்திகிராமத்தில், உலக மயத்தின் கூறான, சிறப்புப் பொருளாதார மண்டலம் ,மற்றும் வேதியியல் தொழிற்சாலையை, இந்தோனேசியா சலீம் குழுமத்தின் ஒத்துழைப்புடன், வேளாண்மை நிலங்களை அழித்து அமைக்க, மேற்கு வங்க அரசு முனைந்தபோது, எதிர்த்த கிராம மக்களை, காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி, விவசாயிகள் 6 பேரை கொன்றுள்ளது. 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 11 பேர் வரை இறந்திருக்க கூடும்; இவர்களில் மூவர் பெண்கள் என்றும், செய்திகள் கூறுகின்றன.


இதற்கு முன், சனவரியில் நடந்த போராட்டத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் படுகாயம் அடைந்தனர் என்று அறிய வருகிறது. இசுலாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள இக்கிராமம், கொல்கத்தாவிலிருந்து 150 கி.மீ.தொலைவில் உள்ள, கிழக்கு மித்னாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறந்தவர் எண்ணிக்கை 20ஐ தாண்டும் என்றும், பெண்கள், குழந்தைகள் சேர்த்து, 200 கிராமவாசிகள் குண்டு காயம் அடைந்துள்ளனர் என்றும், செய்திகள் கூறுகின்றன. பல ஆயிரம் ஏக்கர் வேளாண் விளை நிலங்களை அழித்து, சிறப்புப் பொருளாதர மண்டலம் மற்றும் வேதியியல் தொழிற்பேட்டை அமைப்பதை எதிர்த்து, 'பூமி உச்சட் பிரதிரோத்'(நில கையக தடுப்பு குழு) கடந்த 3 மாதங்களாக, சாலையில் பள்ளம் பறித்து, காவல்துறையினர் நுழைவதை தடுத்து, தங்கள் நிலங்களை காத்திட, போராடி வந்தனர்.

விவசாய எழை மக்கள், நிலத்தை காப்பாற்ற, தங்கள் வாழ்வுரிமையை பாதுகாத்திட, அறவழியில் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். கண்டுகொள்ளாத, அசையாத, மேற்கு வங்க இடதுசாரி அரசு, ஆயுதப்படையை வைத்து, நிராயுதபாணியான பெண்களை, குழந்தைகளை சுட்டுக் கொன்றது, மிக மோசமான, மனித உரிமை மீறலாகும். சொந்த மண்ணிலேயே இடதுசாரி அரசு மேற்கொண்ட இத்தாக்குதல் இந்திய அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய களங்கம் ஆகும்.

No comments: