Thursday, January 19, 2012

'தானே' ஆயிரம்

வீடற்றோர் ஆயிரம்
வீடுற்றவர் ஆயிரம்
வீதியில் நின்றவர் ஆயிரம்
விடுதியில் நின்றவர் ஆயிரம்

கூரை கவிழ்ந்தவர் ஆயிரம்
கூடத்தில் அமிழ்ந்தவர் ஆயிரம்
ஓடம் இழந்தவர் ஆயிரம்
ஓரம் அமர்ந்தவர் ஆயிரம்

அலுவல் இழந்தவர் ஆயிரம்
அலுவல் அமர்ந்தவர் ஆயிரம்
மரம் இழந்தவர் ஆயிரம்
மறைவில் நின்றவர் ஆயிரம்

கழனி அழிந்தவர் ஆயிரம்
கனவில் மிதந்தவர் ஆயிரம்

அனைவருக்கும் ஆயிரம்
யாருக்கும் ஆயிரம்
ஊருக்கும் உனக்கும்
எனக்கும்

வானம் தந்த ஆயிரம்
'தானே'
ஆயிரம்

Friday, January 13, 2012

உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவு: வாழ்வுரிமை நோக்கிய ஒரு படி புசுகர் ராசு, மக்கள் சிவில் உரிமைக் கழகம்( மொழியாக்கம்)

நமது நாட்டு மக்களில் பெரும்பகுதியினர், தமது வாழ்நாளில் உணவின்மை, உறையுளின்மை,மருத்துவ வசதியின்மை காரணங்களால்,கடின உடல் மற்றும் மனப்போராட்டத்தின் பிடியில் சிக்கி, முதுமை அடையாமலே இறக்கின்றனர்.

நாட்டில் வறுமையில் உழல்பவர், உயிர்வாழ்ந்திட, உழைப்பிற்கும், உணவிற்கும் ஓயாத தேடலில், தொடர் மன அழுத்தத்தில் வாழ்க்கைப் பயணம் சுருங்குகிறது. புதிய உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவு இப்பிரிவு மக்களுக்கு,சில நிவாரணம் அளிக்கிறது. இதன் காரணமாக சில காலம் வாழ்க்கை ஒப்பீட்டளவில் இலகுவாக அமையும்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வேலைக்காக அளித்திடும் பண உதவி, மற்றும் மான்ய விலையில் கிடைத்திடும் உணவுப் பண்டங்கள், பொருளாதார அடுக்கதிகாரத்தில் கடை நிலையில் நிற்கும் கணிசமான மக்கள் திரளுக்கு பெரிய நிவாரணமாகும்.


இரண்டாவதாக, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மக்கள் வாழ்க்கை தரம், அரசாங்க சமூக பாதுகாப்பு அனுகூலங்கள் வெட்டின் காரணமாக, வாழக்கூடியதாக இல்லை.

உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவு, நிறைய குறைபாடுகள் உடையதாயினும், ஒரு குறிப்பிடத்தக்க சட்டமாகும். உணவுக்கான உரிமை வழக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் 2003ல் தொடர்ந்தததின் காரணமாக, தற்போது நலத்திட்டங்கள் நீதி மன்றம் மற்றும் நாகரிக சமூகக் குழுக்கள் கண்காணிப்பு அளவிற்கு கிளைவிட்டு வளர்ச்சி அடைந்துள்ளது .இம்மனுவில் பிற நலத்திட்டங்களான ,நகர வீடற்றோர் உரிமை பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டம் ஆகியவையும் அடங்கும்.

இவ்வேளையில், இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு ஏழை மக்களுக்கு நீட்டிப்பு செய்வது அரிதான, ஆர்வமான நிகழ்வாகும். கிரேக்கமும்,இத்தாலியும் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும், பிற ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சி குறைவால் சமாளிக்க இயலாமல் திணறுகிறது.

இப்போக்கு, பின் காலனிய உலக சமூகத்தின் ஒரு கட்ட முடிவை சுட்டுகிறது. மேற்கத்திய முதலாளித்துவ வளர்ச்சி அம்சத்தை கேள்விக்குரியதாக்கிறது, மற்றும் இது குறித்து அணுக்கமான ஆய்வினை செய்யக்கூடிய ஒரு புதிய கட்டத்திற்கு நம்மை தள்ளுகிறது.

இத்தகைய வளர்ச்சிகள் குறித்து இந்தியா நன்றாக புரிந்துகொண்டு, மேற்கத்திய மாதிரி வளர்ச்சி,அடுக்கடுக்கான பொருளாதார மந்த புதைகுழிகளில்,ஈடுபடும் முன்முயற்சியை தவிர்க்க வேண்டும்.

ஆயினும், நாட்டின் ஒட்டுமொத்த நலம், எவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பேசப்படும் உணவுப் பாதுகாப்புத் திட்டம் அடித்தள மக்களுக்கு போய் சேர்கிறது என்பதைப் பொறுத்து அமையும்.

ஆளுமையை தீர்மானிக்கும், நிர்வாகத் துறையில் சமகால சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளாமல், பொருளாதார சலுகைகள் வழங்குவது ஒரு பெரிய சவாலாகும். இலக்கு பிரிவினருக்கு உணவு போய்ச் சேரும் என்பது குறித்து, யாரும் பந்தயம் கட்ட தயாரில்லை. இலக்கு பிரிவினரை அடையாளம் காண்பது குறித்த செயற்பாங்கு சரியான கேள்விக்குரியதாகிறது. கடந்த கால அனுபவம் காட்டுவது, இசைவளிக்கப்பட்ட மூலவளங்களை சமூக, பொருளாதார,அரசியல் சக்தி வாய்ந்த நிர்வாக எந்திரம் வசப்படுத்தியுள்ளது விளங்கும்.


மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், தேசிய,மற்றும் சர்வதேசிய நலத்திட்டத்தில் சில மாநிலங்களில் நிறுவனமயப்பட்ட ஊழல் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.உத்தரபிரதேச மக்கள் இது தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளனர். தற்போதைய சட்டவரைவு அனைவருக்குமான உணவு உரிமையை அளிக்காத நிலையில், இது பல நடைமுறைச் சிக்கல் மற்றும் கையாடல் அச்சங்களுக்கு வழிவகுக்கும்.

அரசாங்கத்தின் வாதம் அனைவருக்கும் உணவு அளிக்க வளங்கள் இல்லை என்பது அடிப்படையற்றது. இது அரசியல் உறுதிப்பாடின்மையை வெளிப்படுத்துகிறது. மேலும், கார்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்வது,சராசரி மக்களை மறப்பது ஆகும் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 7.5 சதவீதம் ஆண்டொன்றுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது என்றால், நிதிப் பற்றாகுறை இல்லை என்பதே பொருளாகும். பெரிய தொழிற்சாலைகளுக்கு சென்ற நிதியாண்டில் மட்டும் அரசாங்கம் வரிச் சலுகைகள் மற்றும் ஊக்க உதவிகள் உரு.4.6 இலட்சம் கோடி அளவிற்கு சலுகை வழங்கியுள்ளது, இதே சமயத்தில் மொத்த உணவுக்கான மான்யம், ஆண்டிற்கு உரு 2 இலட்சம் கோடி மட்டுமேயாகும்.


மிக முக்கியமாக, வசதி படைத்தவர்களுக்கான மான்யம் என்பது, 2009- 10 ல் 4.37 இலட்சம் கோடியிலிருந்து, 4.60 இலட்சம் கோடியாக, 2010- 11 ல் உயுர்ந்துள்ளது, இதே காலக் கட்டத்தில் ஏழை மக்களுக்கான மான்யம், 1.54 இலட்சம் கோடியிலிருந்து, 1.44 இலட்சம் கோடியாக 2011- 12 ல் குறைந்துள்ளது. இதுமட்டுமில்லாமல், 10 பெரிய கார்ப்பரெட் மற்றும் தனி நபர் தவணை தவறியவர்களின், வருமான வரி பாக்கி கணக்கைச் சேர்த்தால், 104 இலட்சம் கோடி கணக்கில் வருகிறது.

ஆக, நிதிப் பற்றாக் குறை என்கின்ற வாதம் அடிப்படையற்றது.

Friday, January 6, 2012

பொழுது!

நாளைய பொழுது
நமக்கு என்பாய்!

இன்றைய பொழுதே
இல்லாத போது!

சிந்திப்போம்! செயல்படுவோம்!

ஒரு தனி மனிதன், அடுத்தவருடன் பேசுவது, பழகுவது, ஒருவருக்கொருவர் இணக்கமாக இருப்பது ஏன் பிடித்தமில்லாது போகிறது. நம்மையே நாம் சரியாக உணர்ந்து கொள்ளாது, விளங்கி கொள்ளாதபோது, அடுத்தவரின் அசைவுகள், இசைவாக இல்லை, நசையாக இல்லை என அல்லல்படுவது, ஆர்ப்பரிப்பது
ஏன்?

சக மனிதன் குறைகளை அளவீடு செய்ய முயல்வது, நிறைபோடுவது எவ்வளவில் பண்பான அணுகு முறையாகும். குறைகள், பலகீனங்கள், பக்குவின்மை கூறுகள் சராசரி மனிதன் யாரிடமும் காணக்கூடிய, பொதிந்துள்ள, இயல்பான குணங்களாகும்.

காலப்போக்கில், பட்டறிவு வாய்ப்பில் சீர்செய்து கொள்ள வாழ்க்கை அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது. அதனை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி, சுய திருத்தம் செய்து, வாழ்கைப் பயணத்தை நடத்திச் செல்ல வேண்டும்.

முற்சி, முனைப்பு, நேர்மறை வாழ்க்கை பாடங்கள் , மோதல் தவிர்த்த மனிதாபிமான பழக்கங்கள் தான் தற்போதைய காலத்தின் கட்டாயம்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!