Tuesday, September 25, 2007

ஆளும் வர்க்க உத்தி- கிரிக்கெட்

24 இரவு, தரையிலிருந்து ஆகாயத்தை நோக்கி, அலை அலையாய் சீறியது வான் வெடிகள், கூட்டம், கூட்டமாய் இளைஞர் பட்டாளம் ஆர்ப்பரிப்பு, ஆலைச் சங்கை அமிழ்த்திடும் சங்கொலி, கானகத்தை வீழ்த்திடும் ஊலை, குலவை ஒலிகள், விலங்குகள் அஞ்சும் வெடி. பாதையில் பயணப்படுவோர் பயந்து, சிலர் நயந்து, வெற்றிக் களிப்பு! பாக்கிசுத்தானை தோற்கடித்தது! பரவலான பேச்சு, அரசுத் துறைகளில் நிர்வாகம் நிழலுக்கும் கூட பஞ்சம்!

அரசியல்வாதிகள், குறிப்பாக சரத் பவார், இந்திய வேளாண்மைத் துறை அமைச்சர், பாராட்டு! கோடிக் கணக்கில் உருவாய் பரிசளிப்பு! கோலாகலம்! கும்மாளம்! இந்தியா சாதனை! அனைத்து செய்தி ஊடகங்களிலும் நாடகங்கள், அரங்கேற்றம்!!

விளையாட்டை, விளையாட்டு என்ற கோணத்தில் பார்க்காமல், நெறி பிறழ்ந்து, வெறியூட்டும் பார்வையில், மக்கள் திரளை மகுடியின் கீழ் ஆட்டி வைக்கும், மூளை சலவை செய்திடும் போக்கு, ஒரு சமூகத்தை, அதன் நிகழ்கால பிரச்சனைகளிலிருந்து எவ்வளவு தொலைவில் எளிதாக, திசை திருப்பி இழுத்துச் செல்ல முடியும் என்பதை, மீண்டும், மீண்டும், நமக்கு நன்கு தெளிவு படுத்துகிறது.

77 % விழுக்காட்டு இந்தியன், நாள் ஒன்றுக்கு உருவா 20 க்கும் குறைவாகவே சம்பாதிக்கக் கூடிய சமூக அவலத்தில் இருக்கும்போது, குறிப்பாக, விவசாயிகள் அன்றாடம் விதர்பா போன்ற மகாராட்டிரா மாநிலத்தில் தொடர்ந்து தற்கொலையில் நித்தம், நித்தம் செத்துக் கொண்டிருக்கும் போது, பிற பகுதிகளில், ஒரிசாவில், வங்காளத்தில் மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில், வாழ்வாதாரம் இழந்து வாடும் பல்வேறு உயிரூட்டமான மக்கள் பிரச்சனைகளிருந்து, மக்களை திசைத் திருப்பும் சூழ்ச்சியில், ஆளும் வர்க்கம் பல்வேறு உத்திகளை கையாள்கிறது. அதில் ஒன்றுதான் கிரிக்கெட் விளையாட்டு.

விளயாட்டை அரசியலாக்கி, தொடர்ந்து இந்திய சமூகத்தில் அழுத்தமான பல பிரச்சனைகள், சிக்கல்கள் எழும்போது எல்லாம் பயன்படுத்தி, தொடர்ந்து பாக்கிசுத்தான் மீது தீராத வெறுப்புணர்வை, உரமூட்டி வருகிறது. இந்திய தேசிய வெறி உணர்வை, தீனி போட்டு மக்கள் மனங்களில், பகைமைத் தீயை வளர்த்து வருகிறது.

சகித்துக் கொள்வது, அடுத்தவர் உணர்வுக்கு, நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது போன்ற உயர்ந்த விழுமியங்களை எல்லாம் மக்கள் மனங்களில் இருந்து படிப் படியாக நுண்ணியல் செயல் பாடுகளின் வாயிலாக, விளையாட்டை பயன்படுத்தி, ஒரு சமூகத்தின் மனப் பான்மையையே சிதைத்து, செல்லரித்து, வேறுபாட்டு பகை உணர்வை வளர்த்து வருகிறது.

No comments: