Tuesday, April 10, 2007

செண்டூர் துயரம்..

07.04.2007ல், திண்டிவனம் அடுத்த, நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செண்டூரில் "வெடிவிபத்து". "பாறை வெடிக்கும் வெடிகள் மனிதரை வெடித்தது"
16 பேர் சிதறினர், சின்னா பின்னமாகி, கருகி, உடல் சிதைந்து, வீழ்ந்தனர், தாம் பிறந்தமண்ணில்.


கண்ணெதிரே பயங்கர காட்சிகள். பேருந்துக்கு நின்றவர், புளியமரத்தில் புளி உலுக்கியவர், தேநீர் கடையில் இருந்தவர் உயிர்களை உலுக்கியது. இறந்தவர் பட்டியலில், வழியில் சென்றவர். வாகனத்தில் இருந்தவரும் படுகாயம். எதிரில், பக்கவாட்டில் இருந்த வீடுகள் சிதைந்தன, வீட்டின் ஓடுகள் உடைந்து, கொட்டியும் கொட்டாமலும், போர்க்கள காட்சி. உடைந்த தென்னை மரங்கள், கருகிய புளிய மரங்கள், வெடியின் விசையில், சாலையில் மூன்று அடிக்கு மேல் ஏற்பட்ட பள்ளம். சிதறிய வாகனத்தின் தகடுகள் சில்லி, சில்லியாக, மரங்களில் தைத்துள்ள வேகம். கிழிந்த சட்டைகள், துண்டு,துண்டாக, ஒற்றைச்செருப்புகள்,"அரையை விட்டு அனாதையாக கிடந்த அரைஞான் கயிறு", சிதறிய உடல்களின், சிதைந்த உயிர்களின், உறைந்த இரத்தம்...வீதிகள் எங்கும் சிதறி, விரவிய தசைகள், புளிய மரத்தில் தொங்கிய ஒற்றைக் கைகள்...நெஞ்சம் பதைக்கும் காட்சி!!



அரசு எந்திரங்கள், தொடர் நடவடிக்கை இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்காலிகமாக, ஆட்சியர் அலட்சியம். எப்போதும் போல் பேச்சு, நிவாரணம். நிரந்தர தடுப்பு நடவடிக்கை, வெடிபொருள் வியாபாரிக்கு இருக்கவேண்டிய பொறுப்பு, விதிமுறைகள் கடைபிடித்தல், உறுதி செய்யப்படவேண்டும். மாநிலம் முழுவதும் எச்சரிக்கை நடவடிக்கைகள், துரித கதியில் எடுக்கப்படவேண்டும். அரசின் வெடிபொருட்கள் கையாளுதல், பராமரிப்புச் சட்டம் நடைமுறைப் படுத்தும் துறை அதிகாரிகள், இனிமேல் மிக கவனமுடன், கறாராக கடமையாற்ற வேண்டும். வெடிபொருட்கள் வியாபாரத்திற்கு இசைவு அளிக்கும் போது, பொதுமக்கள் வழ்விடங்களுக்கு அருகில், கிடங்கி அமைத்திட அனுமதி அளித்திடக் கூடாது. இழப்பீட்டுத் தொகையை அரசு அளிப்பது அல்லாமல், இழப்புக்குக் காரணமான வியாபாரியிடம் இருந்தும் பெற்றுத்தர வேண்டும். குற்றவியல் ஒறுத்தல் நடவடிக்கை, நீதி விசாரணை, விரைவுபடுத்தப்பட வேண்டும். அரசு செயல்பாட்டின் மீது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வண்ணம் நிவாரண நடவடிக்கைகள் உட்பட உருப்படியாய் அமைந்திட வேண்டும்.

No comments: