Sunday, September 30, 2007

அந்திம அங்கீகாரம்!

தொழுகிறாய்! அழுகிறாய்!
தொழுது அழுகிறாய்!!

தொலைந்தான் என்றாய்!
எடுத்துக் கொண்டான்!
பறித்துக் கொண்டான்!

அந்திம காலத்தில்,
அங்கீகாரம்!
ஏற்றுக் கொண்டாய்!!

கழற்றியதை இறக்குகிறார்,
நள்ளிரவில்!
இரங்குகின்றார்!!

ஏக்கத்துடன் தேம்புகிறாய்!
புலம்புகிறாய்!
புதிதாக இழந்ததைப்போல்!!

Saturday, September 29, 2007

நீ ஏன்.... ?

அவளே அழவில்லை!
நீ ஏன்.... ?
அவளே கலங்கவில்லை!
நீ ஏன்.....?
அவளே விழையவில்லை!
நீ ஏன்.....?
அவளே வாய் திறக்கவில்லை!
நீ ஏன்.....?
அவளே உறங்கி விட்டாள்!
நீ ஏன்.... ?
அவளே இயல்பாய்!
நீ ஏன்.... ?

மருத்துவக் கழிவுகள்?

புதுச்சேரி மாநிலத்தில் 8 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவ மனைகள் 'சிப்மேர்' மற்றும் பொது மருத்துவமனை ஆகிய இரண்டு மட்டுமே. இதைத் தவிர, தனியார் 'மருத்துவ வளாகங்கள்', சந்துகளிலும், மூலை முடுக்குகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் 'ஆகாயத் தாமரை' போல 'பசுமையாக, குளுமையாக', வணிகம் கொழிக்கின்றன. புதுவையின் முன்னேற்றத்திற்கு 'இரத்த சாட்சிகள்'!!

11 ஆயிரம் எய்ட்சு நோயாளிகள்- நல்ல மாநிலம்! சிறந்த பகுதி! அனைவருக்கும் மருத்துவம், இலவசமா என கேட்டு விடாதீர்கள்? பணத்தை போட்டவன், 'போண்டியாக முடியுமா'? புரிந்து கொள்ளுங்கள்!!

இவைகள் தினம் தினம் உற்பத்தி செய்யும் மருத்துவக் கழிவுகளை எவ்வாறு கையாள்கின்றன? நடுவண் அரசு இயற்றி உள்ள சுற்றுச்சூழல் சட்டத்தில் குறித்துள்ளவாறு, கழிவுகள் வகைப் படுத்தப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, ஆழ்ந்த நிலையில் பூமியில் புதைப்பு; 'இன்சினரேட்டர்' எனப்படும் எரியூட்டப்பட்டு அழிப்பது; 'ஆட்டோகிலேவிங்' எனப்படும் சலவை செய்வது; என பல முறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப் படவேண்டும் என நிர்ணயிக்கப் பட்டுள்ளதே, அவ்வாறு செய்யப்படுகிறதா? மக்கள் கேட்கின்றனர்?

Tuesday, September 25, 2007

ஆளும் வர்க்க உத்தி- கிரிக்கெட்

24 இரவு, தரையிலிருந்து ஆகாயத்தை நோக்கி, அலை அலையாய் சீறியது வான் வெடிகள், கூட்டம், கூட்டமாய் இளைஞர் பட்டாளம் ஆர்ப்பரிப்பு, ஆலைச் சங்கை அமிழ்த்திடும் சங்கொலி, கானகத்தை வீழ்த்திடும் ஊலை, குலவை ஒலிகள், விலங்குகள் அஞ்சும் வெடி. பாதையில் பயணப்படுவோர் பயந்து, சிலர் நயந்து, வெற்றிக் களிப்பு! பாக்கிசுத்தானை தோற்கடித்தது! பரவலான பேச்சு, அரசுத் துறைகளில் நிர்வாகம் நிழலுக்கும் கூட பஞ்சம்!

அரசியல்வாதிகள், குறிப்பாக சரத் பவார், இந்திய வேளாண்மைத் துறை அமைச்சர், பாராட்டு! கோடிக் கணக்கில் உருவாய் பரிசளிப்பு! கோலாகலம்! கும்மாளம்! இந்தியா சாதனை! அனைத்து செய்தி ஊடகங்களிலும் நாடகங்கள், அரங்கேற்றம்!!

விளையாட்டை, விளையாட்டு என்ற கோணத்தில் பார்க்காமல், நெறி பிறழ்ந்து, வெறியூட்டும் பார்வையில், மக்கள் திரளை மகுடியின் கீழ் ஆட்டி வைக்கும், மூளை சலவை செய்திடும் போக்கு, ஒரு சமூகத்தை, அதன் நிகழ்கால பிரச்சனைகளிலிருந்து எவ்வளவு தொலைவில் எளிதாக, திசை திருப்பி இழுத்துச் செல்ல முடியும் என்பதை, மீண்டும், மீண்டும், நமக்கு நன்கு தெளிவு படுத்துகிறது.

77 % விழுக்காட்டு இந்தியன், நாள் ஒன்றுக்கு உருவா 20 க்கும் குறைவாகவே சம்பாதிக்கக் கூடிய சமூக அவலத்தில் இருக்கும்போது, குறிப்பாக, விவசாயிகள் அன்றாடம் விதர்பா போன்ற மகாராட்டிரா மாநிலத்தில் தொடர்ந்து தற்கொலையில் நித்தம், நித்தம் செத்துக் கொண்டிருக்கும் போது, பிற பகுதிகளில், ஒரிசாவில், வங்காளத்தில் மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில், வாழ்வாதாரம் இழந்து வாடும் பல்வேறு உயிரூட்டமான மக்கள் பிரச்சனைகளிருந்து, மக்களை திசைத் திருப்பும் சூழ்ச்சியில், ஆளும் வர்க்கம் பல்வேறு உத்திகளை கையாள்கிறது. அதில் ஒன்றுதான் கிரிக்கெட் விளையாட்டு.

விளயாட்டை அரசியலாக்கி, தொடர்ந்து இந்திய சமூகத்தில் அழுத்தமான பல பிரச்சனைகள், சிக்கல்கள் எழும்போது எல்லாம் பயன்படுத்தி, தொடர்ந்து பாக்கிசுத்தான் மீது தீராத வெறுப்புணர்வை, உரமூட்டி வருகிறது. இந்திய தேசிய வெறி உணர்வை, தீனி போட்டு மக்கள் மனங்களில், பகைமைத் தீயை வளர்த்து வருகிறது.

சகித்துக் கொள்வது, அடுத்தவர் உணர்வுக்கு, நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது போன்ற உயர்ந்த விழுமியங்களை எல்லாம் மக்கள் மனங்களில் இருந்து படிப் படியாக நுண்ணியல் செயல் பாடுகளின் வாயிலாக, விளையாட்டை பயன்படுத்தி, ஒரு சமூகத்தின் மனப் பான்மையையே சிதைத்து, செல்லரித்து, வேறுபாட்டு பகை உணர்வை வளர்த்து வருகிறது.

Saturday, September 22, 2007

கர்நாடகாவில் தொடரும் காவல்துறை மோதல் படுகொலைகள்!!

மக்கள் சிவில் உரிமைக் கழகம்-கர்நாடகா
***********************************************************
குதர்முக் தேசிய பூங்கா, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைப்பதை எதிர்த்து மக்கள் இயக்கம் உருவாகி எழுச்சியுடன் தொடர்ந்து போராடி வருகின்றது. சகெட் ராசன், முடுகேரி தாலுக்காவில் 2005ல், சிக்மகலூர் பகுதியில் மோதல் சாவில் கொலை செய்யப்பட்டதிலிருந்து, அரசுக்கும் நக்சல்பாரி இயக்கத்திற்கும் மோதல்கள் வலுத்து வருகின்றது. பசுமையான,அமைதியான இப்பகுதி, மோதல் களமாக மாறியுள்ளது.

அண்மையில், 10, சூலையில், மெனசினகத்யா கிராமத்தில் அரசுக்கும் நக்சல்பாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 5 கிராமவாசிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுந்தரேசு குதிர்முக் தேசிய பூங்காவை எதிர்க்கும் அமைப்பின் பண்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ஆவார். வீதி நாடகங்கள் போன்ற பல விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மலைவாழ் ம்க்களிடம் தொடர்பு கொண்டிருந்தவர். பரமேசும் அவரது கூட்டாளிகளும் ராமேகவுடவின் வீட்டில் ஒளிந்திருந்தனர், 10ந் தேதி சூலையில் நடைபெற்ற காவல் துறை மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல் துறை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் மக்கள் சிவில் உரிமைக் கழகம், மற்றும் பிற முற்போக்கு குழுக்கள் நடத்திய ஆய்வில், நிகழ்த்தப்பட்ட மோதல், போலி மோதல், காவல் துறையின் அழித்தொழிப்பு நடவடிக்கையே, என கண்டறியப்பட்டுள்ளது.

இதில் கவுதம் மாவோய்சுடு இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும், மற்ற நால்வர் அப்பாவிகள் என்பதும், தேசிய பூங்கா அமைக்கப் படுவதை எதிர்த்து செயல்பட்டு வந்தவர்கள் என்பதும் தெளிவானது.

மேலும், நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் காவல் துறையினரை எதிர்த்து மோதலில் ஈடுபடவில்லை என்றும், அவர்கள் சரண் அடைய தயாராக இருக்கும் போதே சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்பதும் நிரூபணம் ஆகியது.

ரமேகவுடாவின் இரண்டு குழந்தைகளும் தற்போது அனாதையாகி நிற்கின்றனர். கர்நாடக அரசும், மோதல் சாவுகள் என, தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.

இதேபோல், சிருங்கேரியில், அகும்பே எனும் பகுதியில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஒன்று கொளூத்தப் பட்டதாகவும் அதில் நக்சல்பாரிகளுக்கு சம்பந்தம் உள்ளது என்று கூறி. கேசவ் எக்டே என்பவர் வீட்டை நக்சல்பாரிகள் தீ வைத்து விட்டனர் என்றும் கூறி, காவல் துறை கடும் ஒடுக்கு முறையில் ஈடுபட்டுள்ளது.

அப்பகுதியின் மாவோய்ச்டு செயலாளர் கங்காதர் தம் இயக்கத்திற்கும் தீ வைப்புக்கும் தொடர்பில்லை என உறுதியாக அறிவித்திருந்தும் காவல்துறை தமது போக்கில் செயல் பட்டுள்ளது.

இதற்குமுன் மாநில உள்துறை அமைச்சகம் பல எழுத்தாளர்கள், அறிவுசீவிகள், கலைஞர்கள், பேராசிரியர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோரை நக்சல்பாரிகள் என்றும், ஆதரவாளர்கள் என்றும் பெரும் பிரச்னையை கிளப்பியுள்ளது.

அதன் பிறகு பல தரப்பிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பவே, இப்பட்டியல் திருப்பி பெற்றுக்கொண்டது அரசு. எனினும் மாநிலம் தழுவிய அளவில் தனது வேட்டையை காவல் துறை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

வேர் மனிதன்!

வேர் வைத்திருந்தேன்
வெற்றி!
வெத்தானாலும்
வெற்றி!

உழைப்பாவது,
தேதி குறித்தார்,
நேரம் குறித்தார்,
தொடர் வெற்றி!

பயிற்சி,
தொடர் முயற்சி,
விடா முயறசி,
வாசிப்பு,
ஆழ்ந்த ஓசிப்பு,
அவசியம் இல்லை!

"வேரும்,
வெண்ணீரும்,"
அவசியம்,
இந்தியாவிலும்,
ஆசியாவிலும்
வெற்றி!

பயிற்சியாளர்,
பக்கம் இருந்தால்,
போதும்,
பிடித்துக் கொள்வாள்,
உள்ளூரை விடவா
ஆசியா?

பார்த்து விடலாம்!
நேரம், காலம்,
வேருடன்,
வெற்றிப் பயணம்!

ஆருடம்,
நம் கையில்,
முடிவு இல்லா
பயணம்!
கூடவே வரும்,
சீர் செய்திடாது,

அடுத்து!
நன்றாக பாடம்
பண்ணவில்லை!

தோல்வியிலும்
வேள்வி!
மீண்டும்,
வேருக்கே பயணம்!

Friday, September 21, 2007

இராமனுக்கு பலியாகவா?

கருப்பசாமியும், கருகிய இன்னொரு தமிழனும், இந்துத்துவ வெறிக்கு பலி!கன்னட வெறி இன்னும் அடங்கவில்லை! கருத்துக்கு கருத்து பதிலாகுமே ஒழிய, வன்முறை பதிலாகுமா? அரசியல் தலைகளும், தத்து பித்து என உளறல்.

நிகழ்ந்த வன்முறைக்கு பதில் என்ன, தேசியம் கூறவில்லை! மாநிலமும் உருக்குலைந்த தமிழன் வாழ்க்கையை எண்ணவில்லை! வெறிகொண்டு ஓசூர் சாலையில் ஆயுதங்களுடன் விரட்டி, வழிமறித்து தமிழ் நாட்டு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தை தடிகளால் அடித்து நொறுக்கி, கொளுத்தி, தமிழன் உயிரை எடுத்துள்ளது. இராமனுக்கு பலியாகவா?

படித்தவர்களும் பதில் இல்லை! வீடு தாக்கியது மட்டும்தான் வீதிக்கு வந்துள்ளது. நீதியின் கண்களுக்கு இறந்த தமிழர்களின் துயரம் தெரியவில்லை! சமதர்மம் பேசும் நாடு! மதச்சார்பின்மை பேசும் நாடு!

Wednesday, September 19, 2007

நெறியாகுமா?

புதுவை அரசு பொது மருத்துவமனையில் ஆகசுடு, 7ஆம் நாள், சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நாள் குறிக்கப்பட்டு அறுவை செய்யப்படாமல், மருத்துவரின் அலட்சியப் போக்கினால், 39 வயது மதிக்கத்தக்க தொழிலாளி அடுத்த நாளே இறந்தார். அவரது உறவினர் இது குறித்து போராட்டம் நடத்தினர். பிற அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து களம் இறங்கின. சிறுநீரகத் துறைக்கு பொறுப்பான மருத்துவர் முருகேசன்- சாவுக்கு காரணமானவர்-மீது மருத்துவ கவனக்குறைவு என இந்தியத் தண்டனச் சட்டப்பிரிவு 307ன் கீழ் பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும் மருத்துவர்களின் குழு, புதுவை ஆளுநர் அவர்களை சந்தித்தது. புதுவை முன்னேற்ற காங்கிரசும் சிறுநீரகத்துறைக்கு பொறுப்பான மருத்துவர் முருகேசன், சாவுக்கு காரணமானவர்,மீது மருத்துவ கவனக்குறைவு என இந்தியத் தண்டனச் சட்டப்பிரிவு 307ன் கீழ் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு விலக்கிக் கொள்ளப்படது.

அவர் தொடக்கக் காலத்தில் சிநீரகப்பிரிவு தொடங்குவதற்கு காரணமானவர் என்பதற்காகவும் , தனக்கு வேண்டியவர் தன் குடும்பத்திற்கு மருத்துவம் பார்த்தவர் என்பதினாலும், ஒரு ஏழைத் தொழிலாளியின் சாவுக்கு காரணமான செய்கையிலிருந்து அவரை தனிப்பட்ட காரணங்களுக்காக காப்பாற்றுவது தார்மீக நெறியாகுமா?

Monday, September 17, 2007

புதுவையின் மருத்துவத்துறையில் பெருகிவரும் சீர் கேடுகள், அரசியல் மயமாக்கப்படும் மருத்துவம்- ஒரு பார்வை

34 வயது மதிக்கத்தக்க ரங்கநாயகி, மூர்த்திக் குப்பத்தைச் சேர்ந்தவர், மீனவப் பெண்மணி, 13, செப்டம்பர், 07ல் வயிற்று வலி, மற்றும் சிறுநீரகப் பாதையில் அடைப்பு ஆகிய காரணங்களுக்காக அறுபடைவீடு மருத்துவமனைக் கல்லூரி- தனியார் நிறுவனத்தில்- அனுமதிக்கப்பட்டார்.

நோயாளியின் தங்கைகள் மூவரிடம் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர் கூறி இரவு 10 மணி அளவில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஏழை மீனவப் பெண்மணி, எந்த காரணத்தினால் மரணமடைந்தார் என்பதைக் கூறாமல், இறந்தவருக்கு நிவாரணமாக உருவாய் 3 இலட்சம் தருவதாக சமாதானம் கூறியது பலத்த சந்தேகத்தை உண்டாக்க, மருத்துவமனை நிர்வாகம் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தின் துணையை நாட , உடலை மருத்துவ ஆய்விற்காக புதுவை பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்து என்ன செய்வது? அதிகாரம் இல்லாத மக்கள்? அக்கறையற்ற அரசியல்?

பல அமைப்புகள் புதுவையில் இருந்தாலும், உணர்ச்சிகரப் போராட்டங்களை செய்துவிட்டு பத்திரிக்கைச் செய்தியாக, அனைவரும் பேசும் பேச்சாக மட்டுமே நின்று விடுகிறது. அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி, அதனை சீராக எடுதுச் செல்ல வேண்டிய பணிகளில் பாதித்த மக்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டியது சமூக இயக்கங்களின் , அரசியல் கட்சிகளின் கடமை அல்லவா?

எதிரணியில் உள்ளவர் சரியாக இருக்கும் போது, நாம் சொல்லாளர்களாக மட்டுமே இருந்து கொண்டு, அரசிடம் சமரசம் செய்து கொள்வது உருப்படியாகுமா? உணர்வாகுமா?

உழைக்கும் மக்கள் கேட்கிறார்கள், உங்கள் பதில் என்ன?

Sunday, September 16, 2007

"சனதா"

யார் சொன்னது!
நாங்கள்,
இன்னும்
கடைச் சரக்கே!

மீன் குழம்பு!
நண்டு குழம்பு!
கறிக் குழம்பு!
சோர்வில்லாமல்,
12 உருவாய்க்கு.

தாங்குமா தரணி!!

குண்டுகளின் அம்மா!
எங்களிடம்!
அன்று!

குண்டுகளின் அப்பா!
எங்களிடம்!
இன்று!

உயிரியல் நேர்ச்சி!
நிகழ்வு!
உறவின் குறியீடு!

பேரழிவின்
குறியீடாக,

"அப்பா, அம்மா",

பாரம்பரிய
குண்டுகள்!!
"தாய், தகப்பன்".

முதுமக்கள்

அடுத்தடுத்து,
சாராயக் கடையில்,
சாக்கடையில்,
பூங்காவில்,
'கல் மேட்டில்',
இடுக்கில்.

சாலையைக் கடக்கும்
முயற்சியில்,
ஆயுள் கடக்கும்.


முதியவர்
அடுக்கடுக்காய்,
கோருபவர்
யாரும் இல்லை?


முதுமக்கள் அவலம்,
மூலை நெடுகிலும்.

அரப்புக்காரன் அல்லது வில்லி

புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்க்கும் வேலை. தமக்கென உள்ள வாடிக்கையாளர் இல்லங்களுக்குச் சென்று தலைக்கு தேய்த்து பிழைக்க வேண்டியது.

காசுக்கடைத் தெருக்களில், விடிந்ததும் விடியாததுமாக பெருக்கி, துகள்கள் தேடுவது. இரவு நேரங்களில் கூட நகைக் கடைகள் சாத்திய பிறகு, கணவன் , மனைவி, பிள்ளை, பெற்றோர் என, ஒரு குடும்பமே குண்டு மணியைத் தேடும்.

இவர்களின் ஆய்வுக்கு சாக்கடையும் தப்பாது. சாக்கடை ஓட்டத்தை தடுத்து, பாத்திக்கட்டி, கழிவு நீரையும் சலித்துப் பார்க்கும் உழைப்பு. பரம்பரை, பரம்பரையாக, சலிப்பில்லாத வாழ்க்கை! காலங் காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களை, எங்கள் பக்கத்தில் 'வில்லி' என்றும் அழைப்பதை சிறு வயதில் நான் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் குன்னையர் தோட்டப்பகுதியில் வாழ்ந்ததை பார்த்துள்ளேன். அவர்கள் வயல் எலிகள் பிடிப்பதையும் ஒரு பழக்கமாக , தொழிலாகவும் செய்து வந்தனர்.

அவர்களைப் பற்றி சிறிய குறிப்பில், இவர்கள் வேட்டையாடத் தெரிந்தவர்கள் என்றும் , வில் பயன்படுத்தியவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் இருளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் அறிய வருகிறது.

இவ்வளவு இருப்பினும், இவர்களை புதுவை அரசாங்கம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவில்லை. அவர்களுக்கு அங்கீகாரமும் இதுவரை மத்திய அரசிடமிருந்து வரவில்லை. தற்போது, மிகவு பிறபடுத்தப்பட்டவர்கள் சாதிப்பட்டியலில் மட்டும் இடம் பெற்றுள்ளனர்.

Wednesday, September 12, 2007

"நிறுவனமாக்கப்படும் வதை மற்றும் மோதலுக்கு பிந்திய சூழ்நிலை- பஞ்சாப் படிப்பினைகள்"-2

பெரும்பாலும், சித்ரவதை என்பது பஞ்சாப்பில் குற்ற வழக்குகளை விரைவாக தீர்த்து வைக்கும் ஒரு வழியாக, புலன் ஆய்வு ஏதும் செய்யாமல், ஒப்புதல் வாக்கு மூலம் அல்லது வழக்கின் தகவல் பெற பயன்படுத்தப் பட்டு வருகிறது.

காவல் துறையின் வதை, தற்போது அதிகரித்து உள்ளது. காவல் துறைக்கு புலன் ஆய்வு செய்யக் கூடிய திறமை இல்லாததின் காரணமும், போதிய வளங்கள் இல்லாததின் காரணமும் ஆகும். குறிப்பாக போதிய நிதி ஒதுக்கீடு இன்மை, உட் கட்டமைப்புக்கு அதிக முதலீடு இல்லாதது, பயிற்சி அளிக்காமை, ஆராய்ச்சி இன்மை, நவீனமயப் படுத்தாமை, பொறுப்பற்ற போக்கு ஆகியவை இதர காரணங்கள் ஆகும்.

சட்டத்திற்கு புறம்பான கைது சமயங்களில், அதிக அளவில் வதை செய்வது நிகழ்கிறது. இச் சமயங்களில் காவலில் இருப்பதை துறை உறுதி செய்வதில்லை. நீதி மன்ற ஆய்வும் இச்சூழலில் மேற்கொள்ளப் படுவதில்லை. தனிப்பட்ட நலன்களுக்காக, தனிப்பட்ட எதிரிகளுக்கு பாடம் புகட்டவும், தொழில் சார்ந்த நண்பர்களுக்கு சகாயம் செய்திடவும், பணம் பறித்திடவும் பயன்படுகிறது.

போதைப் பொருட்கள் கையாள்வது தடுப்புச் சட்டம், ஆயுதங்கள் சட்டம், ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்படும் நிலைமைகளில், பெரும்பாலும் காவல் துறை, இச் சட்டங்களை மிகவும் தவறாக பயன்படுத்தி, சந்தேகப்படும் நபர்களை, மிக நெடிய காவலில் வைத்து, அடிக்கடி துன்புறுத்தி வருகிறது.

காவல் துறையில் பணி நியமனம், பணி மாற்றம் மற்றும் பதவி உயர்வுகள் பணம் அல்லது இதர பரிவர்த்தனைகள் மூலம் நிகழ்கிறது என்று செய்தி ஊடகங்கள், சமூக விமர்சகர்கள் கூறுகிறார்கள். எனவே, அதிகாரிகள் பெரும்பாலும், செல்வாக்கு செலுத்தக் கூடியவர்களுக்கு சலுகைகள் அல்லது தாம் செலுத்திய லஞ்சத்தை அதிக அளவில் திருப்பி அதிகமாக கேட்டு பெறுகிறார்கள். (சர்வதேச பொது மன்னிப்பு கழகத்தின் அறிக்கை சனவரி 2003)

வதையின் வகைகள்:
************************
* உதைப்பது, தடிகளால் அடிப்பது, தோல் பட்டைகளால் புடைப்பது போன்றவைகளை உள்ளடக்கியது . தலைகளை தொங்க வைத்து, கைகளை பின் பக்கம் வழக்கமாக கட்டி தொங்க விடுவதும் ஆகும்.

*மின்சார அதிர்வுகளை பிறப்பு உறுப்புகளில் செலுத்துவது. இதர மென்மையான உடல் உறுப்புகளில், குறிப்பாக காது பகுதிகள் மற்றும் விரல்களில் மின்சார அதிர்வு அளிப்பதும் ஆகும்.

*உருளைகளை, மர உருளைகள் அல்லது இரும்பு உருளைகளை, பல காவல் துறை அதிகாரிகள் தம் எடை முழுவதும் உருளைகள் மீது ஏற்படும் வண்ணம், காவலில் உள்ளவர்களின் கால்களின் மீது, தசை நார்கள் நசுங்கும் அளவிற்கு துன்புறுத்துவார்கள்.சிறு நீரகக் கோளாறுகள் உண்டாக்கும் விதமாகவும் வதை அமையும்.

* உள்ளங் கால்களில் அடிப்பது, பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போடுவது, அல்லது வெந்நீரை ஊற்றுவது, குதத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவுவது. கண்களில் மிளகாய் தேய்ப்பது போன்றவைகளும் ஆகும்.

*வதையின் விளைவாக, காவலில் உள்ளவர்களுக்கு, உடல் ரீதியாக பெரிய பாதிப்பும், ஆழ்ந்த மன அழுத்த நோய்களும், உறக்கமின்மை மற்றும் பயங்கர கனவு நோய்களும் ஏற்படுகிறது.

Thursday, September 6, 2007

"நிறுவனமாக்கப்படும் வதை மற்றும் மோதலுக்கு பிந்திய சூழ்நிலை- பஞ்சாப் படிப்பினைகள்"-1

இந்தியா, காவல்துறை, மக்கள்:
*****************************************
காலனியாதிக்க ஆங்கிலேய அரசு, இந்திய மக்களை ஒடுக்குவதற்கு வசதியாக, சட்டத்தின் வழி, எழுத்திலும் உணர்விலும் நியாயப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்திய காவல் துறை சட்டம் 1861 ஐ, இந்நாடு மரபுரிமையாக பெற்றுள்ளது.

60 ஆண்டு விடுதலைக்குப் பின்னும், இந்திய காவல்துறைச் சட்டம் ஊழல்மிக்க, திறமையற்ற, உணர்வற்ற, அதிகார பசி அடங்காத, அரசியல் வாதிகள், சட்டம் இயற்றுபவர்கள், அதிகாரிகள் ஆகியோர் செல்வாக்கின் கீழ், பெரும்பாலும் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.

வெகுமக்கள், எதிர்ப்பாளர்கள் ஆகியோர் மீது, ஒடுக்குமுறை வடிவமான காவல்துறையை பயன்படுத்த வாய்ப்பு அளித்து வருகிறது. இதன் வழி, இந்திய சனநாயகத்தின் குறைபாடுகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. பொதுமக்கள், காவல்துறை ஆகியோருக்கிடையில் இடையில் ஓர் இணக்கமான, ஆரோக்கியமான உறவை ஏற்படுத்த முடியவில்லை.

காவல்துறையானது, தொடர்ச்சியாக தனது செயல்பாட்டில் பாகுபாடு காட்டுதல்; ஊழல் செய்தல்; அரசியல் ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது; ஏதும் அறியாதவர்களை துன்புறுத்துவது; ஏழைகள், கல்வி அறிவில்லாதவர்கள் மற்றும் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரை துன்புறுத்தியும் வருகிறது.

காலனியாதிக்கத்திற்கு பிந்தைய இந்திய காவல் துறையானது; வளர்ந்துவரும் சனநாயகத்தின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும்; பொதுமக்கள் விழிப்புணர்விற்கு; மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் ஆகிய கேட்புகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய நிலையை இழந்துள்ளது.

காவல்துறையின் இரக்கமின்மை; முன் முயற்சியின்மை மற்றும் பொதுமக்கள் நல்வாழ்வு; பொதுமக்கள் கருத்து ஆகியவற்றிற்கு மதிப்பளிக்காத போக்கு; கொடுங்கொன்மை; சித்ரவதை; மேலதிகார போக்கு; மனித உரிமை மீறல்கள்; காவல் சாவுகள் ஆகியவை அரசாங்கத்திடமிருந்து எவ்வித துலக்க உணர்வையும் அளிக்கவில்லை.

பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை மூன்று கால கட்டமாக பகுத்து விவாதிக்கலாம்:

*இந்திய விடுதலைக்கு பிந்தைய கால கட்டம்
*தீவிரவாதத்திற்கு முந்தைய நிலைமை
*தீவிரவாத கால கட்டம்
*தீவிரவாதத்திற்கு பிந்தைய கால கட்டம்

இந்திய விடுதலைக்குப் பிந்தைய கால கட்டத்தில், மனித உரிமை மீறல்கள், காவல்துறையின் சித்ரவதை, காவல் சாவுகள் குறைவாகவே இருந்தன. அந்த காலக் கட்டத்தில் நேர்மையான, அர்பணிப்பான, ஈடுபாடு உள்ள அரசியல் வாதிகள், அதிகாரிகள் இருந்தனர். மேலும் அவர்கள் பிரிட்டிசு ஆட்சியின் கீழ் கொடுமைகளை சந்தித்தவர்கள்.

தீவிரவாதத்திற்கு முந்தைய நிலைமையில், சித்ரவதை, காவல் சாவுகள் படிப்படியாக, நக்சல்பாரிகளை ஒடுக்கும் பெயரில் அதிகரித்தது. பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் சம்பவமாக ஆகியது.

தீவிரவாத காலக்கட்டம் ஆன 1980 லிருந்து 90 வரை, மனித உரிமை மீறல்கள் அதிகரித்தன. காவல்துறையின் கொடூரமும், காவல் சாவுகள், போலி மோதல் அதிகரிப்பு நீதிமன்றத்திற்கு புறம்பான கொலைகள், குற்றம் சாற்றப்பட்டவர்கள் காணாமல் போவது, ஆகியவை மிகவும் அதிகரித்தன.

காரணம், இவ்வகையான மீறல்களுக்கு பொறுப்பான காவல் துறையினர் எவரும் நீதியின் ஆளுகைக்குள் கொண்டு வரப்படவில்லை. இதன் காரணமாக, காவல் துறை அதிகாரிகள், எவ்வித பாதிப்பும் அடையாமல் மனித உரிமை மீறல்களை தாங்கள் செய்ய முடியும் என நம்பினார்கள்.

அடுத்த முக்கியமான காரணம் குற்றவியல் நீதி அமைப்பு நொறுங்கிப் போனதும் ஆகும். காவல் சாவுகள் சம்பந்தமாக உடல் பரிசோதனை சுயேச்சையான விசாரணைக்குப் பின் செய்வதை விடுத்து, காவல் துறையே அதனை ஏற்பாடு செய்தது. தகனம் செய்வது உட்பட காவல் துறையே மேற்கொண்டது அடுத்த காரணங்கள் ஆகும். காணாமல் போவது என்பதும் அதிகரித்தது.

பத்தாண்டுகளில், வன்முறையில் 10000, பொது மக்கள் காணாமல் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானவர்கள் எவ்வித விசாரணையும் இல்லாமல் குற்றச்சாட்டு ஏதும் இல்லாமலும், விசாரணை நடத்தப்படாமலும் துன்புறுத்தப் பட்டனர். வதையானது எவ்வித தடையும் இல்லாமல், காவல் துறையால் மேற்கொள்ளப் பட்டது. அதன் காரணமாக, காவல் துறை உத்தியோக மற்றும் விசாரணை ஆற்றல் கரைந்து போனது.

தீவிரவாதத்திற்கு பிந்தைய காலக் கட்டத்தில், பஞ்சாப் மாநிலத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தன. பஞ்சாப் காவல்துறை, தீவிரவாதத்தை எதிர்த்த காலக் கட்டத்தில் மீறல்கள் நிகழ்த்தியதைத் தொடர்ந்து, அந்த போக்கிலேயே, தனது காவல் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியது.இதன் காரணமாக, தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஊழலுக்கு ஆட்பட்டு திளைத்து வந்துள்ளனர்.

2002, பிப்ரவரி மாநிலத் தேர்தலுக்கு பிறகு, நீதித்துறை பற்றிய உரையாடல், மனித உரிமைகள் மற்றும் காவல்துறை மீறல்கள், காவல் துறையின் பொறுப்பு, குறித்த விவாதங்கள் அரசியல் அரங்கில் இருந்து மெல்ல மெல்ல மறையத் தொடங்கின.

மார்ச்1, 2002ல், 'ட்ரிபியுன்' இதழில், மாநிலத்தின் முதல்வர், "கடந்த கால நிகழ்வை மறப்போம், எதிர் காலத்தை நினைப்போம்" என்றும், "அரசு, காவல்துறையினர் மீது போடப்பட்ட வழக்குகளை சந்திக்கும், தீவிரவாதத்தை எதிர்த்து போராடிய அவர்களை குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுவிக்கும்" என்றும் கூறினார்.

இத்தகைய அரசின் போக்குகள், "காவல் சக்தியின்" மீது, அரசாங்கத்திற்கு உள்ள செல்வாக்கை வலுவாக எண்பிக்கிறது. கட்சி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசியல் எதிரிகளை இனங் கண்டு, ஒடுக்குவதற்கு உதவியாக செயல்படுகிறது. மட்டுமின்றி, காவல்துறையின் மூர்க்கத்தனத்தை ஒரு நிறுவனமாக்கி உள்ளது.

Sunday, September 2, 2007

குர்சார் இனப் போராட்டம் - 4

3. காவல் துறைக்கு முன்னரே தகவல் கிடைத்திருந்தும், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப் படவில்லை. கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி பிரயோகம், படொலி-பிப்பல் கேரா பகுதியில், 28 மாலையில் இருந்து நிகழ்த்தப்பட்டு, போராட்டத்தை தடுப்பதை விட போராட்டத்தை தூண்டியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது நடவடிக்கை எடுக்காதது.

4. 144 தடை உத்தரவை மீறியதற்காக, கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல், குறைந்த எண்ணிக்கையில் காவல்துறையினர் நிறுத்தம், பெரு எண்ணிக்கையிலான மக்கள் திரண்ட போது, மூர்க்கத்தனமாக பலப் பிரயோகத்தை காவல்துறை கையாண்டது.

5. மக்கள் கூட்டத்தை கலைப்பதை விட, காவல்துறையின் மெத்தன போக்கு, நீண்ட நேர சாலை மறியலுக்கு வழி வகுத்தது. மேலும், பெரிய அளவிலான உயிர் இழப்பிற்கும் காரணமாக அமைந்தது. மக்கள் பிரிவினருக்கிடையில், தீராத பகைமைக்கும், வழி வகுத்தது.

6. வெகுதிரள் மக்களின் எதிர்ப்புப் போராட்டம், வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்கப்பட்டது. அரசாங்கம், தனது பொறுப்பினை தட்டிக்கழித்து, மக்கள் பிரிவினரின் நியாயமான கோரிக்கைக்கு எதிராக செயல்பட்டது. இப்படிப்பட்ட அரசின் நடவடிகையானது, ஒரு திட்டமிட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட குற்றமாகவே, நீதிக்கு முரனாண செயல்பாடாகவே கொள்ள வேண்டியுள்ளது.

7. சமூகங்களுக்கு இடையில், தலைமுறை காலமாக பதட்டத்தையும் மோதல்களையும், அரசாங்கங்கள் தொடர்ந்து உருவாக்கி வந்துள்ளன. எடுத்துக் காட்டாக, படோலி-பிபால்கேரா பகுதியில், குர்சார் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் செல்வதை, மூத்த அரசாங்க அதிகாரிகள் துணையுடன், மீனா சமூகத்தினர் முக்கிய நான்கு வழிகளில் மறித்து, தடுத்தனர். இத்தகைய சாலை மறியலில், 144 தடை உத்தரவு பயன்படுத்தப் படவில்லை, காவல் துறையினரின் கோபத்திற்கும் அவர்கள் ஆளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8. பமன்வாசு, சவாய் மதோபூர் பகுதியில், காவல் துறை மற்றும் உட்கோட்ட நீதிபதி ஆகியோர் அளித்த, பொய்யான புலனாய்வு தகவல் அடிப்படையில், குர்சார் சமூகத்தினரை தாக்க தூண்டிய செயலை ,உரிய நேரத்தில் மீனா சமூகத்தின் மூத்தவர்கள் தலையிட்டு, பெரும் மோதலை தவிர்த்தனர்.

9. கட்டா, லால்சோட் பகுதியில் ஏற்பட்ட சாலை மறியலில், காவல் துறையினர் மீனா சமூகத்தினருடன் உறவு வைத்துக்கொண்டு, குர்சார் இனத்தினரின் மீது தாக்குதல் நடத்த வகை செய்தனர். தொடக்கத்தில் 150 குர்சார் இனத்தினர் மட்டுமே அமைதியாக சாலைமறியலுக்கு மே 30ந் தேதியிலிருந்து ஏற்பாடு செய்து வந்தனர்.

10. மொளனியாக காவல்துறை, நான்கு பேர் இறப்பதற்கு காரணமாக இருந்தது மட்டுமில்லாமல், அருகில் இருந்த கிராமங்களில் உடமைகள் கொள்ளை போவதற்கும், அழிவதற்கும் காரணமாக இருந்தது. தாக்குதலுக்கு பின்னரும், காவல்துறை விசாரணை ஏதும் செய்யவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எவரையும் குறிப்பிடவில்லை. குர்சார் வாழும் பகுதிகளில் அச்சம், பீதி இன்றும் நிலவி வருகிறது.

11. வசுந்தரா ராசே மற்றும் கர்னல் பயின்சால ஆகியோர், சூன் 4 ந்தேதி மாலையில், அளித்த அறிக்கையின் அடிப்படையில், சாலை மறியல் பல இடங்களில் விலக்கிக் கொள்ளப்பட்டது. பொது சொத்துக்கள் சேதம், அழிப்பு ஆகியவையும் தடுக்கப்பட்டன. இருப்பினும் மாநில அளவில் ஒரு வார காலம் நிகழ்ந்த அரசு வன்முறை மற்றும் குர்சார் போராட்டம், மீனா சமூகத்தினரின் எதிர் போராட்டம், இராசசுத்தான் கிராமங்களின் சூழலை வெகுவாக மாற்றியுள்ளது.

குர்சார் இனப் போராட்டம்- 3

பண்டி மற்றும் பொன்லி கிராமங்களிலும் நிலைமை இவ்வாறே இருந்தது. அரசாங்கமே இது போன்ற அரசியல் , நிர்வாக குழப்பங்களுக்கு காரணம்.


1. மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற சமயத்தில், மலைவாழ் மக்களின் பிரிவில் குர்சார் சமூகத்தையும் சேர்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது .28, மே மாதத்திற்கு முன்பே நான்கு தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. போதிய கால அவகாசம் இருந்தது. அரசாங்கம் பேச்சு நடத்தி ஒரு தீர்வுக்கு முன்னேறி இருக்கலாம். அவ்வாறு இன்றி போராட்ட வீச்சும், வடிவமும் அரசாங்கத்தின் விருப்பமற்ற சூழலை, நமக்கு நன்கு புலப்படுத்தியுள்ளது.

2. ஆகசுடு, 2006ல், நட்வர்சிங்குக்கு ஆதரவாக நீண்ட தொலைவு, நெடுஞ்சாலையில் மறியல் நடத்த, அனுமதி கொடுத்துள்ள அரசாங்கம், தலை நகரத்திலே இசைவு அளித்தவர்கள், குர்சார் இனப் போராட்டத்திற்கு 144 தடை உத்தரவு போட்டதும், எவ்விலை கொடுத்தேனும் சாலை மறியலை தடுத்திடுவது எனும் முரண்பட்ட அணுகு முறை வெளிப்பட்டது.