Saturday, June 28, 2008

நாட்டுக்குத் தேவை!

வெகு நாட்களாக மூடிக் கிடந்த,'சீவா ருக்மணி திரையரங்கம்' புதுச்சேரி வழுதாவூர் சாலையில்,பழைய 'செயராம்' திரையரங்கத்திற்கு எதிரில்,தற்போது'அட்லேப்'எனும் பெயரில், ரிலையன்சு நிறுவனம் வாங்கி, புதிப்பித்து, 'தசவதாரம்' திரைப்படம் வெளியிடப் பட்டுள்ளது.

இந்த திரையரங்கம் அமைக்க,1977ல், அரசாங்கத்திடம் தடையில்லா சான்று கோரியபோது,அப்போது காவல்துறை கண்காணிப்பாளர் ஆக, புதுதில்லியிலிருந்து புதுவைக்கு மாற்றலில் வந்திருந்த, திரு.காந்த்,இ.கா.ப.அவர்கள்,பெருகிவரும் புதுவையின் போக்குவரத்தை காரணம் சுட்டி,எதிரெதிரெ இரண்டு திரையரங்கள் அமைத்திட அனுமதி அளிக்க முடியாது என உறுதியான முடிவினை அறிவித்தார்.

எனினும், அரசியல் அழுத்தத்தின் காரணமாக,இரண்டு திரையரங்குகளுக்கும் சொந்தக்காரர்கள்,உயர்சாதி பேராயக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், போக்குவரத்துக்கு இடையூறாக, மக்கள் நலனுக்கு எதிராக, இவ்விரண்டு திரையரங்குகளும் அமைக்கப்பட்டன.

அதில் ஒன்று, உணவகமாகவும், விடுதியாகவும், சுற்றுலா மேம்பாட்டு அரசு மான்யங்களை விழுங்கி, கடன் தொகைகளை சாப்பிட்டு செம்மாந்து நிற்கிறது, தோப்பு துரவுகள் இருந்த இடத்தில்.

புதுச்சேரியின் போக்குவரத்து சிக்கலை, பிரெஞ்சு ஆட்சி வரலாற்றில் இருந்து, அறிவியல் பூர்வமாக பரிசீலனை செய்த முதல் காவல்துறை அதிகாரி‍, திரு. காந்த் அவர்கள்தான் என்றால் அது மிகையாகாது.

தாகூர் கலைக்கல்லூரி் பொருளாதாரப் பேரவையின்,ஆண்டு விழாவில்,அவர் பேசியபோது,புதுச்சேரியின் நகரம் திட்டமிட்டு் அமைக்கப்பட்டது.'புல்வார் சாலைகள்',சாலையின் இரு மருங்குகளிலும் மரங்கள் நடப்பட்டு, ஒரு கோழி முட்டை வடிவில், அன்றிருந்த கட்டைவண்டி,இழுவை ரிக்சா, மிதிவண்டி, குறைந்த எண்ணிக்கையிலான மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றதாக உருவாக்கப்பட்ட போக்குவரத்து நகரம் ஆகும் என்றார்.

1980களில் அவர், மாறிவரும் போக்குவரத்து தேவைகளை கணக்கில் கொண்டு, கருத்தில் இருத்தி, புதுவையின் எதிர்கால போக்குவரத்து பிரச்சனையை, ஆட்சியாளர்கள் அறிவு பூர்வமாக திட்டமிட்டு, கையாள வேண்டும் என்றார்.

ஆனால்,தற்போது மீண்டும் 'அட்லேப்' பெயரில், திரையரங்கம் மிகுந்த போக்குவரத்து நெருக்கடியை, மக்கள் மீது திணித்துள்ள‌து. நிறைய சலை விபத்துக்கள் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில்,தேசிய புள்ளி விவரங்கள், புதுச்சேரிக்கு முக்கிய இடத்தை அளித்துள்ளது.

புதுவையின் நகர வளர்ச்சி குறித்து, போக்கு வரத்து நெருக்கடி உள்ளடக்கி, நீண்டகால அடிப்படையில் திட்டமிடுதல் என்பது ஏட்டளவில் மட்டும் உள்ளது.கண்ட இடங்களில் தொழிற்சாலைகள் அமைப்பது; குடியிருப்பு பகுதிகளில் அனுமதிப்பது;நீர் போக்குவரத்து பாதைகளை மறித்து கட்டிடங்கள்; பொழுதுபோக்கு அம்சங்களை அமைப்பது; குளங்களை தூர்ப்பது; ஏரிகளில் அத்து மீறுவது ஆகிய போக்குகள் மிக விரைவாக கட்டுமீறி, புதுவையைச் சுற்றிலும் தன்னல ஆர்வத்தில், பொது நலன்களுக்கு விரோதமாக, தங்கு் தடையின்றி நடைபெறுகிறது.

இத்தகைய மீறல்களை ஒழுங்கு படுத்த‌ வேண்டிய, நீண்ட‌ நெடிய செயல் பொறுப்பு மிக்க,கடமை உள்ள அரசாங்கமே, இப்போது நாட்டுக்குத் தேவை!

1 comment:

இரா.சுகுமாரன் said...

உங்கள் பதிவுக்கு நன்றி அய்யா

புதுச்சேரி பிரச்சனை பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பதற்காக மகிழ்ச்சி