Wednesday, March 14, 2007

"குர்கான்" - ஒரு குறியீடு!

பன்னாட்டு குழுமங்களின் குடியேற்ற நாடாகி விட்டதா இந்தியா? தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு உட்பட, தங்களது நியாயமான கோரிக்கைகளை, வலியுறுத்தி நிகழ்த்திய போராட்டத்தை, உலகின் மிகப்பெரிய, சனநாயக நாட்டின் காவல்துறை, மூர்க்கத்தனமாக கொடுங்கரம் கொண்டு, தாக்கியது. இந்திய இறையாண்மையின் குறியீடான பாரளுமன்றத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில், அதிகார மீறல், அருவருப்பான செயல், முன்னெப்போதும் இல்லாத அளவில், குர்கான்,அரியானாவில், நிகழ்ந்தேறியது. நிகழ்ந்த சம்பவம், நாட்டையே உலுக்கி விட்டது.மாநில ஆளும் வர்க்கமும், அதிகாரிகள் வர்க்கமும்,கை கோர்த்து நிகழ்த்திய, ஓண்டா தொழிலாளர்கள் மீதான, மூர்க்கத்தனமான அடக்குமுறை, அனைவரையும் உறைய வைத்துள்ளது.


சப்பான் நாட்டு தூதர், ஒய்.இனோகி, 'ஓண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் சுகூட்டர் இந்தியா தொழிற்சாலை'யில் ஏற்பட்ட தொழிற் தகராறை, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான அளவு கோல், என குறிப்பிட்டுள்ளார். இது, இந்திய தொழிலாளி வர்க்கத்தை, இந்திய அரசாங்கத்தை மிரட்டுகின்ற, அவமதிக்கும் பாணியில், அமைந்துள்ளது.


இந்திய நாடு விடுதலை அடைந்ததிலிருந்து, இந்திய சந்தை சப்பானுக்கு தாராளமாக, பெரிய அளவில் திறந்து விடப்பட்டுள்ள உண்மையை மறந்து, அவர் பேசியுள்ளார். ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக, தங்களது சந்தைகளை சப்பானிய ஆட்டோ தொழிலுக்கு போட்டியாக,தங்களது சொந்த தயாரிப்பான, விலை குறைவான, நவீனமான மோட்டார் வாகனங்களை சந்தைகளில் கொண்டு வருகின்றன.


இது போன்றே, செர்மன் சந்தையும், பிரான்சும், சப்பானிய தொழிலுக்கு மிகவும் போட்டியாக மாறியுள்ளன. 1990ஆம் ஆண்டிலிருந்தே நன்கு முயற்சி செய்து, திட்டமிட்டு, ஆட்டோமொபைல் தொழிலிலிருந்தே, சப்பானை வெளியேற்றுவது எனும் ஐரோப்பிய நாடுகளின் முயற்சியால், 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே, தமது வாகனங்களை சப்பான், ஐரோப்பிய சந்தைகளில் விற்க முடிகிறது.


'நல்லாட்சி', 'இந்தியா ஒளிர்கிறது' எனும் கவர்ச்சிகர முழக்கங்களுக்குள், 'குர்கான்' போன்ற தொழிலாளர் விரோத அடக்குமுறைகள், அத்து மீறல்கள் எவ்வாறு உள்ளடங்கி, தருணம் பார்த்து, சுதந்திர நாட்டின் பாதுகாவலன் என முழக்கமிடப்படும் காவல்துறை, தனது உண்மை அவதாரத்தை, மக்கள் விரோத, காலனியாதிக்க பழிவங்கும் உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் இத்துறைக்கு, சமூக பொறுப்புணர்ச்சி இல்லையா?

No comments: