Sunday, April 15, 2007

பேசிக்கொள்கிறார்கள்...

காவல் துறை, முன்கூட்டியே காவலர்களை அதிக எண்ணிக்கையில், நீண்ட தடிகளுடன் தலைக்கவசம் உட்பட அனைத்து தயாரிப்புக்களோடு, தேங்காய்த்திட்டு மக்களைத் தாக்குவதற்கு குவித்திருந்தனர்.


வெள்ளிக்கிழமை அன்று, அமைச்சரின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து "வல்சராசு அமைச்சரின் சவ பாடை ஊர்வலம்", மக்கள் ஒரு போராட்ட வடிவமாக ஊருக்குள் நடத்தினர். இப்போராட்டத்தை பொறுத்துக்கொள்ளாத காவல்துறை, ஊருக்குள் புகுந்து மக்களை விரட்டிச்சென்று, ஆவேசமாக தடிஅடி நடத்தி, பலரை காயப்படுத்தியுள்ளது.


மேலும், அங்கு கூடியிருந்த போராடும் பெண்களை, மிக அசிங்கமான வார்த்தைகளில் திட்டி, மிரட்டியுள்ளதாகவும், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களால் செய்தி சொல்லப்படுகிறது. 800 பேர்கள் மீது குற்ற வழக்கும் போடப்பட்டு, தமது எசமான விசுவாசத்தை, புதுவை காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.


புதுவையின் நீர் ஆதாரம் காக்கப்பட வேண்டும், மக்கள் வாழ்வாதாரம் பறி போகக்கூடாது, புதுவை காக்கப்படவேண்டும் என்று போராடும் மக்கள் மீது, அரசாங்கம் ஒட்டு மொத்தமாக ஒரு வழக்கு போடுவது, புதுவையின் வரலாற்றிலேயே அனைத்து நியதிகளையும் மீறியுள்ள நிகழ்வாகும்.


பரவலாக, மக்கள் இப்போக்கு குறித்து கண்டனக்குரல் எழுப்பி உள்ளனர்."மக்கள் நாயகம்" என்பது மக்களுக்கா? மக்களை ஆள்கின்றவர் பொருள் சேர்க்கவா? பிரபலமான அரசியல் கட்சிகளும், இடதுசாரிகளும் புதுவையில் இருகின்றனரா? போராடும் மக்கள் கேட்கின்றனர்!


நாங்கள் துறைமுக திட்டத்தை கொள்கை அளவில் ஆதரிக்கிறோம்! பாதிப்புகளை எதிர்க்கின்றோம்! எனும் குழப்பமான நிலையை இந்தியக் கம்யூனிசுடு கட்சி, துறைமுக விரிவாக்கத் திட்டத்தில் எடுத்துள்ளது."சிப்மெர்" தன்னாட்சியை வலுவாக எதிர்க்கும் மார்க்சிசுட் கட்சி, சேதராப்பேட், கரசூர் "சிறப்பு பொருளாதார மண்டல" திட்டத்தைப் பற்றி வாய் திறக்காத நிலைப்பாடு!


அரசியல் கட்சிகள், எவ்வாறு மக்கள் பிரச்சனையில் அக்கறை இல்லாமல்,ஆளும் வர்க்க அரசியலோடு கைகோர்த்து, மக்கள் விரோதமாக வெளிப்பட்டு வருகிறார்கள் என்று சமூக ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி வருகிறார்கள்.

No comments: