Friday, April 13, 2007

அறம்...?

சூழ்நிலையால் குற்றம் இழைப்பவருக்கு, சமாதானம் உண்டு. குற்றம் இழைப்பதற்காக சூழ்நிலையை உருவாக்குபவருக்கு, சமாதானம் உண்டா? "குற்றத்தை வெறு குற்றவாளியை வெறுக்காதே" எனும் கருத்து, சூழ்நிலையை தமது தப்புகளுக்கு, முறைகேடுகளுக்கு, கேடயமாக எடுத்துக்கூறும் நபர்களுக்கு, பொருந்துமா?


உழைப்புக்கு மதிப்பில்லாது, அதை கெளரவ குறைவாக நினைக்கும் மனிதருக்கு, எவ்வகையிலாவது பொருள் சேர்ப்பது, செல்வம் குவிப்பது, போட்டி மனப்பான்மை, பெரிய வாய்ப்பாக அமைகிறது. ஆடுகள விதிகளை மீறி ஆக்கம் சேர்ப்பவர்களை, சேர்த்தவர்களை பார்த்து ஆசை விரிகிறது, அரவமில்லாமல்.


அடுத்தவன் சொத்தை ஆக்கிரமிப்பது; ஆள் கடத்தல் செய்வது; பொருள் கவர்வு; சட்ட விரோதமாக பொருள் சேர்த்தல், இன்ன பிற செயல்களில் ஆக்கம் சேர்த்தல்; ஆகிய பல தளங்களில், தங்கள் பயணத்தை மேற்கொள்வது போன்ற நிகழ்வுகளை, நாம் அன்றாடம் கவனித்து வருகின்றோம். இதில், பெரிய ஆள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், தப்பு செய்யும்போது, இவர் ஏன் செய்யக்கூடாது? எனும் வாதம் மிகப்பரவலாக, சமூகத்தின் நாடியாக விளங்குகின்ற தன்மையை, நாம் காண்கிறோம்.


மனித இயல்பை மீறிய, பல முறைகேடுகளை செய்வது, அடுத்தவர் உரிமைகளை பாதிக்கும் செயல்பாடாகும். மட்டுமில்லாது, அரசியல் சமூகம் தனி மனித ஒழுங்கிற்கு விதித்துள்ள நியதிகளை மீறிய பண்பும் ஆகும். ஒழுங்கை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? அது என்ன அவசியமானதா?, எனது திறமையினால் 'உழைத்து' சொத்து சேர்ப்பது, சுய முயற்சியின் விளைவு இல்லையா?, போன்ற வாதங்கள், எதிர் வாதங்கள், ஏற்புடையதா? நியாயமானதா?


அறம் சார்ந்த பண்புகள் என்பதே, வாழ்க்கையில் சற்றும் தேவையில்லையா?

No comments: