Tuesday, October 30, 2007

அழகு?

நெடிய கடற் கரை!
நெற்குவியல்
புதுவை!!

கற்குவியல்
புதுவை!
கவின் மிகு காட்சி!!

கரை அகன்றது,
எவர் காரணம்?

தந்திராயங் குப்பம்,
கோட்டக் குப்பம்,
பனைமரத்
தடுப்புகளைத்
தாண்டி,

சூறாவளி காலம்,
மாரி காலம்
அரித்து முன்னேறும்
கடல்,
பின் வாங்கும் மக்கள்!!

எவர் பொறுப்பு?

Sunday, October 28, 2007

நந்தி கிராமத்தில் நிகழ்ந்தேறிய பயங்கரம்- மக்கள் சிவில் உரிமைக்கழகம்.திபாகர் பட்டச்சார்யா-2

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவை அளித்திட அரசாங்கம் முன் வந்ததாகவும், பாரத்தைக் கொன்ற அரசாங்கத்திடமிருந்து எவ்வித உதவியும் பெற மாட்டோம் என மறுத்துவிட்டதாக குடும்பத்தினர் கூறினர். கொலைகாரர்கள் பட்டியலையும் அளித்தனர்.

பாரத்தின் சித்தப்பா மகன், புசுபேண்டு, 14, மார்ச் அன்று கொலை செய்யப்பட்டு, உடல் 5 நாள் தம்லுக் மருத்துவமனை சவக்கிடங்கில் கிடந்தது. பாரத்தின் அத்தை, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, பூட்டப்பட்டக் கிடந்த, அசொகே மோண்டல் என்பவரின் வீட்டையும் காண்பித்தார். தனே சி.பி.எம். மகளிர் பிரிவிற்கு தலைவியாக இருந்தும், கிராமத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப் படவில்லை என்றும் தெரிவித்தார்.

அடுத்து கேசூரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது, 70க்கும் மேற்பட்ட கேசூரி பகுதியைச் சேர்ந்தவர்கள்- சமி ரக்சா சமிதியைச் சேர்ந்தவர்கள்- நந்தி கிராமத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறினர்.

நந்தி கிராமம் மற்றும் தம்லுக் மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஆண்கள், பெண்கள் ஆகியோரையும் குழு சந்தித்தது. அதில் காணமல் போன- கணவனை பறி கொடுத்த மனைவிகளும் அடங்குவர்.

கோகுல் நகர், கங்ரா, அதிகரிபாரா கிராமம் அகியவற்றைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து பயங்கலந்த பீதியில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். 14, மார்ச் தாகுதலுக்குப்பின், பெரும்பாலோர் குளத்தில் இறங்கி தப்பித்துக் கொண்டனர். ஏராளமான பெண்கள் வெளியே இழுக்கப்பட்டு, கணவன் ,குழந்தைகள் முன்னிலையிலே கற்பழிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தியம் பார்க்கவே அஞ்சினர்.

மற்றொருமுறை எங்கே காவல்துறையும், சி.பி..எம். கட்சியும் கை கோர்த்து தங்களை வதை செய்து விடுவார்களோ எனும் குலை நடுக்கத்தில் , வெளியில் எங்கும் செல்லாமல் இருக்கின்றனர். உணவுப்பண்டங்கள், காய்கறிகள் எவையும் கிராமத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஒவ்வோரு நாள் மாலையும் குண்டு வெடிப்புச் சம்பவமும், துப்பாக்கிச் சுடும் ஒலியும் கேசூரி பக்கத்தில் இருந்து கேட்டவண்ணம் உள்ளது என்று கூறினார்கள். உண்மையில் முழு அளவிலான தடைகள் , சமி ரக்சா சமிதி ஆதிக்கத்தில் உள்ள கிராமங்களில் நிலவுகிறது.

Saturday, October 27, 2007

நந்தி கிராமத்தில் நிகழ்ந்தேறிய பயங்கரம்- மக்கள் சிவில் உரிமைக் கழகம். திபாகர் பட்டச்சார்யா- 1.

நந்தி கிராமத்தில் நிகழ்ந்தேறிய பயங்கரம்- மக்கள் சிவில் உரிமைக்கழகம்.திபாகர் பட்டச்சார்யா.

மக்கள் நலம் அமைப்பின் தலைமையில் ஏப்ரல்8,2007ல் நந்தி கிராமத்திற்கு சென்றனர் .மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சார்பாக, கல்கத்தா உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞர் திபாகர் பட்டச்சார்யாவும் கலந்து கொண்டார். பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மருத்துவ சிகிச்சையும், நிவாரணமும் அளிக்கும் நோக்கத்தில் இக்குழுவினர் அங்கு சென்றனர்.

நந்தி கிராமத்தின் காவல் நிலையத்தில் இருந்து சோனேகூரா கிராமத்தை நோக்கி பயணப்பட்டனர். வழியில் ஏழு சாலைகளில் பள்ளம் பறிக்கப்பட்டு காவல்துறையினர் செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படுத்தி இருந்தனர். காவலர்கள் உடையில் சி.பி.எம். கட்சியினர் பல இடங்களில் கற்குவியல்களை போட்டு, விளக்கு கம்பங்களைச் சாய்த்து, மரக்கிளைகளை போட்டு தடைகள் ஏற்படுத்தி இருந்தனர். உள்ளூர் மக்கள் குழுவினரின் வாகனம் செல்வதற்கு உதவி செய்தனர்.எனினும் மார்க்சிசுட் கட்சியினர் எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கலாம் என்ற அச்சத்தில், திகிலுடன் இருந்தனர்.

மருத்துவ முகாம் தொடங்கிய பிறகு, சனவரி7ல் பாரத் மொண்டலுடன் கொலை செய்யப்பட்ட பிசுவசித் மெயத்தியின் வீட்டிற்கு குழுவினர் சென்றனர். பிசுவசித்தின் தந்தை, எசு. கே. சலீம், தாய் மற்றும் 7 வயது சகோதரர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் பிசுவசித் எவ்வாறு சுட்டு கொல்லப்பட்டார் என்கின்ற விவரத்தைக் கூறினார். 12 வயது நிரம்பிய பிசுவசித் எவ்வாறு சி.பி. எம். கட்சியினரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்தும் சோகத்துடன் விவரித்தனர். பிசுவசித்தின் தந்தையே தீவிரப் பற்றாளார்.தாத்தா ஒன்றுபட்ட கம்யூனிச்ட் இயக்கத்தின் உறுப்பினர்.

அடுத்து பாரத் மோண்டல் வீட்டிற்குச் சென்ற குழு, தந்தை, தாய், மனைவி சகோதரன், இரண்டு மகள் ஆகியோர் உள்ளடக்கிய கூட்டுக் குடும்பம். குண்டு துளைக்கப்பட்ட காயத்துடன் இருந்த பாரத்தின் சகோதரரை அவரது வீட்டில் பார்த்தனர்.

Tuesday, October 2, 2007

பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி குச்சார் இன மக்கள் மீண்டும் போராட்டம்!

காந்தி பிறந்த நாள் அன்று, குச்சார் சமூக மக்கள், இன்னும் காலங் கடத்தப்படும் தங்கள் கோரிக்கையைத் தீர்க்க, மாநில அரசை வலியுறுத்தி திரளாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்துகின்றனர். 500 ஆயிரம் மக்களுக்கு மேல் இராசசுத்தான் மாவட்டத் தலை நகரங்களில் ஏழு இடங்களில் கைதாகும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிய வருகிறது.

இதற்கிடையில், இப்போராட்டத்தை எதிர்க்கும் விதமாக, பழங்குடியினரின் அகில இந்திய மாநாடு செய்ப்பூரில் நடை பெறுகிறது. அதில் பழங்குடி இனத் தலைவர்கள், மத்திய அமைச்சரவையில் உள்ளவர்களும், கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் பிரிவு அல்லது உடைவு ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என முழக்கம் செய்து உள்ளனர். ஒருபடி மேலே சென்று, இதனை 'செய்ப்பூர் அறிவிப்பு', என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.


பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி, மே, சூன் மாதங்களில் காவல்துறையின் மனித உரிமை மீறலைச் சந்தித்து, சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்பட்டு, உயிர்களை இழந்து, உடமைகளை இழந்து, மாநில அரசின் உத்தரவாதத்திற்கு கட்டுப்பட்டு, நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தற்போது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத சூழலில், அடுத்தக் கட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


பிரித்தாளும், இராசுசுத்தான் பாரதிய சனதாவின் அரசு, குச்சாரின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் 'குச்சார் பிரச்சனைக்கு' செவி சாய்க்குமா? ' மீனா சமூகத்தினர்', மற்றும் இதர பழங்குடியினரை அவர்களுக்கு எதிராக நகர்த்தி உயர் சாதி அரசியலை முன் நிறுத்துமா?