Monday, March 30, 2015

ஒவ்வாமை

தேடினேன் பல காலம்,
ஓடினேன் வெகுதூரம்,

கண்டவை யாவும்
சலிப்பாக,

காண்பவை யாவும் புதிராக,

உண்டவை செரித்திடாது
ஒதுங்கினேன்
ஓசையின்றி,

ஒவ்வாமை யாதென
உணர்ந்தேன்.


முதலீடு

முதலீடு வேண்டும்,
இலச்சினை பொருளில்.

இரவல் முதலீடு
வசப்பட வேண்டும்.

வணிகம் செழிக்கும்
வளம் கொழிக்கும்,

தரம் இறங்கும்
தகுதி உயரும்.

இடைத்தரகு ஒழியும்,
வேளாண்மை
மேலாண்மையுறும்.

வேதனை தீரும்!
சாதனை சேரும்!

வேலை வாய்ப்பு
 சாலை சேர்ப்பு,

சிகினா தாளிலிட்டு
வெண்டைக் காயும்,
சுண்டைக் காயும்,

வீச்சு வீச்சாக
சூட்டுடன் சூப்பும்,
கட்டமைப்பு களம் அமைப்பு,

வெட்ட வெளியும் விண்வெளியாகும்.

சில்லரை மீன்கள் யாவும்
 சில்லிட்டு,
சீசாவில் இட்டு..........

Saturday, March 28, 2015

உயிர் ஆயுதம்ஆயுதமே உயிர்
ஆன போராட்டத்தில்
அழிவு சகிக்காது,

காகிதம் செல்லாத
காசான காலத்தில்,


உயிர் ஆயுதம் களைந்தாய்!

நிராயுதபாணி உடலாய்,
நீள் புகழ் சேர்த்தாய்!

(முத்துக்குமார் நினைவாக அப்போது எழுதியது)

Friday, March 27, 2015

நல்லாட்சி

இப்படியும் அப்படியும்
போகத்தான் வேணும்!

இங்கேயும் அங்கேயும்
வேகத்தான் வேணும்!

எங்கேயும் எப்போதும்
ஏங்கத்தான் வேணும்!

நாமெல்லாம் நாளெல்லாம்
யோசிக்கத்தான் வேணும்!

நம்ம ஊர் நம்ம ஆட்சி
ரொம்ப மாறத்தான் வேணும்!

நமதாட்சி நல்லாட்சி
தோன்றத்தான் வேணும்!
ஆர்த்திடும் வாகனங்கள் போட்டியில், அமைதியாக சிலருடன் நானும்

சாலையில் சந்தடிகளுக்கிடையில்,வந்தடி பதித்து வாகனத்தில் முன்னும்,

பின்னும் முந்தினேன்.


முச்சந்தியில் நிற்க வைத்திருந்த சிலை பக்கவாட்டில், சாலையின் ஓரத்தில்

சருகென சாய்க்கப்பட்ட மரம், உயிர் இழந்த சரீரம் போல் கிடத்தி வைக்கப் பட்டிருந்தது.

 கிருமி நாசினி, மங்கல வாசம் நீ! ஆலயந்தோறும் அலங்காரம் நீ! திரு வீட்டின்

திருப்பம் நீ! திருவிழாவின் திலகம் நீ!

உம்மை வீழ்த்தி, கீழே சாய்த்து,ஓரத்தில் கிடத்தி உம்மைப்  போன்றோர்

உயர்வுக்காக, வாழ்விற்காக, உயரத்தில் பதாகை எழுப்பி விழா கோலம்

பூணுவார், சடங்கு நாளில் சம்பிரதாய பவனியில், ஆண்டு தோறும்.
நித்திரை பிடி
கனவு போல்,
சித்திரை பிடி
வேனிற் போல்,

முழக்கங்களின் பிடியில்

இயக்கங்கள்:

"மரம் வளர்ப்போம்
"மழை பெறுவோம்"
சிட்டுக் குருவி தினம்!

செத்து அழியுது  இனம்!

ஓங்கி உயரும் கம்பம்!

மச்சி வீட்டின்
உச்சியில்,

தகவல் பரிமாற்ற சேவை
தடையில்லாமல்!

ஒலி அலை உல்லாசம்
ஓயாத வியாபாரம் ,

ஒடுங்கிடும் துலாபாரம்!

விடுதலை வெளிச்சமான
சிட்டு வாழ்க்கை ,
சுதந்திர தேசத்தில்
நிரந்தரம் இல்லை!

தொலைந்த வாழ்க்கையின்
தொல்லியல் சின்னமாக !

விடுதலைக் கவியின் விருப்பம்
விடியாத பொழுதாக !

இன்னொரு இருள் சேர்த்திடும்
இன்ப பூமியாக !

நாள் கொண்டாடும் நலங்கிள்ளிகளாக!

இன்னொரு தினத்திற்கு
இனிப்பு வழங்க,

 இளி முகத்தோடு
 ஊடக ஒப்பனைக்கு
 தயாராவோம்!
வீடற்றோர் வீதியில்!
நாடற்றோர் இல்லை!
நாடு உண்டு!
வீடில்லை!


Wednesday, March 18, 2015

செல்லப் பிராணிகள் வளர்ப்பது பெரும்பாலும் குடும்பத்தலைவர்கள் விருப்பத்தில் அமைவது இல்லை.வீட்டில் பிள்ளைகள் இளம் பருவத்தில் விளையாட்டு விருப்பமாக பிறரைப் பார்த்து உருவாக்கிக் கொள்ளும் பழக்கமாகும்.

மீன் தொட்டி வாங்கி,மீன் குஞ்சுகள் வளர்ப்பது,குருவிகள்,கிளிகள் வாங்கி கூண்டில் அடைத்து வளர்ப்பது போன்ற பழக்கங்களும் இதில் அமைவது உண்டு.

தொடக்கத்தில் ஏற்படும் ஆர்வம் படிப்படியாக குறைந்து,வீட்டில் அம்மா பார்த்துக் கொள்வார்,அப்பா கவனித்துக் கொள்வார் என்கின்ற எண்ணம் மோலோங்கி வருகிறது.

இருக்கும் பணியுடன் குடும்ப பொறுப்புகளுடன் இதுவும் சேர்த்து விடப்படும்.நாயாக இருப்பின் இயற்கை உபாதைக்கு அழைத்துச் செல்வது, தினசரி உலாவிற்கு காலாற அழைத்துச் செல்வது, தினசரி குளிப்பாட்டுவது, உணவு உரிய நேரத்தில் அளிப்பது,மருத்துவரிடம் இட்டுச் செல்வது ஆகிய வேலைகளும் அவசியமாகின்றன.

இவையாவும் ஒரு குடும்பத் தலைவன் அல்லது தலைவி மேற்கொள்ள வேண்டிய அவசியப் பணிகளாக நெருக்குகின்றன.கூட்டுக் குடும்பம் உள்ள நிலையில் இது போன்ற சூழல் மிகவும் கடுமையாக அமைகின்றன.

குடும்ப நிர்வாகத்தில் பல பிரச்சனைகளை உண்டாக்கும் நெருக்கடியாகவும் விளங்குகின்றது.ஆரம்ப ஆர்வம் குறையாமல் தொடர்ந்து செல்லப் பிராணியை பராமரிக்கும் வேலையை சில மணி நேரம் மட்டும் அன்றாடம் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் மேற்கொண்டால் மிகவும் நல்லது.

படிக்கிறோம், கல்லூரிக்குச் செல்கிறோம், நேரம் இல்லை என்று தவிர்த்திடும் பழக்கம் இன்று பரவலாக உள்ளது.

குடும்ப வேலைகளுடன் இதுவும் ஒரு கூடுதல் சுமையாக இருப்பினும், அதை ஏற்று சமாளித்திடும் தாய், தந்தை மற்றும் குடும்ப பெரியவர்களின் நிலைமையை அனுசரித்து வேலைப் பகிர்வினை மேற்கொண்டால்,

வளர் இளம் பருவத்தினர்,இளைஞர்கள் வாழ்வில் பல திறப்பட்ட அனுபவங்கள், படிப்பினை பெறுவதற்கு, அதன் வாயிலாக தம் தகுதியை உயர்த்திக் கொள்ளும் அரிய நடைமுறை வாய்ப்பு கிடைக்கும்.


வாங்குவது எளிது!
வளர்ப்பது அரிது!

வாங்குவது ஆர்வம்!
பேணுவது சிரமம்!

கொஞ்சுவது சுலபம்!
 கோடிப்பது துயரம்!!

Friday, March 13, 2015

ஓசைகளின் ஒலியில் ஆசை,
கடு கடு
குடு குடு

உள்ளொலியில் ஒசை
ஓங்கி ஒலித்திட

வெடு வெடு சிடு சிடு

வாங்கிய எண்ணம் ஏங்கி இருந்திட
தட தட பட பட
கட கட மட மட

தூங்கிய பொழுது துலங்கி நின்றிட
சட சட சுட சுட
மட மட விட விட

கலங்கிய காலம் கரைந்து சென்றிட
கடமுட கடமுட
கசமுச கசமுச

விரையும்  வாழ்க்கை கோலம்

நச நச வச வச
வச வச பச பச

என்ன ஆச்சு?
எவரிடமும் பேச்சு!
"தள்ளிப் போச்சு"
தந்திரம்
துள்ளிப் போச்சு!
பகடம்
துளுத்துப் போச்சு!

Tuesday, March 10, 2015

எங்க ஊர் சுற்றுலா?
அசிங்கம் செய்யக்
கூடாது!

கடற்கரை!
ஆட்டம் போடவே!

ஆதி நாயகனே!
கடற்கரை
மேலாண்மைத் திட்டத்தில்
எட்டி வைத்திட

நீ எப்படி?

இப்பக்கம்
எட்டிப் பார்ப்பாய்?
வேகத்தடை

தடைகள் உடைபடும்
வீதிகளில்!
மேடும் சமமாகும்
மேதகு சவாரியில்!
மூன்றாம்
எழுச்சி ,
எமக்கு?
எண்ண ஓட்டம்!
என்னையும்!
உன்னையும்!
தாண்டி!

காலங்களை
வெல்லும்!

கலங்கரைத்
தேவையில்லை!
எல்லைக் கோடு
சுட்ட!
இருக்கும் போது
இருந்த மரியாதை!

இறக்கும் போது
இழந்த அவமானம்!

இல்லாத போது
பொல்லாதவனையும்
போற்றும்
மனம்

உமக்கு மட்டும்
விதி விலக்கு!

ஊராருக்கு நீ
வீதி விளக்கு!

சேதி அப்படி!
சீருடை தரி!

நேர் வழி மறி!

நம்பும்படியாக!

அழைக்கவில்லை என்றில்லை!
உருப்படியாய் நீ
உழைக்கவில்லை!

உமக்குத் தவிர நீ
தமுக்கு தட்டியதில்லை!

அமுக்கி வைப்பாய்!
அரவமின்றி!
ஆக்கத்தை!

ஊக்கம் உடமை!
உயர்வு!

உழைப்பே!
எமக்கு சிறப்பு!
என்பாய்!

எவரும் நம்பும்படியாக!

மண்ணை புரிந்து கொள்ளவில்லை!
தன்னை அறிந்து கொள்ளவில்லை!

திண்ணை ஒழிந்தும் அதன்
திசைவழி மாறவில்லை!

ஏறு மாறாய் வாழும்!
ஏற்றமில்லாத் தமிழன்!

தோற்றத்தை தாங்கி!
தொய் தமிழன்!

கூவித் திரியும் காவி!
கூன் முதுகு நிமிரா பாவி!

கூட்டு வாழ்க்கை தொலைத்த
நாட்டணி நலம் இழந்த,

பூட்டணி என்றதும்
கூட்டணி வாழ்க்கை!

சுருண்ட சுதேசிபோபால் யூனியன் கார்பைடு
மித்தேல் ஐசோ சயனைடு
15000 இந்தியர் மரிப்பு

ஊடகக் கணக்கே
சரி என்றாலும்
உளவுத்துறை புகாரே
உண்மை என்றாலும்

26 ஆண்டுகள் இழுத்தடி
வழக்கு
நீதி மன்றம் அளித்த
தீர்ப்பு

8 பேருக்கு மேல் எட்டாத
இரண்டு வருட சிறை
உடனடி பிணையல்

பிணக் குவியல்
பணக் குவியல்
முன் தோற்றது

பாதிப்பின் விளைவில்
பகல் எது
இரா எது
என்று தெரியா
ஒளி இழந்த மாந்தர்
சந்ததிகளை இழந்த தாய்கள்

ஊனமுற்று
உடைந்து போன உள்ளங்கள்
உலகை விட்டு பிரிந்த
உயிர்கள்

யாவும் சொந்த நாட்டிலேயே
அன்னியரை விரட்டி அடித்த
அகிம்சை உடை தரித்த
பூமியிலே
சுருண்ட சுதேசி
உள்ளூர் வாசி

எங்காவது இப்படி உண்டா
ஏங்கிய இந்தியன்
தூங்கியவாறே
துடிப்பவர் யார்
நடிப்பவர் தேசத்தில்
அடிப்பவர் ஆட்சியில்

சட்டம்
தம் கடமை செய்யும்
உடமை உள்ளவர்
வீட்டு சேவகம்
நாட்டு சேவகம்

தொழிற்சாலை வேண்டும்
தொழிலாளர் எதற்கு
மண் வேண்டும்
மக்கள் எதற்கு

தொகை குறைந்தால் என்ன
GDP அதிகரிக்கும்
மூலதனம் குவியும்
மூளை இழந்தால்
என்ன
நாளை பார்க்கலாம்

Monday, March 9, 2015

இடிந்த கரை மக்கள்
அங்கே!

இமைகள் சுரந்து
இதயம் கனத்து,

பெய்யும் மழை
ஆதரவாக,
பேரிரைச்சலுடன் குளமாக்கி,

மக்கள்!
போராட்ட சூடு வாங்கி,
சூறைக் காற்றும் பலமாக,

நாள்கள் கடந்து
மாதங்களாக,

உயிர்வாழும்
உரிமை வேண்டி,

உயர்த்திடும் குரல்கள்,

சாதி மறந்து,
சமயம் துறந்து

சாயாமல் ,
சங்கொலி எழுப்பி

சந்தேகம் கிளப்பி,

சாக்காடு போக்க
கூப்பாடு போடும்,

கூடங்குளம்
கூன் முதுகு அதிகாரத்தை
நிமிர்த்திட!

(2011 களில் எழுதியது)

Saturday, February 28, 2015

இப்படி! அப்படி!
விருப்பப்படி,

இருக்கும் படி!


தப்படியும்,
தாளமடி!

தவிக்கின்ற காலமடி!

தாங்கி நிற்கும்
கோலமடி!என்னிடத்தை நீ பிடிப்பாயா?
நான் நகர்ந்தால் தான்
நடக்கும்
நடப்பு தெரியாதா?

எம் நகர்வுக்குத் தடை,
உம் வெற்றியாக!

உம் கனவு!
செயல்பாடு!

ஊக்கம் அளித்தவர்
வரலாற்றில்,
தேக்கம் அறியார்.

நோக்கம் புரியா
நோய் மாந்தர்,

இன்னும் நோயின்
பிடியில்,
உயர்விற்காக!

ஒதுங்கி, பதுங்கி
பல்லிலித்து,
பாசக் கயிற்றுடன்........
அதிகாரம்!!

முண்டியடித்து
முந்தி விரித்து,

பந்தி முடித்து
தொந்தி பெருத்து,

சந்தி சிரித்து
குந்தியிருக்கும்......

Tuesday, February 24, 2015

செப்புடு வித்தை காட்டும்
செருப்படியின் கழிப்பு
நீ!

தெருப்படியும் கூசும்
உம் நடைகள்,
கழிப்புகளின் மக்கிய வாசம்
நீ!

கொழிக்கும் மனிதர்
பழிக்கு அஞ்சாமல்,
கோரோசணை என்பார்!

கோணல் புத்தியின் நாணல்
மனிதர்,
நரி ஊளையின் நாற்ற மூளைகள்,
தெரு நாய்கள்
போட்டியின் புணர்ச்சி மைந்தர்

(ஒரு நிகழ்வின் மிகுந்த பாதிப்பில் 2012 ல் மன இறுக்கத்தில் கிறுக்கியது)
(ஒரு புதுமனை புகுவிழாவிற்கு சென்ற பொது ஏற்பட்ட பட்டறிவு)

கழட்டி விட்டேன்,
மீண்டும் பூட்டிக் கொள்ள
திரும்பினேன்.


விட்ட இடம் தேடினேன்,
இடம் மாறியிருந்தாய்
நிறம் மாறவில்லை,
விரிந்திருந்தாய்.

நெரிசலில்
தேடலில்,

இங்கிருந்து அங்கு சென்றாய்
என்றெண்ணி,
தயக்கத்துடன்
செலுத்திய பாதம்,

நெருக்கடியின்றி
தளர்ந்திருந்த பாதுகை,
எமதா?

அய்யத்துடன்,
ஒப்ப முடியாமல்
தவித்து திரும்பினேன்,

எம் பாதங்களை அலங்கரித்த
 நீ!
எவர் பாதங்களை
அலங்கரிக்கிறாய்?
கண்டவை கடந்தவையாக
நின்றவை நேரவையாக

எழுந்தவை ஏங்கவையாக
உணர்ந்தவை ஊடவையாக

என்னவை ஏற்றவையாக
ஒண்மை ஓங்கவையாக

அறிந்தவை ஆக்கவையாக
இழந்தவை ஈன்றவையாக

காலவையின் கூத்தில்
கிறங்கினேன்

Monday, February 23, 2015

அதிரடி முழக்கம்!

உன்னத பேச்சுகள்
ஊடக உலா
காட்சிகள்:
"புலிகளைக் காப்போம்"


அழிந்து வரும் இனம்
ஆள்வோர் அதிர்வு தினம்,
ஆக்கத்தில் இல்லை
அவர் குணம்.

வாழ்விட ஊடுருவல்
வாழ்வச்சத்தில் குடிகள்,
மக்கள் வாழ்விடம் காத்திட
ஆயுதம் தரித்தது
மக்கள் சனநாயகம்,
அதிரடியாக

அந்நியனை அழிக்கும் தோரணை
அதிர் வேட்டு விசையில்,
குண்டுகள் விரைந்து துளைத்திட
கோர மரணம்.

புலிகளுக்கு இல்லை வாழ்வுரிமை!
எவருக்கும் இல்லை காட்டில்!
எங்களைத் தவிர!!

Sunday, February 22, 2015

(2011 அக்டோபர் மாத ஒரு மழைக்கால இரவின் அனுபவம்.ஏட்டில் இருந்தது. இன்று ஏற்றம் பெற்றது)

இடி, மின்னல், போர்க்களம் போல். நள்ளிரவு கடந்தும் மழையின் இழையாக ஓயாது முழக்கம். மனிதர்களே! உங்களால்தான் இயலுமா! தீபாவளி மாதம் உங்களுக்கு மட்டுமா!

நீங்கள் வெடிப்பது செயற்கை வெடி, எம் வெடி, வேடிக்கை இயற்கை! இடைவிடாத மழையுடன் இன்னல் தீர்க்க துரோகம் இல்லை! துயரம் இல்லை! எம்மிடம் பேதம் இல்லை,

செய்கை நியாயப் படுத்தும் வேதம் இல்லை, வெறுப்பு அரசியலும் கை வசம் இல்லை!அனைவரும் சமம் எம் ஆட்சியில், மண் வளம் சேர்த்திடும் எம் வெடி! மனிதர் நலம் கெடுத்திடும் உம் வெடி! ஒரு சாரரை உயர்த்திடும் வணிக வெடி!
உடன் இருந்தே கொல்லும், உருக்குலைத்திடும்.

கடன் சுமந்த மக்கள் கண்ணீரில், காலந்தோறும் கிடங்கியில்,வண்ணக் கனவுகளை அடுத்தவர் அனுபவிக்க, எண்ண கனவுகள் இமைகளை த் தாண்டியும் தாண்டாமல், ஏங்கிய வலியுடன் உள்ள வாழ்க்கை.பொங்கும் உணர்வே பட்டாசாக, பொசுப்பு இதுவே என்றாகி போக்கிடும் இயல் வாழ்க்கை.

எக்கிடும் சாதிக்காரர் எசமான உயரத்தில், ஏற்றுமதியில். எக்காள மொழி ஏழைக்கென்றாகி!
வாழ்க்கை!

அவனைப் பார்த்து
இவனைப் பார்த்து

அங்கே பார்த்து
இங்கே பார்த்து

என்னைப் பார்த்து
என்னுள் அவனைப் பார்த்து
அவனுள் என்னைப் பார்த்து

அங்கே சேர்ந்து
இங்கே சேர்ந்து
அங்கங்கே இருந்து

அவனைத் தாங்கி
இவனைத் தாங்கி

அங்கே வாங்கி
இங்கே வாங்கி

அங்கங்கே வாங்கி
இங்கங்கே வாங்கி
அவனுள் வாங்கி

நேற்று
இன்று
நாளை
என்றாகி,

உணர்ந்த போது
உருண்டோடிடும் ..........

Friday, February 20, 2015

எங்கும் பள்ளம்
புதை குழியாக,

அவர் வெட்டி
மூடியும் மூடாமல்,

இவர் வெட்டி
மூடாமல் மூடி,

போவோர் வருவோர்
பொருமலை தேக்கி
இருமலைத் தூக்கி,

இடர் பல சேர்க்கும்
இரவும் பகலும்.........
இறந்த போது ஏங்கினேன்!

இருந்த போது தூங்கினேன்!இழந்த போது தேடினேன்! 

சேர்ந்த போது ஓடினேன்!மறந்த போது நினைத்தேன்!

நினைத்த போது தொலைந்தேன்!
மருத்துவமனையும் துப்புரவும்!

தற்செயலாக ஒரு நெருக்கடியின் பிடியில் அரசு மருத்துவமனை பக்கம் அடியெடுத்து வைக்க நேர்ந்தது.அவசர கதியில் தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லாடிக் கொண்டிருந்தது.

 மூத்த மருத்துவர்," என்னங்க வயசானவங்களை தனியே அனுப்பியிருக்கீங்க, அவுங்களுக்கு சிவியர் அட்டாக் தெரியுமா" என அழுத்தமான தொனியில் கேட்டுக்கொண்டிருக்க,செவிலியர் ஒருவர் கேஸ் ஷீட்டை காண்பித்து இதில் கையெழுத்து போடுங்க,

 நீங்க என்ன வேணும் என்று வினவிக்கொண்டு, மேலும் கீழும் என்னை நோட்டமிட்டார்.பிறகு நீங்க அனைவரும் வெளியில் நில்லுங்க என்று கதவை இழுத்து சாத்தி கடமை செய்தார்.

தாழ்வாரத்தில், அங்கும் இங்குமாக மனிதர்கள் குத்தம் காலிட்டு உட்கார்ந்து துயரத்தை பங்கிட்டுக் கொண்டிருந்தார். நின்ன கால் நிலைக்க, உட்கார மனமில்லாமல் நாற்காலியை அல்லது விசுப்பலகையைத் தேடினால் விசும்பல்தான் வரும்போல் இருந்தது.

எங்கும் அவைகளுக்கு இடமில்லை.நல்லதுதான் போங்க! இருந்தால் அங்கும் இங்கும் இழுப்பார்கள்,இடத்தை அடைத்துக் கொள்ளும் தொல்லை இல்லை இப்ப! கிடங்கி போல இடம் இருப்பதால் அடைத்து உட்கார்ந்து கொள்ளலாம், படுத்தும் கொள்ளலாம்.

இடையிடையே நோயாளிகளை சுமக்கும் சக்கர வண்டிகளும், கிரீச் கிரீச்சிட்டு ஏற்ற இறக்கமாக, வயதானவர்களைப்போல் தள்ளாடி, லிப்ட்டுக்கள் சென்றும், வெளியேறியும் வினோத பயணம்.

குப்பை கூடைகளுக்கு பொசுப்பில்லை, அங்கும் இங்குமாக, கட்டுத்துணிகளின் மிச்ச சொச்சம்,முகமூடிகளின் முத்திரைகள்,வெற்றிலைப்பாக்கு, சிகரெட்டுத் துண்டுகளின் சிங்காரம்,

 வீசி எறியும் பூக்கள், திண்பண்டங்கள், பொட்டலங்கள் என பலதிறப்பட்ட பொருள்கள் அங்கும், இங்கும் முரசறிவிக்கும் மருத்துவமனை வளாகத்திற்குள்.

முனகலுடன் ,முனகலாய்,கூச்சல் ஒலிகளை சுமக்கும் ஏசி எந்திரங்களின்
வெளியேறும் நீர்வீழ்ச்சிகள் ஓடையாய் எச்சில்கள் சுமந்து, ஈக்கள் பாக்கள் இயற்றும் பான்மை நம்மை நினைவுக்கு கொண்டுவரும்

 நீங்கள் அரசு மருத்துவமனையில்தான் இன்னமும் இருக்கின்றீர் என்று.

தகரக் கொட்டகைக்குள் தொலைபேசி எக்சேஞ்ச்,தாரை தாரையாய் தொங்கும் ஒட்டடைகள் வெளவாள் தோற்கும், உடைந்தும், பெயர்ந்தும்,உரிந்தும் நிற்கும் சுவர் ஓரங்கள்,சுதைப் பூச்சுகள்,கரப்பான் பல்லிகளின் அடைக்கலமாக

 .அட்டைப் பெட்டிகளை அடுக்கி வைத்து, படுக்கை அமைத்து தூங்கும் 'அயராத ஊழியர்கள்'-மருத்துவமனை காப்பாளர்கள்.

மருத்துவமனை உணவு நேரமாகும், சிற்றுண்டி வாங்கி வாருங்கள் என சாலையோர உணவகங்களுக்கு சலுகை காட்டிடும் ஊழியர்கள்,

செவிலியர்கள்.சிரித்தால் முத்து உதிரும் எனக் கவனமாக,உதிராமல் செயல்படும் உயரத்தில் சேவகம்.

விரட்டுவது, வெளியேற்றுவது, அதிகார தொனியில் அதட்டுவது, ஆர்ப்பரிப்பது: அரசாங்க மருத்துவமனை ஊழியம்!

Wednesday, February 18, 2015

பண நாயகத்தின்
சனநாயகம்

பாதை மாறிய 
தனி நாயகம்

கொடிகளின் அணி வகுப்பு
கொள்கைகளின் பிணி தொகுப்பு
வாழ்க்கை

உறக்கம்: நெடுநாள் ஒத்திகை
மரணம்: ஓர் நொடி அரங்கேற்றம்
கூவி விற்கிறார் நெய்!
கூவாமல் விற்கிறார்
பொய்!
உலக தாய்மொழி நாள்

ஒவ்வொரு ஆண்டும் 21,பிப்ரவரி தாய்மொழி நாள் ஆகும்.கிழக்கு

பாக்கிசுத்தான் நாட்டில் வங்க மொழி பேசுபவரின் தாய்மொழி உரிமை

மறுக்கப்பட்டதின் காரணமாக, வங்க மொழி உரிமை, சமத்துவ உரிமை

 முன்னெடுக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு சென்று,  உலக

தாய்மொழி நாள் அறிவிப்புக்கு காரணமாக அமைந்தது.


வங்க மொழி பேசுபவர், வங்காளிகள் தங்கள் பண்பாட்டு கூறுகளில் ஒன்றான

மொழி நலம்பேணுவதில்,காப்பதில் உரிமை உறுதிப்பாட்டில் இந்தியத்

 திருநாட்டின் பிறமொழி-பண்பாட்டு மக்களுக்கு வெளிச்சம் பாய்ச்சுபவர்களாக

விளங்குகின்றனர்.


இந்தியத் துணைக்  கண்டத்திலும், உலகப் பண்பாட்டு வரலாற்றிலும்,

செம்மொழி, தொன்மை மிக்க தமிழ்மொழி, தமிழினம் படும்பாடு, பறிபோய்க்

கொண்டிருக்கும் உரிமைகள் ஏராளம். சிதைந்து, சிதலமடைந்து

கொண்டிருக்கும் வாழ்வுரிமைகளில் , சிந்திக்க ஒரு மொழி,செயற்பட

ஒருமொழி,பிழைக்க ஒரு மொழி, தழைக்க ஒருமொழி என

அடையாளம் நாள்தோறும் தொலைந்து, அடிப்படை இழந்து, ஆர்ப்பரிக்கும்

அரங்க பதுமையாக தமிழர்கள்!


அறிவியல் ஏது? தொழில் நுட்பம் ஏது? என வினாக்கள் எழுப்பிடும் வினோத

கூட்டம்.காரணம் யாதென கவனமுடன் பரிசீலிக்கும் கண்ணியம் இழந்திடும்

 தமிழ் மக்கள்.


நிலம் உம் வசம் இல்லை! வளம் உம் வசம் இல்லை! பயம் உம் வசம் உண்டு!

பாசாங்கு உம் வசம் உண்டு! பள்ளிகளிலும்கூட பளிச்சென்ற ஆங்கிலம்,

 பிற மொழி பயின்றிட பரபரப்பு உண்டு! பேசத் தெரிந்தால் மட்டும்

போதும்.தமிழ் சோறு போடுமா? என்று விடைக்கும் மனப்பான்மை

பரவலாக.ஆட்சிக் கட்டிலில் அமர்வோரும் இதற்கு விதி

விலக்கல்ல.


வியாக்யானம் விசாலமாக,அளந்திடும் திறமை,மொழிப் புலமை

தனி மனிதனே தமிழ் மொழியின் உருவகமாக, பிம்பமாக போற்றிடும் சுவறி,

போக்கிலி மனம், பேதை குணம், பெருகி விளங்கிடும் கட்சி அரசியல்!

கும்மாளம், சிம்மாசனம்,சினேகம், சீர்திருத்தம் யாவும் சில்லரைக்காக!


இன்னும் எத்தனை பத்தாண்டுகள் சென்றாலும் மொழி நாள் நமது வழி நாளாக,

 விடியல் நாளாக சகல நிலைகளிலும், தமிழ் அரியணை ஏறும் நடைமுறை

தினமே மெய்யான தாய்மொழி நாளாகும் தமிழனுக்கு!


 அதுவரை பல தளங்களிலும் தமிழ் மக்கள் உரிமை, சனநாயக உரிமை

எடுத்துச் செல்லப்பட்டு, உரிமை மீட்பு இயக்கம் நமது வாழ்வின் செயல்முறை

இலட்சியம் ஆக வேன்டும்1

Friday, February 13, 2015

அரசியல்: உம் சேவை தொடர்ந்து நில்!

அதிகாரம்: எம் தேவை புரிந்து கொள்!

:
உயிர் தந்தாய்!
உடல் தந்தாய்!
உணர்வளித்தாய்!
உணவளித்தாய்!

உள்ளொளி வெளிச்சம்
பாய்ச்சி,
தன்னொளி குன்றினாய்!

தளர்வுற்ற  போதிலும்
தாளாண்மை கூட்டினாய்!

வேளாண்மை குறைந்திடும்
வேளையில்,

சூழல் மேலாண்மை
மெருகூட்டி,

மேன்மை காட்டினாய்!

(இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா நினைவாக)
விடுவித்த பிறகும்
சிறைக்குள்,

எம் பார்வையில்!

விடிந்தும் விடியாத
பொழுது,

உம் விடுதலை!

விரைந்து
தொழில் ஏற்கிறாய்!

கரைந்து
கடமை சேர்க்கிறாய்!

Thursday, February 12, 2015

இராணிப்பேட்டை சிப்காட் தொழிலாளர்கள் துயரம்
தொடர் கதையாகும் மரணம்!!
**********************************

கனவுகளின் பிடியில் கைதியாக
கதவுகள் ஏதுமின்றி,
நாளும் தேய்ந்து, ஓய்ந்து
உறங்கிய நீ,
உழைப்பத்தான் விற்று வந்தாய்
உயிரை அல்ல!

விடியல் உம்மை சகதியாக்கும்
கழிவுத் தொட்டி
பலி(ழி) வாங்கும்
கழிவோடு கழிவாக
கழித்துக் கட்டும்
கதி நீ அறியாய்!

பாதுகாப்பு முதலீட்டுக்குத்தான்!

பரிதாபம்,இரங்கற்பா,நிவாரணம்
இழப்பீடு!!

சடங்குகளின் பிடியில்
சாமர்த்திய நர்த்தனம்,

அரசு எந்திரம்
எடுத்தாளும் தந்திரம்,
எகத்தாள மந்திரம்........

Wednesday, February 11, 2015

முறிந்த நட்பு
முளைத்த செடி

கிளைத்தது

நாள் தோறும்
பராமரிப்பில்

தண்ணீர் வார்க்கும்
தவிக்கும் நினைப்புகள்

காலங்களில் கரையும்
கவின்  கோலங்கள்

ஆவல் கூட்டும்
நாவல் மரங்கள்
ஆவுடையார் மரம்
அன்னாந்து பார்க்க
வைக்கும்,

அப்படியும் இப்படியும்
செல்லும் காலம்,
ஓரமாக இருந்தாலும்
ஈர்க்கும் மண(ன)ம்.

சிந்தும் பூக்கள்
சேகரிக்கும்
மக்கள்,

தேனீக்கள்
கெஞ்சும்

சிவ தலங்களின்
சீரிய விருட்சம்
காய்ந்தது ஏனோ
என பதறிய
உள்ளம்

கதறிய எம்மிடம்
சூழல் வினைஞர்
பகிர்ந்த துயரம்

"சாராயக் கடை உரிமையாளன்
மனையில் இருந்த
சங்கடம்
சடுதியில் அமிலம்
வேரில்
விட்டழித்த
வீணன்
கட்டிடம் காப்பாற்ற
சாய்த்தனன்"

Tuesday, February 3, 2015

ஆன்மீக வழியும், ஒழுக்க ஒழுகலாறு உள்ளிட்ட, நெறிமுறை அடிப்படையிலானதே ஆகும்.எம் மார்க்கமும் மனித வாழ்வை செப்பனிட,  பண்படுத்த அதற்குரிய கால,சமூக சூழலில் கால் பதித்து, ஊன்றி நின்றது.

அதற்காக பல்வேறு இடர்களை சந்தித்து, ஓங்கியது, ஓய்ந்தது, ஒருங்கிணைந்தது என அறியப்படுகிறது.சில இடப் பெயர்ச்சிக்கு ஆளாகி பிற தேச சமூகங்களில் செறிவான வரவேற்பை பெற்றது.

ஓரு புறம் ஆன்மீகம் பேசுவதும், மறுபுறம் ஒழுக்க சிதைவான பாதையில் பயணிப்பதும், பயன் அடைவதும்.இது வேறு, அது வேறு என சுய நிறைவு, தற்காப்பு பாணியில் விளக்கம் அளிப்பது, நியாயம் கற்பிப்பது எவ்வகையிலும் முறையன்று!
ஒரு நிலையில் பார்த்தால் தம் மனம் அடகு வைக்கப்படுதலுக்கு இணையாகும்.

பிறந்தது முதல் அணிவிக்கப்பட்ட முகமூடியை முற்றிலும் வசப்படுத்தி
வாழ்க்கையை ஓட்டுவது, அறிந்தே இவ்வாறு முனைந்து செல்வது ஒழுங்கு
ஆகாது.
தெரிந்த மொழி
தெரியாத பாதை!

அறிந்த மனிதன்
அறியாத மனம்!
விரிவாக்கம்

காவல் பூமி!
காலியான சாமி!
முகம்!

ஒப்பனை மனிதா!
பொழுதும்
வாய் பேசி,
வக்கனையாக,
வேடம் தரி!
மூடி
அணி!
முக்காலும்,
முழுசுமாக

Wednesday, January 28, 2015

        பாதசாரி!

பாதை உமக்கில்லை
வழியும் உமக்கில்லை
ஒதுங்கவும் ஓரமில்லை
கடக்கவும் தடம் இல்லை

எதுவும் உமக்கில்லை
உரிமை இழந்து

 நடக்கிறாய்
ஓடுகிறாய்
ஒதுங்குகிறாய்
கடக்கிறாய்
மிதக்கிறாய்


பல்வேறு வாகனங்களின்
வலத்தில்

வைராக்கியத்துடன்
கை கோர்த்து
அணி அணியாய்
அடுத்த பக்கம்............


 குறும்பு!

இழுத்து மூடி உறங்கினாலும்
கழுத்து மூடி
முகம் உள்ளிழுத்து 
முக்காடிட்டாலும்,
ரீங்காரம்
மின் விசிறி மிகை சுழற்சியும் தாண்டி,
ஓயாமல் வட்டமடிக்கும்
திருகிறக்கை போல்,
உறக்கமின்றி மிகை பணி
சேர்த்து,
முணகலுடன் எம்மை
புரட்டிப் போடும்,
இடமும் வலமுமாக......
உன்னைச் சொன்னேன்,

உண்மையைச் சொன்னாய்,

நானும்!   நீயே!

Monday, January 26, 2015

கலைந்த கனவு

சுரந்த சிந்தனை,

கரைந்த செல்வம்

கலைந்த மேகம்,

பரந்த உலகம்

விளைந்த இன்பம்,

கிளர்ந்த மருள்

உணர்ந்த பொருள்,

தொலைந்த நட்பு

விளைந்த சிறப்பு.
அப்பாவுக்கு உதவி அம்மா,
அம்மாவுக்கு உதவி அப்பா,

இருவருக்கும்....

அம்மம்மா !
அப்பப்பா !
பானைப் பிடித்தவள்
பாக்கியசாலி

பானை உடைத்தவள்
தைரியசாலி

Sunday, January 25, 2015

கேஜரிவால்

அளித்த வாய்ப்பை
நழுவவிட்டாய்!

அடுத்த வாய்ப்பை
தேடி நின்றாய்!

(புது தில்லி தேர்தல் 2015)
தெரிவதில்லை!

தொப்பை விழுவதும்
குப்பை விழுவதும்
காசுமீர துயரம் !

காசு கொடுத்து வாங்கிய துயரம்,
இயற்கைக்கு இடைஞ்சல் ஏற்றி,
ஆற்றின் போக்கை மாற்றி,
சாலை அமைத்து
வேலை முடித்தது,
வெளிப்படுகிறது
வெள்ளமாக...

மிதக்கிறது வாழ்க்கை,
மிதிபடுகிறது உடல்கள்
ஓடும் வெள்ளத்துடன்,
பிரிந்த உயிர்கள்
முறிந்த மரங்கள்,

கவிழ்ந்த இல்லங்கள்
கலைந்த மேகங்கள்,
வாழ்க்கை சேமிப்பும்
கை நழுவி போக,

வெந்த புண்ணும்
நொந்து போக,
நடை இழந்த பிணமாக,

நா வறண்டு
ஒளி அடங்கி,
உடல் சுருங்கி

நிர்வாணமே
நிவாரணமாக,

ஆதாரம் யாவும் சேதாரமாகி,
சோதரர் யாவரும்
சோகமயமாகி,

சொல்லிடாத்துயர்
சொந்தமாகி,
நிர்க்கதியாய்
நீளும்
அவர் உலகம்
வெளிச்சத்தை தேடி

(காசுமீர இழப்புகள் செய்தி கேட்டவுடன் எழுத்தில் வடித்தது, இன்று இடுகை செய்தது)
எங்கும் மழை சுற்றி சுற்றி,
நிலத்திலும் திணையிலும்,
குடைகளை நனைத்து,
நீலத்திரை நீள் பயண,
கலங்களை நிறைத்து.

(ஆர்.எல்.சிடீவன்சன் மழை குறித்த கவிதையின் மொழியாக்கம்)