Tuesday, March 13, 2007

சடங்குகள்..!

சடங்குகள் நம்மிடையே, கிடங்கு கொள்ளும் அளவிற்கு, மலிந்து கிடக்கின்றன. இறப்பிலும் கூட ஏராளம். அவரவர் விருப்பப்படி. காவு கொடுப்பது; பிணத்தை கிடத்தி வைக்கும் திசையை தீர்மானிப்பது; எண்ணெய், சீக்காய் வைப்பது; குளிப்பாட்டுவது; வத்தி,கற்பூரம் ஏற்றுவது; பிணத்தின் வாயில் வெற்றிலை வைப்பது. எண்ணிக்கை மிகுந்த ஏற்பாடுகள்.


காலத்தை விரயமாக்கி, கவனத்தை சிதைத்து, துன்பவியல் சூழலை ஆழப்படுத்தி, விரைவுபடுத்தி, "அய்யோ! அம்மா!, "குய்யோ! முறையோ!, எனக் கூவி அழைத்து, தாலாட்டு பாடுவது, இழவு பாடுவது, ஏக்கங்களை வெளிப்படுத்துவது, ஆகிய உணர்வு வெளிப்பாடுகளின் ஊர்வலங்கள், அனைவரையும் கலங்க வைக்கும், நெகிழ வைக்கும் போக்குகள்.


இறந்தவரின் உடலை, காலங்கடத்தி அடக்கம் செய்வது அல்லது அவரவர் வழக்கப்படி, தகனம் செய்வது என்பது, உயர்சாதியினரின் அணுகுமுறை மனப்பான்மையோடு ஒப்பிடும்போது, பின்தங்கி விடுகிறது. மிக சுருக்கமாக, இறுதி யாத்திரையை அதிக ஆராவரம் இன்றி, அமைதியாக ஏற்பாடு செய்திடும் பழக்கத்தை, பின்பற்றாமல் விட்டு விட்டோம்.


சடங்குக்காக சண்டையிட்டுக் கொள்ளும், தெரு அளவில் வெளிச்சத்திற்கு வரும், நிகழ்வுகளும் ஏராளம். 'கோடி' போடுவது யார்? போட்டவர் முறையல்ல! சாவு சோறு போடுவது யார்? சம்பந்தி எங்கே? எப்படி பங்கு போட்டுக் கொள்வது? 'பணமாக கொடுக்கலாமா'? பந்தியை ஏற்பாடு செய்யலாமா?, ஆலோசனைகள், விவாதங்கள், அனைத்து சாவுகளிலும், தமிழரின் தனிப் பெருமையை, தமுக்கு தட்டும் விளம்பரங்கள் ஆகும்!

No comments: