Tuesday, September 22, 2009

மூடிய அறைக்குள் மோதல் சாவு- பகுதி 2

பரிதாபகரமாக காவல்துறை பதிவுகளில், இவ்வாறு கொல்லப்பட்ட நபர்கள்'அடையாளம் தெரியாத திருடன்' என குறிக்கப்பட்டிருக்கும். கொல்வதற்கு முன் யார் என்று தெரியாதவர் கொல்லப்பட்ட பிறகு திருடர்கள் என்றும் ஆள் கடத்தல்காரர்கள் என்றும் அறிய வரும்.

சமீபத்திய கொலை நிகழ்வு, காவல்துறையினர் எவ்வளவு எளிதாக ஒருவரை கொல்ல முடியும் என்பதும், சீருடையில் இருந்து கொண்டு அரசை பிரதிநிதித்துவம் செய்து, எவ்வாறு அதில் இருந்து இலகுவாக தப்பிக்க இயலும் என்பதும் நிரூபணமாகிறது.


போலி மோதல் கொலை சம்பவங்களில், பாகுபாடற்ற, நம்பத்தகுந்த புலன் ஆய்வு ஏற்பாடு, முற்றிலும் இல்லை.முறையான விசாரணை இல்லாமல், இவ்விதம் இழைக்கபடுகின்ற குற்றங்களில், வழக்கு தொடுப்பது என்பதோ, தண்டனை அளிப்பதோ நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

தேசிய மனித உரிமை ஆணையம், குற்றம் இழைப்பவரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கக் கூடிய அமைப்பானது, செயலிழந்து கிடக்கிறது. இது, சட்ட அடிப்படையில் அமைக்கப்பட்ட, ஒரு முக்கியமான தேசிய அமைப்பின் சோகமான கதையாகும்.மிகவும் வருந்தத் தக்க, பெரும்பாலும் பெருந்தலைவர் இல்லாத அமைப்பாகவே தற்போது இருந்து வருகிறது.ஆணையம், குறிப்பாக காவல்துறை மற்றும் இராணுவம் இழைத்ததாக கூறப்படும் குற்றங்களில் மட்டுமாவது, தமது கவனத்தை குவித்து இருந்தால், தேசத்திற்கு மிகப்பெரிய சேவை செய்ததாக இருக்கும்.

குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவு 132 மற்றும் 197 நிர்ணயம் செய்துள்ளவாறு, மத்திய மாநில அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திட, அரசாங்கத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டயம் உள்ளது.அரசின் அனுமதி பெறுவது அவ்வளவு எளிதல்ல.இதன் சூழலில், எழுதப்படாத சட்ட உரிமை என்னும் காவல்துறை கலாசாரம், மோதல் சாவுகள் நிகழ்த்திட 'நல்ல வாய்ப்பாக' அமைந்துள்ளது.

அரசாங்கத்தின் அனுமதி ஒரு வேளை கிடைத்தாலும், தண்டனை அளிப்பதற்குள், நீதி மன்றத்தின் நெடிய போராட்டம், பல ஆண்டுகளை விழுங்கிவிடும் பெருந்தடை கற்களும் உண்டு.நீதி மன்றத்தின் தீர்ப்பு வரும் சமயத்தில், தண்டனை பெரும் காவல் அதிகாரி அல்லது இதரர், பல கட்ட பதவி உயர்வு அடைந்திருப்பார் அல்லது பணி ஓய்வு பெற்றிருப்பார், ஒரு வேளை இறந்தும் போயிருக்கலாம்.

தேசிய காவல்துறை ஆணையம், தமது 8வது அறிக்கையில், 132 மற்றும் 197வது பிரிவுகளின் கீழ், குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் காவல்துறை அதிகாரிகளுக்கு அளித்துள்ள பாதுகாப்பு விலக்கிக் கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

அண்மையில், ஆந்திர மாநில உயர் நீதி மன்றம், மோதல் கொலை சம்பந்தமான வழக்கு ஒன்றில் அளித்துள்ள தீர்ப்பில்,ஒவ்வொரு மோதல் சாவு சம்பவத்திற்கு பின், காவல்துறை முதல் தகவல் அறிக்கை போட வேண்டும் என தீர்ப்பளித்தது. இது தொடர்பாக வழக்கு ஒன்று, உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது, அதன் இறுதி தீர்ப்பில், உச்ச நீதி மன்றமானது தடை இல்லாமல், இந்நாட்டில் தொடர்ந்து நிகழ்த்தப்படும் மோதல் கொலைகள் நிகழ்விற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவோம்.

No comments: