Monday, June 28, 2010

பிடியில்!

நொடிப் பொழுதும்
வீணாகாமல்
பேசியே தீர்க்கும்
பிடியில்

பேய்ப் பிடித்து
நோய்ப் பிடித்து
அமுக்கு அமுக்கி
விரல் வளைந்து
நெளிந்து

செவிப்பறைகள்
தவிப்பறைகளாக
மாற்றி மாற்றி
கழுத்து நெளித்து

வாடிக்கை
வாழ்க்கையில்
வேடிக்கை சேர்க்கும்
வினோதம்!

மூடிக்கை வைத்து
மூலதனம் குவிக்கும்
கோடிக்கை கோரிக்கை வைத்தும்
வேடிக்கை பார்க்கும்

கோடிக்கை கொள்கை என்றாலும்
விருப்பத் தேர்வு
விடியலைக் காணுமா?

அன்றாட அலைக் கழிப்பு
தின்றாட தினம் உழைப்பு
திண்டாட்ட வாழ்க்கையிலும்
கொண்டாட்டம்!

குறைகளை இரு பக்கம் சேர்த்து
ஒலி இல்லாது சூழல்
வலி தரும் நிலையில்
தொடர்பு பேச்சில் தொலைக்கும் காசு
சில்லரையானாலும்
சீராக சேர்த்து வெள்ளமாக
செல்லமாக

உள் நாட்டு வெள்ளையன்
பெட்டிகளை நிரப்புவான்
கோடிக்கணக்கில் நிமையங்களில்
பல சமயம் பங்கும் உயரும்
சந்தையும் வளரும்
மக்களைத் தவிர்த்து!

Wednesday, June 9, 2010

சோங்கிடாதே!

"காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும்
பராசக்தி காணி நிலம் வேண்டும்....."

மாகாணியில் அரிசி இல்லை
மாகாளி தருவாளா?

அட்டை எடுத்து வா
ஒரு ரூபா அரிசி
ரேசன் கடையிலே
ரோசமுடன் வாங்கிப் போ!

உண்ண முடியாதே அய்யா!

விற்க முடியாதா,
அண்ணே!

விருப்பம் உமக்கில்லை
விற்பனையாளர் வீட்டிற்கே
வருவார்!

விலாவாரியாக சொல்வார்
கூடுதல் சில்லரை
குமட்டும் அரிசிக்கு!

சிமிட்டு வியாபாரி
சீராக சேகரித்து
அடுக்கும் தொழில்
எல்லைகளைக் கடந்து!

தீட்டி உம்மிடமே
மறு சுழற்சி
வண்ணப் பைகளில்
வலம் வரும்!

வாங்கி உண்பாய்
சோங்கிடாதே!

பேசாதே!

யாரைப் பற்றியும் பேசாதே!
ஊரைப் பற்றியும் பேசாதே!

உன்னைப் பற்றி பேசு!

கெஞ்சும் உன் நெஞ்சைத் தொட்டு
பேசு!

கொஞ்சும் மொழியில்
வஞ்சமின்றி!

Sunday, June 6, 2010

ரோசனா முர்ரே, நமது பரம்பரையின் அறிவுசான்ற கவிஞர்களில் ஒருவராக, உலகப் பகழ் பெற்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர், பாலோ கொயெல்கொ நமக்கு அறிமுகம் செய்கிறார்.

''அன்பின் கையேடு" எனும் கவிதையை, நாம் இப்போது கீழ்க்காணும் வரிகளில் காண்போம்.

ஆன்மா புலப்படாது
தேவதையும்
சிந்தனைகள்
புலப்படா
ஆயினும்,
அன்பினால்
ஆன்மாவை
தேவதை உறைவிடத்தை
ஊகிக்கலாம்
உம் மனதை உணரலாம்
சில சிந்தனைகளால்
நீ
உலகை மாற்றலாம்

இழப்பு......?

சர்க்கார் மனிதன்
இழப்பு
சரித்திரம் ஆனால்
சாதா மனிதன்
இழப்பு......?

வேண்டும்!

கோவில்கள் வேண்டும்
குளத்திற்காக
வழிபாடு வேண்டும்
மரத்திற்காக
கழனிகள் வேண்டும்
உணவிற்காக
காடுகள் வேண்டும்
மழைக்காக
மழை வேண்டும்
உயிர்களுக்காக
உயிர்கள் வேண்டும்
உலகிற்காக
உலகம் வேண்டும்
வாழ்க்கைக்காக
வாழ்க்கை வேண்டும்
வாழ்வதற்காக

Saturday, June 5, 2010

தீருமா!

எவர் செய்தாலும் ஏற்கமாட்டோம்!
மக்கள் உயிர் எடுக்கும் செயல்
ஒப்பமாட்டோம்!

உடமை அழிப்பு
உயிர் அழிப்பு
கடமை என்றாகுமா!
கொள்கை என்றாகுமா!

மாற்று அரசியல் வைக்கும்
வழிமுறை
மனிதருக்கா!
மயானத்திற்கா!

அனைவரும் இழந்த வெற்றிடம்
வேதனை இடம்
சாதனை என்றாகுமா!
சரித்திர புகழாகுமா!

தரித்திரர் நிலை உயர்த்துமா!
சந்ததி இழப்பு
அனாதை குழவி
நிலை தேறுமா!

கவர்ச்சி அரசாங்கம்
முயற்சி அறிவிப்புகளத் தாண்டுமா!
அல்லல் தீருமா!
சன்னல் திறக்குமா!

புது வெளிச்சம் காற்றுடன்
புழுக்கம் தீர்க்குமா!
மக்கள் இறுக்கம் போக்குமா!

வருந்தும் மாந்தர் வாழ்க்கை
வாட்டி வதைத்திடும்
அவலம் தீருமா!