Wednesday, April 4, 2007

கரையாளர்!

துயரம் தீரவில்லை.
சோகம் போகவில்லை.
500 மீட்டருக்குள்,
கடற் கரையில் வாழ்ந்திட,
அனுமதியும் இல்லை.
அலை அடித்தும் ஓயவில்லை.


மழை விட்டும்,
தூவானம் விடவில்லை.
ஆழிப்பேரலை அடித்து ஓய்ந்தும்,
அப்புறப்படுத்திய எங்கள் வாழ்க்கை,
விலகிய வெளிச்சம் போல்.
இருள் தொடர்கிறது இன்னமும்,
முகாமில்.


இல்லற வாழ்க்கை,
அந்தரங்கமும் அம்பலம்.
போதை ஏறி, பொறுக்காத,
ஆண் வர்க்கம்.
அத்து மீறல்,
அன்னியர் போல்.
குழந்தைகள் விழிப்பில்,
குடும்பத்தில் பிரச்சனை.
உளவியல் சார் சிக்கல்.


நொடிப்பில்,
உறுப்புகளை இழந்து,
விற்று,
மேலும் நொடிந்தோம்.
கடல் அரிப்பு,
கரை அரிப்பு,
வீடு ஒழிப்பு,
மரம் அழிப்பு.
குடி நீரும்,
கிணற்றில் இல்லை.


உப்பு நீரே உயர்ந்த்துள்ளது.
தண்ணீர் வாழ்க்கை,
கண்ணீர் வாழ்க்கை.
உணவகம், விடுதி,
உல்லாசம்.
இவற்றுக்கு இல்லை,
500 மீட்டர் அளவு கோல்.


வளர்ச்சி!
நாங்கள் அழிந்து.
மீன்கள் அழிந்து.
கரை அழிந்து,
கலை இழந்து,
நிலை குலைந்து,
நிற்க இயலாத வாழ்க்கை,
நீடித்திருக்கும்.


உடலில்,
உயிர் ஓடிக்கொண்டிருக்கும்.
கடிகார முள்போல்,
காலம் காட்டி,
எங்கள் கோலம்
தேக்கி.

No comments: