Tuesday, October 2, 2007

பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி குச்சார் இன மக்கள் மீண்டும் போராட்டம்!

காந்தி பிறந்த நாள் அன்று, குச்சார் சமூக மக்கள், இன்னும் காலங் கடத்தப்படும் தங்கள் கோரிக்கையைத் தீர்க்க, மாநில அரசை வலியுறுத்தி திரளாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்துகின்றனர். 500 ஆயிரம் மக்களுக்கு மேல் இராசசுத்தான் மாவட்டத் தலை நகரங்களில் ஏழு இடங்களில் கைதாகும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிய வருகிறது.

இதற்கிடையில், இப்போராட்டத்தை எதிர்க்கும் விதமாக, பழங்குடியினரின் அகில இந்திய மாநாடு செய்ப்பூரில் நடை பெறுகிறது. அதில் பழங்குடி இனத் தலைவர்கள், மத்திய அமைச்சரவையில் உள்ளவர்களும், கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் பிரிவு அல்லது உடைவு ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என முழக்கம் செய்து உள்ளனர். ஒருபடி மேலே சென்று, இதனை 'செய்ப்பூர் அறிவிப்பு', என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.


பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி, மே, சூன் மாதங்களில் காவல்துறையின் மனித உரிமை மீறலைச் சந்தித்து, சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்பட்டு, உயிர்களை இழந்து, உடமைகளை இழந்து, மாநில அரசின் உத்தரவாதத்திற்கு கட்டுப்பட்டு, நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தற்போது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத சூழலில், அடுத்தக் கட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


பிரித்தாளும், இராசுசுத்தான் பாரதிய சனதாவின் அரசு, குச்சாரின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் 'குச்சார் பிரச்சனைக்கு' செவி சாய்க்குமா? ' மீனா சமூகத்தினர்', மற்றும் இதர பழங்குடியினரை அவர்களுக்கு எதிராக நகர்த்தி உயர் சாதி அரசியலை முன் நிறுத்துமா?

1 comment:

மாசிலா said...

மயிலே மயிலே இறகு போடென்றால், அது போதும் தன் இறகுகளை போடாது. தேவை என்றால், நாம்தான் அதனிடம் இருந்து அதை பிய்த்து கொண்டு வரவேண்டும்.

இந்த பழங்குடியினரும் அப்படித்தான். உரிமைகளை கேட்டு வாங்குவதெல்லாம் கூடாது. அதற்கு பெயர் விடுதலை அல்ல. அவைகளை இருக்கும் இடங்களை தேடி போரிட்டு பெற்று, நாமே எடுத்து அனுபவிக்க வேண்டும். இதுவே உரிமைக்கும், சுதந்திரத்திற்கும், விடுதலைக்கும் அழகு!