Sunday, December 30, 2018

அனைத்தும்

சூடான் நாட்டுக் கவிஞர். அல் சாதிக் அல் ராடி

மீனவன் வாயிலிருந்து வீசட்டும் காற்று,
பாய்மர படர்விலிருந்து படகு கூட்டிற்கு,
வாய்திறந்திடும் ஆறு-
ஆக கூச்சலிடு, மூழ்கும் மனிதனே
துரோக நீரில் மூழ்கிடும்  சமயம்

வகைறையில், அமைதியில்
பயணத்திடும் ஆறு
இறந்த மீனின் செதில்களில் 
ஆற்றங்கரை சூரியன்களை திரட்டிச்
சேர்த்திடும்
எதிர்ச் சுழிப்புகள் நெருக்கித் தள்ள
சக்திகளுடன், எறி பளு நறுமணத்தில்
மனங்கவர் நுண்ணிய பண்பில்
நிழல் அடுமனையில்

சாந்தமாகி, தென்றல் சரக்கேறி அசைவின்மையில்
பாய்மரம் சோம்பலில் ஏறிட,

தொலைவிலிருந்து இரவு முழுவதும்/முழுதும் அவர் பயணம்
ஆற்றில் உழுது சடங்கு நிலை பேற்றில்,
எதிர்ப்படும் இருண்மை உற்று நோக்கி

வைகறை பயணம் தொடங்கு
இதயக் கரைசலில் ஊறித்திளைத்த,
உமது முழு வாழ்க்கை கடற்கரையில்

ஆயினும், அவள் பார்வையில் 
பூமி மீதில் சுவர்க்கம், விருப்பமானவன் அளிப்பில்
கவிதையின் செப்பத்தில்
கோருகிறது- அனைத்தும்

(மொழியாக்கம்)

Wednesday, December 26, 2018

இப்படியும் சொல்வார்



இப்படியும் சொல்வார்
"உணர்ச்சி வசப்படாதே,"
உற்சாக செயல்பாட்டிற்கு,
அப்படியும் அறிவுரை.

எப்படியும் உயராமல்
தாழ்படியில்,
தளர்ச்சியின் பிடியில்.

அசைந்து போ,
இசைந்து வா,
உள்ள சமூகம்
அப்படி.

உயர்வேது இதில் 
உருப்படி,
வரும்படி பார்த்து
 ஏறு,
வளர்படி சேர்த்து
ஊறு.........

வேதம் ஓதுவார்


உச்சத்தில் போடுவார்
சொச்சத்தில் குறைப்பார்,
மச்சிவீட்டு உணர்வில்.

எதிர்ப்புக் குரல் புரிந்திட,
ஆண்டுக்கு மேல்
எடுப்பார்.
குறைப்பை பெருமை
என்பார்,
அரசுக்கு இழப்பென்பார்.

மக்களுக்கு இழப்பே 
இழப்பு,
மற்றது இழப்பல்ல, என்பது
ஏற்கார்.

சரக்கு சேவை எவருக்கென்று
அறியார்,
எதிர்வரும் தேர்தல் கவனத்தில்
கொள்வார்,
ஏதிலிகள் துயரம் எள்ளளவும் 
நோக்கார்.

ஏற்றமே மாற்றம்
வேதம் ஓதுவார்.

ஆண்டை சாதி

தற்கொலை என்பார்
சந்தேகமென்பார்,
சந்துகள் வைத்து ஓட்டையாக்கி
ஆய்வென்பார்,
ஆலோசனை என்பார்.

விசாரணை என்பார்
விரிவாக புலன் என்பார்,
தடயங்கள் எடுப்பார்.

தவறவிட்டு தொடுப்பார்,
சிபாரிசுக்கு ஏற்ப
சிதறவிடுவார்.

இழந்தவர் சோகம்
இமியும் உணரார்.

அதிகார சேனை,
அலுவல் சூழ்ச்சி,
அரசியல் குறுக்கீட்டில் ,
அடிமறப்பார்.

பெண்தானே,
பெற்றுத்தரும் கருவிதானே
உனக்கென்ன உரிமை தனியாக!
ஆணாதிக்க சமூகத்தில்!

உன் மீது வன்மம் 
உன் உடல் மீது வன்மம்
உயிர் மீதும்.

நாங்கள் ஆண்சாதி
மேலுக்கும் மேல்சாதி
ஆண்டை சாதி!

Saturday, December 22, 2018

பேதமை நெஞ்சம்




கவிஞர். மிர்சா காலிப்

பேதமை நெஞ்சே, என்னவாயிற்று உமக்கு?
 அந்தோ. இந்நோய்க்கு குணமென்ன?
நாங்கள் ஆர்வத்துடன் அவர்கள் மன வருத்தத்தில்
ஓ, ஆண்டவனே, இது என்ன செய்கை?
எனக்கும் நா உண்டு சற்று என்னிடம் கேள்
நான் என்ன சொல்ல
நீயன்றி யாரும் தற்போது இல்லை
பின், ஓ ஆண்டவனே எது குறித்து இரைச்சல்
பற்றுறுதி என்னவென்று கூட தெரியாதவரிடம்
நம்பிக்கையை நான் எதிர்பார்த்தேன்.

(மொழியாக்கம்)

"ஜெயச்சந்திரன்"


இவர் துணிக்கடை அல்ல,
வியாபாரம் செல்ல,
71ல் தொடங்கி
 மருத்துவ சேவை
71 அகவை வரை.

விவசாயத்தில் தோன்றி,
நலவழியில் கால் ஊன்றி
5ரூபாய்க்கு அசராமல்,
துணைவியருடன்,
ராயபுரத்தில் மருத்துவமனை,
மக்கள் மருத்துவர்.
வழிகாட்டினார்.

கலங்கரை ஒளி வீச்சாக,
பெருவணிக மருத்துவ
அந்நியமாதலில்,
மக்களை அண்டி,
பிணி தீர்த்தவர்.

பணந்தின்னும் வல்லூறு
மருத்துவ சுழலில்,
மணிமுத்தாக பணி முடித்தார்.

தடங்கெட்ட சமூகத்தில்
தனித்தடம் பதித்து,
நலவழி தரம் உயர்த்தினார்.

ஆள் அரவம் ,கூட்டம்,
குதூகலம் தவிர்த்து,
ஒற்றைச் சேண குதிரையாய்
மானிட நலம் பேணி.


Friday, December 21, 2018

தனிமை இரவு

கவிஞர். எர்மன் கெசெ

உடன்பிறந்தோரே, நீங்கள் எம்மவர்,
நெருக்கத்தில் உள்ளோரே
தொலைவில் உள்ளோரே
வறியவரே,

விண்மீனுக்கு விழைவோரே,
வலியிலிருந்து நிவாரணக் கனவில்
தடுக்கி விழும்
பேச்சற்றவரே,

இரவில் மின்னிடும் வெளிர் விண் மீன் ஒத்தவரே,
ஒடுங்கிய உமது கரங்களை உயர்த்திடு
சில நம்பிக்கைக்கு,

துயருறு, விழித்திடு
குழப்பமான பொது வறியவரே,

கடலாடிகளே நீங்கள் வாழவேண்டும்
நட்சத்திரமற்ற நம்பிக்கையின்மையில்,

நாம் ஒரே முகம் உடையவர்.
எனது நல் வருகையைத் திருப்பிடு.
(மொழியாக்கம்)

நெருப்பு இரவு


கவிஞர்.ஜான் எக்லெ

கதவுகள் திறந்திருக்க
அனவரும் வெளியில்,
வான வேடிக்கைக்காக
அணியமாக,
'எட்டி'- நாய் தவிர,
அது கொட்டில் அடைக்கப்பட்டு.

வெளியில் இருந்தாலும், உள் அரங்கில்
பட்டாசு  வேடிக்கை நிகழ்ந்தது.
இறப்பதை விட, பாதுகாப்பான வேடிக்கை
மிக நல்லது என்கிறார் தந்தை.
அண்டை அயலார் வான வேடிக்கையில்
காற்று முழுமையும் பட்டாசு வாசம்.
.
அம்மா கூறுகிறார், இவ்வாண்டு 
அவர்கள் நல்லவராக
நடந்து கொள்கிறார்.
கிறித்தோபர்  இவ்வாண்டு
அவனுடைய தந்தைக்கு உதவியாக,
வெடிகள் கொளுத்திட,
அனுமதிக்கப்பட்டான்

அவன் உற்சாகமாக,
அவன் பெருமிதத்தில்
 அவனுக்கு வயது 28 . 

(மொழியாக்கம்)

Thursday, December 20, 2018

டிசம்பர் வாழ்த்து


கவிஞர்.லியோ யான்கிவிச்

அட்டைகளின் தொலை ஒலி நீ கேட்கிறாய்.
ஒளிஉமிழ் விளக்குகள், காக்காய்பொன்,
இலவங்கம், கிராம்பு,
பனி குன்றிற்கு அப்பால் விண்மீன்,
காண்கிறாய்.

கிறிஸ்துமஸ் மரங்களின் அடுக்குகள்
நீ காணலாம்,
உலர் பழங்கள், திராட்சை
தோப்பின் கனிகள்அருகில் ,
வாங்கலாம்
பொன் நிறத்தில் பொறிக்கப்பட்ட வாழ்த்து மடல்:
"மகிழ்ச்சி, அன்பு, அமைதி"

நீ !
தற்காலிக அடுப்பின் வெப்பத்தில்
ஒலியுடன் கொட்டிடும்''கில்பசா '( கொத்துக்கறி) கொழுப்பை
 உமிழ்நீரால் சுவைத்திடு
பணப்பரிவர்த்தனை செய்து
சிகெரட் கொளுத்தப்படுகிறது.

வரிசையில் இடிபட்டு,
மெய் விருப்பத்துட்டன்
இருப்பது போல் பாவனை செய்து
நீ !
பருமனான பெண்கள் மீன் வெட்டுவதைக்
காண இயலும்.

சில கணம்  கண்களை மூடிக்கொள்ள 
முடியும்,
கையுறைகளை த் தாண்டி குத்திடும் குளிர்ச்சியை
மறந்திட இயலும்,
வானத்தில் உள்ள வைர கழுத்தணியை காண முடியும்,
அல்லது நகரத்தின் புறாக்களிடையே
யேசுவைக் காண இயலும்..

(மொழியாக்கம்)

Tuesday, December 18, 2018

ஒரு காலக் கண்ணோட்டம்





கவிஞர்.ராபர்ட் லாரன்ஸ் பின்யோன்

உடைவுற்ற ஒரு வீட்டின் நிழலில்,
வெறிச்சோடிய ஒரு தெருவின் கீழ்,
மதிற் சுவர்களில், குளிர்ந்த கரடுமுடான, மறைமுக படிக்கட்டுகளில்,
இறந்த காலங்களின் அமைதியில்.
ஒருவர் கரங்களில் இன்னொருவர் முரட்டுப் பிணைப்பில்
இரு காதலர்கள் சந்திப்பை நான் கண்டேன்.


இதயமற்ற அவ்வீட்டின்  மீதில்
மன ஆழத்தில் திகில் எழுந்தது
இழந்த நட்சத்திரங்கள், சிதலம் அடைந்த, பெரு நிலவுகள்,
இவைகளிடையே மேலோங்கிய உலகங்கள்,-
காலத்தின் கல் மாளிகை நொறுங்கி உடைந்தது,
அந்த உடன் முத்தத்தின் முன்.

மொழியாக்கம்

இந்திய சுதந்திரப் போரில் சிங்காரவேலரின் பங்கு

 மீனவர் கலை இலக்கிய ஆய்வு மையம், தோழர். சிங்காரவேலர் அவர்களின், 159 ஆம் பிறந்த நாள் விழாவை 16.12.2018ல், புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடியது. 
அதில் முதல் பரிசு பெற்ற கவிதை.


அடிமை வாழ்வை வெறுத்தாய்!
ஆதிக்க உணர்வை வெறுத்தாய்!
சந்தர்ப்ப சூழல் உடைத்தாய்!
சாதிக்கும் மனம் படைத்தாய்!
விதியில் பயனில்லை என்றாய்!
வீதியில் இறங்கி நின்றாய்!
வேங்கை குணம் கொண்டாய்!
விடுதலை வேள்வியில் குதித்தாய்!

நூற்றாண்டுகள் தலை நொறுக்கும் போரின்
நெடிய போர்ப் பரணி நிரல் இசைத்தாய்!
எக்காலத் தமிழரிடை வக்காலத்துஏற்று
ஏக்கழுத்து தமிழனாய் பகுத்தறிவேற்றினாய்!
சமதர்ம கதிரொளியில் சமூக நீதி நாட்டினாய்!

காட்சி மாறிட, விவசாய, தொழிலாளர் கட்சி
அமைத்தாய்!
அடிப்படை ஆதாரம் இணைத்துப் பார்த்தாய்!
தேரோட்டமே தேசிய நீரோட்டம் எனும்
காந்திய அணுகுமுறை மறுத்து,
போராட்ட களம் அமைத்தாய்!
'ரெளலட் சட்டம்' எதிர்த்து நின்றாய்!
பேச்சுரிமை, எழுத்துரிமை எம் பிறப்புரிமை
என்றாய்!
புறக்கணிப்பு அரசியல் ஏற்றி வழக்குரைஞர்
அங்கி துறந்தாய்!
'ஜாலியன் வாலா பாக்'' படுகொலை எதிர்த்தாய்!


துடிப்புடன் மிடுக்காய்!
ஒத்துழையாமை இயக்கம் ஒருங்கிணைத்தாய்!
சுதந்திரப் போரின் விசை முடுக்கினாய்!
நீடு துயில் நீக்க நீள் கிளர்ச்சி கொண்டாய்!
நிலாச் சோறு  உண்டாய்!



Sunday, December 16, 2018

இறுதி நேயம்


கவிஞர். பியோடர் இவனாவிச் டையூட்சர்

ஓ!
நலிவடையும் நாட்களில்
மிக இதமாக,

ஆழ்ந்த பிரியத்துடன்
நாம் அன்பு செலுத்துவோம்......

மேற்கில் இன்னும் நாடோடியாக
கழிந்திடும் பொழுதே,

மின்னவும், மின்னவும்
இறுதி நேய வீழ் ஞாயிற்றின்,

விலகும் ஒளிக் ஒளிக் கீற்றுகளே,
நிழல் விண்ணுலகைத் தழுவிடும்,

மேற்கில் வெளிச்சம்  இன்னும் நாடோடியாக,,-

பொறுத்திடு, பொறுத்திடு
வீழ்ந்திடும் பகலே,

நீட்டிடு, நீட்டிடு  உமது வசியத்தை
நமது நாளங்களில் இரத்தம் இலகலாம்,
ஆயினும்,

நமது இதயத்தில்  இத உணர்ச்சி
ஆட்சியில்.......
ஓ, நீ!
எமது இறுதி நேயமே!

நீயே எமது சொர்க்கம்,
நீயே எமது சாபம்.

(மொழியாக்கம்)

அன்பென்று கொட்டு முரசே

15.12.2018ல் "இலக்கியச்சோலை கவியரங்கத்தில்" வாசித்த கவிதை


எண்ணத் திரைகள் ஏழு விலக்கிட
ஏற்றத் தாழ்வு பழுது நீக்கிட,

ஊருக்கும்,உலகுக்கும் உள்ளொளி ஏற்றி
அன்பே வாழ்வின் அடிப்படை என்று,

வெண் முரசம் கொட்டினான் நாட்டுக்கவி
அன்று.

நால் வகுப்பும் தொழில் வகுப்பே
தோல் வகுப்பல்ல என்றான்.

தொண்டர் என்றோர் வகுப்பில்லை,
தொழில் செய்யா சோம்பலுக்கு விடிவில்லை
என்றான்.

பெண்ணுரிமையே, மண்ணுரிமை என்றான்
பேதமை அகற்றும் கல்வியே மனித உரிமை
என்றான்.

சுரண்டல் ஒழித்திடும் மண் விடுதலை வேண்டினான்,
அறிவும், நல் ஆன்மீகமும் நாட்டினான்,

நானில சமத்துவம் நாட்டின் முன்னேற்றம்
கூட்டினான்.

அன்பின் வழியது சாத்தியம் வேறில்லை
உணர்த்தினான்.

Thursday, December 13, 2018

நெல் ஜெயராமன்


 சொல் ஜெயராமன்களுக்கிடையில்,
 செயல் ஜெயராமன்.
காணாத ராமனுக்கிடையில்  காணும் ராமன்,
காவிய ராமன் அல்ல காவிரி ராமன்.

மக்களை பிரிப்பவன் இல்லை,
மனங்களை இணைத்தவன்.

பாசாங்கு செய்தவன் அல்ல,
பசி போக்கியவன்

 காணா நெல் ரகங்களை
கண்டு பிடித்தவன்,
கொண்டு சேர்த்தவன்,
கழனியின் மைந்தன்.

நம்மாழ்வார் வரிசையில்
வேளான்மை பலம் சேர்த்தவன்,
187 நெல் ரகங்களை
தொம்பையில் சேர்த்தவன்,
நலம் புதுக்கியவன்.

ஓடியாடி உழைத்து,
ஒப்பு நோக்கி
ஊருக்கு, உலகுக்கு அளித்தவன்,
உழவுக்கு உறுதி சேர்த்தவன்.

அருகியே சென்றிட்ட அரும் பயிர்களை
அரவம் இழந்திட்ட வேளாண்மையை,
மீட்டெடுத்தவன்.

ஒற்றை அணி படையாய், டெல்டாவின்
பண்பை மீட்டவன்.
ஆழ்வார் வரிசையில், நெல்லேருழவராக
நானிலம் உயர,
மாநிலம் காத்தவன்.

நோயுற்ற போதும், நுடங்கிடாமல்
நோக்கம் சேர்த்தவன்,
விட்டுச் செல்லும் பணி
விசனம் தூர்த்தவன்.

Tuesday, December 11, 2018

ஊடகம்











உள்ளதை மறைக்கும்
 நல்லதை சிதைக்கும்
வெட்டிப் பேச்சில் வேள்வி நடத்தும்
நடப்பியல் நாசம்
திசை திருப்பும்
தீராவினைக்கு
தீர்வு கேட்கும்
திரைக் காட்சி தினந்தினம்
தீனி சேர்க்கும்
சிந்தனை மழுங்கடிக்கும்
மணித்துளிகள் மாய்த்து
"மாய சாலம்"

மனித உரிமைகள்

கவிஞர்.ழிபா தாகீர்

என்னுரிமைகள், உன்னுரிமைகள், நம் உரிமைகள்
மனித உரிமைகள்
மெக்கானிக் கடையிலிருந்து சிறுவனின் அழுகுரல்,
எனது உரிமைகள் என்ன?,
"கல்வியா அன்றி மெக்கானிக்கா"!

என்னுரிமைகள், உன்னுரிமைகள், நம் உரிமைகள்
மனித உரிமைகள்
ஒரு வீட்டிலிருந்து  சிறுமியின் குரல்
எனது உரிமைகள் என்ன?,
"அடிமைபோல் வீட்டு வேலை செய்வதா
அன்றி கற்பதா"!

என்னுரிமைகள், உன்னுரிமைகள், நம் உரிமைகள்
மனித உரிமைகள்
வீட்டிலிருந்து பெண்ணின் குரல் கேட்டது
எனது உரிமைகள் என்ன?
"அடிமையாகக் காலம் கழிப்பதா
அன்றி உரிமை குடிமகளா"!

என்னுரிமைகள், உன்னுரிமைகள், நம் உரிமைகள்.

(மொழியாக்கம்)

Friday, December 7, 2018

சென்டினலிஸ் பழங்குடிகள்



ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம்
கட்டும் வேண்டாம், கரவும் வேண்டாம்
காசும் வேண்டாம், மாசும் வேண்டாம்
ஆத்திகம் வேண்டாம், நாத்திகம் வேண்டாம்
அடிமை வேண்டாம், மிடிமை வேண்டாம்
கொஞ்ச வேண்டாம், கொடுமையும் வேண்டாம்
எஞ்சியே நிற்கிறோம்!
இயற்கைத் தாயிடம் கொஞ்சியே வாழ்கிறோம்!

இருப்பவர் கொஞ்சமானாலும்
இனிமையில் வாழ்கிறோம்,
இடம் பெயர்ந்து நிற்கிறோம்.

காட்சிப் பொருளல்ல நாங்கள்,
மனிதத்தின் மாட்சிப் பொருள்
அழித்த ஆதிக்கத்தின் ,
அடி தாளாமல்
இயற்கையின் இடி தாங்கி,
செடி கொடிகளுடன்
கடல் அலை தாலாட்டில்,
 காட்டின் அரவணைப்பில்
விலங்குகளின் உறவில்,
பூச்சிகளின் புரிதலில்.

காட்சி அரசியல்,
போலிமைச் சமூகத்தின்
அதிகாரம் நீங்கி,
ஆன்ம விடுதலையில்
வாழ்வை நேசித்து.


அழிவொன்றே அலுவல் பணியான
மனித விலங்கை கண்டஞ்சி!
காணாத தொலைவில் ,
கையடக்க வாழ்க்கையில்.

உம்மிடம் நிலவும் ஓராயிராம் கோளாறுகள்
 ஏற்றிட
சுற்றுலாவில் எம்மை வேட்டையாடாதே!
போடாதே திட்டம்!

நோய்களின் தொகையான மனித சமூகமே!
 உளவியல், உடலியல் தொற்றுகளை
 உம்மிடமே வைத்துக் கொள்,
நிரந்தர வைப்பாக!

 கயமையின் கருவூலமே!,
சகிப்பின்மையின் மத்திய வங்கியே!
சாகசமே!,
வெறுப்புணர்வின் வேள்வியே,
எட்டி நில்!.

எம் விடுதலையை குலைத்து விடாதே!
 காட்சியகம் இல்லை!
 எம் வாழ்க்கை,
 அந்தரங்கத்தை புரிந்து கொள்!

 உமக்குத்தான் அடிப்படை உரிமையா?,
மனித உரிமையா?
இயற்கையை அழித்து வரும்
சர்வதேசக் குற்றவாளியே!
எண்ணற்ற குற்றங்கள்,
கணினியும் கொள்ளாது
கழிசடை சரக்கு நீ!

தரவுகளில் எம்மை காவு கொடுக்கிறாய்!
தள்ளிப்போ!
நாகரிகம் நடத்திய நாசகர போரில்
அடையாளம் காத்திட ,
தற்காப்பு யுத்தத்தில் ,
கலைவரிகள், கலாச்சார நெறிகள்,
தலைமுறைகள் இழந்து.

அறிவியல்  ஆதிக்க சமூகத்தின்
 அடாவடி செய்கையில்
 சிதைந்து, சின்னாபின்னமாய்
 ஓடி, ஓடி, ஒடுங்கி
 மொழி இழந்து,
விழி இழந்து,
 பண்பாட்டு கூறுகள் பறிகொடுத்து
 அமைதி இழந்து,
 அணுக்கம் அகன்று.


இயற்கைப் பேரழிவுகளும் இம்சை சேர்த்து,
இடித்து நொறுக்கியும்,
இழந்த உறவுகள் போக ,
நைந்த இழையின் மிச்சம்
நம்பிகையுடன் ஒதுங்கி வாழும் .
உள்ளதை உயர்வாய்க் கொண்டு!

Thursday, December 6, 2018

முறுக்கும்






திசை திருப்பும் அரசியல்
தசை முறுக்கும்
பசை சேர்க்கும்
பதவி சுகத்தில்.

பக்தி கூட்டும்
பல வண்ணம் ஏற்றும்
பகை மூட்டும்
படம் காட்டும்.

பாசங்கு தேசத்தில்
திரிசங்கு ஊதி
தெரு சங்கம் நிறுத்தும்,
வரி சங்கம்.

வாணலியில் தாளிதம்
நாள்தோறும்,
வன்மம் ஏற்றும்.

விவசாயி போராட்டம்














கோவணம் கேவலம்!
அம்மணம் அவமானம்!

நிறைவேற்ற வாக்குறுதிகள்..............?
நிலையற்ற காப்பு/உறுதிகள்..............?

'பைன் காடு'



கவிஞர்.கப்ரியிலா மிஸ்ட்ரல்

காட்டிற்குச் செல்வோம்
இக்கணம் நாம்,
விரைந்திடும் மரங்களின்
காட்சி உம் முன்,
தங்கி  அவற்றிடம் உம்மை அளிப்பேன்
ஆனால்,
அவை குனிந்து வர
இயலா.

ஊருயிரிகளை கண்காணித்திடும்
இரவு,
பைன் மரங்கள் தவிர்த்து  பொறுப்பேற்கா:
பழைய புண்ணுற்ற வசந்தங்கள்,
போற்றிடும் பிசின்
ஊற்றேடுக்கும்,
இறவா பிற்பொழுதுகளில்.

இயலுமெனின்,
அம் மரங்கள் உம்மைச்
சுமந்திடும்,
பள்ளத் தாக்கிலிருந்து
பள்ளத் தாக்கிற்கு,
ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு,
நீ,
தந்தையிடமிருந்து, தந்தையிடம்
தாவிச்சென்றிடும்,
குழந்தையைப் போன்று.

மொழியாக்கம்

Monday, December 3, 2018

டிசம்பர் இரவு



விஞர்.வில்லியம் ஸ்டான்லி மெர்வின்

இருளில் நின்றிடும் பனிச் சரிவு
ஆயினும்,
மரங்களின் தென் பகுதி வறண்டு தொட்ட பொழுதில்.

உறுதி கிளைகள் ஊர்ந்திடும் நிலவைத் தேடி
தோகை சுமந்து,
வந்தேன் இக்காட்சியைத் தேடி,
முதிர் வெண் செடிகள் காண,
மிக முதிர்வுற்றது முதலில் பாழாகி உலர்ந்தது.

நிலாவில் விழித்திருக்கும் காக்கையின் ஒலி,
நான் கேட்கிறேன்
நீர், அதன் விரல்களில்/ன் ஊடாக,
முடிவற்று ஓடிக் கொண்டிருக்கும்.

இன்றிரவு, மீண்டுமொருமுறை
 நான் கண்டேன் ஒரு ஒற்றை வழிபாடு,
 அது எனக்கானது அன்று.

(மொழியாக்கம்)

Saturday, December 1, 2018

'அந்தமான் காய்'

'அந்தமான் காய்' தருவேன்
அதை நடுவேன்
சொந்த மண் அழிவிற்குப் பின்
ஆறுதல்
அடுத்த மாநில' மான்'
கடுக்காயோ!
துடுக்காய் கேட்டேன்!

தென்னைக்கும்
இடதுசாரி ஆகாதோ?
தமிழ்நாட்டில், 'டெல்டாவில்'.

15 கழிந்தது பார்வையிட ,
16ல் பல்லுறுதிகள்.
பகடை உருட்டும் சகடை அதிகாரம் ,
வாடிக்கையாக.
சமதளம் இழந்து,
சம்பிரதாயப் பவனியில்.
' சாதனை சுமந்து' ,
வேதனை சேர்க்கும்.

இழந்தவர் சூழலில், தம்மை வைத்து
தவிப்புணரார்!

சிந்தனைச் சூழ் ஒளி வட்டம்


கவிஞர்.கெவன் ஆர்வுட்

உலகின் ஒழுங்கைக் காட்டு,
அனைத்து பட்டறிவுக்கும் முன்னர்
இது இப்படி, கடு-விளிம்பின்
வெளிச்சம் என்று,
உலகிற்கும், சிந்தனைக்கும் பொதுவான,
மாதிரி இல்லை,
உண்மையைத் தவிர.

மொழி சரியான விளையாட்டன்று,
அவ்வாறாயின்,
எவ்வாறு நாம்
விளையாடியிருக்க இயலும்?
பொருட்களின் கூட்டல்ல  உலகம்
அதை விட மேலானது.
நிலா , வான் போன்று, நடுவம் போன்று
உடல், படுக்கை போன்று,
பாடிடும் மேதாவிகள் அறிவர்.

காதலர் இருவர் படங்கள்
அருகருகே, துயின்று
கனவு கண்டு, விழித்து
மெய்யுலகை, கனவுலகைத்
தாங்கி நிற்பர்
உடல், உடலாக;
சொல், சொல்லாக
சிந்தனை வன,
ஒளி வட்டத்தில்


(மொழியாக்கம்)

வாழ்க்கையின் பாதி


(கவிஞர்.பிரடரிக் ஓல்டர்லின், செர்மானியக் கவிஞர்.
வசந்த கால செழிப்பும், குளிர்காலச் சிரமும் குறித்து, இப்படி .......)

மஞ்சள் பேரிக்கள்
காட்டு முளரிகள் பூத்துக் குலுங்கும்
எங்கெங்கும்
ஏரியை நோக்கி நீண்டிடும் கரை
ஓ! கருணை மிகு அன்னப் பறவைகளே,
முத்தங்களை மொண்டு
தலைக் கவிழ்ந்து
தெளிந்த தூய நீரில்.

ஆ, எங்கு காண்பேன்
மலர்களே,
குளிர்கால வருகையில்
சூரியக் கதிர்கள் எங்கே?
பூமி நிழல்கள் எங்கே?
சுவர்கள் குளிர்ந்திருக்க
பேச்சற்று காற்றில்
வானிலை திசைக் காட்டி
கிரீச்சொலியில்

(மொழியாக்கம்)

சாய்க்கடை சாதனை



உடைந்த சிமெண்ட் கட்டை,
 ஒடுங்கிய மட்டை
ஓட்டம் இல்லா,
ஒப்புக் கட்டை
சப்புக் கொட்டி செல்வார் சாரிகள்,
பாதையில்.

மூக்கைப் பிடித்து, மூச்சுத் திணறி
வெளியே கொட்டுவார் ,
வெறுங்கைகளால்!
ஒப்பந்தம் இதற்கும்,
மழைக் காலம் சில்லறை சேர்க்கும்.

சேறும், சகதியும் சேர்ந்து
 உள்வாங்கும் உலகமாய்!

நொதிந்து நோய்க் கிருமி பெருக்கி
ஆய்வகமாய்!
மூடியதால் முடுக்க வினை
 நொதிப்பில்.

உயர் அதிகார செழிப்பில்,
ஒப்பந்தகர் உயர்வில்!
ஒருங்கிணையும் பொது நலம்.

இவர், அவர், பேதமின்றி
சாலைகள்
சமரச சோலைகள்!
துப்புரவு ஆலைகள்!

Thursday, November 29, 2018

பனியும் நெருப்பும்



கவிஞர்.ராபர்ட் ப்ரோஸ்ட்

சிலர் கூறுகிறார்
இவ்வுலகம்  நெருப்பில் அழியும் என்று,
சிலர் கூறுகிறார்
பனியில் என்று.

என் விருப்ப அனுபவிப்பில்
நெருப்பு என்பவர்களுக்குஆதரவாய்
நிற்கிறேன்.

ஆயினும், இருமுறை அழியுமாயின்,
நான் எண்ணுகிறேன்
வெறுப்பின் போதிய புரிதல்
எனக்குண்டு,

அழிவிற்கு பனியும்
மிகப்பெரிய ஆற்றலே,
போதுமானதாகும்.

(மொழியாக்கம்)

Wednesday, November 28, 2018

ஊஞ்சலாட்டம்





கவிஞர்.கோ சுவான் குவாங்

யார் எழுப்பியிருப்பினும்
கம்புகள் நட்டவரை போற்றுவோம்
சிலர் ஊஞ்சல் ஆடவும்,
பிறர் அதைக் காணவும்.

சிறுவன் ஒருவன் மேலெழும் விசையில்,
முதுகை வில்லாக வலைத்து.
வடிவமுடை பெண்
தன் இடுப்பை உந்தி,
மேலெழுப்பி.

இளஞ்சிவப்பு  முழுக்கால் சட்டைகள்
நான்கும் காற்றில்
படபடக்க,
இரு இணை கால்கள் நீட்டி
பக்கவாட்டில்/அருகருகில்.

வசந்த விளையாட்டுகள்,
யார் அறியார்?
ஊஞ்சல் கால்கள் அகற்றம்,
குழிகள் காலியாக.

(மொழியாக்கம்)

Sunday, November 25, 2018

புதிதல்ல





கணக்கெடுப்பார்
கணம் முடிப்பார்
கணக்கே அறிவியல் என்றறியார்.

அப்படி ஒன்று, இப்படி ஒன்று
எப்படியோ,
கதை முடிப்பார்.

இன்றல்ல, நேற்றல்ல
இதுவரை ,
இதுதான் வரையறை
என்றறைவார்.

தரவுகள் வரவுக்காக,
புள்ளிக்கும் விவரத்திற்கும்.

புதிதல்ல,
நிவாரணம்!

நினைவில் நிற்கும் புன்னகை



கவிஞர்.சார்லஸ் புகோவஸ்கி

எங்கள் வசம் தங்க மீன் இருந்தது,
சுற்றி, சுற்றி வந்தது.
மேசை மீது ,
மீன் கலயத்தில் பலகணி அருகில்,
திடமான திரைச் சீலை,
தாயின் படம் மறைத்து,
எப்போதும் புன்னகை பூத்து,
அனைவரையும் மகிழ்ச்சியாக
இருங்கள் என்று கூறினார்,
'என்ரி மகிழ்ச்சியாக இரு!'
 என்றார்.

அவள் சரியே: உம்மால் இயன்றால்
மகிழ்ச்சியாக இருப்பது
மிக நன்று,
எனது தந்தை தொடர்ந்து
அவளை துன்புறுத்தி வந்தார்
என்னையும் சேர்த்து,
வாரத்தில் பலமுறை.

6.2 அடியில் நெடிய தோற்றம்
உள்ளார்ந்த சினத்துடன்,
அவருள்
என்ன தாக்கிக் கொண்டிருந்ததோ.

என் தாய், பரிதாபத்திற்குரிய மீன்,
மகிழ்ச்சியாக வாழ்ந்திட விழைந்து,
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள்
அடிபட்டு,
என்னிடம் 'மகிழ்ச்சியாய் இரு என்ரி!
ஏன் புன்னகைக்கவில்லை?' என்பார்.

பின்  புன் முறுவல் இடுவார்,
எப்படி என்று,
நான் அதுவரை
கண்டிராத மிகவும் துக்கமான புன்னகை
அதுவாக,

ஒரு நாள் தங்கமீன் இறந்தது,
ஐந்து மீன்களும் இறந்து மிதந்தன.
அதன் கண்கள் திறந்தபடியே,
ஒருக்கலித்து மிதந்தன.

 தந்தை இல்லம் வந்தபின்,
அவைகளை வீசி எறிந்தார்
பூனையிடம்,
சமையலறை தரை மீது.

நாங்கள் பார்த்திட,
எங்கள் தாய்
புன்னகைத்தார்.

(மொழியாக்கத்தில்)

ஏற்கவில்லை




உதிரியானேன்  என்றாய்,
ஆயினும் சிதறவில்லை!
ஒட்டாததால் உடைந்தேன்
என்றாய்,
உடைந்தாலும்,
உருவம் குலையவில்லை!
உருப்படியில்
தேய்வில்லை!

உள்ளது மாறினும்,
உண்மையில் மாற்றமில்லை!
உயர்வில் குறைவில்லை!
ஓட்டம் நிற்கவில்லை!

தேங்கிய அணி,
ஓங்கிய வளர்ச்சியில்லை!
ஒத்தடம் போதவில்லை!
ஒளடதம் ஏற்கவில்லை!

Friday, November 23, 2018

நெகிழ் பிணை



கவிஞர்.நவோமி சிகாப் நை

என் உடன் பிறப்பு தனது சிறிய வெண் படுக்கையில்,
உறவு இழையின் ஒரு முனையில்.
இன்னும் விழித்திருந்தேன் சமிக்ஞையில் நான்,
பிணைந்திட மறு முனையில்.
நாங்கள் பேசியிருக்கலாம்,
ஒருவருக்கொருவர் பாடியிருக்கலாம்,
ஒரே அறையில் ஐந்தாண்டுகள் நாங்கள்,
நாள் முழுவதும் நாங்கள் சண்டைபிடித்து இருந்தாலும்,
தேய்ந்த சிறு முனையுடை மெல்லிணை
ஆறுதல் அளித்து, எம்மை இணைத்தது இருளில்.

முதலில், ஆழ்ந்து உறங்கியபோதில்
இழை முனை தரையில் வீழ்ந்து துக்ககரமாக,
அவனைக் காணவில்லை,
எனினும்
அவனின் சீரான மூச்சை கேட்க இயலும்,
முன் நின்றது
பிரிந்து தொடர்
எம் வாழ்க்கைப் பயணம்.

(மொழியாக்கத்தில்)



Thursday, November 22, 2018

இந்த முறை பேருமா?








எண்ணெய் கசிவிற்கே
கசியவில்லை!
'வர்தா'(சிவப்பு) வுக்கே
வாய்க்கவில்லை!
'தானே'வுக்கு
 தயவில்லை!
'ஒகி'க்கு
ஓட்டமில்லை!
 சென்னை வெள்ளம்
செல்லுபடியாகவில்லை!

'காஜா'வுக்கு.........?

Wednesday, November 21, 2018

மரண தேவன்


கவிஞர். நசீர் அக்பராபடி

பேராசை , தூண்டுதல் விட்டொழி,
உமது அண்மை, தொலைவு சுற்றுச் செலவு
மறந்துவிடு;
மரண கொள்ளையன் தமது எக்காள இசை நிகழ்த்துகிறான்
பகல் இரவை கொள்ளையிட்டு;
இடம் விட்டு இடம்,  உமது பரிவாரங்களுடன் ஏன் சுற்றித்திரிகிறாய்;
சுள்ளியும் கூட இறுதியாக உம்முடன் சேரா மரணம் நேர்கையில்;
உமது வளங்கள், பெருமைமிகு வாழ்க்கை  யாவும்
உமக்கு பின்னால் நின்று போகும்;

உமது போர்வாள், கேடயங்கள் கண்டு தற்பெருமை அடையாதே;
மரணத்தின் ஈட்டியை கண்ணுற்று
அவை உம்மை விட்டு அகன்று விடும்;
தனியாக, பாலைவனத்தில் புதைகுழியின் தூசு
உமக்கு உணவாகும்;
அந்த பாலையில், மெய்யாக, நசீர்,
ஓர் ஊருயிரியும் உம்மிடம் வருகை தராது;
உமது செல்வங்களும், செழிப்பான  வாழ்க்கை முறையும்
அகன்று போகும்;
 மரண தேவதை தனது முதுகில் உம்மைச் சுமக்கும்
 தருணம்.

(மொழியாக்கத்தில்)



கஜா புயல்










எட்டிய தூரம் கொட்டிய மழை,
சுற்றிய வளி, சூறாவளி
 சுருண்டது வேதாரண்யம்
 சுழல் விசையில்.

முற்றிய துயரம், வற்றிய கண்ணீர்!

தலை சாய்ந்த தென்னை,
குலை சாய்ந்த வாழை,
சரிந்த கருப்பம் கொல்லை,
பிஞ்சு பிளாகாய்,
பஞ்சு பஞ்சாய்ப் பறந்து ,

மாவடை, மரவடை யாவும் மல்லாந்து,
மடிந்தது வாழ்வாதாரம்,
சேர்ந்தது
உயிர்ச்சேதம் .

கால்நடைகள் கதறின,
கடுஞ்சீற்றத்தில் சிதறின
ஆயுள் முடிந்து.

குடிக்க நீரில்லை!
கொடுப்பார் யாரும் இல்லை!
உண்ண உணவில்லை!
உருப்படியும் தேறவில்லை!

ஓலைக் குடியும் இருந்த இடம்
தெரியவில்லை!
மின் கம்பங்கள் வில் கம்பாய்
வீழ்ச்சியில்!

நிமிர்ந்து நிற்க இயலவில்லை!
காவிரிப் படுகை மக்கள்
அல்லலுக்கு, அளவில்லை!

 வேனிற்காலத்தில்
 வெளிச்சம் இல்லை!
கொடி பிடித்தும், குரல் உயர்த்தியும்
கொடுப்பினை இல்லை!

வாழ்வாதார நீர்,
 வாய்தாவும் தீர்வில்லை!
கை கொடுக்கும் தை,
கனவும் வசமில்லை!

இருண்ட காலம் எதிரில்,
இம்மியும் இளிப்பில்லை!

நகரத்தின் துயரில் நாட்டம் கொள்வார்!
கிராமங்கள் என்றதும்
விலகிச் செல்வார்!


உழுவார் உடைந்தார்!
 உலகத்தார் மறப்பில்!

கதறுகிறார்!
கண்ணீரும் கம்பலையுமாக,
பதறுகிறார்!
பட்டினி, பசியில்.

குழந்தைக் குட்டிகள்
குளிரில், கொசுக்கடியில்,
மருத்துவமும்
எட்டிப்போக.

மறைக்க மாற்றாடை இன்றி,
மண் மாணிக்கமாய்
உறக்கம் தொலைத்து,
உறவை இழந்து.

எப்போதும் போல்,
நிவாரணம்
அடையாளமாய்!

நிரந்தர தீர்வு,
நித்திய தரித்திரராய்!

பல புயல்கள் கொடுத்த அடி,
தீரா வடுவாய்!
இடிமேல் இடி வாழ்க்கை ,
இயல்பாய்!

விதியை நம்பும் வேதனையாய்!
அடிப்படை அகன்று
அந்நியமாய்!

விளிம்பு நிலை விசாலமாகி,
மீளாக் கடனில்,
மிரட்டும் அதிகாரம்!
யதார்த்தமாய்!

நொடிந்து, நொந்து
கூலி உழைப்பாய்
பெயர்ந்திடுவான்,
விவசாயி-மீனவ உழைப்பாளி!










Monday, November 19, 2018

சூறாவளி


கவிஞர்.அப்டாப் அலம்

வேய்கூரை வீடுகள், பெருமழையில்
வாய்ப்பிளந்து,
கொடுஞ் சூறாவளி
அழிவு-அழிவு எங்கெங்கு காணினும்,
ஆக்கம்  இல்லை.
வேரோடு சாய்ந்த மரங்கள்,
கவிழ்ந்த துயரத்துடன்.
கதறினர் அனைவரும்
நம்பிக்கை இழந்து
இயற்கையுடன் எவர் போரிடுவார்?
எவர்,
நமது கனவை வீழ்த்துவார்?


தொலைவில் ஒலி,
கேட்கிறது.
நாமே, நாம் மட்டுமே,
வேறேதும் இல்லை.

(மொழியாக்கத்தில்)

ஒரு பெண்






எஸ்ரா பவுண்ட்.

எம் கைகளில்  நுழைந்தது
மேற் கரங்களில் படர்ந்த  கன்று
மார்பில் கீழ்நோக்கி வளர்ந்தது
என்னுள் இருந்து கிளைத்தது

நீயே மரம்,
நீயே பாசி,
அசைந்தாடும் காற்றின் ஊதாவும் நீயே
உயரிய குழந்தையும் நீயே,
இவை யாவும்   மதியீனம் உலகிற்கு.

(மொழியாக்க முயற்சி)

அவன் படகு

 கவிஞர்.கெலஸ் வெலெரியஸ் கெட்டுல்லஸ்

நீங்கள் காணும் இப் படகு, நண்பர்களே!
 மிக விரைவான கலம் என்று கூறிடும்,
பாய்மரமோ அன்றி துடுப்பு உழைப்பில் செலுத்தப்படுவதோ,
வேகத்தில் எதுவும்  அறைகூவல் விடுக்க இயலாது,

அச்சுறுத்தம் அட்ரியாட்டிக் கடற்கரை,
சைக்கிளடாசு தீவுகளோ, பெருமை மிகு ரோட்ஸ்,
அன்றி அச்சம் தரும்
போசுபரஸ் தீவுகளோ, கருங்கடற்கரையின் சோகமான விரிகுடாவோ,
அதனை மறுக்க இயலா,

படகாவதற்கு முன், இலைகள் அடர்ந்த காட்டு மரமாக:
சைடோரஸ் சிகரங்களில், அடிக்கடி இலைகளின் இரகசியங்களுக்கு
ஓசை கூட்டி,
இவைகள் உமக்கு நன்கு புரியும்,
அமஸ்டிரிஸ், மற்றும் அடர் மரங்கள் போர்த்திய சைடோரஸ்
அறிந்திடும்:

ஆரம்பத்திலிருந்து உமது மலைச் சரிவில் நின்று,
அதன் தழும்புகள் உமது நீரில் தோய்ந்து,
உரிமையாளரைக் கடந்து, பல தலைகனம் உடைய தடைகளையும் தாண்டி,

வீசும் காற்று படகின் வலப்புறம் அன்றி இடப்புறம் கூவியதோ,
அல்லது பெருஞ்சுழற்காற்று  அடுக்கிடையீட்டுத் தகடுகளை,
 பதம் பார்த்ததோ
 ஒரு பக்கத்தில், மறு பக்கத்தில், முழுவதுமாக:

கடற்கரை வதியும் தெய்வங்களுக்கு படையல்
 செய்திடவில்லை,,
அயல் தேசக் கடலிலிருந்து,
தெளிவான ஏரிக்கு வருகை தந்தபோது.

இவையாவும் கடந்த காலம்:இங்கு
மறைவிற்குள்,
அமைதியாக வயதாகிக் கொண்டிருக்கும்,
தன்னையே, காஸ்டர் மற்றும் சகோதரருக்கு- சுவர்க்க இரட்டையருக்கு- அளிக்கிறது.

(எமது மொழியாக்கத்தில்)

Friday, November 16, 2018

ஏரிடஸ்








கவிஞர்.எஸ்ரா பவுண்ட்

நாணம் கொண்ட ஏரிடஸ்
அழகற்ற ஒருத்தியை மணந்தான்,
வாழ்க்கை குறித்து எரிச்சல்,
ஊக்கம் கெட்டு, ஆர்வமிழந்து
தன் நெஞ்சுக்குள், 'எனக்கு நான் பயனில்லை,
'அவளுக்கு தேவையாயின், எடுத்துக் கொள்ளட்டும்'.
பேரழிவுக்குள் தன்னை  அணைத்துக் கொண்டான்.

(மொழியாக்கத்தில்)

Thursday, November 15, 2018

ஒரு ஒப்பந்தம்







 கவிஞர். எஸ்ரா பவுண்ட்

உம்முடன் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன், வால்ட் விட்மன்_
நீண்ட காலம் உம்மை வெறுத்துள்ளேன்.
பிடிவாத தந்தையின்,
வளர்ந்த குழந்தையாக நான் உம்மிடம் வருகிறேன்

நட்பு நாடும் அகவை இப்பொழுது.
புதிய தடம் உடைத்தவன் நீ,
செதுக்கும் காலம் இது.
நம் வசம் இளங்கன்று ஒரு வேர்.
இடையே கொடுக்கல் வாங்கல் நடக்கட்டும்.

(எமது மொழியாக்கத்தில்)

Wednesday, November 14, 2018

நாட்களில் முழுமை இல்லை











இரவுகளில் முழுமை இல்லை
வாழ்க்கை நழுவுகிறது ஒரு வயல் எலியாக
புல்லை அசைக்காது

எஸ்ரா பவுண்ட்

(எமது மொழியாக்கத்தில்)

டோரா டில்லர்










கவிஞர்.ஜேக் பிரிலட்ஸ்கி

'என் வயிற்றில் நிறைய பட்டாம் பூச்சிகள்!'
புலம்பினாள் டோரா டில்லர்,
அவள் தாய் பெருமூச்சிட்டாள். ' அதில் வியப்பேதுமில்லை
நீ கம்பளிப்பூச்சு உண்டாய்!'

(எமது மொழியாக்கத்தில்)

Tuesday, November 13, 2018

சுவர்க்கத்தின் இருள்

 கவிஞர்.மாட ஜோ சாய் ஸ்கொய்ர்

தனித்து, வெறிச்சோடிய தெருக்களில்,
நான் நடந்தேன்.
குளம் போல் தேங்கிய,
இரத்தத்தின் ஊடாக,
விரிந்த  வளமான, விளைச்சல் மிக்க நிலத்தில்.
கிளர்ச்சியாளர் பெற்ற சமாதானம்
இதுவா ?


எமது தாய், தமக்கைகள்
 நம்பிக்கை இழந்து
அவர்கள் விருப்பத்திற்கு எதிராக,
அறியாமையை சீர்குலைத்து, அத்துமீறி,
கற்பழிப்பவராக, கொள்ளையராக,
குருதி வெறி, குற்ற மூர்க்கராக
அமைதியான நிலத்தில் தடம் பதித்தனர்.

காற்று இனிமை இழந்து
வலியுடன், வலிமை இழந்து.
சொந்த நாட்டிலேயே பிணைக் கைதிகளாக,
முட்கள் அடர்ந்திட,
 மந்தமான எதிர்காலத்துடன்.


இது ஒரு அச்சமான தருணம் அன்றி
 வேறல்ல.
வல்லூறுகள் கொண்டாடும் தினமாக.
 மெச்சத்தக்க நினைவு உடல்கள்,
 குப்பை கூளமாக,
எமது இதயங்கள், ஆன்மா இரத்தம் சொரிய.

ஓ! சிதலமடைந்த,
பிளவுபட்ட, தாய் நாடே! 
உமது ஆறுதலுக்காக, 
அமைதியை தக்க வைத்திடு.
உமது பெண்கள், பிள்ளைகளின்
விருப்ப ஆசை து:
உம்மிடம் வேண்டுகிறோம்,
இனிமையான தாயே,
எம்மீது இரக்கம் காட்டு!

(எமது மொழியாக்க முயற்சியில்)

Monday, November 12, 2018

வேனிற்காலம்





காத்திருக்கிறோம் நாங்கள்.
நீங்கள் இங்கே,
எம்மை உயிர்ப்புடன் வைத்திட,
கொடுங் குளிர்கால கொடுமையிலிருந்து.
பறவைகள் மீண்டன.
நடவடிக்கைகள் உயிர்ப்புடன்.
அவரவர் ஆர்வக் கிளர்ச்சியில் விளையாட்டு.
ஆம்! கோடை மீண்டும் வருகை.
ஆயினும், எமது சிந்தனைகள் அலைகளாக.
மழை ஏன்?
எமது வகுப்பறை தவிர்த்திட.
நடவடிக்கைகள் விலக்கி.

உம்மை புரிந்து கொள்ள எம்மால் இயலவில்லை.
நீ கோடைக் காலமா?
கோடை மழை என்று விளிக்கலாமா?
தயை செய்! தயை செய்!  விடை சொல் .

*சொந்த நாடான சியோரா லியோனிலிருந்து, போட்ஸ்வானாவிற்கு புலம் பெயர்ந்து, கவிஞர்.மாட ஜோ சாய் ஸ்கொய்ர், வேனிற்கால அனுபவத்தை, தனது நாட்டு பருவ நிலையோடு, ஒப்பிட்டு எழுதியது.

(எமது மொழியாக்க முயற்சியில்)

Sunday, November 11, 2018

நாட்டுப்பற்று




நாட்டை விரும்பு, விசுவாசமுடன் இரு;
சக நாட்டினர் மெச்ச, விருப்பத்தை வெல்,
ஆக்க விமர்சனத்தை மதிக்க கற்க.
தவறாக வழிநடத்தக் கூடும் வசீகரிப்புகள் தடுத்திடு.
உமக்குரியதை ஏற்றுக்கொள்,
பிறரிடம் காண் நற்பண்புகளை.
உமது நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்து,
நல் மாற்றம் கொண்டு வா.
பலவிதங்களில் உம்மால் இயலும்.
விசுவாசமிக்க போர்வீரனாக,
சுயநலமற்ற அரசியல்வாதியாக
சமூக தரத்தின் மேம்பாட்டில்.
புவியில் நீ உதித்ததின் நோக்கம் அறிந்து,
நாட்டுப் பற்றே ஒரே வழி
உம் நற்பணிகளால் நின்றிலங்கிடும் என்றென்றும்.
நாட்டுப்பற்று!  நாட்டுப்பற்று! நாட்டுப்பற்று!

கவிஞர். மாடா ஜோ ஜாய் ஸ்கொயர்

*எமது மொழியாக்கத்தில்.

மே 25


ஒளிரும் அழகிய நாள் அது,
அதன் குளிர்ச்சியும் மென் தென்றலும்.
தெருவெங்கும் வண்ணகோலங்கள் மின்னும்.
ஞாயிறு காலை என்றொருவர் கூறிவிடலாம்.

அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சி ஒளியாக,
இறை வழிபாடு உற்சாகம் அளித்திடும்.
விரைவில்,விரைவில், அனைத்தும் அமைதியாக.
துப்பாக்கிகள் ஓசை காற்றில் கலந்தது.

ஒவ்வொரு ஆன்மாவும்  அடைக்கலம் சென்றது.
வண்ணங்கள் புலப்படா தடுமாற்றம்.
சண்டையிடும் பையன்கள் அணிவகுப்பில்.
இருப்பினும் இது, முதல் இராணுவப் புரட்சி.

வாழ்க்கையே சலனமற்று அமைதியாக.
வீரர்களின் குரல் செவிகளை துலைத்தது,
அதிகாரிகள் குன்றுகளை நோக்கி ஓட்டம்,
ஆட்சிக் குலைவுக்கு இட்டுச் செல்ல.

நாம் யாவரும் தடகள வீரர்கள்,
வாழ்க்கையைக் காத்திட ஓட்டம்,
இரக்கமற்ற கொள்ளையர் பிடிகளில்,
கெட்ட நினைவாக அது.

செவிகளில் ரீங்காரம் எழுப்பிக் கொண்டிருக்கிறது,
கடப்பது சிரமம் ஆயினும்.
அதன் கொடூரம் வலி,
வேண்டாம் இவை யாவும் யாம் வேண்டுகிறோம்.

*சியேரா லியோன் நாட்டில், சனநாயக ஆட்சி 1996ல் மீட்டெடுக்கப்பட பிறகு, நிகழ்ந்த இராணுவப் புரட்சி ஒட்டி, நிகழ்ந்த நடவடிக்கைகள் பற்றி, கவிஞர். மாடா ஜோ ஜாய் ஸ்கொயர், எதிரொலிப்புகள்.

*எமது மொழியாக்கத்தில்.

Saturday, November 10, 2018

ஒரு கன்னியின் அறிவுரை


எச்சரிக்கை, ஓ ஏந்திழையே
தேசத்தின் பெருமை நீ
குதறும் ஓநாய்கள் குதூகல உணர்ச்சியில்
உம்மை மலிவாக எண்ணும்
அவர் பசப்பு வார்த்தைகளை செவி மடுக்காதே
பொய்யுறுதிகளை ஏற்காதே
வழுக்கு விலாங்கு அவை
நல்லுணர்வில் தேர்வு செய்
உள்ள வெளிப்பாட்டில் அவரை ஆய்ந்து கொள்
உள்ளடக்கத்தை முகத்தில் வாசிக்க இயலாது
ஒளிந்திருக்கும் ஏமாற்று, எச்சரிக்கையாய் ஓ,
இம் மண்ணின் மகளே
பணி அனைத்தையும் பரிசீலனை செய்திடு
வார்த்தைகளை அல்ல
வீழும் உடல் ஒவ்வொன்றையும் தேடிடு
நீண்ட கூரிய பற்களின் பதிவுகளைத் தேடி
அவை கண்டபின் உண்மையாயிரு
மிதக்கும் காற்று கனவுகளை நீக்கிடு
காற்றாடியாய் பறந்திடு, உண்மையில்
அன்பு காலப் போக்கில் வளர்ந்திடும்.

(கவிஞர்.மாடா ஜோ ஜாய் ஸ்கொயர். 8, மார்ச், 2003ல் உலக மகளிர் நாளையொட்டி, சியாரா லியோன் பல்கலைக் கழக மாணவிகளுக்காக அளிக்கப்பட்ட கவிதை.மொழி பெயர்ப்பில்.)

கனவுகள்



நான்காண்டுகளுக்கு பதிலாக ஆறாண்டுகள் கழிந்தன
பேரச்ச அனுபவங்களில்
பேரச்சம் தவிர்த்து ஏதும் இல்லை எம் நிலத்தில்
நான் வாழ்ந்தேன்
குடும்பத்தை விட்டு நீங்கி
தியாகங்கள் சேர்த்தேன்
இன்றைய வெளிச்ச, ஒளிர் நாட்கள்
வசப்பட: கனவுகள்
மீப்பெருமை முந்தியிருக்க காண்கிறேன்
நெடிய பாதையாயினும்
அங்கு சேர்வேன் என்பதறிவேன், மனிதர் பேராழியைக்
கடந்துள்ளார்
சிலர் கலத்தில்
வேறு சிலர் உள்ளத்தில்
வெகு சிலரே முட்படுகைப் பாதையில் நீந்திக் கடந்தார்;
நான் அறிவேன்
புன் சிரிப்புடன் இறுதியில்
பேராழி பெரும் பரப்பாயினும்
எம்மால் கடந்திட இயலும் என்றறிவேன்.

(சைரா லியோன் நாட்டின்," மாடா ஜோ சாய் ஸ்கொய்ர்", போட்ஸ்வனா நாட்டு பல்கலைக் கழக, இலக்கியக் கல்வித் துறை மாணவர்)

(எமது மொழியாக்க முயற்சி)

தனிமையில்


நிரம்பி, நிகரற்று விளங்கிய
எமது கல்லூரி.
கைம்பெண் கோலத்தில்
தனிமையில் வெறுமையாக
சமம் இழந்து.

இளவரசியாக விளங்கியவள் பண்ணை அடிமையாக,
கண்ணீர் கசப்பு கன்னங்களில் வழிந்தோட.
விருப்பாளி எவரும் நிறைவளிக்கவில்லை.
பகைவராக அனைவரும்.

பொலிவிழந்த முகத்துடன்.
செவித்திறன் இழந்து.
வெளுப்பு கண்களை விழுங்கிட
குன்றிய வலிமை தொடைகளில் படர.

ஓ! எம்மை உருவாக்கிய இனிமை நிறை
ஊற்றே
தனிமை, சோர்வு கொள்ளாதே,
மகிழ்நிறை நாட்கள் உம்முன்னே நான் காண்கிறேன்
வலியும் கண்ணீரும் முடிவுறும்.

(சைரா லியோன் நாட்டின்," மாடா ஜோ சாய் ஸ்கொய்ர்", போட்ஸ்வனா நாட்டு பல்கலைக் கழக, இலக்கியக் கல்வித் துறை மாணவர்)

(எமது மொழியாக்க முயற்சி)

Thursday, November 8, 2018

42 வயதினிலே



காலங்கள் கரைந்தன விரைவாக
விடுதலைக் குளத்தில் எம் அகவை நாற்பத்திரெண்டு
உடானாளிகளுக்கு காண்பிக்க என்ன இயலும், எம்மால்?
வலியாகினும், உறுதியான, வளமான பெற்றோரில் ஒருவனாக குரல் எழுப்புவேன்
பசி வாட்டிட, ஆசை அலைக் கழிக்க, ஏழ்மை முகத்திரையில்
எம் குழந்தைகள்
தற்கணம்! அகன்று விட்டனர் அனைவரும் எங்கோ.

தொலை வெளியில் வாழ்க்கை தொங்கலாட
நன் மருத்துவராக சிலர்,  நொடிதொறும் நோய் நொடியில்
தொலைந்து கொண்டிருக்கின்றனர், நோயுற்றோர் இங்கே
நல்லாசிரியனாக அங்கே, பலமிழந்த பள்ளிகள் இங்கே,
தொலை தேசங்களில் அடுக்களை சுத்தம், கார் கழுவி உழைப்பை விற்று ஊழியம்,
எமது நிலங்கள் தரிசாக கேட்பாரற்று,
மீண்டும் தொடர்வேன் கட்டாயம், சார்பு வாழ்க்கை தெரிவு செய்வேன்.

(சைரா லியோன் நாட்டின்," மாடா ஜோ சாய் ஸ்கொய்ர்", போட்ஸ்வனா நாட்டு பல்கலைக் கழக, இலக்கியக் கல்வித் துறை மாணவர்)

(எமது மொழியாக்க முயற்சியில், மற்றுமொரு படி)

Tuesday, November 6, 2018

புதையல்







வீட்டிற்கு கீழே, விடிவெள்ளியென்று!
எவர்க்கும் ஆசை உண்டு.
ஏக்கம்  மொண்டு,

கட்டிய வீட்டடியில் கதிமோட்சம் என்று
கொட்டிய சேதி,
கோடி சேர்க்கும் என்று,
உப்பிய வயிறு ஒட்டவில்லை.

ஓயாத ஆசை உறக்கம் கலைக்க,
சொப்பன வாழ்க்கை,
நடப்பியல் கடந்து,
மறப்பியலில் மல்லாந்து.

தும்புக்கு







தும்புக்கு ஆளவில்லை!
தூசுக்கு குறைவில்லை!
குப்பைக்கு பஞ்சமில்லை!
குண்டும் குழியும் ஏமாற்றவில்லை!

வெட்டவும் கட்டவும்,
தோண்டவும் மூடவும்
ஒப்பந்தம் தொய்வில்லை!

நெடுஞ்சாலை, நீள்சாலை,
குறுக்கு வெட்டில் கோணல் இல்லை!
விழுந்தால் என்ன? உடைந்தால் என்ன?

மூடும்போது பார்க்கலாம்!
முக்காட்டில் பணிமுடிப்பு!

Monday, November 5, 2018

திரை







ஒரு நூறு தடவைக்கு மேல் கண்டேன்,
சிலர் உரிமை கோரிய இசைக் காட்சி
நெடிய திரை முடிவுக்கு வந்தது,

 தொலைக்காட்சி செய்தியில்,
அதன் இறுதி திரை இறக்கம் அறிந்தேன்.

பூக்கள் சொரிய, குதூகல குரல்கள் ஒலிக்க,
அழுகை சேர, இடி முழக்க இறுதி காட்சி.

குறிப்பிட்ட இக்காட்சியை நான் காணவில்லை
ஆனால் நான் அறிவேன்,
நான் கண்டிருந்தால் என்னால் பொறுத்திருக்க முடியாது,
 என்னை நோயில் தள்ளியிருக்கும்.

என்னை நம்புவீர்,
உலகம் அதன் மக்களும்,  கலாபூர்வ பொழுதுபோக்கு
எனக்கு எதையும் அளிக்கவில்லை.

ஆனாலும், அவர்கள் மகிழட்டும்,
அவர் என்னை விட்டு அகன்றிருப்பர்,
என்னுடைய இடிமுழக்க பாராட்டுகள்,
அவர்களுக்கு.

('கர்டைன்' தலைப்பில் ஆங்கிலத்தில்" சார்லஸ் புகோவ்ஸ்கி" இயற்றியது. தமிழில்)

Sunday, November 4, 2018

லிங்கன் நினைவுச் சின்னம்: வாசிங்டன்.






நாம் சென்று காண்போம் பண்டைய போர்த் தலைவனை
நிலவொளியில் பளிங்கில் வீற்றிருப்பானை,
தனிமையில் பளிங்கில் நிலவொளியில்,
பத்தாயிரம் நூற்றாண்டுகள் அமைதியில்,போர் மறவன்,
இலட்சம்,பல இலட்சம் ஆண்டுகள் அமைதியில்.

அமைதியாக--

ஆயினும் ஓர் அழியாக் குரல்
காலத்தின் காலமற்ற சுவர்களை எதிர்த்து-
பண்டைய போர்த் தலைவன், இராசாளி பறவையாக.

(லாங்ஸ்டன் அக்ஸ் ஆங்கிலத்தில்" Lincoln Monument: Washington")

தமிழ் மொழியாக்கத்தில்.

" மவுண்ட் செயின்ட் மிசல்"

07.08.18, காலை 7 மணிக்கு தொடங்கிய பயணம், " மவுண்ட் செயின்ட் மிசல்", நோக்கி.130 கி.மீ. வேகத்தில், பயணக் கட்டண தேசிய நெடுஞ்சாலையில்,விரைவாக. பல ஊர்களைக் கடந்து பக்கவாட்டில்; மர அடர்த்திகள்; சோலைகள்; கோதுமை வயல்கள்; சூர்யகாந்தி விளைச்சல்கள்; சோளப் பயிர்கள்; இவைகளை துரிதமாக கடந்திட, செங்குத்தான சாலைகள்.

ஏற்ற இறக்கங்கள், சில நேர்வுகளில் வளைவுகள்.ஊர்களின் ஊடாக, கிராமங்களைத் தொட்டு, வேகம் குறைத்து, எண்ண வேகத்திற்கு ஈடளிக்க இயலாத விரைவு வாகனங்கள், முறையாக முந்திச் செல்ல, ஒருவாறு சமதளப் பகுதியை தொட்டது எங்கள் வாகனம்.

தொடுவானத்தில், உயர்ந்து நிற்கும் நெடுங்குன்றத்தில், "செயின்ட் மிசல் கோட்டை", கோவில் தென்பட, அனைவருக்கும் உற்சாகம், மகிழ்ச்சி எல்லை கடந்து."யுனஸ்கோ", அங்கீகரிப்பில் வரும், 'மரபுரிமைச் சின்னம்',அது.

வாகன நிறுத்தத்திற்கு அகர வரிசை ஏற்பாட்டில், அடுத்தடுத்து நிறுத்தம்.ஊழியர் ஒழுங்குபடுத்த, எமது வாகனத்தை நிறுத்தி, பார்வையைச் சுழல விட்டோம்.சுள்ளென்ற வெயில், சற்று சுணங்கியது.

அண்மையில், மக்கள் கூட்டம் வண்ண,வண்ண ஆடைகளில். பல நாடுகளிலிருந்து வரிசையாக, ஒழுங்கமைவிற்குள்.இலவயப் பேருந்து நோக்கி, ஒவ்வொன்றாக ஊர்ந்து கொண்டிருந்தது.அவ் வரிசை ஒழுங்கில் எங்களையும் இணைத்துக் கொண்டோம்.

காலை சிற்றுண்டி விடுத்து, ஒன்றிரண்டு பிசுகட் எடுத்துக் கொண்டது போதவில்லை.பசி எடுத்திட, மீண்டும் சில சில்லுகள் கொரித்துக் கொண்டே, மெல்ல,மெல்ல கடந்து வண்டியில் ஏறினோம்.

சொகுசு வாகனம், துப்புரவுடன். இரைச்சல் இல்லாத இனிய ஓட்டம்.செல்லும்பாதை இரு மருங்கிலும், உணவுக் கூடங்கள்,விடுதிகள், 'கேம்ப் ஏற்பாடுகள்', அலங்கரித்திட, சில நூறு மீட்டர் சொகுசு வாகன அனுபவம்.

நெளிந்து செல்லும் பாலத்தை தொட்டு, இருபது நிமிட பயணத்தில், பாலத்தின் கீழே, ஆற்றுப்படுகை. பின்னோட்ட நீர்ப் பகுதி; பின் வாங்கி இருக்க; இரு புறமும் விழிகளைச் சுற்றி; விரிவானம், விசாலக் கோணம் கண்டு; வியந்து , பல மொழி பேசும் மக்கள் உணர்வுகளோடு கரைந்து, என்னை மறந்தேன்!

நிறுத்தம் வந்த போது, தானியக்க கதவுகள் திறந்திட, வரிசையாக இறங்கி,பாலத்தின் நடைபாதையில் பயணப் பட்டோம்.செல்போன்கள் சொடுக்குப் போட, கேமராக்கள் சுழன்று பல காட்சிகளை படத்திற்குள் கவர்ந்திழுத்திட, ஆற்றுப்பகுதியில் இறங்கினோம்.

இடையிடையே சிற்சில பாறைகள், பச்சை படர்ந்து, உலர்ந்தும், உலராமல்,நாங்கள் உட்கார்ந்து, அன்னாந்து பார்த்திடும் கோட்டை!களிப்பு மண் வரி கோடுகள் காய்ந்தும், காயாமல், கவுச்சி வாசம்.

சில் நீர்த்திட்டுகள் எம்மை அழைத்திட, ஆடை சுருட்டி, மூடணி அவிழ்த்து, முட்டி கால் உயர்த்தி நடை பயின்றோம்.சில்லென்ற காற்று, தூய்மையாக, உடலைத் தழுவ, உன்னத உற்சாகம்.மகிழ்ச்சி தாலாட்ட, கடற் காக்கைகள் வியக்கும் ஒலி எழுப்பி, எம்மை நோக்கி தாழப் பறந்து, தளர்நடை பயின்றது.

இரை தேடி, பாறை இடுக்குகளில் இறங்கிய பறவை அச்சம் தவிர்த்து, தாழ்நிலை பறந்திடும் வானூர்தி போல் ஒலி எழுப்பாது ஒய்யாரமாக ஒப்பிலா காட்சி! நண்பகல் கடந்ததும், நினவின்றி.உணவுப் பொட்டலங்கள் வாகனத்தில்.அழைப்பதும், கேட்காமல், ஒருவாறு நிலை உணர்ந்து, மீண்டும் சொகுசுப் பேருந்தில் வரிசை காத்து ஏறினோம்.இலக்கு சென்றதும், இறங்கி, காரில் அமர்ந்து, சாப்பிட முனைந்தபோது, மழைத்துளிகள் நனைத்திட, உள்ளிழுத்து அமர்ந்து, எலுமிச்சை சோறு, உருளை கலந்து, பிசைந்து, உடன் வந்த விருந்து அளித்திட்ட உணவும் சேர்த்து, மதிய உணவு முடிந்தது.

அடுத்த கட்ட பயணத்திற்கு அணியமானோம்! இலவச சொகுசு வாகனம் மீண்டும் ஈர்த்திட, ஏக்கத்துடன் பின் நின்ற வளமான கறுப்பு நிறக் குதிரைகள் பூட்டிய பழமை வாகனத்திற்கு கட்டணம் செலுத்த இயலாது, பயணம் நீண்டது.

மலைப்பாக செம்மாந்து நின்ற மலை நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்திட தயாரானோம். அதற்கு முன், பின் வாங்கியிருந்த ஆற்று நீர் ஓட்டம், சீராக தன் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது.இயற்கை நீர் ஊட்ட சூழல் கண்டு களித்தோம்.மலைக்கோட்டை வலப்பக்கத்தில், வளைந்து, நெளிந்து செல்லும் படிக்கட்டுகளில் ஏறுவது எவ்வாறு என்ற திகைப்பும்; எப்படியாவது ஏறிட வேண்டும் என்கின்ற உந்தமும் போட்டியிட; கால்கள் முன்னேற சாய்தள பாதையில் சறுக்கு மரம் ஏறுவதுபோல்.இரு பக்கங்களிலும் எண்ணற்ற கடைகள்; அங்காடிகள்;உணவகங்கள்; வணிகம் செய்திட திருவிழாக் கூட்டம் போல் ஏறுவதும், இறங்குவதுமாக.சில தொலைவு கடந்து, ஆசுவாசப்படுத்தி, மகளுடன், ஊன்றுகோல்போல் குடை துணை நிற்க.

எனக்கு முன்னே, மனைவி உற்சாகமாக படிக்கட்டுகளில் முன்னேறி, திரும்பி என்னைத் தேட. படப்பிடிப்பில், கவனத்துடன் எம்மையும் கண்காணித்து பாலா, அப்படியும் இப்படியுமாக சுழல, மச்சியின் உச்சியை அடைவதுபோல்.இடையிடையே உள்ள கோட்டை சந்துகளை, பொந்துகளை கண்டு, அவற்றிடையே காப்பாக பராமரிக்கப்படும் மரங்களை, செடிகளைக் கண்டு, உள்வாங்கிட முடியாத திணறல் காட்சிகள் பதிவேற்றத்துடன்.

மலைக்கோட்டை இடது பக்கமும் நீர் சூழ்ந்து கொண்டிருந்தது.காலையில், ஓடியாடி உட்கார்ந்து களித்து பகுதி, ஆற்று நீர் படர்ந்து சூழ்ந்திருந்தது.நேரம் சென்றிட, மலையை வளைத்திடும் நீர்ச் சூழல். ஒரு நாளைக்கு இருமுறை உள் வாங்குவதும், வெளிப்படுவதும், இயற்கைச் சூழல் கண்டிட, ஆர்வத்துடன் மக்கள் கூட்டம், நாங்கள் நற்பேறு பெற்றோம்."யுனஸ்கோ" மரபு பட்டியலில் இடம் பெற்ற சிறப்புக் காட்சியை கண்டு உற்சாகம்.சலிக்க கண்டு களித்த பெருமை வருட இறங்கினோம்.

எம்மை வரவேற்கும் உற்சாக உணர்வோ! அறியேன்! காற்று சுழன்றது, உடன் மணல் பறந்தது.சுழற்சியில் முகத்தில் அப்பிட, கோட்டை மதில் பக்கமாக, கண்ணாடி அணிந்து, திரும்பி நின்ற கூட்டம் அதிகரித்திட,வானம் கருத்தது.

வண்டின நிறம் சேர்த்து, கும்மிருட்டு மழை மேகம், குளிர்ந்த காற்று, சூறைக்காற்று சுழன்றடிக்க, விசை வேகம் சுருதிசேர்த்திட எம்மை நெட்டித் தள்ள, கைகள் கோர்த்து, ஒருவருகொருவர் ஒத்தாசை சேர்த்து, பாலத்தைவிட்டு தூக்கி எறியப்படுவோமோ, பயம் சேர்த்து, பெரும்பாலான மக்கள் கூட்டம் நடைகூட்டியது.

 விரைந்து முண்டியடித்து, பேருந்தில் ஏறி இடம் சார்ந்திட முண்டியடுத்தும், ஒழுங்கிழக்காமல், வெளிறிய முகத்துடன்.மழைத்துளிகள், ஆலங்கட்டித் துளிகளுடன் கொட்டிட, எம்மீது அங்கி போர்த்தி, குடை பிடுத்து காத்திட்டனர் பிள்ளைகள்.

பனி மழைத்துளிகள் பஞ்சு நிறத்தில், சில்லென்று உடைந்த கண்ணாடித் திவளைகளாக, சில மணித்துளிகள் நீடித்தது. செய்வதறியாது, திகைத்து வண்டியில் ஏறிட, ஒன்றிரண்டு வண்டிகள் விரைந்திட, காவல்துறை, இராணுவம் வண்டிகளில் விரைந்திட, மேலும் இலவசப் பேருந்துகள் பணியில்.

நெருக்கி வண்டியில் ஒழுங்காக உள் ஏறி நின்றோம். ஒரு வழியாக.
அலறிய பத்மினியும், வெளிறிய முகம் இயல் நிலைக்குத் திரும்ப முயன்று கொண்டிருந்தது.

அச்சம் எமக்கில்லை என்று சொல்ல முடியாது.இருப்பினும், நம்பிக்கை மேலோங்கிட, பயணம் தொடர்ந்தது.தருணங்கள் கரைந்திட, புயல் திசை மாறியது.வானம் மேற்றிசையில் வெளுக்கத் தொடங்கியது. வண்டி நிறுத்தம் நோக்கி, மனதில் அசை போட்டு,

 'அச்சமில்லை! அச்சமில்லை!

Friday, November 2, 2018

ஒருக்கலி






வந்த பொழுது, வாழ்ந்த பொழுது
திறந்த பொழுது, நிறைந்த பொழுது
எண்ண ஓட்டம், இயல் நிலைக் கூட்டும்
சூழல் மாற்றம், சூழ்ந்திடும் ஊட்டம்.

ஒத்தாசை உணர்வு, ஒன்றிணை உறவு
பகல், இரவு பகடை, மகிழ்வுடன் உருட்டி,
பள்ளாங்குழி விழும், புன்னகை கூட்டி,
பொழுது சாயினும், சாயாத உள்ளுணர்வு
ஊன்றி,

ஒருக்கலித்து உறங்கி, கனா தொலைத்து
வினா களைந்து, விடியல் வெளியில்
விழா உணர்ச்சியில்.

பூர்வீக புல்லாங் குழல்

அயலகச் செலவில் ஒரு நாள், செவ்விந்தியர்- பூர்வீகக் குடியினரின், புல்லாங் குழல் இசைக் கேட்டேன்.படக் காட்சிகள்/ஓவியக் கோலங்கள் பின்புலத்தில் அடுத்தடுத்து  வரிசையாக, மனங் கவர்ந்திட.

அமெரிக்காவின் மண்ணின் மைந்தர் வாழ்விடம்! 

விலங்குகள், பறவைகள், சூழல் அமைதி, எழில் கொஞ்சும் இயற்கை, மண், மரங்கள்,  அருவிகள், நீர்வீழ்ச்சி, கழுகுகள், குதிரைகள், கூடாரங்கள், புல்வெளிகள்,  மாடுகள்/எருதுகள் மேய்ச்சல் நிலங்களில்.

காட்சிப் படுத்திய விதம், முறை, கண்ணுக்கும், மனதுக்கும் விருந்து.பனிமூட்டம்; உயர்ந்த மரங்கள்; மலை முகடுகள்; குன்றுகள்; ஓநாய்கள்; மகளிர்; நிலவு; இரவு; ஒநாய் உலா. குன்றின் மீது.

பறவைச் சிறகுகள் அலங்கரிக்கும் தலைமுடி அணியுடன்; பின்னப்பட்ட இருக்கை; விறகு மூட்டிய நெருப்பு முன் அமர்ந்து; தியானிக்கும் பெண், குதிரை மீது அமர்ந்த வீரன்.

 மிக மெல்லிய குழல் ஓலி. இதுவரை நான் கேட்டறியா நிலை.அகக் கரணங்களில் சிற்றோடை சிலிர்ப்பு; ஆழ்ந்த அமைதி; தாயின் தாலாட்டு இசையாக; இன்னியல் இன்ப ராகம். எவரையும் வயப் படுத்தும்/ வசப்படுத்தும் இதய கீதம்!

'எதிரித்தா குன்று'

பிரான்சின் நார்மண்டி பகுதி- 'எதிரித்தா குன்று', வடக்கு பகுதியில்; ஆங்கில கால்வாய் அருகில், அழகிய கடற்கரை பள்ளத்தாக்கு.
எழில் கொஞ்சிடும் இயற்கை; சில்லென்ற காற்று தாலாட்ட; சிந்தை குளிர்ந்திட; கால்ப் மைதானம்; படகுகள் அணிவகுத்திட; கடைகள் அணி செய்ய; நடைபாதைகளிலும் உணவகங்கள்; கடல் உணவு வகைகள்;மீன், ஆளி, ஒயின், பல்வகை மதுப் புட்டில்களுடன், மக்கள் மகிழ்ச்சியுடன் தன்னை மறந்து.

குழந்தை,குட்டிகள், முதியவர்,இளைஞர் என பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கைகளில் கேமராக்கள், செல்போன்கள்,ஐ-போன்கள் சகிதமாக அடுத்தடுத்து கிளிக் செய்யும் அற்புதம், வெள்ளைக் குன்றுகள் உச்சியில்.மாதாக் கோவில் அடுத்த குன்றுத் தொடரில்.

கூழாங்கற்கள் கொட்டி நிரப்பிய இறங்கும் பகுதி, சிலர் படகில் சவாரி, சிறு கப்பல் பயணத்தில் குடும்பமாக சிலர் செல்லப் பிராணிகளை, படிக்கட்டுகளில். சரிவுப் பாதையில், வளைந்து, நெளிந்து,படிப்படியாக உயர்ந்து, சரளைக் கற்கள் பரப்பி, பாதை ஒழுங்கு செய்து, பக்குவப்படுத்திய, தடுப்பு ஏற்பாடுகள்.பிடித்துச் செல்ல, உட்கார்ந்து, இயற்கை எழில் ரசிக்க, முறையான முன்னேற்பாடுகள்.

 தொடக்க நிலையில் கழிவகங்கள், கார் நிறுத்தம், கட்டணச் சீட்டு/தானியங்கி என ஓர் ஒழுங்கிற்குள், ஒப்பற்ற சூழல். எண்ண ஓட்டத்தை சீர்படுத்திய, வண்ண ஓட்டம், வகை, வகையான காட்சிகள். கடல் பறவை, தாழப் பறந்து நம்மிடம் பேசுவது போன்று, உணவு அளித்த/உண்ட பழக்கத்தில் அச்சம் கொள்ளாது, அணுகி வரும் காட்சி அற்புதம்.அனைத்தும், இதுவரை கண்டிராத காட்சி, இதயத்திற்கு ஏற்ற மீட்சி.

போகும் பாதையெங்கும், குன்றுகளும், சரிவுகளும், வயல்வெளிகளும், கோதுமை நிலங்களும், சூர்ய காந்தி பயிர்களும், மந்தை, மந்தையாக மாடுகள் மகிழ்ச்சியாக மேய்ச்சலில்.

 உழுபடை எந்திரங்கள் ஊர்வலமும், இடையிடையே கடந்து செல்லும் கிராமங்கள், தொகுப்பாக வீடுகள், தனித்தனியாகவும், தோப்புகள், பைன் மரங்கள் என கண் கவரும், குளுமையான சூழல். சாரல் மழை11 டிகிரி செல்சியசுக்கும் குறைவான சூழல்.நெடுந்தொலைவு பயணக் களிப்பு நீக்கும்.

இடை நிறுத்தங்கள் பூங்காக்களாக, கழிவகங்கள் துப்புரவாக, நேர்த்தியான ஒழுங்கமைவு,சாரி,சாரியாக வாகனங்கள் அணி வகுப்பில், அக்கறை ஒழுங்கு.முந்தும், முட்டும் நிலை தொலைந்து, விதி முறைகள் அனுசரிக்கும் போக்குவரத்து. திசைவழி காட்டும் விளம்பரங்கள் தெளிவாக, தானியங்கி கட்டண நிறுத்தங்கள் அடுத்தடுத்து. தனிவழியாக முறையான ஏற்பாடு, முண்டியடித்துச் செல்லும் முணகல் இல்லை!

அயலகச் செலவில் ஒரு பொழுது


காகம் கரைவது போல் காலம் கடக்கிறது. அமைதி தேடி அலைக் கழிந்த மனம், அல்லல் ஏற்றது தினம், அயலகச் செலவில் அமைவுற்றது குணம்.கூட்டுப் பறவைக்கு, தனிமை துயரம் ஆயினும், மாறிய சூழல் உயரம், தோழமை கூட்டியது. தோகை விரி மயிலாக மகிழ்வூட்டியது!

வேலையில்லா வேளை விடிந்திடும் காலை, விரைவுறும் பயண சாலை, விடை தேடும் வினாப் போல் விரிந்திடும், விளங்கிடும் விளக்கொளி குறிப்பில்.

இன்னியங்கிகள் வரிசையாக அணி வகுத்திடும், அரவம் குறைத்து. ஆள் கடக்கும் குறிப்பில், நின்று நிதானித்து தொடர்ந்திடும். கனிவுடன், 'மன்னிக்கவும்' என திடீரென நடைபாதை வளைவில் எதிர்ப்பட்ட பெண்மணியின் வாயில் உதிர்த்த முத்து, வணிக வளாகங்களிலும்.

 எங்கெங்கு எதிர்ப்படும் நேர்விலும், கனிவான சொற்கள். மொழிக்கும், நாட்டுக்கும், மனிதத்திற்கும் அணி சேர்க்கும் ஒழுகலாறுகள். ஒழுங்கியக்க கண்ணியமான போக்குகள்.

நடைபாதையினர் உரிமை;மிதி வண்டியின் உரிமை; மதிக்கப்படுகிறது மகிழ்வுடன், தளர்வின்றி.

Wednesday, October 31, 2018

குறைவில்லை










மாசுக்கு குறைவில்லை,
தூசுக்கும்,
அடிக்கொரு பள்ளம்,
அடிக்கடி வெட்டு
துலங்கா அரசு,
விளங்கா மக்கள்.

நவராத்திரி















சப்தங்கள் பிடியில்
நிசப்தம்,
மொட்டை மாடியும்
 தவிக்கிறது.

'ஞாயிறு'

'ஞாயிறு சந்தை', சில பர்லாங் தொலைவில்.பயண தொடக்கத்தில் சேர்ந்த முதல் கிழமை.காலையில் எழுந்து, துரிதமாகி, பாலாவுடன் குடை எடுத்துக் கொண்டு, காரில்.விசும்பின் துளிகள் பரவலாக மேலும் குளிரூட்டியது.

நிறுத்தம் அடைந்து, வரிசையாக கடைகள்:மீன் கடை, காய்கறி கடை,ரொட்டி, இனிப்பு கடை, காலணி/மூடணி கடை, ஒப்பனைப் பொருட்கள், பழக்கடைகள் வரிசையாக பிரஞ்சு மொழியில் கூவி அழைத்தனர், வாடிக்கையாளரை.
வண்டிகளில் இறக்கி, கூடாரம் அமைத்து, வண்ணக் கோலத்தில்.நம் ஊரில் காணாத காய்கறிகள், பழங்கள்.

'அவக்கெடா', போன்ற காய்/பழம், 'அவக்கேடு' என்று நினைக்காதீர். இலத்தின்_அமெரிக்க நாட்டிலிருந்து தோன்றிய வெள்ளரி ஒத்த தோற்றம்.ஆயினும் வெள்ளரி அன்று! அதை நறுக்கி, 'சலாத்' எனும் கலவை, தக்காளி நறுக்கித் துண்டுகள், மிளகுத்தூள் தூவி உணவுக்கு முன் சாப்பிடுகின்றனர்.வெண்ணய் போன்ற குழைவு/சுவை, புளிப்பும்/இனிப்பும் இன்றி, 62 ஆண்டு கால நாவின் சுவைக்கு, புதிய அனுபவம், சுவைத்து அறிந்திட முயன்றோம், முழுமையாக.

அதனூடே, இது என்ன காய்/பழம் என்ற சரித்திரம் அறியும் முயற்சி.மகளும் அளித்ததைக் கூற, மருமகனும் கூடுதல் விவரம் அளிக்க, விடை தேடும் மனம் இணையத்தை நாட; எண்ணங்கள் விரிந்திட, ஆவல் கூடிட.

காய் அல்ல, ஒரு வகை பழம், தெற்கு மத்திய மெக்சிகோவில் தோன்றியது.பூத்து காய்க்கும் தாவர குடும்பம்,'லாராசியே' என்ற தாவரவியல் பெயர் தாங்கியது.100 கிராம் பழத்தில், 160 கலோரி சத்து உள்ளது.

நம்மூர் பப்பாளி போன்ற வடிவம் அல்லது குண்டு சுரைக்காய் தோற்றம் என்றும் கூறலாம்.1.2 கிலோ வரை கூட ஒரு பழத்தின் அளவு இருக்கும்.மூன்று, நான்கு ஆண்டுகள் கழித்து காய்க்கும்/கனியும், சில 15 ஆண்டுகளுக்கு மேலாகவும் எடுத்துக் கொள்ளும்.மேலும், சில காய்க்காது போனாலும், கூடுதலான மரங்கள் தோன்ற, மகரந்த சேர்க்கைக்கு உதவிடும்.

உடலுக்குத் தேவையான, ஆரோக்கியமான கொழுப்பான -'மோனோ சேச்சுரேடட் கொழுப்பு' உள்ளடக்கியது.கொழுப்பை குறைத்து, இதய நலத்திற்கு ஏற்றது.குளிர் நாடுகளில், குளிர்ந்த காலத்தில், பனி தாக்காத வகையிலான, 'அவெக்கெடா' பயிரிட வேண்டும்.

தட்ப-வெட்ப, துணை தட்ப-வெப்ப, பருவ நிலைகளில் மட்டும் பயிரிட தோதானது.20லிருந்து, 40 அடிகள் வரை வளரும்.5 அல்லது 7 ஆண்டுகளில், 200லிருந்து 300 பழங்கள் தரும்..ஓராண்டு விட்டு அதிக மகசூல் அளிக்கும், 'அவெக்கெடோ' மரம்.ஆண், பெண் இரு பாகங்கள் உடையது.

இரண்டு நாட்கள் மட்டும் அதன் பெண் பகுதி மகரந்த சேர்க்கைக்கு இரண்டிலிருந்து, நான்கு மணி நேரம் திறந்திருக்கும்.இந்த ஒரு பழமே நமது சிந்தனையைத் தூண்டும், புரிதல் ஏற்படுத்தும் எனின்; மேலும் சில பழங்களைக் கண்டேன்.

அவை குறித்தும் அறிந்து கொள்ள  ஆவல் கொண்டேன்.அறிவார்ந்த அலசலுக்கு எல்லையேது?

 இது குறித்து அசை போட்டு, தக்காளிகள் பலவகை, பீச் பழங்கள் குண்டாகவும்,தக்காளி வடிவத்திலும்; கிவி பழங்கள்; பருத்த, தடித்த,நீளமான கத்தரிக்காய், ஒவ்வொன்று கால் கிலோவிற்கு குறையாமல்; கோசு நிறை பெரிது, எடை இலகுவாக;வெள்ளை உருளை அனைத்து காய் கறிகளும், ஒரு கிழமைக்கு உகந்த கொள்முதல் 20 'ஈரோ'க்குள் (பிரஞ்சு பணம் ஒரு ஈரோ உரு.85).

நமது ஊர் சந்தை கொள்முதல் ஒப்பீட்டில், சிக்கனமாகவே எமக்குத் தோன்றியது.நடுத்தர/கீழ் நடுத்தர வகுப்பினரின் வரவு செலவிற்கு ஏற்ற/உகந்த சந்தை.

பீச் பழம் தேர்வு செய்யும் தருணம், கொள, கொளவென்று இருந்தது.கடைக்கார பெரியவர், இரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும் என்று எச்சரிக்கை தந்தார்., பக்கத்தில் தக்காளி வடிவ பழத்தை சுட்டினார்.

இவர் கடை பின்னால், ஒரு வெள்ளை நிற 'வேன்', பிரெஞ்சு எழுத்துகளில் பளிச்சிட, "கேட்டலோனியா", என்கின்ற வார்த்தைகள், என்னை நிமிர வைத்தது.

"ஸ்பெயின்" நாட்டில், தன்னாட்சி உரிமைக்காக,, சனநாயக முறையில், வெகுண்டெழுந்து போராடிய மக்களின், உரிமை உணர்வு, எமது நினவலையில் நீண்டது.காய்கறிகள் ஸ்பெயினிலிருந்து விற்பனைக்கு, வருகின்ற விவரம் கேட்டறிந்தேன்.'பிளாஸ்டிக்' குவளைகள் இத்தாலியில் இருந்து விற்பனைக்கு விநியோகம் ஆவதையும் அறிந்தேன்.

சந்தையை இரண்டு, மூன்று சுற்றுகள். உடல் நடைகூட்ட, உள்ளம் சிந்தனை விரைவூட்ட, உணர்வுகள் ஊட்டம் பெற, திரும்பும் வழியில், ஒரு பெண்மணி, கையில் துண்டறிக்கையுடன், விநியோகம் செய்திட, உடன் ஒத்த ஒருவரும் கைகளில் துண்டறிக்கையுடன்.

பாலாவக் கண்டவுடன் அவர் பேசத் தொடங்கினார்.சில மணித்துளிகள் கழிந்த பிறகே, அது உசாவல் என்றறிந்தேன்.தொடக்கத்தில் நம்மூர் மத பிரசாரம் போல் நமக்குத் தோன்றியது.

நானும் ஒரு துண்டறிக்கையை வாங்கி, தத்து, பித்து என்று படிக்க முயன்று புரிந்து கொண்டது, முதாலளித்துவத்திற்கு எதிரான ஒரு கட்சி/அமைப்பு என்பதை"முதலாளியத்திற்கு எதிரான ஒரு புதிய கட்சி", என்பது எமக்கு புரிந்த மொழி பெயர்ப்பு, பிரஞ்சு மொழியில்,"nouveau parti anti-capitaliste",
என்று அச்சிடப்பட்டிருந்தது.

 என் ஆர்வம் அறிந்த பாலா, நடுத்தர வயதைக் கடந்த அப்பெண்மணி, பேராசிரியை என்றும், அவர் பெயர், 'கிளமோன்',பள்ளியில் கிளர்ச்சி எண்ணம் உடையவர் என்றறியப்பட்டவர்.பாடம் நடத்தும் சமயம், பொதுப் பிரச்னை குறித்து தொட்டு விட்டால், மணிக்கணக்கில், மாணவர்கள் பாடத்தை பிடிக்காமல், சில சந்தர்ப்பங்களில் அவரைக் கிண்டி விட்டு, கிளரி விட்டு, வேடிக்கைப் பார்ப்பார்கள் என்றான்.

படிக்கும் மாணவருக்கு "பூர்சு" என்கின்ற உதவித் தொகையை பிரஞ்சு அரசாங்கம் குறைத்தபோது, ஆயுதம் வாங்குவதற்கு நிதி இருக்கிறது.கல்விக்கு உதவிட நிதி இல்லை, என அரசைக் கண்டிக்கும் போராட்டத்தை நடத்தியவர், என்று அவரது அருமை, பெருமைகளை, அடுக்கிக் கொண்டே, காரில், வீடு திரும்பினோம்.

பிரஞ்சுமொழி சரளம் இருந்தால், அவரிடம் என் மனவுணர்வுகளை நேரிடையாக பரிமாறிக் கொண்டிருந்திருக்க இயலும். ஆதங்கம் அலை மோத, இரண்டாவது ஞாயிற்று சந்தை பட்டறிவு, இப்படியாக என்னுள் பலமான ஓட்டம்!

Monday, October 29, 2018

வாண வேடிக்கை!



நள்ளிரவு வாண வேடிக்கை, நம் ஊரை மிஞ்சும் வாடிக்கை.ஆற்றங்கரையோரம் அணி,அணியாய் மக்கள் கூட்டம், அலை மோதாமல் அமைதியாக! விழித்திருந்து, விருந்து; மேசை தயாரிப்பில் ஒயின்/மது, உணவு வகைகள் சகிதமாக, இருண்ட சூழலில் மெழுகு வத்தி ஏற்றி, அமர்ந்து ஆற, அமர, உரையாடி, பிரஞ்சு விடுதலை நாள் பிறப்பை விரும்பி, வரவேற்று மகிழும் வெடிகள்.வியத்தகு வகைகள்.இதுவரை கண்டிராத இனிமையில். நம் மீது/நம் பக்கம் ஓடோடி வரும் செந்நிறம், பொன்னிறம்,நீலம், இளஞ்சிவப்பு என எண்ணற்ற வண்ணக் கூட்டில்,எண்ணக் குவியலில் பிசைந்து.

மரம் போன்ற காட்சி,இதய வடிவம், ஈச்ச மரம் போன்று, அவரவர் கற்பனைத் திறனுக்கு ஈடேற்றம்/விளக்கம் கூட்டிடும், விளக்கொளிகள்/விலக்கு ஒளிகள்.அரை மணி நேரத்திற்கு மேலும், அனைவரும், தன்னை மறந்து, விண்னை நோக்கி திருப்பிய விநோதம் அனுபவிப்பில் ஆனந்தம்.எழுத்தில் அவ்வுணர்வுகளை வடிக்க இயலாது.தளர்ச்சி போக்கிய, கிளர்ச்சி.குடைபோல் விரிந்து; காளான் போன்று கவிந்து, ஆல மரம் போல், அரச மரம் போல் தழைத்து; வேர் விழுது விட்டு; நீண்ட காட்சி, நெடிய மாட்சி!

குழந்தைகள், முதியோர், இளைஞர், ஆண்,பெண், நோயுற்றோர், மாற்றுத் திறனாளி உள்ளிட்ட மக்கள் திரள், தமது வாகனங்களை ஒழுங்காக நிறுத்தி, நடந்தே, "சான்த்ரு வீல்",- புளூவா-(பிரான்சின் ஒரு பிராந்தியம்), கடந்து,"லுவார்", ஆற்றங்கரை ஓரம் அமர்ந்து, கண்ணயராது கனிந்த/களித்த காட்சி விவரிக்க எழுத்துக்கள், போதா/ துணை நிற்கா !

Saturday, October 27, 2018

தோட்டம்/ துப்புரவு


மருகன் இல் அமைந்த தோட்டத்தில், ஊட்டத்துடன்
ஓடி,ஆடி, அமைதியாக.
இரைச்சல் என்பதும், கரைசல் என்பதும் புறாக்களின், ஓயாத,'குக்கூம்,குக்கூம்',
மைனாவின் வருகை, பருத்த பழுப்பு நிற அணில் வகுப்பு,தேனீக்கள் ரீங்காரம்; வண்ணத்து பூச்சிகளின் வகை,வகை.இவைகளின் நிரலில் கரைந்த பொழுது.

இடையிடையே,ஒன்றிரண்டு வாகனங்கள் ஒலி,காற்றில் அடைந்திடும், வாயிற் புற வரிசையில்.சாலை மருங்கில், நேர்கோட்டில் நிற்கும் மரங்கள், உயரம் கூட ஒரேயளவு. கழித்து செப்பனிடும் பணியாளர், கவனமாக , களிப்புடன் புதன்கிழமைகளில்.

சாலையோரம் துப்புரவு கவசம் அணிந்து, உறிஞ்சும் கருவி துணையுடன் ஒருவர்.சில மணி நேரம் கழித்து தெருக்களை சுத்தம் செய்திடும் வாகனம், வியாழக் கிழமைகளில்.

 குப்பை வாரும் உந்து, பெரிய அளவில், வண்ணப் பெயர் தாங்கி, ஊழியர் இருவர்- ஒருவர் இயக்க மற்றொருவர் இறங்கி,ஒவ்வொருவர் வீட்டு முன்பும், முதல் நாளே குப்பைகளை, கறுப்புத்தாள் பையில் நன்கு திணித்து, முடித்து வைத்து, 'கிரே' வண்ண அஞ்சல் பெட்டி உயரத்தில், சக்கரங்கள் ஒரு பக்க சாய்வாக உள்ள துப்புரவான பெட்டி. எப்படி வைக்க வேண்டுமோ, அப்படி வைத்துவிட, எடுத்து வண்டியில் ஏற்றுகிறார், சிந்தாமல், சிதறாமல், சீராக, சிறப்பாக; ஈடுபாட்டுடன் இன்பமாக.


சூழல்

" செர்ரி"

காய்த்தாய் அன்று.
கண்டேன் காட்சி: காணொலி.

அடர்ந்த கிளைகளில் அட்டி,
அட்டியாக,
ரொட்டியில் தடம் பதிக்க,
சிவந்தாய், கனிந்தாய்
உருட்சி திரட்சியாக.

வருகிறோம் உம்மையும் காண,
பறந்தோடி வந்தோம்.
ஏமாற்றாமல்.

உன் நிறத்திற்கு வெளிர் நிறத்தில்
இதயம் திறந்தது,
உன் ஏமாற்றம் தவிர்த்திட
தரையில் படர்ந்து,
தளிகர்களின் இடையில்,

ஒன்றிரண்டு என ஒய்யாரமாக,
எடுத்துக் கொள்ளுங்கள்,
பறித்துத் தின்னுங்கள்,

கடைக்குச் செல்ல வேண்டாம் என,
பரிசில் வழங்கிய
'ஸ்ட்ராபெர்ரி'.

இதமான, இனிப்பும், புளிப்பும் கலந்த,
புதுமை சுவை,
நலம் பேணும் நிலை
நாளெல்லாம்,

விருந்தினை ஓம்பி, ஓங்கிய அன்பு
தழைத்திட,
நாள்தோறும் பராமரிப்பு,
நீர் பாய்ச்சி
நானும், அவளும்
நடை பயின்றோம்,
 "புளுவா"வில்

(பிரான்சு, சுற்றுச் செலவில், புளுவா ஊரில், பாரிசில் இருந்து 204 மைல்கள் தொலைவில், தங்கி அனுபவித்த சுற்றுச் சூழல்)

கட்டு










திரும்பிய மெய்
திரும்பாத கை

நிரம்பிய பைய்
நிரம்பாத பொய்

அரும்பிய மொட்டு
அரும்பாத கட்டு

ஊட்டம்











காலத்தின் சோகம்
கரவுகளின் ஆட்டம்
உண்மையின் நாட்டம்
உறவுகளின் ஊட்டம்

மகள்









ஓங்கிய உணர்ச்சி!
வீங்கிய கண்களின் வீழ்ச்சி
நீர்த் துளியாக,
தேங்கியும் தேங்காமல்;
தாங்கிய தாயிடம்
தஞ்சமடைந்த மகள்;
அரவணைப்பில்,
மருமகன் வரவேற்பில்.

Friday, October 26, 2018

மழை







மழை முத்தமிடட்டுமே
வெள்ளி நீர்த் திவலைகள்
உம் தலை மீது தாளமிடட்டும்
மழை உமக்கு தாலாட்டு இசைக்கட்டும்
நடைபாதை ஓரங்களை தேங்கிடும் குட்டையாக்கிடும்
சாக்கடை கழிவை ஓடும் குட்டையாக்கிடும்
சிறிய உறக்க கீதம் வீட்டுக் கூரை மீது
இரவில் இசைத்திடும்
எமக்கு விருப்பமான மழை.

("ரெயின்", தலைப்பில் லாங்க்ஸ்டன் அக்ஸ் எழுதியகவிதையின் மொழியாக்கும்)


Thursday, October 25, 2018

காதல்





(காதல்- வில்லியம் சேக்சுபிரியர்-
மொழியாக்க முயற்சியில் அடுத்த அடி)

கற்பனை ஊறும் இடம் எங்கே
எம்மிடம் கூறு,
நெஞ்சத்திலா அன்றி நினைவிலா?
எங்ஙனம் பிறந்தது,
எவ்விதம் ஊட்டம் அடைந்தது?
பதில் கூறு, பதில் கூறு.

அது விழிகளில் விளைகிறது,
உற்று நோக்கில் உண்டு;
கற்பனை வீழ்கிறது,
தொட்டிலில் கிடக்கிறது.

வாரீர்! கற்பனை வீழ்ச்சியின்
மணி ஒலிப்போம்:
தொடங்குகிறேன் நான், - டிங், டாங்
அனைவரும்.
 டிங், டாங்.

'குழந்தைகள்'

மகிழ்ச்சியில், பெருமையில் பிஞ்சு இதயத்தை
ஒரு சொல் நிரப்பிடும்;
கொடுமையானது, இரக்கமற்றது,
அதை மறுத்திடும் போக்கு.

இருப்பினும் களைப்புறும் பொழுதுகள் எத்தனை என்பதறியுமா,
மகிழ்வுறும் பிஞ்சுகள்;
மூத்தோர் இழைத்திடும் துயரம், உரிமைத் தடை
எவ்வளவு அவர்களால் என்பதறியுமா!

நமது பிழைகளினால் எவ்வளவு துயரம் அடைகின்றனர்!
நமது தவறுகளினால் எவ்வளவு!
அடிக்கடி,கூடிடும், தவறான உற்சாகம்!
ஓர் குழந்தையின் துக்கம் இழைக்கிறது!

ஆட்சி செலுத்துகிறோம், அதிகம் கற்பிக்கிறோம்,
பறிக்கிறோம் அடைக்கிறோம்,
விரைவில் நெஞ்சத்தை விரைந்து பள்ளியில் ஒப்படைக்கிறோம்,
நமது குறுகிய வழியை கற்றிட.


இல்லை: அன்பினால் அன்பு செய்திட கற்பித்தோம்,
குழந்தை பருவத்தின் இயல் பணி;
பிரியம், பெருந்தன்மை மற்றும் நம்பிக்கை,
யாவும் சில காலம் வேண்டும்.

('குழந்தைகள்', எனும் தலைப்பில் லெட்டியா எலிசபத் லென்டன் இயற்றிய கவிதை மொழியாக்க வாய்ப்பு பிரான்சு நாட்டின் சுற்றுச் செலவில் எமக்கு கிட்டியது)

Wednesday, October 24, 2018

கண்டாயா?





அங்கிருந்தது போலே
இங்கிருப்பாயா?

எங்கிருந்தபோதும்
ஏற்றம் தொலைப்பாயா?

வந்திருந்தவர் உபசரிப்பு
மறந்து போனாயா?

உள்ளிருந்தவர் உளறல்
ஊன்றி நின்றாயா?

கண் இருந்த போதும்
காட்சி மறந்தாயா?

காலம் கரைகின்ற நிரல்,

ஞாலம் உணர்ந்தாயா?
நால் வழி கண்டாயா?

Tuesday, October 23, 2018

பழகு.





கரைந்த பொழுது
நிறைந்த நினைவு,
நீங்கிடா உணர்வு;
நீண்டிடும் மகிழ்வு.

நீலத்திரை
கடந்த துணிவு,
நின்றிலங்கிடும் கனிவு;
நேர்ந்திட்ட விழைவு.

இருள் நீளும்
காலைப் பொழுது,
இருளாத மாலைப் பொழுது.

நீண்டிடும் பகற்பொழுது,
நித்திரை
தள்ளிப் பழகு.

ஆமை

ஆமை கண்டாள்
தோட்டத்தில்,
அதிர்ந்து போனாள் நோட்டத்தில்;
பழமை பின்னுழுக்க பதறினாள்.

வீட்டினுள் வைப்பேன் காப்பாக
என்றவன்,
வாங்கிக் கட்டிக் கொண்டான்.

வீட்டிற்கு ஆகாது என்று அலறினாள்,
உணர்ச்சி பிழம்பாகி, உளறல் மேலிட,
பதில் அளிக்க இயலா
கேள்வி எழுப்பி

'ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும்'
பழமொழி நினைவு முன்னிறுத்தி,

'ஆமை பொம்மை வாங்கிய அண்ணன்
அன்றடைந்த துயரம் இதனால்,
சாங்கியம் சொன்ன வாய் அடைய
சதிராடினாள்.

சில மணி நேர போராட்டம்,
காணொலி காட்சி
ஆமையின் அருமை ஆய்வுக் காட்சி அனைவருக்கும்
தெளிவேற்படுத்த,

அடுத்த வீட்டு முதியவர், 'அரவணைப்பின் செல்லம்'
முப்பது வயது ,
கூடுதல் தெளிவேற்படுத்தியது
அயலகத்தில்,
பிரஞ்சு தேயத்தில்




Sunday, October 21, 2018

கோலம்

விட்டகன்று விரைந்தேன்,
விடுதலையானேன்.
சுட்ட சூழல் சொடுக்கி கற்கும் சூழல்
கரை கடந்தேன்.

காலம் தந்த பரிசு,
கவலை மீண்டேன்.

காலச் சக்கர சுழற்சியில்
காற்றாடியாக,
நேரிய பட்டறிவு
துலங்கிடும் உலகம்
அடைந்தேன்.

உல்லாசம் அன்று,
நல்வாசம் இன்று.

நாடிய பொழுது யாவும் நலமாக,
நாள்கள் நகர்ந்திடும்
விரைவாக;
ஞாலச் சுழற்சியின்
கோலம் உணர்ந்தேன்.

நானில வரையறை கடந்தேன்,
நக்கிய உலகியல் சுவை
நாட்டம் காட்டிட,

நாளொன்று கூடும் செலவு
விருப்ப அவா,
நாகரிகம் கூட்டினேன்;
நற்பயணம் வேண்டினேன்.

பொழுது

விடிந்த பொழுது
விடியாத கனவு
கலைந்த உறக்கம்
களையாத மயக்கம்

குப்பை

குப்பை எங்காயினும் நாறும்
அங்கே அப்படி வாருவார்
இங்கே இப்படி வாருவார்
எங்கே எப்படி வாரினும்

கழிவின் குணம்
கமழும் மணம்
சிந்தாமல், சிதறாமல் சேகரம்
சேர்த்திடும் கரம்

கையுறை,மெய்யுறை
கவசம் அணிந்து
வண்ண வாகனத்தில்

இலுப்பிக் கொள்ளாது
இட்ட பணி முடிக்கும்
இளிமுகம் ஏற்று

(பிரான்சு நாட்டில் சுற்றுச் செலவு மேற்கொண்ட சமயம் கண்ட குப்பை வாரும் காட்சி)

புரியாத பயணம்

மறக்க முனைந்தோம், பறந்தோம்
பறவையென எண்ணங்கள் சிறகு விரிக்க
விண் இரதத்தில்;
எல்லைகளைத் தாண்டி, தொல்லைகளை மறந்து
தொலை செலவில்;
தொய்வு தொலைத்து இலகுவாகி,
கூகுல் தொடுதிரை
ஊர்தி செல் பாதை சுட்டி,
வரைபடம் கண்ட காலம் கடந்து,
நீள்வரை நித்திலம்,
நிலம், மலை, முகடு, சமவெளி,
ஆறு, கணவாய், பள்ளத்தாக்கு
பூமியின் பரிமாணங்களை கண்டு,
வியந்து,
தொழில்நுட்ப அறிவை மெச்சி,
மச்சி வீட்டிற்கும் மேலான,
உச்சி வீட்டில் அமர்ந்து, ஒய்யாரமாக
எண்ணாயிரம் கல்கள் மேல் கடந்து
தரை தொட்ட நிலவுபோல்
புரிந்தும் புரியாத பயணம்,
உறவுகள் வரவேற்க....

Thursday, June 21, 2018

வீம்பு










உனக்கு நேரமில்லை
உதவிட தோணவில்லை
எனக்கு வருத்தமில்லை
எதற்கும் அழுத்தமில்லை
கணக்கில் பிழையில்லை
காலம் கனியவில்லை
விலக்கில் விதியில்லை
வீம்பு வெல்வதில்லை

புதிர்வினை











உனக்காக எழுதவில்லை!
ஊருக்காகவும் எழுதவில்லை!
எனக்காக, ஏக்கத்திற்காக
எதிர்வினையாக,
மனவினையில்.
அதிர்வினை அலசலில்,
புதிர்வினை புரிதலில்.......

பேராசிரியர். தங்கப்பா நினைவேந்தல்


திறமையானவர்,
திருப்பம் நிறைந்தவர்.
உரிமையானவர்,
உலகம் உணர்ந்தவர்.
உப்பிலா இலக்கிய நிரலில்
ஒப்பிலா நெறிகள்,
படைத்தவர்.

உள்ளடக்கத்தில் ஓங்கி
உயர்ந்தவர்,
ஒருமை ஒதுக்கி
பன்மை தொடுத்தவர்,
பொது வாழ்வில்
பக்குவம் சேர்த்தவர்.

தலைமுறை இடைவெளி கடந்து
அன்பொடு அறிவும் இழைத்து
தமிழ் இயக்கம் தந்தவர்.

தன்னடக்க துறப்பாளர்,
மண்ணுடல் வழக்கொழித்து,
தன்னுடல் ஆய்வுக்களித்தவர்.

தமிழ்கூறும் நல்லுலக பேரொளி
பெருவெளி,
"எங்கப்பா"  எனும் தங்கப்பா

Wednesday, June 20, 2018

எண்கோணம்

நாற்கர தங்கம்
எண்கோணம் ஆக்கி
எஞ்சியதும் ஏப்பம்!

மலையும் குடைவோம்!
மாநிலம் துடைப்போம்!
கான் உயிர் எடுப்போம்!

வளர்ச்சியில் கழியும்
மீன் உயிரும், சேறும்.
வரையறை மாற்றி
வரபோகி ஆக்கி,

பசுமை சாலை பதாகை
விரித்து,
ஒப்பந்தகர் உரிமை காத்து,
பெருவணிக நலன் நாட்டி,
பெரு மக்கள் கடை கட்டி
கழித்துக் கட்டுவோம்.

எட்டுமறிவினை ஏற்றுமதி செய்வோம்!
அந்நிய செலவாணி
ஆயுள் கலைவாணி!

அடுத்த காய்







சூழ்ச்சியில் நிற்பாய்
சூழல் அழிப்பாய்
மூச்சைக் கெடுப்பாய்
முதலீட்டில் கொழுப்பாய்
பேச்சில் எடுப்பாய்
பேரிகை முழக்காய்
அடிப்படை முடிப்பாய்
அழகிய பேச்சாய்
அடுத்த காய் இழுப்பாய்
அக்கிரமம் தொடுப்பாய்

Sunday, June 10, 2018

துய்க்காதே












சுமையாக்கிக் கொள்ளாதே
சூடேற்றிச் செல்லாதே
விடையேறி நில்லாதே
வினா வரி ஏற்காதே
கரை சேர விழிக்காதே
கனா மொழி துய்க்காதே

யாரை விட்டாய்?











யாரை விட்டாய்?
பேசுவாய்
தாழ்வாய்
வீசுவாய்
உயர்வாய்
கூசுவாய்
குனிவாய்

தொடுப்பாய்











சூழ்ச்சியில் நிற்பாய்
சூழல் அழிப்பாய்
மூச்சைக் கெடுப்பாய்
முதலீட்டில் கொழுப்பாய்
பேச்சில் எடுப்பாய்
பேரிகை முழக்காய்
அடிப்படை முடிப்பாய்
அழகிய பேச்சாய்
அடுத்த காய் இழுப்பாய்
அக்கிரமம் தொடுப்பாய்

Wednesday, June 6, 2018

வெறுக்கிறாய்!









ஓடிக் கொண்டிருகிறாய்,
உறவைத் தேடிக்
கொண்டிருக்கிறாய்.

உள்ளதை மறந்து,
உணர்ச்சியில் கிளர்ந்து.

ஓரிடம் நில்லாது,
சேரிடம் கல்லாது,

மாறிடம் மகிழ்ச்சியென்று
மதி கலங்கி,

மமதை சேர்க்கிறாய்,
மண்பதை வெறுக்கிறாய்.

Saturday, June 2, 2018

காட்டிக் கொடுக்காதே

கொச்சைப் படுத்தாதே
கோமானே
எச்சில் உமிழாதே
தொப்புள் கொடி
அழிவு காண சகியாதே
சந்தர்ப்ப அரசியல்
சார்பு நிற்காதே
சாதனை இதுவென்று
சாத்த நினைக்காதே
சரித்திரம் சந்திக்கு வரும்
சமாதானம் செய்யாதே
களத்தில் நிற்பவர் கண்ணீர்
ஏற்காதே
காலன் நீ என்று தறுக்கி
திரியாதே
காலம் மாறும் தியாகம்
வெல்லும்
எட்டயப்பன் வரிசை
கூட்டாதே
எச்சில் காசு, அதிகாரம்
ஆட்டம் போடாதே
'எங்கெங்கு காணினும் சக்தியடா'
எட்டயபுரத்தை மறக்காதே
ஏதிலியாய், காட்டிக் கொடுக்காதே

தழைத்தேன்










வரியாய் வரைந்தேன்
சரியாய் உணர்ந்தேன்
தெரியாய் அறிந்தேன்
தேறாய் புரிந்தேன்
கூடாய் இருந்தேன்
குழப்பினாய் மறந்தேன்
மாடாய் உழைத்தேன்
மனிதம் தழைத்தேன்

Wednesday, May 30, 2018

நவீன குசிலார்!

