Saturday, May 24, 2008

சீர் அழித்து வருகின்றனர்.....

ஏரிகளில் தண்ணீர் குடி நீர் பயன்பாட்டுக்கு". உலக நீர் நாளில் உரை. செய்தித் தாள்களில் வண்ணப் படத்துடன் செய்தி, சென்ற ஆண்டு மார்ச் 21ல்.

"ஊசுட்டேரியில் மீன் பிடிக்க ஏலம், கோர்க்காடு ஏரியில் மீன் பிடிக்க ஏலம்", "கிருமாம்பாக்கம் ஏரியில் இறால் வளர்ப்பு, தனியார் முயற்சி". இதுவும் செய்தி. ஊடகங்களில் வலம்.

புதுச்சேரி இயற்கை சூழல், மழை நீரை மட்டுமே நம்பி வாழக்கூடிய அடிப்படை, வடகிழக்கு பருவமழை; தென் மேற்கு பருவமழை; இவை இரண்டுமே நீர் ஆதாரம். தமிழ் நாட்டில் ஓடும் பெண்ணை ஆறு, செஞ்சி ஆறு ஆகியவை நீர் பிடிப்பு பகுதிகளாக, புதுவையில் அமைந்துள்ள ஏரிகளுக்கு, காலங் காலமாக ஊட்டம் அளித்து வருகிறது.

பருவ மழை என்பது நிச்சயமற்றத் தன்மை உடையது. மேல் தண்ணீரைத் தரும் ஏரிகள், குளங்கள், கிணறுகள், மக்களுக்கு வேளாண்மைக்கும், குடி நீருக்கும் வாழ்வளித்து வருகிறது.

எனினும் அரசாங்கம், 1968- 69ல் வறட்சி ஏற்பட்டு, புதுவை மக்கள் அல்லல் பட்டதை மறந்து விட்டதாக தெரிகிறது, 1972ல் மத்திய நிலத்தடி நீர் வாரியம் புதுவையில் பெருகி வரும் நீர் தேவையைக் கருத்தில் கொண்டு ஆழ் குழாய் கிணறுகளை அமைத்தது.

அதிக அளவில் நீர் தேவை பெருகியதற்கு ஏற்ப, நீர் மேலாண்மைத் திட்டங்கள் இதய பூர்வ முயற்சியாக, நடவடிக்கையாக, புதுவை அரசு மேற் கொள்ள வில்லை. மாறாக, நீர் அதிக அளவில் உறிஞ்சும், நீர்த் தேவை அதிகம் உள்ள தொழிற்சாலகள், எடுத்துக்காட்டாக, காகித தொழிற்சாலைகள்; அல்கலித் தொழிற்சாலைகள்; குளேரைட் தொழிற்சாலைகள்; வேதியற் தொழிற்சாலைகள் ஆகியவைகள் நல்ல விளை நிலங்களுக்கு அருகில்; ஆற்றங்கரைகளில்; செம்மண் நீர் பிடுப்பு பகுதிகளில்; கடற்கரைக்கு அருகில் அமைத்து ,அதன் கழிவுகளை அரவமின்றி கடலிலும் , ஆற்றிலும், நிலத்தடி நீரிலும், தொடர்ச்சியாக விட்டு, புதுவையின் நீர் ஆதாரத்தை பெரிதும் சீர் அழித்து வருகின்றனர்.

No comments: