Wednesday, July 27, 2011

தாய்மை

தாய்மை அடைவது ஓர் அரிய வரம். அனவருக்கும் வாய்ப்பது கடினம். இயற்கையின் தீர்மானம் எப்படி என்பதை எவரும் தீர்க்கமாக அறிந்திலர். அறிவியல் வளர்ச்சி, முன்னேற்றம் அதிகம் உள்ள இக் கால சூழ்நிலையிலும், தாய்மை அடைவதில் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து, தீர்வு காண்பதில் மருத்துவம் திக்கு முக்காட வேண்டி உள்ளது.

மகப்பேறு மருத்துவத்திற்கு வரும் பெண்களுக்கு, நிறைய நலவழி தகவல்கள், அங்கன்வாடி வழியாகவும், தாய்சேய் நலத்துறை வாயிலாகவும் அளிக் கப்பட்டாலும், அனைவரும் இவ்வழி காட்டுதலின்படி நடக்கிறார்களா!
அது கேள்விக்குறிதான்.

தனியாக மருத்துவரிடம் மாதந்தோறும் ஆலோசனைகளுக்கு செல்லும் பேறுகால மகளிரும், அவரின் கணவன்மார்களும், மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்களா என்றால், அதுவும் கூட அவ்வளவாக நிறைவளிக்கும் சேதியாக இல்லை!

ஊடகத்தின் செல்வாக்கு அதிகமான சூழலில் கூட, பல்வேறு அரிய மருத்துவ கருத்துகள், ஆலோசனை இலவயமாக அளிக்கப்பட்டாலும் , காற்றில் கரையும் கானமாக,, கவனத்தில் கொள்ளாத, கடைபிடித்து ஒழுகாத போக்கு, மிகுதியாக உள்ளது.

தாய்மை அடையும் படித்த மகளிரும் கூட, உணவுப் பழக்கம்,பயிற்சி, மருந்து எடுத்துக் கொள்ளுதல், மனநிலை ஆரோக்கியம் கொள்ளுதல் ஆகிய பண்புகளை பிசகாமல், தொடர்ந்து மேற்கொள்ளும் அக்கறை செறிவாக இல்லை.

ஒரு நாள் வாசித்தால் போதும், அடுத்த நாள் அல்லது மறுமுறை பார்த்துக் கொள்ளலாம். தேர்வுக்கு முன் படித்துக் கொள்ளலாம் என தள்ளிப்போடும் போக்கு, அக்கறையற்ற அணுகு முறை ஒரு பெரிய பாதிப்பு ஏற்படும் போதுதான் மீள்பார்வை வளையத்திற்குள் வருகிறது.

மனத்தை பிழிந்து கொள்வது, கண்களை கசக்கி கொள்வது கலக்கம் அடைவது, எதற்கெடுத்தாலும் பதற்றம் அடைவது, உணர்ச்சிவயப் படுவது, உரத்தக் குரல் எழுப்புவது போன்ற எதிர்மறை போக்குகள் பற்றிய பாதிப்புகளை புரிந்து கொள்ளவேண்டும்.

தாமாக அறிந்து கொள்ளவில்லை எனினும்,பிறர் வழி அறிந்து கொள்வது, அடுத்தவர் சொல்லும் ஆதரவு எண்ணங்களை நிதானமாக எடுத்து உணர்வது மிகவும் அவசியமாகும்.

கணநேரம் தானே, என்ன நிகழப் போகிறது என்ற அலட்சிய மனப்பான்மை, தொடர்கதையாகும்போது, தொல்லைகள் எல்லைகளை தாண்டி விடுகிறது. சிக்கலும் ஆழமாகி,சிந்தனை சிதறுகிறது. விளவு மோசமாகிறது.

ஆனந்தம் காணவேண்டிய சூழல், மகிழ்சியுடன் அளவளாவும் நிலைமை, துயரம் மிகுந்ததாகிறது . இதயம் கணக்கிறது. இமைகள் சுமைகள் ஆக, உள்ளழுத்தம் அருவியாக, ஓவென்ற இரைச்சலுடன், சூறாவளி நாடகம் அரங்கேறுகிறது. .

No comments: