Wednesday, October 14, 2009

சுர பேதம்!

உள் நாட்டுப் பிரச்னை

சனநாயக வாதம்,

உலகளாவிய பிரச்னை,

பயங்கர வாதம்

ஆயுதம் தரிப்பது பயங்கரம்!

காகிதம் தரிப்பது,

தடை ஏன்?

காகிதம் தரிப்பது

தடை எனின்

கருத்துக்கூறுவது

தடை ஏன்?

கருத்துக் கூறுவது

தடை எனின்

மறுத்துக் கூறுவது

தடை ஏன்?

அவர் சோதன

உலக அமைதி!

இவர் சோதனை

உலக அச்சம்!

அவர் வாதம் சுப்ரபாதம்!

இவர் வாதம்

சுர பேதம்!

விடியல் தேடி

சேர்ந்த குருவி

சோர்ந்து போச்சு

கத்தி பார்த்து, கொத்தி பார்த்து

தன் உருவம் தெரியாம

மறைத்த துணி விலக்கி

சிர்ப், சிர்ப், சிர்ப், சிர்ப்.......

கண்ணாடி முகம் பார்க்க

காலை

முன்னாடி உட்கார்ந்து

தூக்கி வைத்த முகத்துடன்

தூங்கிக் கிடக்குது,

ஏங்கிக் கிடக்குது

வெளியத்தான்

விளையாட முடியல

உள்ளேயும் வூட்டுக்காரன்

உள்ளிருந்து பார்க்க கண்ணாடி

வெளியிருந்து வசதி எங்களுக்கு

எம்மைப் பார்த்து

கத்தி, கொத்தி,

சுத்தி திரிந்தோம்

கண்ணாடி மேல் துணி போட்டு

எம் உருவம்

காணாம ஏற்பாடு

உடைவுக்கு அஞ்சி

உடமையாளன்

கடமை செய்தான்

பலகணி சாத்தி பதமாக

பார்த்து பார்த்து சென்றான்

வேர்த்து வேர்த்து நின்றோம்

விடியல் தேடி

Friday, October 9, 2009

தோற்பான்

'நிலவில் தண்ணீர்'

பூவுலகில் கண்ணீர்

நீளும் பேராசை

நிலவைத் தாண்டும்

செவ்வாயும் செலவாக

'நாசா'வலையில்

'மூசா'வும் தோற்பான்

Wednesday, September 30, 2009

மாட்டாங்க!!

குண்டி கழுவ தண்ணி இல்ல!

குடும்பத்துடன் வாழ நாதி இல்ல!

பசி அடங்கி நாளாச்சு!

பாழும் உறக்கமும் போயாச்சு!

பொறந்த தாச்சும் பொழச்சிடாதா

பொங்கி திண்ண வாய்ச்சுடாதா

ஒரு வா அரிசி உள்ள தள்ள முடியல

கலர் டி.வி. குடிசையில

காட்சி பார்க்க முடியல

கரண்டுக்கு எங்கே போவேன்

மண்ணென்னய் அடுப்பு எரிக்க

மனசிருக்கு

சோத்துக்கடை பொட்டலம்

காத்து கிடக்கு பிள்ளைக

சோளி ஏதும் போனா

காலி இல்ல வயித்துல

குப்பை பொறுக்க கோணி பை

மழைக் காலம் வரும் முன்

வேல பாக்க போகனும்

கூவமும் சரியானா

எங்க வாழ்வு எங்கு போகும்

சருவுதான் அப்பவும்

வுட்டு வக்க மாட்டாங்க

காத்திடு

சிகப்புத் துண்டு தோழா!

அலுப்பு கண்ட தோழா!

சலிப்பு கொண்ட வாழ்க்கை

சரிதானா தோழா!

இளிப்பு கொண்ட அரசியல்

கணிப்பு மாற்று தோழா!

கடமையாற்று தோழா!

காலம் நமது தோழா!

கடினம் ஆயினும் தோழா!

கடிதே ஏகிடு தோழா!

காலம் வெல்லும்

கலகம் கருத்தினுள் கொண்டு

கலக்கம் போக்கிடு தோழா!

மாற்றம் என்பது தோழா!

மாறாத விதி என்பது

மீறாத வழி நில் தோழா!

சாயாத கோல்

சருக்காத பாதை

நேரான செயல்

நினைவில் நிறுத்து தோழா!

நேசம் போற்றி தோழா!

மக்கள் தேசம் காத்திடு

தோழா!

சாதனை

'நிலவில் தண்ணீர்',

அறிவியல் சாதனை

ஆம் பூமியில்...?

Monday, September 28, 2009

மரபு

இசுபானிய கவிதை -அல்போன்சினா இசுடோர்னி

(மொழி பெயர்ப்பு)

என்னிடம் கூறினாய்:" என் தந்தை அழவில்லை,

என் தாத்தாவும்"

"எம் இனத்தவன் எவனும் இதுவரை அழவில்லை"
"அவர் எ..கின் உறுதி உடையவர்"

நீ கூறியது கேட்டேன் யான்

நடுங்கும் எம் வாயில் உணர்ந்தேன்

நும் கசப்பான கண்ணீர்த் திவளை

நஞ்சின் வீழ்ச்சியை

எம் உதடுகள் இது நாள் வரை சுவைத்திடாத

மிக மோசமான அமிழ்தம்

சிறிய கோப்பையினுள் இருந்து

நலிவுடன் பிறப்பெடுத்தாள்

துயரங்கள் துய்த்திட

முடிவற்ற காலங்களின் வலி

உய்த்துணர்ந்தேன்

அட,

மகிழ்வற்ற என் ஆன்மா

அதன் நிறையை தாங்க இயலவில்லை

சதுரங்களும் கோணங்களும்

அல்போன்சினா இசுடோர்னி -இசுபானிய கவிஞர்

(மொழி பெயர்ப்பு)


வீடுகள் வரி வரியாய்,

ஒரு கோட்டில் அங்கே,

சதுரங்கள், சதுரங்கள், சதுரங்கள்,

மக்களும் இப்போது சதுர ஆன்மாக்களுடன்,

கருத்துக்கள் அடுக்காய்,அறிவிக்கிறேன்,

அவர் தோள்களில் கோணங்கள் சுமையாய்,

நேற்று தற்செயலாய் கண்ணீர் சிந்தினேன்

அட, கடவுளே, அதுவும் சதுரமாய்!

Saturday, September 26, 2009

கூவம்

நாறும் ஆறு தேறுமா!

நானிலப் புகழ் கூறுமா!

கங்கை நதி ஆகுமா!

கதி மோட்சம் சேர்க்குமா!

திரும்பும் வரலாறு!

திட்டத்தில்!

போனதா?

துரித கதியில் துடுப்பாக

பாயுந்தில்

பகல் வெயில் பயணம்

குறுக்கும் நெடுக்குமாக

குதறும் வாகனங்கள்

கதறும் நடை வாசிகள்

முந்திச் செல்லும் முடுக்கம்

மக்கள் நெருக்கம்


பகடு மேல் ஊர்வலம்

வெளிப்பட்ட வாசம்

வேதனையின் சுவாசம்

பழக்கப்பட்ட மணம்

பாதையின் கரி வளியை

மிஞ்சி

கதுறும் உடல்களுடன்

துடிக்கும்

துண்டு துண்டாக

கண்டு நோகும்

கவலையும் கூடும்

போவார் வருவார்

போதையில் பாதையில்

போகும் வண்டிகளில்

இதுவும் ஒன்று

என்று


இயல்பாய் பசையற்று

நசை வாழ்க்கையின்

நாகரீக சேர்க்கையில்

மாண்ட உயிர் அணிவகுப்பில்

திரளும் மனிதம்

மர உயிர் மாய்ப்பில்

மரை

கழன்று போனதா?

Tuesday, September 22, 2009

மூடிய அறைக்குள் மோதல் சாவு- பகுதி 2

பரிதாபகரமாக காவல்துறை பதிவுகளில், இவ்வாறு கொல்லப்பட்ட நபர்கள்'அடையாளம் தெரியாத திருடன்' என குறிக்கப்பட்டிருக்கும். கொல்வதற்கு முன் யார் என்று தெரியாதவர் கொல்லப்பட்ட பிறகு திருடர்கள் என்றும் ஆள் கடத்தல்காரர்கள் என்றும் அறிய வரும்.

சமீபத்திய கொலை நிகழ்வு, காவல்துறையினர் எவ்வளவு எளிதாக ஒருவரை கொல்ல முடியும் என்பதும், சீருடையில் இருந்து கொண்டு அரசை பிரதிநிதித்துவம் செய்து, எவ்வாறு அதில் இருந்து இலகுவாக தப்பிக்க இயலும் என்பதும் நிரூபணமாகிறது.


போலி மோதல் கொலை சம்பவங்களில், பாகுபாடற்ற, நம்பத்தகுந்த புலன் ஆய்வு ஏற்பாடு, முற்றிலும் இல்லை.முறையான விசாரணை இல்லாமல், இவ்விதம் இழைக்கபடுகின்ற குற்றங்களில், வழக்கு தொடுப்பது என்பதோ, தண்டனை அளிப்பதோ நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

தேசிய மனித உரிமை ஆணையம், குற்றம் இழைப்பவரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கக் கூடிய அமைப்பானது, செயலிழந்து கிடக்கிறது. இது, சட்ட அடிப்படையில் அமைக்கப்பட்ட, ஒரு முக்கியமான தேசிய அமைப்பின் சோகமான கதையாகும்.மிகவும் வருந்தத் தக்க, பெரும்பாலும் பெருந்தலைவர் இல்லாத அமைப்பாகவே தற்போது இருந்து வருகிறது.ஆணையம், குறிப்பாக காவல்துறை மற்றும் இராணுவம் இழைத்ததாக கூறப்படும் குற்றங்களில் மட்டுமாவது, தமது கவனத்தை குவித்து இருந்தால், தேசத்திற்கு மிகப்பெரிய சேவை செய்ததாக இருக்கும்.

குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவு 132 மற்றும் 197 நிர்ணயம் செய்துள்ளவாறு, மத்திய மாநில அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திட, அரசாங்கத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டயம் உள்ளது.அரசின் அனுமதி பெறுவது அவ்வளவு எளிதல்ல.இதன் சூழலில், எழுதப்படாத சட்ட உரிமை என்னும் காவல்துறை கலாசாரம், மோதல் சாவுகள் நிகழ்த்திட 'நல்ல வாய்ப்பாக' அமைந்துள்ளது.

அரசாங்கத்தின் அனுமதி ஒரு வேளை கிடைத்தாலும், தண்டனை அளிப்பதற்குள், நீதி மன்றத்தின் நெடிய போராட்டம், பல ஆண்டுகளை விழுங்கிவிடும் பெருந்தடை கற்களும் உண்டு.நீதி மன்றத்தின் தீர்ப்பு வரும் சமயத்தில், தண்டனை பெரும் காவல் அதிகாரி அல்லது இதரர், பல கட்ட பதவி உயர்வு அடைந்திருப்பார் அல்லது பணி ஓய்வு பெற்றிருப்பார், ஒரு வேளை இறந்தும் போயிருக்கலாம்.

தேசிய காவல்துறை ஆணையம், தமது 8வது அறிக்கையில், 132 மற்றும் 197வது பிரிவுகளின் கீழ், குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் காவல்துறை அதிகாரிகளுக்கு அளித்துள்ள பாதுகாப்பு விலக்கிக் கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

அண்மையில், ஆந்திர மாநில உயர் நீதி மன்றம், மோதல் கொலை சம்பந்தமான வழக்கு ஒன்றில் அளித்துள்ள தீர்ப்பில்,ஒவ்வொரு மோதல் சாவு சம்பவத்திற்கு பின், காவல்துறை முதல் தகவல் அறிக்கை போட வேண்டும் என தீர்ப்பளித்தது. இது தொடர்பாக வழக்கு ஒன்று, உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது, அதன் இறுதி தீர்ப்பில், உச்ச நீதி மன்றமானது தடை இல்லாமல், இந்நாட்டில் தொடர்ந்து நிகழ்த்தப்படும் மோதல் கொலைகள் நிகழ்விற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவோம்.

Sunday, September 20, 2009

மூடிய அறைக்குள் மோதல் சாவு பகுதி 1

புசுகர் ராசு, மக்கள் சிவில் உரிமைக் கழகம்

மொழி பெயர்ப்பு

அண்மையில் ஒரு செய்தி பத்திரிக்கையில் மனதை சிலிர்க்க வைக்கும் 12 நிழற்படங்கள் வெளியிடப்பட்டன.அதில், மக்கள் நெருக்கம் நிறைந்த அங்காடியின், குறுகிய தெருவில்,இளைஞர் ஒருவன் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அரை மணி நேரத்திற்கு பின்,பிணமாக ஒப்படைக்கப்பட்டான் எனும் செய்தியும் இடம் பெற்றது.

முன்பெல்லாம் ஆள் அரவமற்ற இடங்களை தேர்வு செய்யும் காவல் துறை, தற்போது பட்டப் பகலில் ஒருவரை கொல்லும் அளவிற்கு துணிவு உடையவர்கள் ஆகிவிட்டனர்.இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சட்ட விலக்குரிமையே இதற்கு காரணமாக அமைகிறது.இவர்கள் இழைக்கும் கொடுங்குற்றத்திற்கு தண்டனை ஏதும் இல்லை.தண்டனை இருந்தால் மூடிய அறைக்குள் மோதல் சாவு நிகழ்த்த மாட்டார்.

மோதல் சாவு கொடுமைகள் அகில இந்திய அளவில் காவல்துறையின் விருப்ப ஆர்வ நடவடிக்கையாக மாறியுள்ளது.எதிரெழுச்சியினர் உள்ள பகுதிகளான, மத்திய பகுதி, வட-கிழக்குப் பகுதி மற்றும் காசுமீர் போன்ற இடங்களில்,பாதுகாப்பு படைக்கும், எதிரெழுச்சியினருக்கும் நடக்கும் சண்டையில், வழக்கமான இழப்புகளாக, மோதல் சாவுகள் உள்ளது.
மோதல் சாவுகள் என்று அறியப்படுகிற நிகழ்வுகள் இப்பகுதிகளில் அன்றாட செய்தியாக உள்ளது.

இதற்கு சட்டம் நிர்ணயித்துள்ள முறையான விசாரணை நடத்தப்படுவதில்லை.தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்துள்ள நெறிமுறைகளும் பின் பற்றப்படுவதில்லை.ஒவ்வொரு முறையும் மோதல்சாவு சம்பவத்திற்கு பிறகு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படும்.மோதல் சாவு கொலை நிகழ்த்தும் காவலருக்கு மட்டும் பரிசுப்பணம் அளிக்கப்படும்.

ஒரு தகவல் அறிக்கையின் படி, ஆந்திர மாநிலத்தில் அதன் அரசாங்கம்,ஓராயிரம் எதிரெழுச்சியினரின் தலைகளுக்கு 16 கோடி உரூவாக்கள் பரிசுப் பணமாக, உரூவாய் 20000 த்திலிருந்து 12 இலட்சம் வரை,அறிவித்துள்ளது.


உத்தரப் பிரதேசம் வன்முறையாளர் செயல்பாடற்ற மாநிலம், 2006-07ல், 201 மோதல் கொலை சாதனை நிகழ்த்தியுள்ளது!உத்தரகண்ட் மாநிலம் தன் பங்கிற்கு 2006ல் 23 மோதல் கொலையும், 2007ல் 10 மோதல் கொலையும் நிகழ்த்தி சாதனை படைத்துள்ளது!

Saturday, September 19, 2009

ஒண்டி குடி!

மீனவர் துயர்!

மீளாத் துயர்!

மீண்டும்! மீண்டும்!

துப்பாக்கி துரத்த!

அதிகாரம் விரட்ட!

தண்ணீரில் தத்தளிப்பு!

கண்ணீர் எழுத்து

காதுகளை எட்டவில்லை!

பரிதவிக்கும் உன் வாழ்க்கை

பார்வையில் படவில்லை!

ஒதுக்கப்படும் மனிதன் நீ!

ஓரம் வாழ்ந்திடும் உருவம் நீ!

ஒண்டி குடி தமிழன் நீ!

உனக்கென்ன நான் உதவ,

உன் சிக்கல்

என் சிக்கல் அல்ல....

சிக்கன நடவடிக்கை!

பயணம் செய்யாதே!

சொகுசு வகுப்பில்!

நட்சத்திர விடுதி

வேண்டாமே!

வறட்சி தீரும் வரை!

மிரட்சி கொள்ளாதே!

நூறு நாள் சாதனை!

வெள்ளம் வரும்!

வேதனை தீரும்!

சாதனை மகுடம்!

சோதனை போக்கும்!

வாழ் நாள் நிகழ்வா?

அடையாள அணி வகுப்பே! !

Friday, September 18, 2009

சார்ந்து நிற்பேன்

உன் மொழியில் பேச

உரிமை இல்லை

உன் நாட்டில்

உனை தேர்ந்தெடுத்த

மக்கள் மொழியில் பேச

மக்கள் மன்றத்தில்அனுமதி இல்லை

மக்கள் நாயகமா?

நக்கல் நாயகமா?


காந்தியின் தேசம்

காந்தியைத்தான் மறந்தது

அவர் கருத்தையுமா?

தமிழ் மொழி பெருமைஅறிந்த காந்தி

தாய் மொழி அருமை உணர்ந்த காந்தி

பிதாவிற்கு துரோகம்

மீண்டும் மீண்டும்

எல்லாம் சரி

மாநாடு போட்டு

மரியாதை சேர்ப்பேன்

உள்ளூர் அல்ல

உலகத் தமிழ் மாநாடு

செந்தமிழ் தகுதி

செம்மொழி தகுதி

சாதனை செய்தேன்

சரித்திரம் படைத்து

பேசினால் தானே சிக்கல்

இனி பேசாது

பெருமை காத்து

செயல் ஒன்றே

சமணப் படையில்

சார்ந்து நிற்பேன்

Sunday, September 13, 2009

தகவல் தொழில் நுட்ப(திருத்த) சட்டம்,2008ம் சிவில் உரிமைகளும் பாகம் - 2 மொழி பெயர்ப்பு


முன்னர், இந்திய தொலைத் தொடர்பு சட்டம், 1885ன் கீழ், பொது பாதுகாப்பு நலன்கள் சம்பந்தமாக அரசாங்கம், முறையற்ற முறையில் தகவல்கள் பரிமாற்றம் மற்றும் அதனை இடை மறிப்பு செய்வது குறித்து, எச்சரிக்கை ஏற்பாடுகள் உருவாக்க வேண்டும் என விதிக்கப் பட்டுள்ளது.


ஆனால், இதுநாள் வரையில் எந்த அரசாங்கமும் எவ்வித நடைமுறையும் உருவாக்கிட அக்கறை காட்டவில்லை.காரணம், அனைத்து அரசும், எதிர்க் கட்சிகள் தகவல்களை ஒற்றாடுவது ,இயன்றால் குடிமக்களின் தகவல் பரிமாற்றங்களையும் வேவு செய்வது போன்ற செயல்களை தொடர்ந்து நிகழ்த்துகிறது.


1996ல் மக்கள் சிவில் உரிமைக் கழகம் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், 1885ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு சட்டத்தை பயன்படுத்தும் போது அரசாங்கம் கடை பிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளை வகுத்தது.இவ்வாறு, முதன்முறையாக ஒரு ஒழுங்கை அரசாங்கம் தொலைபேசி ஒட்டு கேட்பதில் அமுல்படுத்த உச்ச நீதி மன்றம் வலியுறுத்தியது.


மேலும், நாட்டின் இறையாண்மை,பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் அந்நிய நாடுகளின் உறவு தொடர்பான பிரச்சினைகளில் மட்டும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என சுட்டியது.பொது ஒழுங்கு நிலை நாட்ட, ஒரு குற்றம் இழைக்க தூண்டுவது போன்ற நேர்வுகளிலும் ஒட்டு கேட்கும் அதிகாரம் செல்லுபடியாகும் என்றது.


எனினும்,ஒட்டு கேட்பது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை செயலர் அல்லது மாநில அரசின் உள்துறை செயலர் எழுத்து மூலம் ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் அதில் எவ்வகையான தகவல் ஒட்டு கேட்கப்படவேண்டும் என்பதும் தெளிவாக குறிக்கப்பட வேண்டும் எனவும் தெளிவாக்கப் பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, நீதி மன்றம் இவ் உத்தரவு சம்பந்தமாக மீள் பார்வை குழு ஒன்றும்,அமைச்சரவை அலுவலக செயலர்,சட்டத் துறை செயலர், மற்றும் தகவல் தொடர்பு செயலர் ஆகியோரை உள்ளடக்கி மத்திய அரசு மட்டத்திலும்,இணையாக மாநில அரசு மட்டத்திலும் அமைக்கப்பட்டு சட்டத்தை மீறிய செயல்பாட்டு உத்தரவை ரத்து செய்து, இடை மறித்து எடுக்கப்பட்ட தகவல்களை அழித்துவிடலாம் எனவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தில் இவ்வகையான பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லை.தகவல் தொழில் நுட்ப (திருத்த) சட்டத்தில் இவ்வகை நடைமுறை, பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்துவது குறித்து இடம் பெற்றிருந்தாலும் தற்போது அரசாங்கம் இதற்கான ஒழுங்கு முறைகளை உருவாக்கும் என்று தோன்றவில்லை.

அவ்வாறு எண்ணம் இருந்திருப்பின், அசல் சட்டத்திலேயே அதற்கு உரிய அம்சங்களை சேர்த்து சட்டத்தை உருவாக்கி இருக்க முடியும்.ஆங்கிலேயர் இயற்றிய சட்டத்திலேயே இது போன்ற பாதுகாப்பு அம்சங்களை உருவாக்காத அரசாங்கம், 60 ஆன்டுகள் கழித்து உச்ச நீதி மன்றம் தலையிடும் வரை செயலற்றுக் கிடந்த அரசாங்கம் தற்போது மக்கள் பேச்சு உரிமை , கருத்து உரிமை காத்திட முனையும் என்பதில் நம்பிக்கை இல்லை.

பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லாத இச்சட்டம் மக்களின் தகவல் பரிமாற்றத்தை அவர்கள் அறியாமலே அவர்கள் எங்கு சென்றாலும் தொடர்ந்து கண்காணித்திடும்.சட்டம் இயற்றப் படுவதற்கு முன்பே ஓர் அறிக்கையில் 'மின்னணு காவல் அரசு' என்னும் தலைப்பில்,52 நாடுகளின் ஆய்வில் இந்தியா 20வது இடத்தை பிடித்துள்ளது.பிற நாடுகளில் சில,சீனா,வட கொரியா, உருசியா, சிங்கப்பூர் ஆகியன.

குறிப்பாக இச்சட்டம் என்பது குடி மக்களின் சிவில் உரிமைகளுக்கு நஞ்சு அளித்திடும் சட்டம்.பொறுப்பற்ற காவல்துறையின் கைககளில் இது இந்தியாவை,'1984ஆம் ஆண்டு ஆர்வெலியன் தேசமா'க மாற்றி விடும்.

Sunday, September 6, 2009

தொழில் நுட்ப(திருத்த) சட்டம், 2008ம், சிவில் உரிமைகளும்

(மக்கள் சிவில் உரிமைக் கழக வெளியீடு ஆகசுடு,2009)
மொழி பெயர்ப்பு பாகம்-1


அண்மையில் குடியரசுத் தலைவர் இச் சட்ட திருத்தத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.இது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள குடி மக்களின் தனி நபர் உரிமைக்கு உலை வைக்கும் சட்டம்.

திருத்தச் சட்டத்தின் 69(1) பிரிவு மற்றும் 69(2) பிரிவு மத்திய அரசு, மாநில அரசு அல்லது அதன் அதிகாரிகள் இதற்கென சிறப்பாக அதிகாரம் அளிக்கப்பட்டு அவர்களின் விருப்ப அதிகாரத்திற்கு உட்பட்டு, இந்திய அரசின் இறையாண்மை அல்லது ஒருமைப்பாடு, பாதுகாப்பு , நட்பு நாடுகளின் நலன்கள் அல்லது பொது ஒழுங்கு ஆகியவற்றை காத்திட,

மேற்குறித்தவைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றம் ஏதேனும் இழைப்பதை தடுத்திட, அக்குற்றங்கள் குறித்து புலன் ஆய்வு ஏதேனும் மேற்கொள்ள, எழுத்து மூலம் காரணங்கள் பதிவு செய்து, எந்த ஒரு அரசாங்கத்தையோ அல்லது ஒரு முகவாண்மையையோ, கணினி வழியாக அனுப்பப்படும் எந்த ஒரு தகவலையோ,கணினியில் காத்து வைக்கப்படும் தகவலையோ, இடையீடு செய்து கண்காணிக்க, மறித்திட, உத்தரவு அளித்து செயல்பட முடியும்.

இவ்வகை செயல்பாட்டிற்கு உகந்த வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, காவல்துறைக்கு எல்லைமீறிய அதிகாரத்தை இச்சட்டம் அளிக்கிறது.அரசாங்கங்கள் உங்களின் மின்னஞ்சல்,குறுந்தகவல்,தொலைபேசி உரையாடல் போன்ற, அனைத்து தகவல் தொடர்பு நடவடிக்கைகளையும், கண்காணித்திட முடியும்.நீதிமன்ற உத்தரவு ஏதும் இல்லமாலே, காவல்துறை இன்சுபெக்டர் ஒருவர், ஒரு இல்லத்தில் நுழைந்து தேடுதல் நடவடிக்கை செய்திட முடியும்;கணினியை கைப்பற்ற முடியும்;புலன் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.

Saturday, September 5, 2009

"செகுவேரா"

மூடுவண்டி முன் செல்ல,
குண்டாந்தடி அணி வகுக்க,
கடற்கரை பயணம்
"மூஞ்சுறு வாகனர்"
வண்ண வண்ண கோலத்தில்.

கூட்டத்தில், ஆட்டத்தில்,
கும்மாள வழி நெடுகில்,
பாதை வகுத்து
"செகுவேரா பனியன் அணிந்த
படைத்தலைவன்"
ஒழங்கு செய்ய,

சுறு சுறுப்பாய்,
செயல் ஒன்றே செப்பமாக,
சீருடன் நடை.

உமக்கும் தேவை,
"செகுவேரா"

"சந்திராயன்"

சந்து பொந்துகளில்
சிந்து
நிலவுப் பயணம்
நீண்ட பயணம்
சாதனை

தீர்ந்தது
சாமானியன்
சாப்பாட்டுப் பிரச்னை
நீர்ப் பிரச்னை
யாவும்
மறைவு

பெருமை
மண்ணுலகில் சாதனை
விண்ணுலகில் வேலை

இறவாப் புகழ்
'இந்திர செயித்'
மறைந்தது
அமாவசையில்
செலவென்ன
சில ஆயிரம் கோடியே!

Saturday, August 29, 2009

கோட்டையப்பா?

விடமாட்டோம்
"திமிங்கலங்களை"

ஆமாம்!
வெள்ளையா? நீலமா?

வேட்டை எப்போ?
கோட்டையப்பா?

இழுக்கு யாருக்கு?

வழக்கு மொழி
உரிமை கோரி
வழக்கு தொடுத்தார்

இழுக்கு யாருக்கு?
வழுக்கு அரசியலில்,
வாய்ப் பந்தல் முன்னணியில்.

அடிமை ஆட்சியில்,
ஆங்கிலம் தன் பிடியில்,
தாய் மொழி
தளம் சுருங்கி,

நாய் மொழி,
பேய் மொழி,
நாட்டாண்மை செய்ய,
கூட்டாண்மை கோலோச்ச,

கொஞ்சிடும் மானம்!
கோணல் பேணும்!

அங்கே-இங்கே!

வீழ்ந்தும் வாழும் தமிழன்
-அங்கே
வாழ்ந்தும் வீழும் தமிழன்
-இங்கே
அவன் நிலை - தன் மானம்
இவன் நிலை -அவ மானம்

அவா!

ஓடிய கால்கள்
ஓய்வு கொண்டன,
ஓயாத வாய்
மெளனம் காத்தது.

காட்சிகள் தேடிய
மாட்சி,
இமைகள் மூடி
இறுக்கம் சேர்த்தது.

இதய சுழி
தாளம் சோர்ந்தது,
எண்ண ஓட்டம்
ஏக்கம் சேர்த்தது.

மருத்துவம்,,
இதற்கு மேல் கைவிரித்தது,
அதையும் தாண்டி
இயக்கம்,
அவாவுடன்.......

மனைகளடா...

மரங்கள் மாய்த்தோம்!
செடிகள் சாய்த்தோம்!

நிலங்கள் தூர்த்தோம்!
நீர் நிலைகள் சேர்த்து!

நிம்மதிப் பெருமூச்சு!
நில வணிகம்.

ஊர் விலை கொடுத்து,
நகர் எழுப்பினோம்!
மனைகள் பிரித்து!

"சுத்தமான காற்று
தூய்மையான நீர்
பசுமையான சூழல்"

"எங்கெங்கு காணினும்"
மனைகளடா...

Monday, August 3, 2009

விதி விலக்கா?

அடுக்கடுக்காய் தமிழனம்
அடக்கு முறை தீயில்
அவிந்தனர்
ஆவி துறந்தனர்

மிடுக்காய் மிலேச்சரை
ஒடுக்கு முறையை எதிர்த்து
துடுக்காய் துணிந்து
துயர் துடைக்க
அணிவகுத்தோர் ஆயிரமாயிரம்

துரோக குண்டுகள்
துரத்திட
ஏவல் நாய்கள்
ஏவுகணைகள் விரட்டிட

மானம் காத்து மாண்டனர்
மண்ணின் பெருமை சாற்றி
விண் புகழ் கூட்டினர்

வேலிகளுக்குள்
தள்ளிய காலிகள்
விரட்டி அடித்திட்ட பாவிகள்
துறவாடைக்குள் துமுக்கிகளுடன்
காவல் செய்கின்றார்

இனத்தை அழித்து
இருந்ததை பறித்து
இனமானத்தை அடைத்து

குடிமக்களையே குதறிய
வெறி நாய்கள்
உரிமை தருமா?
உடமை வருமா?

உள்ளூரே பெரும்பான்மையே
எதிராக சதி செய்ய
உடன் உறையும்
நாட்டின் சாட்சி
உலக மன சாட்சி

அனைத்தும்
ஒரு சார்பாக வாதம் செய்யும்
பயங்கரம்!
பயங்கரவாதம்!

அரசு என்ன விதி விலக்கா?

Sunday, August 2, 2009

சேர்க்கும்

ஊடக கருத்தியல்
ஊழல் உளத்தியல்
உரு மாற்றும்
வணிகவியல்

கரு மாற்றி
காசு தேற்றி
பரு போற்றி

மன மாற்றி
தெரு கூட்டும்
நாளும்
குப்பை சேர்க்கும்

உள் வெளி

பாட்டகத்தில் இருந்தாலும்
பூட்டக மாகியதால்
வீட்டகத்திற்கு வரவில்லை
வெளியே

காட்டக அடர்த்தியில்
கனத்த இருளில்
கரைந்தது உள் வெளியில்

மறைந்த உணர்வுகள்
நொடிப்பொழுதும் கடந்த
கடிப்பொழுதில்
வயிற் கதவைத் தட்டும்
இரைச்சலுடன்

சுழல் விசையாக
சூன்யம் கடந்து
சூழல் இசையாக

Friday, May 1, 2009

முடியாதா?

இத்துடன் முடிந்தது கதை!
எத்துடன்?
நாடளுமன்றத்துடன்
என்பாய்!
சட்ட மன்றத்துக்கு
எழுத முடியாதா?
எழ முடியாதா?

பெரும்பசி!

இனம் அழிகிறது
தினம் தினம்
பினந்தின்னியின் பெரும்பசி
அடங்கவில்லை!

பெரியவர்,சிறியவர்,
பெண்கள்,குழந்தைகள்-
தமிழர்- அனைவரும்,
இரையின் இலக்கு
இலங்கையில்

தாய் மண்ணில்
தாக்குதல்
தாங்கொணாதுயரம்
உலகப் போரும் கண்டதில்லை
இன அழிப்பு பரிமாணம்

தடை செய்யப்பட்ட
ஆயுதங்கள் தடை இன்றி
வெகு மக்கள் மீது
உள்நாட்டில்

உரிமை கோரிக்கை
உயர்த்திப்பிடித்தவர்
உருக்குலைப்பு
ஓட ஓட விரட்டி
கால் நடைகள் போல்

பாசிசமும் கண்டதில்லை
நாசிசமும் விண்டதில்லை
சயோனிசத்தின் ஒளியில்
தம்மம் தடுமாற்றம்

வெறியுடன் நெறி பிறழ்ந்து
மனிதாபி மானம் மறந்து

நேரமா?

"போர் நிறுத்தம்"
எம் சாதனை!

சாவிலும், நோவிலும்
சாய்ந்திடும் நொடியும்
வேதனை வெம்மையும்
வெடிகுழல் பாதிப்பும்
வெளிகளில்
அடிபட்டு மிதிபட்டு,

கவளம் இன்றி
அவலம் சேர்த்து,
அடிக்கொரு மனிதராக
நாள்தோறும்
அக்கிரமத்தின் காலடியில்
நசுங்கிடும் பொசுங்கிடும்
எந்தன் துயரம்

என் தமிழ் நாட்டுத் தலைகளுக்கு
சாதனை !

அவன் கொல்லும் நேரம்
இவர் சொல்லும் நேரமா?

Wednesday, April 8, 2009

தொலைவா?

உந்தன் உயிர் உறவு
இரத்தம் சிந்தும்,
நாள் தோறும்,
உரிமைப் போரில்.

கரிசல் மண்ணும்
செந்நிறமாகும்,
செருவில்.
வன்னியும் ,
முல்லையும்,
உமக்கு தொலைவா?

கை கொடுக்க,
உம் மெய் கொடுக்க,
இன்னும் ,
தயக்கம் ஏன்?

"செயல் ஒன்றே சிறந்த
சொல்"

Thursday, March 12, 2009

வாள் இசை

மரணத்தை பரிகசிப்பேன்
எதிர் கொள்வேன்
எம் எதிரியை,

நேயுற்றேன் ஆயினும்
நுடங்கினேன் அல்லன்,
யான் ஒரு போர்வீரன்.

குரலும், எழுதுகோலும்
எமது வாழ்க்கையைப்போல்,
அணுக்கமாக
மக்களுக்காக,
எமது படையணியில்.

போராட்டம்
எமது திசைவழி,
இசைப்பாடல்
எமது உயிர்வளி.

கண்ணீரில் உருகுவேன்,
ஆயினும்,
நீரோடையில் கரையமாட்டேன்.

எமது கரம்
வெட்டப்பட்டாலும்,
எமது கைவாள்
சாயாது.

பாசக் கயிற்றுக்கும்
பயிற்றுவிப்பேன்,
துயரத்துளிகளை
துடைத்திட.

ஆயிரமாயிரம் அழிந்துபடினும்,
அடுத்த வெற்றி
போராட்டம் ஆகும்.

எதிர்கால நம்பிக்கை
உடையர் எவரோ,
அவரே மனிதர்.

இரவின் கொள்ளி
எரிந்து போகும்,
வைகறை வசந்தமாகும்.

(செரபண்ட ராசு கவிதை)

மொழி பெயர்ப்பு

உரிமை

மரங்கள் உயிர்கள் ஆயினும்
அவைகளை மாய்க்காதே,
எனக் கூறிடேன்

இலைகள் இயற்கைக்கு
அழகு சேர்ப்பினும் பறிக்காதே,
எனக் கூறிடேன்

கிளைகள் கைகள் என்றாயினும்
முறிக்காதே,
எனக் கூறிடேன்

தேவை எனக்கு ஒரு குடிசை.

( செரபண்ட ராசு கவிதை
மொழி பெயர்ப்பு)

Sunday, February 22, 2009

முப்பரிமாணம்!

அடிப்பேன்! உதைப்பேன்!
கைகளால்! கால்களால்!
கற்களால்!கனத்த
நெடுந்தடிகளால்!
அதிகாரம் இருக்கு
எமக்கு!

சொற்களால் தாக்கும்
கருஞ்சட்டைக்காரன்!
உமக்கென்ன கற்கள்!
கழிகள்!வண்டிகள்!
கெளரவம்!

துப்பாக்கி உம்மிடம்
உண்டா?
அனைத்தும் எம்மிடம்!

வழக்கு போடுவேன்!
வரிசையாய் நிறுத்துவேன்!
அதையும் தாண்டி
கதையை முடிப்பேன்!

எவன் என்னை கேட்பது!
நானே சகலமும்!

Friday, February 20, 2009

இல்லையா?

நீதி மன்றமா?
வீதி மன்றமா?

விதியைக் காக்கும்
மதி!
பதவியை மறக்கலாமா?
பழியை ஏற்கலாமா?

ஒரு மனிதன் பாதுகாப்புக்கு
ஓராயிரம் கவசமா?
அதிரடியா?

ஓட்டாண்டிகள் உரிமை
மீறலுக்கு!
இந்தளவு ஒத்தாசை!
'காக்கி'
அளிக்குமா?

"சட்டம் ஓர் இருட்டறை
வக்கீலின் வாதம்
ஒரு விளக்கு"

விளக்கை அணைத்தவர்
யார்?
எங்களுக்கு
வெளிச்சம் தேவையில்லை!

இருட்டறையே போதும்!
நாங்கள்
திராவிடர் இல்லையா?

Wednesday, February 18, 2009

சிலம்பொலி வேண்டும்!

ஓயவில்லை இன்னும்
இரத்த வெறி!
இனத்தை துடைத்தொழிக்கும்
'புத்த வெறி'!

தமிழ் இன உணர்வு
வெறியாயின்!
சிங்கள உணர்வு
என்னவாம்?

அமர்க்களம் நிகழ்த்திடும்
சிங்களம்!
அன்றாடம் வீழ்ந்திடும்
எம் சனம்!

மனிதன் இல்லையா?
மானிடமே
சொல்லைய்யா?

காகிதத்தில் பேசியே
கழிந்த காலங்கள்!
ஆயுதத்தில் பேச வைத்தவன்
யார்?

எதிரியின் தீர்மானத்தை
இறுதியாக்கியவன்
எவன்?

உன்னுள்ளிருந்தே உருவான
எதிர்ப்புணர்வு தீயை
மூட்டியவன்
நீ இல்லையா?

போடு இப்போது
என்கிறாய்!
என்ன தருவாய்?
யாது அளித்தாய்?
இதுவரை?
பட்டியல் தருவாயா?

சுடுகாட்டைக் கூட
சொந்தமாக்காதவன்!
இடுகாட்டைக்கூட
இடித்து நிரப்பியவன்!

'பிரிக்காத நாடு வேண்டும்'!
பேரம் பேச!
சோரம் போக!

ஒற்றைத் துருவ உலக
அரசியலில்!
ஓயாதா அவலம்!

ஈழத்து மக்கள்!
படும் துயரம்!
சொற்கள் இல்லை
கூடிடும் சோகம்!

'அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும்'!
சிலம்பொலி கேட்க வேண்டும்!
எம் மக்கள் புலம்பொலி
போக்க வேண்டும்!

Saturday, February 14, 2009

தொலைவில் இல்லை!

ஈழம் எரிகிறது!
எம் இனமும்!
தினம்! தினம்!

கொத்து! கொத்தாக!
செத்து மடியும்!
சேதி!

உம் செவிகளில்
விழவில்லையா!

உலக மனசாட்சி
இருக்கட்டும்!
உம் மனம்
கல்லா?

ஏளனம் செய்யும்
ஏவல் நாய்!
எம் தமிழ்த் தலமையை!

கேவலம்!
உம் குட்டு வெளிப்பட்டும்!
முகத்திரை கிழிந்தும்!

முகமம் கலைந்தும்!
உள் மன வன்மம்
குறையவில்லை!

சூத்திரதாரி!

சூழ்ச்சி அறிந்த
எம் மக்கள்!
அன்றாடம்
தன்னுயிரை மாய்த்து!

மன்னுயிரை காத்திடும்
மக்கள் பெருமை!
நிறுவி சென்றார்!

தம்மம்!

உன் வழித்தோன்றல்
என்பதால்!

சூது கொண்டு
கொன்று குவிக்கிறாய்!

நிகழ் கால வரலாறும்!
எதிர்கால வரலாறும்!
உம்மை மன்னிக்காது!

விதைத்த
உம் வெறுப்பு!
மூட்டிய எம் தியாகிகள்
நெருப்பு!
அணையாத சோதி!

ஆசியாவின்
புது விதியை
உருவாக்கும்!

அரசியல்
சேதியாகும்!
நாள்!

தொலைவில் இல்லை!

Friday, February 13, 2009

காந்தி?

காந்தியின் தேசமே!
கருணை இல்லையா!
ஆமாம்,
எந்த காந்தி?

Thursday, January 8, 2009

வாழ்க்கை எனும் விளையாட்டுத் திடல் -1
கலில் சிப்ரான் -மொழி பெயர்ப்பு

வலிமைக்கு அஞ்சி ஒடுங்கும் மெலிமையின்
நூற்றாண்டு புகழை விட
அழகை அன்பை தேடலுக்கான
மணி நேர நேர்வு மதிப்புமிக்கது.

அக் கணத்தில் தோன்றும் மாந்த உண்மை,
மற்றும்
அந்த நூற்றாண்டில் உறங்கும் உண்மை
பதட்டமளிக்கும் கனவுகளின் ஓய்வற்ற கரங்களுக்குள்.

அக் கணம் ஆன்மா தான் அறியும்
இயற்கைச் சட்டங்கள்,
அந் நூற்றாண்டிற்காக
மனித சட்டங்களுக்குள் அவள்
தன்னை தளையிட்டுக் கொள்கிறாள்;
ஒடுக்கு முறை
இரும்பு விலங்குக்குள் அவள்

Tuesday, January 6, 2009

"தோல்வி"

தோல்வி,என் தோல்வி,
என் தனிமை, தனி நிலை;
நீ எனக்கு மிக நெருக்கம்
ஆயிரம் வெற்றிகளைவிட,
உலகப் புகழ் அனைத்திலும்
என் நெஞ்சுக்கு மிக நெருக்கம்.

தோல்வி,என் தோல்வி,
என் தன்னறிவு, என் எதிர்ப்பறிவிப்பு,
இன்னும் நான் இளைஞன்
விரைவாளன் உன் வழி நான் அறிவேன்
வாடிப்போகும் வாகைப் பொறிகளில்
நான் சிக்கமாட்டேன்.
உன்னில் நான் கண்டேன் தனி நிலை
தவிர்ப்பும், இகழ்ச்சியும்.

தோல்வி, என் தோல்வி,
என் உடைவாளே, கேடயமே,
உன் விழிகளில் நான் படித்தேன்
முடிசூட்டுவது என்பது
அடிமையாக்குவது,
புரிந்து கொள்வது என்பது

மட்டம் தட்டுவது,
பற்றிக் கொள்வது என்பது
ஒருவனின்
முழுமையை அடைவது
பழுத்த பழமாகி
நுகர்ச்சிக்கு பயன்படுவது.

தோல்வி, என் தோல்வி,
என் துணிவான தோழனே,
நீ கேட்க வேண்டும்
என் பாடல்களை,
என் அழுகையை,
என் அமைதியை,

சிறகடிக்கும் ஒலியை
நீ மட்டுமே பேச வேண்டும்,
தூண்டிடும் கடல்களின் அழைப்பை,
இரவில் எரியும் மலைகளை,
நீ மட்டுமே செங்குத்தான
பாறை அமைப்பிலான
என் ஆன்மாவை அடைய முடியும்.

தோல்வி, என் தோல்வி,
என் இறப்பில்லா துணிவே,
நீயும், நானும் சேர்ந்து சிரிப்போம்
சூறாவளியுடன்,

நம்முள் இறக்கும் அனைத்துக்கும்
நாம் இருவரும் சேர்ந்தே
புதை குழி தோண்டுவோம்,
விருப்பத்துடன் நிற்போம் வெயிலில்,
நாம் தீங்கானவர்களாக.

( கலில் சிப்ரான் கவிதை- மொழி பெயர்ப்பு)

Saturday, January 3, 2009

பெருமை!

செருப்படி!
வெறுப்படி!
உருப்படி!
சோடி செருப்புக்கு
பெருமை!

அது சரி!
வாங்கியவன்
உயர்ந்து விட மாட்டானா?

நம்பிக்கை, பழமை,
என்னவாகும் போட்டியில்?
வென்றது!
ஏலத்தொகையில் காலணி!

காலனி எதிர்த்த,
பத்திரிக்கை தர்மம்!
மெசப்பட்டோமிய நாகரிக,
தன்மானம்.....

Friday, January 2, 2009

அச்சம்

கப்பிரியேலா மிச்ட்ரல்
(மொழி பெயர்ப்பு)

என் குழந்தையை மாடப்புறாவாக்கும்
அவர்கள் முனைப்பு எனக்கு விருப்பமில்லை;

அவள் வானத்தில் சிறகடித்து பறந்து விடுவாள்
மீண்டும் என் கதவின் அருகே திரும்பாள்;

என் கைகள் அவளை நீவி விட இயலா
இறவாணத்தில் கூடு அமைத்திடாள்.

என் குழந்தையை மாடப்புறாவாக்கும்
அவர்கள் முனைப்பு எனக்கு விருப்பமில்லை;


அவர்கள் என் குழந்தையை இளவரசியாக்கும்
முனைப்பு எனக்கு விருப்பமில்லை,

சிறிய பொன் காலணி அணிந்து
எவ்வாறு அவள்
களத்தில் விளையாட இயலும்?

இரவு சாய அவள்
என்னருகே இருந்திட மாட்டாள்.

அவர்கள் என் குழந்தையை இளவரசியாக்கும்
முனைப்பு எனக்கு விருப்பமில்லை.

அதைவிட அவர்கள்
அவளை இராணியாக்க கூடும்.

அரசவையில் அவள் நிலை உயரக்கூடும்
என் பாதங்கள் அணுக இயலா உயரத்தில்.

இரவு காலங்களில் தாலாட்டி
உறங்க வைக்க இயலாது.

அவர்கள் என் குழந்தையை இராணியாக்கும்
முனைப்பில் எனக்கு விருப்பமில்லை.

Thursday, January 1, 2009

கசப்பான பாடல்

என் குழவியே வா,
ராசா ராணி விளையாட்டு
விளையாட.

இவ் விளை நிலம் உம்முடையது,
உனக்கு அன்றி வேறு எவருக்கு?
அசைந்திடும் தானிய வயல்கள்
உறுதியான வளர்ச்சி,
உமக்காக.

இப் பள்ளத்தாக்கு முழுமையும்
உமக்குச் சொந்தம்,
அன்றி வேறு எவருக்கு?
தேன் அளிக்கும் பழத்தோட்டங்கள்
நாம் மகிழவே.

(பெத்லேகம் குழந்தை
நடுங்கியது போல்
நீ நடுங்கினாய் என்பது
இல்லை,
அது உண்மை இல்லை
உம் தாயின் மார்பகங்கள்
தீங்கான செயலால் வற்றியது
என்பதும்!)

செம்மறி வளர்கிறது
அடர்ந்த மயிர்களுடன்,
அதில் உறுதியாக கம்பளி
நெய்வேன்,
மந்தைகள் யாவும் உம்முடையதே.
வேறு எவருக்கு அது உடமையாகும்?

மாலை நேர பாடல்களில்,
கொட்டிலில்
மடி சுரக்கும் இனிமையான பால்,
அறுவடைக் காலங்களில் சேமிப்பு,
யாவும் உம்முடையதே.
வேறு எவரின் உடமையாகும் இது?

(பெத்லேகம் குழந்தை
நடுங்கியது போல்
நீ நடுங்கினாய் என்பது
இல்லை,
அது உண்மை இல்லை
உம் தாயின் மார்பகங்கள்
தீங்கான செயலால் வற்றியது
என்பதும்!)


ஆம், என் குழவியே,
ராசாவாக, ராணியாக
நாம் ஆடலாம்,
விளையாடலாம்.

கப்பிரியேலா மிச்ட்ரல்- (மொழி பெயர்ப்பு)

துயருறும் தாய்

கண்ணுறங்கு, கண்ணுறங்கு
என் மகனே,
கவலையின்றி, அச்சமின்றி,
என் ஆன்மா உறங்காத போதும்,
நான் ஓய்வுறாத போதும்.

கண்ணுறங்கு, கண்ணுறங்கு
இரவில் மெல்லிய
உம் முணு முணுப்பு
பச்சைப் புல் இதழினும்,
ஆட்டுக் கம்பளி பட்டினும்
மென்மையானது.

உன்னுள் என் ஊண் உறங்க
அதனுடன் என் அச்சமும்,
கவலையும்,
உன்னுள் என் விழிகள் மூட
என் நெஞ்சமும் உறங்கட்டும்.

- கப்பிரியேல் மிச்ட்ரல்-( மொழி பெயர்ப்பு)