Saturday, April 28, 2007

'கீதை உபசாரம்'

தெருவிற்காக வீட்டை அழிக்கலாம், ஊருக்காக தெருக்களை அழிக்கலாம், நாட்டிற்காக நகரத்தை அழிக்கலாம், மாநிலத்தை அழிக்கலாம். இவ்வாறு கீதை உபதேசத்தில் கூறப்பட்டுள்ளதாக, புதுவை ஏம்பலம் சட்டமன்ற உறுப்பினர், திருவாளர்.ராசாராமன், சட்டமன்றத்தில் துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசுகையில் தெரிவித்துள்ளதாக, நேற்றும் இன்றும் பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது.


அவர் மேலும் பேசுகையில், தாய் குழந்தையைப் பெற நிறைய இரத்தம் சிந்துகிறாள். அதுபோல, ஊரை இழந்து, நாட்டை இழந்து, மக்களை இழந்து துறைமுக விரிவாக்கம் வேண்டும் என வக்காலாத்து வாங்கும் சட்டமன்ற உறுப்பினர், திடீர் ஞானம் எப்போது, எங்கே பெற்றார். தேங்காய்த்திட்டு அழிந்தாலும் பரவாயில்லை, நிலத்தடி நீர் உப்பு நீரானாலும் கேள்வியில்லை ஏன், ஒட்டுமொத்த புதுவையே பாழானாலும் தமக்கு கவலையில்லை என்பவர், ஏம்பலம் தொகுதி மக்களுக்கு மட்டும் என்ன செய்தார்? செய்வார்?


தலித் மக்கள் பிரதிநிதியாக உள்ள இவருக்கு, தேங்காய்த்திட்டு கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் தலித் மக்கள் வாழ்க்கையைப் பற்றி அக்கறை இல்லையா? மிகவும் பிற்படுத்தப்பட்ட, உழைக்கும் மக்கள் மீது பற்று இல்லையா? இவர்கள் அனைவரையும் அழித்து துறைமுகத்தை அமையுங்கள் என ஒரு வட நாட்டுக்காரனுக்கு, மக்கள் விரோத திட்டத்திற்கு ஆதரவாக, ஆலோசனை அளிக்கிறாரா? புதுவை அழிந்த பிறகு எந்த ஊரில் பிழைப்பு நடத்துவார்? போராடும் மக்கள், பொது மக்கள், வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் கேட்கின்றனர்.

No comments: