Friday, November 30, 2007

அய்ம்பூத அடுப்பங்கரை!

அதிகாரத்தின் குறியீடு! அடுப்பங்கரையும்! புது வரவுக்கு பொசுப்பில்லை! உனக்குத் தெரியாது! உம்மால் முடியாது! பக்குவம், சுவை பதார்த்தம், பல ஆண்டு அனுபவம் உமக்கேது! ஒத்தாசையாக எமக்கு கீழ், உதவிகள் செய்!

விறகு அடுப்பு காலத்திலிருந்து, விடியாத வாழ்க்கை. ஊதாங் குழல் பிடித்து ஊதி, 'சாம்பல் நீறு' பூசிய முகத்துடன், கண்ணெரிச்சல், கை கசக்கல், எரும்பட்டை வைத்து, இலாவகமாக இரண்டு விறகு வைத்து, சுள்ளிகள் வைத்து, செத்தை செணாறு பூட்டி, நாற்பது ஆண்டுகள் நடத்திய ஆட்சி! அதிகாரம்!

விடிந்தது முதல் உறங்கும் வரை ஓயாது எரிந்த அடுப்பங் கரை! இரண்டு தலை முறைகள் உருவாக்கிய சோதனைக் களம், சாதனைக் களம், குயவன் பட்டறையில் உருவாக்கப்பட்ட கொம்மையுடன் கூடிய அடுப்புகள். அய்ம்பூதங்களில் அடிப்படை பூதம், 'அக்னி'. எரியும் பசித் தீயை எதிர்கொண்ட அடுமனை!

எக் காலத்தும் எதிர்கொள்ளக் கூடிய 'தீ'. அதனுடன் வெந்த தியாகத்தை எடுத்துக் கொள்ள, கைப்பற்றிட உம்மால் முடியுமா? எல்.பி.சி. சமையல் வாயு காலத்திலும், எம் பிடி தளர்த்திட முடியாது! எனக்கு வேண்டும். எம் விருப்பம் போல் சமைத்திட, சுட வைத்திட, பிற தேவைக்கு! என்னையும் "பூதத்தையும்" பிரித்து விடாதே! என் உரிமையை அழித்து விடாதே! அடக்கு முறையை அழித்து விடாதே!

70ஐத் தாண்டிய பிறகும் ஏன் இப்படி! ஒழிவாக இருக்கலாமே! அது சரிப்பட்டு வராது! என் உலகத்தை என்னிடமிருந்து பிரித்து விடாதே!

உணர்ந்திடுவோம்!

குறை வைக்கா இயற்கை!
கூட்டித்தரும் வளம்!
வான் மழை!
வரையாது வழங்கும்!
கான் உயிர்கள்!
காலம் நீட்டிக்கும்!

ஆறு, சிற்றோடை,
சில்லென்ற காற்று,
பசும்புல் வெளி,
பனித்துளிகள் தெளிப்பு!

படர்ந்த நிலத்திணைகள்,
குடை விரிப்பு!
சமூகம் முழுமைக்கும்,
கடை திறப்பு!

முற்றுரிமை எமக்கே!
முழக்கம்,
அதற்கில்லை!
காப்புரிமை கச்சேரியும்,
அதற்கு இல்லை!

அரண் அமைப்பு,
ஆள் சேர்ப்பு,
அவலம் அதற்கில்லை!
தற்காத்து,
தனி உடமையாக்கும்,
கடமையும் அங்கில்லை!

மடமை விரட்டும்!
மனித கடமை உணர்த்தும்!
அனைவருக்கும்,
பொது ஆற்றல் உணர்த்திடும்!

அறிந்திலோம்!
ஆயிரம், ஆயிரம்
ஆண்டுகளாய்!
அன்னியர் எவரும்
போகவில்லை!

ஆட்சி செய்கிறார்!
அவரவர் உள்ளத்தே!
சுரண்டலும், சுழ்ச்சியும்
உன்னுள்ளிருந்தே
ஆயுதமாய்!

உலகிற்கு
அழிவு அயுதமாய்!
சோதனை!
இரோசிமா, நாகசாகி,
பொக்ரான், செர்னோபில்
இவையனத்தும்
தோற்கும்,
உலைக்களம்!

கதிர் வீச்சாய்!
தடையின்றி,
தேசங்களை கடந்து!
நேசங்களை மறந்து!
நாசங்களை விளைவிக்கும்
நாசகாரிகள்!

உலகமயமாகி நிற்கிறது,
உள்ளொளி இழந்து!
உயிரியல் ஆயுதமாய்!

உணரவேண்டும் இன்று!
உணர்ந்திடுவோம் நன்று!

Sunday, November 25, 2007

பார்ப்பனத் தன்மை!

பார்ப்பனத் தன்மை என்பது உயர் சாதியினருக்கு மட்டும் சொந்தமான, அவர்களிடையே மட்டும் மண்டி கிடக்கின்ற பண்பு அல்ல? ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில், குறிப்பாக இச் சமூகத்தில் கற்றவர்கள் மத்தியில், அதிலும் சிறப்பாக, அரசு ஊழியத்தில் உள்ளவர்கள் இடையில், மிகவும் செறிவாகவே உள்ளது.

தங்கள் கண் முன்னே நிகழும் நிர்வாக சீர் கேடுகள், பெரிய அளவிலான முறைகேடுகள் ஆகியவற்றிற்கு துணை போகக் கூடியவர்களாக இருக்கின்றனர். கேட்டால், " எப்படி எதிர் நீச்சல் போட முடியும்?, போகும் போக்கிலேயே ஒட்டிக் கொள்வதும் அவர்களைக் கட்டிக்கொள்வதுமே உத்தி, நடைமுறைத் தந்திரம்", என பல்வேறு விளக்கங்களை எடுத்து வைக்கிறார்கள்.

அரசியல் சட்டம் அளித்துள்ள ஒதுக்கீடு உரிமை, சரியாக செயல்பட வேண்டும் என்னும் தார்மீகத் துணிவு இன்றி, அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக, கெட்டியாக தன்னை இணைத்துக் கொண்டு தாம் வந்த வழித் தடத்தையும் மறந்து, உயர் சாதியினரோடு உயிர் தொடர்பு கொண்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்படும் சமூகத்திற்கே எதிராக, முனைப்புடன் உயர் சாதியினரோடு அவர்களின் போர்வாளாக செயல்படுகின்றனர். பரந்த அளவில் தாக்குதலுக்கும் , பிரிவினை சூழ்ச்சிகளுக்கும் உணர்ந்தே வெளிப்படையாகவே செயல்படுகின்ற போக்கு, தொழிற்சங்க அரங்கிலே மிக அழுத்தமாக நடை பெறுகிறது.

Friday, November 23, 2007

ஏன்!

காட்டிக் கொடுப்பேன்!
ஏன்!
கூட்டியும் கொடுப்பேன்!
வேட்டியும் தேவை
இல்லை!

"மானமும் அறிவும்,
மனிதருக்கு அழகு",

எவனுக்கு வேணும்
மானம்!
எதற்கு வேணும்
அறிவு!

என்னை ஆள்பவனுக்கே
பற்றாக் குறை!
எனக்கு மட்டும் எதற்கு!

இப்படியே வாழ்ந்து
விட்டேன்!
வளர்ந்தும் விட்டேன்!
உயர்ந்தும் விட்டேன்!

அயராமல்!
ஊர் அறிய!
அரை நூற்றாண்டு
ஆளூமை!

காப்பாற்றாது!

எனக்கொன்றும் இழப்பில்லை
உனக்குத்தான்!
உன் நெடுதுயில் நீக்கினேன்!
நெஞ்சை உயர்த்தினேன்!

வஞ்சகர் வலை விரிப்பில்,
மீன்டும் வீழ்கிறாய்!
மீட்பு இம்முறை,
உமக்கு இல்லை!

கற்றதும் மற்றதும்,
உம் பாதையில்!
கலங்கரை விளக்கம்,
உமக்கு காணாது!

திசை காட்டியும்,
திக்கு முக்காடும்!
கசை அடியும்,
உம்மை காப்பாற்றாது!

Thursday, November 15, 2007

பந்த்- சட்ட விரோதம் இல்லை-1

இரசேந்திர சச்சார்- மக்கள் சிவில் உரிமைக் கழகம்

1997 ல் கேரள உயர் நீதி மன்றம் பந்த் அழைப்பை தடை செய்தது. உச்ச நீதி மன்றம் 1998 ல் இதனை உறுதி செய்தது. தொடர்ந்து தொழிற் சங்கங்கள், அரசியல் செயல் வீரர்கள் மத்தியில், அடிப்படை உரிமைகளான பேச்சு உரிமை, சங்கம் வைக்கும் உரிமைக்கு எதிரான தீர்ப்பு என எதிர்ப்பு அலை, வெறுப்புணர்ச்சி ஆகியவற்றை உண்டாக்கியது.

பந்த் அழைப்பை விடுத்தவர்கள், எந்த ஒரு குடி மகனையும் வேலைக்கு செல்வதையோ நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தடுக்கவில்லை என்றாலும், குடி மக்கள் மனதில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தக் கூடும். அதன் காரணமாக, அவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கக் கூடும் என்ற வலுவான காரணத்தை அது முன் வைத்தது. இக்கருத்து கரக் சிங் வழக்கில் அய்ந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு முரணாக அமைந்தது.

நீதி மன்றமும் 'அர்த்தால்'(உருது சொல்) அல்லது பொது வேலை நிறுத்தம் குறிக்கும் (செனரல் ஸ்ட்ரெய்க்) தடை செய்யவில்லை. அரசியல் கட்சியினர் அதனை தொடர்ந்து பந்த் என்று அழைக்காமல், பல போராட்ட முறைகளை கைக்கொண்டனர்.

தமிழ் நாடு அரசு அண்மையில், அமைதியான 'பந்த்' நடத்த அழைப்பு விடுக்கும் வரை, இதில் பிரச்னை அதிகம் இல்லாது இருந்தது. 2003ல் உச்ச நீதி மன்றம், வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம் செய்திட உரிமை இல்லை அல்லது வழக்கு மன்ற புறக்கணிப்பு செய்திட உரிமை இல்லை என்று அறிவித்தது.

என்றாலும், நீதி மன்றத்தின் கண்ணியம், சுயேச்சைத் தன்மை, நலன்கள் குறித்த பிரச்சனையில் ஒரு நாளுக்கு மேற்படாத வேலை புறக்கணிப்பை நீதி மன்றம் கண்டு கொள்ளாது என்று கூறியது.


அமைதியான முறையில் எதிர்ப்பு ஊர்வலம், தர்ணா போராட்டம், தொடர் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை, நீதி மன்ற வளாகத்திற்கு வெளியில், வழக்குரைஞர்கள் நடத்தலாம் என்று தீர்ப்பு அளித்தது.

இந்திய வழக்குரைஞர்கள் மற்றும் மாநில வழக்குரைஞர்கள் சங்கங்களும், நீதி மன்ற சீர்திருத்தம் தொடர்பாக, இந்திய அரசு காலந் தாழ்த்தி வருவது தொடர்பாக, ஒரு குறிப்பிட்ட நாளில், தலை நகர் தில்லியில்,
அமைதியான எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என்றால், அது சமயம் வழக்குரைஞர்களின் குடும்ப உறுப்பினர்கள், கட்சிக்காரர்கள்,
நல விரும்பிகள் ஆயிரக்கணக்கில் தெருவிலே இறங்கி ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதில் எனக்கு சற்றும் அய்யம் இல்லை.


வழக்குரைஞர்களால் தடையேதும் ஏற்படுத்தப் படவில்லை என்றாலும், தவிர்க்க முடியாத அளவில் காவல் துறையின் நிர்வாகத் திறமையின்மை, ஒட்டு மொத்த திறமையின்மை நிலையில், மறைமுகமாக ஏற்படும் பிரச்சனைக்கு, வழக்குரைஞர்களுக்கு தடை விதிக்கக்கூடாது.

சனநாயக உரிமை என்பது உறுதியான அர்த்தம் உள்ளதாகும். ஆங்கிலேய நீதி மன்றங்கள், அமைதியான போராட்டத்தில் கலந்து கொள்ளும் சிலரால் நிலைமைகள் மோசமானால் அதற்காக, எதிர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்பவர்களை பொறுப்பாக்க முடியாது, என உறுதியாக தீர்ப்பளித்துள்ளன.

எனவே, ஒரு மாநிலத்தின் ஆளும் கட்சி, பொதுமக்கள் நலன் கருதி, பலர் திட்டத்திற்கு எதிரானவர்களாக இருப்பினும், ஒரு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி விடுக்கும் 'பந்த்' சட்ட விரோதமானது என எவ்வாறு தீர்ப்பளிக்க முடியும்.

சுடுவர்ட் மில் இவ்வாறு கூறியுள்ளார்." மனித சமுதாயம் முழுமையும், ஒருவரைத் தவிர, ஒரு அபிப்பிராயத்தில் இருந்தால் ஒருவர் மட்டும் எதிரான கருத்தில் இருந்தால், அந்த ஒருவரின் குரலை அடைத்திட நியாயம் இல்லை, என்றாலும் அந்த ஒருவர் அதிகாரம் உடையவராக இருப்பின், மனித சமுதாயத்தின் குரலை அடைத்திட நியாயம் உடையவராகிறார்".

ஒரு அரசாங்கம் 'பந்த் அழைப்பு' விடுத்தால் அதை எதிர்த்திட வேண்டும். ஏனெனில் அரசு செயல்படாது இருந்திட முடியாது. அவ்வாறாயின், இதயம் செயல்படாது நிகழும் இறப்பிற்கு அது சமம்.

நடுநிலையான அனைத்து கட்சிகளின் வழியாக, எந்த ஒரு அதிகாரமும் பயன்படுத்தி, 'பந்த்' விருப்பமில்லாத குடிமக்கள் மீது திணித்து நடத்துவது சரியல்ல, என ஒரு நீதி மன்றம் வலியுறுத்துவதை என்னால் புரிந்து கொள்ள இயலும். தமது உத்தரவினால் பேருந்து இயக்கம் தடுப்பது, சட்டத்தால், உத்தரவால் கடைகளை மூடுவது, வியாபாரக் கடைகளை மூடுவது- வேலைகளை நிறுத்துவது, அரசியலமைப்பின்படி அனுமதிக்க முடியாதது ஆகும்.

Sunday, November 11, 2007

இந்திய மகளிர்- வருவாய்- மக்கள் சிவில் உரிமைக் கழகம்

* செயல் ஊக்கம் உள்ள ரொக்க வருவாய் ஈட்டும் மகளிர்- 12.7% விழுக்காடு

* ஆண்டுக்கு 25,000 உருவாய் ஈட்டுபவர்- 16.8%

* 25,000லிருந்து 1,00,000 வரை ஈட்டுபவர்- 55.73%

* உருவாய் 1,00,000 க்கு மேல் வருவாய் ஈட்டுபவர் 28%

* பட்டம் பெற்ற 68% விழுக்காட்டு மகளிருக்கு எவ்வித வருவாயும் இல்லை

* வேளாண்மை கூலி உழைப்பாளிகள் 35.4 %

* 5.2 % தனியார் சம்பளம் பெறும் ஊழியர்கள்

Saturday, November 10, 2007

வெறியாட்டு!

கேப்பைக்கு வழியில்லை!
கோப்பை என்கிறார்!
கோடி உருவாய்
விளம்பரம்,
சூதாட்டம்,
முதலீடு.

பகல் ஆட்டம்!
இரவாட்டம்!
விளையாட்டு மற!
வெறியாட்டு செய்!

அடிமை வரலாறு,
புத்தாக்கம் செய்!!

தனித் தன்மை,
தற்கால சமூக
நிகழ்வு
தப்பித்துக் கொள்!!

கோழி?

"குப்பையைக் கிளறும்......"
குப்பை
இங்கே?

பாதசாரி

இந்த சாரி,
அந்த சாரி,
இடது சாரி,
வலது சாரி,
எந்த "சாரி"யும்,
எங்களுக்கு வைரி

காவல்!

நடமாட முடியலே!
நடுத்தெருவில்!
நாலு மூலை சுமை தாங்கியில்!
நாலு காலும் வலிக்கிறது,
ந(ர)க(ர)த் தெருக்களில்.

மாடி வீட்டிற்குள்
மல்லு கட்ட முடியலே!
குந்தியிருந்த வீடும்,
குட்டிச்சுவரும்,
தெருவோரமும் தோதில்லை!

வலம் வருகிறார்,
'பாசக்கயிற்றுடன்' ,
நேசம் மறந்து.
பக்குவமாய் நகர்ந்தேன்,
படிக் கட்டுகளில் உயர்ந்தேன்!

ஊருக்கே நீர் அளிக்கும்,
தொட்டி,
உயரமானது,
நல்ல நிழல்,
காற்று.

எவர் வருவார்,
அதன் மேலே,
எசமானன் நான்!
எசமானியும் என்னருகே!
நிசமாகவே புது உலகம்!

உங்களுக்கு,
நீர் அளிக்கும்,
காவல் "நாயகன்"

Thursday, November 8, 2007

தொடரும் வன்முறை!

மேற்கு வங்க மாநிலத்தின் நந்தி கிராமத்தில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் மக்கள்,இதுவரை பல உயிர் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். சி.பி.எம் கட்சியினர் தமது மூர்க்க நடவடிக்கையால், காவல் துறையை ஓரம் கட்டி விட்டு, மக்களை உயிர் வதை செய்து வருகின்றனர்.

நேற்று, மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய தலைவராகிய தோழர். மேதா பட்கர் அவர்களை நந்தி கிராமத்திற்கு போகும் வழியில் தடுத்து, அவரது தலை மயிரை பிடித்து இழுத்து சேலையப் பற்றி இழுத்தும், அடித்திருக்கின்றனர், மார்க்சிய கட்சியின்," மாண்புறு தொண்டர்கள்".

"விமர்சனம்", "சுய விமர்சனம்", எல்லாம் கட்சி வகுப்பிற்குள்ளே திருப்பிச் சொல்லப்படும் கிளிப் பாடங்களா?

சிவில் உரிமையை மதிக்கும் அனைவரும் இப்போக்கினை எதிர்த்து வலிமையான கண்டனக்குரல் எழுப்ப வேண்டும்!

Tuesday, November 6, 2007

"காட்டுத் தீ"

எழுதினார் விமர்சனம்!
மொழி பெயர்ப்பு,
இந்தியில் நூலாக,

அறிவுலக ஆக்கினை!
கதிர் வெளிச்சம்
பாய்ச்சினார்!
வட புலத்திற்கும்.

மடமைத் தீ விரட்டிய
"மானுடத் தலைவன்",

சனாதன,
ஆதிக்க சக்திகளை,
அடையாளப் படுத்திய
"காட்டுத் தீ"

வேண்டாம் கவலை!
உம் அறியாமையும்

சேர்த்தே பொசுக்கும்!
"ஆற்றல் வடவை",

எங்கள் தேசம்!!

கருத்து சுதந்திரம் கவலை இல்லை எமக்கு! இந்து மதத்தின் காலாட்படை நாங்கள்! பெரியார் யார்? வால்மீகி இராமாயணத்தில் இராமனைப் பற்றி என்ன எழுதி இருந்தால் என்ன? குடிகாரனோ? எப்படியோ? பண்பாடு அல்லவா?

உண்மையைக் கூற நீங்கள் யார்? கோல் உள்ளவன் இடம் ஆடும் குரங்கு அல்லவா? நீங்கள்! பசித் தீயை அணைத்தோம்! பக்தி தீயை விரைவு படுத்துவோம்! ஒரே பண்பாடு! ஒற்றைக் கலாச்சாரம்! ஓங்கி ஒலிப்போம்!இந்து தேசம்! எங்கள் தேசம்!உங்களுக்கு இடம் இல்லை!

மதச் சார்பற்ற நாடு! சமதர்ம சமுதாயம்! அரசியல் சட்டத்துக்குள் சிறை வைப்போம்! எவன் எழுதிய புத்தகத்தையும் கொளுத்துவோம்! அதை எழுதியவனையும்! எங்கள் மீது சட்டம் பாயுமா! நாங்கள் தான் அதன் மீது!

குசராத்! கோத்ரா யாகம், குண்டம் மறந்து போனதா! கோவை 'சொக்கபானை' மறந்து போச்சா! ஒரிசா பாதிரி தீக்கிரை மறந்து போச்சா! அயோத்தியின் அரங்கேற்றம்! அடுத்தடுத்து ஆசிர்வாதம்! அனைவரும் எம்மிடம்! அணி மாறியிருப்பினும் ஆன்ம இராகம் எங்களுடையதே!

Saturday, November 3, 2007

செய்திடார்!!

"ஊர்வளம் சேர்க்க
நீர் வளம் தேவை"

ஊர் அறிந்திட,
உரக்க பேசுவார்,
ஊர்வலம் போவார்!!

நித்திய வாழ்வில்
நீர் வளம் சேர்த்திடார்!!
மழைக் காலம்
வரும் முன்,
ஆயத்த வேலைகள் செய்திடார்!!

நீர் நிலைகள்
நீர் அதிகம் சேர்ந்திட
தூர் வாரிடார்!!

"நீர் வள மாநாட்டில்"
வாய்ச்சொல் வீசுவார்!!

மாயையில்!!

மூலை முடுக்குகளில்
பந்தல்!
வண்ண, வண்ண,
செம்மாந்த நிலையில்,
உருவங்கள்!!


உழைக்கும் மக்கள்
உற்பத்தி!!
உருவாக்கம்!!
கலாச்சாரம்!!

கலக்கும் விழாப்பதாகை,
விளம்பரம்,
நிழற் படங்களுடன்,


"சீவா மன்றம் சதுர்த்தி விழா,"
மதத்தை
தாண்டவில்லை!!
மன்றம்!!

"விநாயகம் வென்றது",
காலச் சக்கர
சுழற்சி,
வயப்படுத்தவில்லை
தலைமை!


பகுத்தறிவுக்கு
வேலை இல்லை!
தனிப்பட்ட செய்தி,
"நம்பிக்கை"

கட்சித் தோழருக்கு?

Friday, November 2, 2007

அடக்கம்!

எந்த சிலைக்கும்,
மாலை மரியாதை!
எனக்கதில் இல்லை
வெட்கம்!

கூட்டத்தோடு கூட்டமாக
கரைந்திடுவேன்,
குதூகலம்
கூட்டிடுவேன்!

கூனல் உணர்வு
மாற்றிலேன்,
கூச்சம் ஏதும்
போக்கிலேன்!

'மனிதருக்கு அழகு,
மானமும் அறிவும்'
எமக்கு
அது இல்லை!

தேவை,
அதிகாரமும்!
ஆதிக்கமும்!

ஆண்டு கிடக்கிறது!
அனைவரும்,
எமக்கு......

பீடம்?

கூறியதும்
மறந்து போகும்!

ஏறிய பின்,
பாரிய
நோக்கமும்!
பட்டு போகும்!

நேரிய வழி,
நேற்றைய நெறி!
ஊருக்குத்தான்!

நம்பிக்கை?

இராமர் பாலம்
அழிக்கக் கூடாது!
நம்பிக்கை!
பண்பாட்டின்
அடிப்படை!

வாழ்ந்தானோ!
இல்லையோ!
காவிய நாயகன்!
காலத்தைக் கடந்தவன்!

அயோத்தியில் பிறந்தவன்!
ஆண்டை தகுதி
படைத்தவன்!
திராவிடன் முடி
முரித்தவன்!

வானரங்கள்
சிறப்பு பெற்றவன்!
அணிமாறிய அனுமான்!
அடிமையாக ஆண்டவன்!

மீண்டும்!
புத்தாக்கம் செய்கிறார்!
அடிமை வரலாற்றை,
அடையாளப்படுத்தி!

ஆதிக்கம் சாதிக்க,
நிலை நிறுத்தம்,
செய்கிறார்.

ஆராதனைக்கு,
பஞ்சமில்லை!
ஆரியக் கூட்டம்
ஆலைச் சங்காய்!!