Monday, July 25, 2011

சமாதானம் ஏற்குமா?

சொந்த நாட்டில்
சிறப்பு இல்லை
சென்ற நாட்டின் சிறப்பும்
செறிவுடன் இல்லை

எல்லை கடந்தும் தொல்லை
கருத்தும் சுதந்திரமும்
கடுகாய்ப் போன பிள்ளை

ஓவிய உலாவும்
ஓங்கி விளங்கிட தொல்லை
ஓடவைத்தார் உம்மை
வெறுங்காலுடன்
வெண் தாடியுடன்
வெம்மிய மனுதுடன்
வெளிறிய பார்வையுடன்

சிறந்த படைப்பாளன்
திறந்த ஓவியம்
ஆடை அணியாமல்
அம்மணம் தாங்காமல்
ஆண்டவனின் வாரிசுகள்

புண்பட்டனராம்
புனை உணர்வுடன்
புகைத்துக் கிளம்பினர்
பொசுக்கினர்
உம் உணர்வுகளை

கலை உனர்ச்சியினை
கொலை உணர்ச்சியின்
காலடியில் பதித்து
மிதித்து துவைத்து
நீதி மன்றம் வரை சென்று

வீதிக்கும் வெளியே நிறுத்தினர்
இந்தியக் குடிமகனின்
உன்னத மதி நுட்பம்
கலைத்தாயின் கருவூலம்

அடுத்த நாட்டுக்கும்
அடையாளம் காட்டிய தூரிகை
வண்ணம்
தூய பரிமாணம்
காயம் சுமந்தது

காவியின் நாட்டம்
காட்டம்
சிறுபான்மை வேறு

சேர்ந்திரைக்க கூடிடும்
சேறு மனப்பான்மை மாற்றிட
மையத்தில் இல்லை
விளிம்பில் நிற்கும் வீணர்

இறந்த பின்
ஊதும் புகழாரம்
இந்தியக் குடிமகனாம்
நீதிமன்ற உத்தரவு நீங்கவில்லை

தாண்டி இங்கிதம் சேர்க்கும்
இந்திய அரசியல்
இங்கிலாந்து சென்று
மாண்ட உசேனிடம்
மன்னிப்பு கோறுகிறது

சமாதி
மேதகு மனிதரின்
சமாதானம் ஏற்குமா?
இறந்தவருக் காவது
கருத்து சுதந்திரம் கிடைக்குமா?

அடிப்படை உரிமை நிற்குமா?

No comments: