Wednesday, November 19, 2008

எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி !

உருசிய நாட்டுத் தலைமை அமைச்சர் இந்தியாவிற்கு வருகிறார். மேலும், இரண்டு அணு உலைகள் தருகிறார். ஏற்கனவே, தமிழ்நாட்டில், கூடங்குளத்தில் விரைவு ஈணுலைகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இவை வழங்கப்படவுள்ளது. உலக நாடுகளில், அணு உலைகள் குறித்து போதிய விழிப்புணர்வு உள்ளது. அண்மையில், மிகவும் பாதுகாப்பான அணு ஆற்றல் தொழில்நுட்பம் உள்ள நாடான பிரான்சு நாட்டு அணு உலைக் கழிவுகள், செர்மனி நாட்டில் கமுக்கமாக கொட்டப்படுவதைஎதிர்த்து, செர்மனியர்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டதை, நாம் அறிவோம்.

இந்திய போன்ற நாட்டில், மண்ணையும், மக்களையும் வெகுவாக பாதிக்கின்ற சீர் கேடுகள் குறித்து பேசுவது, எழுதுவது என்பது பெரிய அளவில் இல்லை. அவ்வாறு, முனைப்பாக செயல்பட்டாலும், எதிர்க் கட்சியாக இருக்கும்போது ஒன்றை சொல்வது, ஆளும் கட்சியாக மாறிய போது, எதிர் நிலை எடுப்பது, கண்கூடாகும்.

கூடங்குளத்தில் அணு உலைகள் அமைத்திட, முன்னாள் சோவியத் ஒன்றியத்துடன் கை கோர்த்து, இந்திய அரசு செயல்பட்டபோது, அதனை எதிர்த்து, ஊடகவியலாளர் ஞானி, அந்தன் கோம்சு போன்றவர்கள் தமிழ் நாட்டில் குரல் தந்தனர். அப்போது, எதிர் கட்சி வரிசையில் வீற்றிருந்த கலைஞர் அவர்களை, தமிழ் நாட்டில் அமைக்கவிருக்கும் அணு உலைகளுக்கு எதிராக, மனித சங்கிலி போராட்டம் நடத்திட ஆலோசனை வழங்கினர். அவரும், அணு உலைகளின் கொடுமையை எதிர்த்து, தமது கட்சியினரிடையே சிறந்த பரப்புரை மேற்கொண்டார் என்பது வரலாறு ஆகும்.

முன்னாள் சோவியத் நாட்டு செர்னோபில், அமெரிக்க ரோடு தீவு பேரழிவுகளின் வாயிலாகவும், சப்பான் போன்ற நாட்டில் அணு உலைகளில் தொடர்ந்து நிகழும் விபத்துகளினாலும், அந் நாட்டு மக்களிடையே, அணு ஆற்றல் குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.தற்போது நிலவும் சூழலில், இது பற்றி அரசியல் கட்சிகளிடையே,குறிப்பாக, மக்கள் நலன் சார்ந்த, நீண்ட கால பயன்கள் தொடர்பான சிந்தனை, அறவே இல்லை என்றே சொல்லலாம்.

No comments: