Friday, January 15, 2010

வணிகத் திருவிழா- 2010

வணிகத் திருவிழா- 2010

புதுவையில் கோலாகலம்.உருவா70 இலட்சம் அரசாங்கம் ஒதுக்கீடு. பரிசுப் பொருள்கள் ஏராளம், புதுவை மக்கள் பரவசம்.புதுவை, சித்தன் குடி பகுதியில் அமைந்துள்ள, செயராம் திருமண நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நுகர்வுப் பொருள்கள் கண்காட்சி.மக்கள் கூட்டம் அலைமோதும் கேளிக்கை. இந்த ஆண்டும் சாதனை சரித்திரம்! மக்களை மனச் சலவை செய்திடும் தந்திரம்! மாநில அதிகாரத்தின் எந்திரம்!

சிறிய மாநிலம்! சிறப்பான மக்கள்! எதையும் ஏற்றுக் கொள்பவர்கள்! தங்கள் வாழ்க்கை பிரச்னைகளைக்கூட மறந்து,இழுத்த இழுப்புக்கு இழப்புகளை ஏற்கும் இளியர்! புதிது, புதிதாக தொலைக் காட்சிப் பெட்டிகளை வாங்கி பெரு வாழ்வு வாழ வேண்டும்! வீட்டு உபயோகப் பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டும்! சாதா தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து, எல்சிடிக்கு மாற வேண்டும்!கடன் பட்டாலும் கவலையில்லை! பரிசுப்பொருள் கிடைக்க வேண்டும்!

நாளைப்பொழுதுக்கு உலையில் வைக்க அரிசி இல்லை! அதன் விலையும் அருகில் இல்லை! கிலோ அரிசிஉருவா 34! அது பரவாயில்லை! கிலோ அரிசி உருவா 1, பெயர் பதிந்து கொள்ளலாம்!வீட்டில் ஒருவருக்கு வேலை இல்லை! அரசாங்க வேலையும் காலி இல்லை!3000 பதவிகளுக்கு மேல் காலி செய்திட்டோம்! சிக்கன நடவடிக்கை! சீற வேண்டாம்!

தமக்கு என்ன நேர்கிறது. தம் வாழ்க்கையின் நிலைப் பாட்டை, உறுதி செய்யும் கடமை உணர்ச்சி வேண்டியுள்ள அரசாங்கம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை திசை திருப்புகிறது.

காலத்தின் சரியான போக்கை அறிந்து கொள்ள வேண்டிய மக்கள், தம் இல்லங்களில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் முன்பு, நாள்தோறும் சீரழிந்த கலாச்சார சரக்குகளை, சில்லரையாக சீராக கொள்முதல் செய்து செரித்திடும் போக்கு,

தம் மீது தொடர்ந்து நப்பாசையாக திணிக்கப்படும் நுகர்வுக் கலாச்சாரத்தை எவ்வித விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ளும் போக்கு ஒரு தரமான , அறிவார்ந்த மக்கள் சனநாயகத்தை வளர்த்திடுமா?

No comments: