Friday, November 30, 2007

அய்ம்பூத அடுப்பங்கரை!

அதிகாரத்தின் குறியீடு! அடுப்பங்கரையும்! புது வரவுக்கு பொசுப்பில்லை! உனக்குத் தெரியாது! உம்மால் முடியாது! பக்குவம், சுவை பதார்த்தம், பல ஆண்டு அனுபவம் உமக்கேது! ஒத்தாசையாக எமக்கு கீழ், உதவிகள் செய்!

விறகு அடுப்பு காலத்திலிருந்து, விடியாத வாழ்க்கை. ஊதாங் குழல் பிடித்து ஊதி, 'சாம்பல் நீறு' பூசிய முகத்துடன், கண்ணெரிச்சல், கை கசக்கல், எரும்பட்டை வைத்து, இலாவகமாக இரண்டு விறகு வைத்து, சுள்ளிகள் வைத்து, செத்தை செணாறு பூட்டி, நாற்பது ஆண்டுகள் நடத்திய ஆட்சி! அதிகாரம்!

விடிந்தது முதல் உறங்கும் வரை ஓயாது எரிந்த அடுப்பங் கரை! இரண்டு தலை முறைகள் உருவாக்கிய சோதனைக் களம், சாதனைக் களம், குயவன் பட்டறையில் உருவாக்கப்பட்ட கொம்மையுடன் கூடிய அடுப்புகள். அய்ம்பூதங்களில் அடிப்படை பூதம், 'அக்னி'. எரியும் பசித் தீயை எதிர்கொண்ட அடுமனை!

எக் காலத்தும் எதிர்கொள்ளக் கூடிய 'தீ'. அதனுடன் வெந்த தியாகத்தை எடுத்துக் கொள்ள, கைப்பற்றிட உம்மால் முடியுமா? எல்.பி.சி. சமையல் வாயு காலத்திலும், எம் பிடி தளர்த்திட முடியாது! எனக்கு வேண்டும். எம் விருப்பம் போல் சமைத்திட, சுட வைத்திட, பிற தேவைக்கு! என்னையும் "பூதத்தையும்" பிரித்து விடாதே! என் உரிமையை அழித்து விடாதே! அடக்கு முறையை அழித்து விடாதே!

70ஐத் தாண்டிய பிறகும் ஏன் இப்படி! ஒழிவாக இருக்கலாமே! அது சரிப்பட்டு வராது! என் உலகத்தை என்னிடமிருந்து பிரித்து விடாதே!

No comments: