Friday, July 27, 2007

தமிழ்மயமான பிரெஞ்சு சொற்கள்

புதுவை தமிழ் வழங்கும் பகுதியாகும்.சோழமண்டலத்தின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி எனவும், தொண்டை மண்டலத்தில் ஆட்சிப் பகுதியாகவும் விளங்கியது என பல சான்றுகள் கூறுவர்.


உரோமானியப் பேரரசுடன் வணிகத்தொடர்பு கொண்டு விளங்கிய அரிக்கன்மேடு, வீராம்பட்டினம் பகுதிகள் தொல்பொருள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. பிற்காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் 350 ஆண்டுகள் இருந்து வந்த புதுவையில், தமிழ், மக்கள் மொழியாக பேசப்பட்டு வந்தாலும், பல சொற்கள் தமிழ் வடிவத்தில் புதுவையின் பூர்வீகக் குடிகளால் பேசப்படு எழுதப்பட்டு வந்துள்ளன.


ஆனால், இன்றைய தலைமுறையினர்க்கு இது பற்றிய செய்தி அறிவதற்கு வாய்ப்பில்லை. இன்றும் 70 வயதைக்கடந்த உள்ளூர் பெரியவர்கள் பேசும் பேச்சில்,"பீரோவுக்கு போறேன்", "இவன் கிசுத்தியம் போட்டுக் கேட்கிறான்", "பாருங்க இவன் கொம்பா வைக்கிறான்", "நான் ரெழிக்கு போறேன்", "ஒப்பித்தாலுக்குப் போறேன்", "எக்கோலுக்கு போகலையா","திரைசோர் போறேன் என்பன போன்ற பல சொற்கள் இன்னும்நடைமுறையில்உள்ளன.


மேற்குறிப்பிட்ட சொற்கள் மட்டுமின்றி, இன்னும் பல சொற்கள் தமிழ் வடிவமாகி, உணர்த்தும் பொருள் பின் வருவனவாகும்.


கிசுத்தியம்-- கேள்வி
கொம்பா------- சண்டை
ரெழி-------- மின்சாரத்துறை
ஒப்பித்தால்-- மருத்துவமனை
எக்கோல்------ பள்ளி
திரைசோர்---கருவூலம்
பீரோ----- அலுவலகம்
காண்------குழாய்
தளவாய்-- துணை ஆய்வாளர்
முழ்வார்---கைக்குட்டை
முசே---- ஐயா
பிரிகாதி---ஏட்டு
சொல்தா---- இராணுவ வீரன்
சோல்து------ மாதச்சம்பளம்
செக்கூர் பணம்----உதவித்தொகை
ரூய்----------- வீதி
மேரி-------- நகராட்சி அலுவலகம்
திரிபுய்னால்----நீதிமன்றம்

1 comment:

வைசா said...

சுவையான தகவல்கள். வட்டார வழக்கு என்று இருக்கும்போது அது எப்படி ஒருதலைமுறை காலத்துக்குள் வழக்கொழிந்து போனது?

வைசா