"ஈயம், பித்தளை, செப்பு பாத்திரம் வாங்கறது
பேரிச்சம் பழத்திற்கு வாங்கறது"

தெருத்தெருவாய் வருவாய்
தெம்பாய் தருவாய்!
கந்தை கோணியில் கழித்து கட்டும்
சாமான்கள் சேகரிப்பாய்!
தராசு முள் முனைக்காமல்
பேரிச்சை தருவாய்!
பள்ளி நாளில் கண்ட காட்சி!
நடமாடும் குசில் கடை!
நலமாக்கும் பண்டமாற்று.

நவீன குசிலார்!
பெருமுதல் ஊட்டி,
வளம் சுரண்டி,
ஊர்  தாண்டி,
நாடு கெடுத்து,
நலம் கெடுத்து,

இழப்பை பிழைப்பாக்கி
இறுதி யாத்திரை!

ஊதியம் வைப்பார்
உயிருக்கு!

கூராய்வார்








அயராது ஆராய்வார்
ஆராய்ச்சி கூராய்வார்
பதறாது பதுக்குவார்
சிதறாது பிதுக்குவார்
சீண்டி சிணுங்குவார்
கிண்டி கிளறுவார்
உண்டி உயர்த்துவார்
உழைப்பில் உருப்படி
கூட்டுவார்
ஊர் அறிவார் உறவறியார்
உள்ளது அறியார்

சேர்ப்பாய்!









வருவாய் இழந்த வெறுவாய்!
பெறுவாய் பெருமை
தருவாய்!
உழைப்பாய்! உண்மை உணர்வாய்!
உயர்வாய்! உடமை எடுப்பாய்!
வெடுப்பாய் விளைந்த நிலை கடப்பாய்!
துடுப்பாய் பயணம் சேர்ப்பாய்!
கடுப்பாய் தூர்ந்த மனம்
கழிப்பாய்!
வெளுப்பாய்! வேற்றுமை விடுப்பாய்!
களிப்பாய்! கவலை மறப்பாய்!

Tuesday, May 29, 2018

தயாரா?







ஆட்சியே நீ யார் பக்கம்?
மக்கள் பக்கமா?
பெருவணிகத்தின் பக்கமா?
கொழுக்கும் முதலாளியத்தின் பக்கமா?
இழக்கும் தொழிலாளி பக்கமா?
வளங்கள் மக்களுக்கா?
சுரண்டும் முதலீட்டுக்கா?
வாக்களிக்கும் மக்கள்
எதிர்த்திடும் திட்டம்!
வரிசையாக நுழைக்கும்
கட்டம்!
அரசாங்கம்! மக்களை விட
அதிகாரம் படைத்ததா?
பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா?

தேறுவாய்!








அழையாத வீட்டிற்கு
ஆளாய்ப் பறக்கிறாய்!
அனுமதி இல்லாமல்
அக்கறை(ரை) சேர்க்கிறாய்!
இக்கறை(ரை) இனிமை
இடக்காக நினைக்கிறாய்!
சர்க்கரை நினைப்பு!
சங்கட முளைப்பு!
கருப்பட்டியாய் உருப்படி
தேறுவாய்!
உடல் நலம் கூட்டுவாய்!

மரண சாட்சி!








சுட்டாய்!
 நீ கெட்டாய்!
தீயிட்டாய்!
தீச்சுவலை சுவைப்பாய்!
திணிக்கிறாய்
 வன்முறை,
தீராத பசிகொண்டு,
காவல் துறையை நம்புகிறாய்!
இராணுவத்தை நம்புகிறாய்!
மக்களை நம்பாய்!
மக்கள் ஆட்சி!
மரண சாட்சி!

Friday, May 25, 2018

தூத்துக்குடியில்....




அடிக்கல் நாட்டினாய்!
அடுத்தவன் அழிவென்று
விரட்டியதை,
அரவணைத்தாய்!

ஆரம்பித்து வைத்தாய்!
அழிவை ஆசிர்வதித்தாய்!
ஆளுமை செய்தாய்,
நன்கொடை நிரந்தரம் ஆக்கினாய்,
நாசத்திற்கு துணை போனாய்.

பாதிப்பில்,
பதறிய மக்கள்,
பழுதடைந்த உடலொடு,
சில பத்தாண்டுகள் பரிதவித்து
திகைத்தனர், திண்டாடினர்.

தீர்வளிக்கும் ஆட்சி என
நம்பினர்!
நம்பிக்கை மோசம்,
நாடக வேடம்
நாளெல்லாம்,
உள்ளும் வெளியும்!

சுகம் சேர்த்தாய் சொந்தங்களுக்கு!
வழியின்றி வாழ்வாதாரத்திற்கு
வகையின்றி,
சிறுகச் சிறுக நலம் கெட்டவர்,
சிதறியிருந்தவர்,
சீர்தூக்கி,
செறிவாக முன்னெடுத்த,
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
சூழல் உரிமை,
அரசியல் களம்!

தீவிரம் அடைந்தபோது, திகைப்புற்ற
கையூட்டு அரசியல்,
கை நழுவுகிறதே
கதறல்!
பெருவணிக நன்றி மறவா
பாய்ச்சல்!

மக்கள் மீது மேய்ந்தாய்!
ஆலை சார்பாய்!
அரியணை சார்பாய்
ஆவி பறித்தாய்!

கூற்றும் அஞ்சும் கொடுமை கூட்டினாய்!
கோலோச்சும் கேள் பகை,
தூத்துக்குடியில்...........



Wednesday, May 23, 2018

பெருவணிக இலாபப் பசி-' ஸ்டெர்லைட்'

சுடுவார்!
சுட்டுப் பொசுக்குவார்!
எதிரியைப் போலே, ஏறி படுத்து
குறிபார்த்து!
 ஆயுதந்தரித்து!
எண்ணிக்கை அதிகரிக்க
கெக்கலி கொட்டுவார்!
இறந்து விழும் உடல்கள் கண்டு
எள்ளி நகையாடுவார்!

வாழ்வாதாரத்திற்கான போராட்டம்!
உமக்கும் சேர்த்துதான்!
அதிகார வர்க்கமும்
சுவாசிப்பது' ஸ்டெர்லைட்
நச்சு' காற்றைத்தான்!

புற்றுநோய், பொல்லாத நோய்
பொசுகென போய்ச் சேர்வதும்
பொதுவானதுதான்.
சேவகம் செய்வதற்கும் அறம்
உண்டு!

ஊரைப் பகைத்து, உறவைப் பகைத்து
உயர்த்தும் கை! ஒடுக்கும் தடி!
வெடிக்கும் குண்டு!
ஒழுங்காகுமா?

சுருண்டு விழுந்தவர், சுய நலத்திற்காகவா
போராடினார்?
உயிர் துறந்தவர், ஓட்டு வாங்கவா?
ஓடி, ஓடி அடிபட்டார்!
 மிதிபட்டார்!

சந்ததி காத்திட
சத்தமிட்டு, ஓலமிட்டு
வாழ்வுரிமை காத்திட,
வக்கில்லா ஆட்சியின்
போக்கு உணர்த்திட,

 பெருவணிகக் கூட்டத்தின் இலாபப் பசிக்கு
இரையாக விருப்பமின்றி,
 இயற்கைத் தாயைக் காத்து,
காற்றையும் நீரையும் வாழ்வுரிமை
 என அறுதியிட்டு,
 ஆர்ப்பரித்த கூட்டத்தை,
அரச அதிகார வெறியில்,
ஆவி பறித்தனர்!

சகிப்பின்மை அரசியலின்
 இன்னொரு முகம்!
சனாதன  கூட்டணியின்
கோர முகம்!

தமிழ்ச் சமூகமே!
வீரத் தியாகம் வீண் போகாது!
ஒன்றுபடு! உரிமைக் குரல் எழுப்பு!

போராடு! பகையை எதிர்கொள்!
 எல்லைகளைக் கடந்து ஆதரவு தேடு!
 பயங்கரவாதத்தின் முகமூடி கழற்று!
 வ.உ.சி.பிறந்த மண்ணின் பெருமை உயர்த்து!
 பாரதியின்அக்னி குஞ்சாக
 பகை வெல்!

எல்லை இல்லை











உன்னை எனக்கு பிடிக்கவில்லை!
உண்மை அது இல்லை!
நன்மை புரியவில்லை!
நலம் இழப்பு அறியவில்லை!
குணம் இழப்பு குழப்பமில்லை!
கூடி வாழ விருப்பமில்லை!
தனி மனித தவிப்பு எல்லை!
தாங்கி நிற்க யாரும் இல்லை!

மாறவில்லை.

ஆட்சி மாறினாலும்
காட்சி மாறவில்லை.

அவரைக் குறித்து இவர்
இவரைக் குறித்து அவர்,

மாறி, மாறி, குற்றச்சாட்டு,
பொறுப்பு சேர்ப்பு,
வெறுப்பு கோர்ப்பு.

யாவும் தீர்ந்தபாடில்லை!

தினம், தினம்
திண்டாடும் மக்கள்.
இங்கேயும் அங்கேயும்
எங்கேயும்.

வரிச்சுமை, நெறிச் சுமை
வாழ்க்கைச் சுமை,
வகை வகையாய்
சிக்கலில்.


வளம் இழப்பு!
நலம் இழப்பு!
நாடு இழப்பு!

Sunday, May 20, 2018

ஊடாடி










ஊடாடிப் பார்க்கிறாய்.
உறுதி நெய்ய வேர்க்கிறாய்!

தறி விலகி இழை பிசகும்.
தளம் ஏற்கிறாய்!

ஒடித்து முடித்து,
ஒடியேற்றி,

நெசவு சேர்க்கிறாய்!

முறிச்சது!










முட்டி நின்றது
எட்டிப் போனது
கட்டி நின்றது
கழன்று போனது

முட்டி தேய்ந்தது
முயற்சி செய்யுது
வெட்டி முறிச்சது
வேடிக்கைப் பார்க்குது.

கொட்டையானேன்!










விழுப்புரத்திலிருந்து, திருக்கோவிலூர் செல்லும் பேருந்தில், ஆலம்பாடியில் இறங்க வேண்டி, நெரிசலில் நின்று பயணப்பட்ட அனுபவம், இப்படி:

அடக்கி, ஒடுக்கி
அடுக்குக்குள்.
இடமும், வலமும் இடுக்கி,
இறுக்கி,
பிதுக்கும் கொட்டையானேன்!
கை தூக்கி
முன் பதித்தேன்!

கூடாது.




கெஞ்சியிருக்கக்
கூடாது,
அஞ்சியிருக்கக்
கூடாது.

தாழ்ந்திருக்கக்
கூடாது,
தவழ்ந்திருக்கக்
கூடாது.

எகிறியிருக்கக்
கூடாது
எடுத்தெறிதல்
கூடாது.

விட்டிருக்கக்
கூடாது
விலகியிருக்கக்
கூடாது

Friday, May 18, 2018

கோண கழி









விட்டு விட வேணுமா?
விடுதலைக் கூடுமா?
கட்டி அழ வேணுமா?
கவலைதான் தீருமா?
கொட்டி அழுதது போதாதா?
கோண கழி நிமிராதா?
வெட்டி முறிச்சது ஆகாதா?
முட்டி மோதி வாராதா?
திட்டித் தீர்த்தது சேராதா?
திடீர்த் திருப்பம் நேராதா?

போனான்....








அசைத்துப் பார்த்தான்,
அசந்து போனான்.
ஆட்டிப் பார்த்தான்,
ஆடிப் போனான்.
இடித்துப் பார்த்தான்,
இடிந்து போனான்.

வெடித்துப் பார்த்தான்,
வெளிறிப் போனான்.
துடித்துப் பார்த்தான்,
துவண்டு போனான்.
முடிக்கப் பார்த்தான்,
முடிந்து போனான்.

Thursday, May 17, 2018

உறிஞ்சும்!









கண்டது பேசுது
காரணமின்றி ஏசுது

உண்டது செரித்திடாது
உப்பிசம் ஆகுது

உழப்பை உறிஞ்சும் கூட்டம்
ஒய்யாரம் கூட்டுது

உண்மை உணரா
கடமை
ஓரம் கட்டுது

Tuesday, May 15, 2018

இல்லை!











ஆடித் தொலைத்திருந்தால்
அதிசயம் இல்லை!
ஆடாமல் தொலத்ததால்
ஆச்சரியம் இல்லை!
ஓடித்தொலைத்திருந்தால்
சோகம் இல்லை!
ஓடாமல் தொலைத்ததால்
யோகம் இல்லை!

போன இடம் தெரியல........

ஆட்டுக் கல்லும்
அடியில் சென்றது.
குத்து உரலும், உலக்கையும்
மூலைக்குச் சென்றது.

அதிரசப் பலகையும்
தொங்கியபடி நின்றது,
தொலைந்து போனது.

எச்சில் படிகமும்
எட்டிச் சென்றது.
பெட்மன் படுக்கையும்/கட்டிலும்
பெயர்ந்து போனது.

கற்பூரப் பெட்டியும்
கரையான் புகுந்தது.

நாலுகை தாவாரமும்
கிணறும், துணி துவைக்கும்
கல்லும்,
தொட்டி கக்கூசும்,
நினைவை விட்டுச்
சென்றது.

வேப்ப மரமும்,
கற்பூரவல்லியும்,துளசியும்,
பட்டுரோசாவும்,
 பழங்கதையானது.

அண்டாவும் , குண்டாவும்,
அடுக்குச் சட்டியும்,
மூக்குச் சொம்பும்,

அன்னக் கொத்தியும்,
அடுக்களையும்,
உரியும், உலையும்,
சாலும், கரவம்
சாய்ந்து போனது.

வெட்டிவேர் விசிறியும்,
தாழம் பாயும்,
ஈச்சம் படுக்கையும்,
எட்டிச் சென்றது.

பச்சைக் கிளியும், ஊஞ்சலும்,
சாமி படங்களும்,
 பூசை சிலைகளும்
போன இடம் தெரியல.........

Sunday, May 13, 2018

'போர்வை வாதிகள்!

சமூக இயக்கங்கள், செயற்பாட்டுக் குழுக்கள், அரசியல் கட்சிகள் போன்ற பல்வேறு அமைப்புகளில் முன்னணித் தோழர், முனைப்பு காட்டுபவர், முன்முயற்சியாளர் போன்ற செறிவான செயல்பாடு உடையவர் என்ற அடையாளம் தன்முனைப்பில் கொண்டு சேர்க்கிறது.

இதனால் கூட அதிக சேதம் இல்லை! குடும்பங்களில் தோழமையுடன் பழக வேண்டியவர்கள், நிலை பிசகி, கதாநாயக சித்தரிப்பில், கவடு கூட்டி, பாலியல் கொடுமை இழைக்கின்ற போக்கு பரவலாகி பாதிக்கப்பட்டவர் வெளிப்படுத்த முடியாத அவலம்!

 இவரெல்லாம் மனித உரிமை, மண்ணுரிமை, சமூக நீதி என்கின்ற பல்வேறு பரிமாணங்களில் தம்மை வித்தியாசப் படுத்தி, உயர்த்தி, அதற்கென சிறு கூட்டத்தை தம் வளையத்திற்குள் வைத்து வலம் வருபவர்கள்.

வெளிப்படையான எதிரிகளை விட கூடிக்கெடுக்கும், குடி கெடுக்கும் இவர்கள், தந்தை பெரியாரைப் பேசுவார்; அண்ணல் அம்பேத்கரை புகழுவார்; மார்க்சியம், லெனினியம்; ஈழ விடுதலை இன்ன பிற முழக்குவார்! அதற்கும் ஆமாம் சாமியாக ஒரு கூட்டம் குடை பிடிக்கும். வியாக்கியானம் கூறும்.

பெண்ணுரிமையும் கூட இப்படிப்பட்ட பேர்வழிகளின் நிகழ்ச்சி நிரல்களில் உண்டு. தனி மனித ஒழுக்கம், நம்பிக்கை மோசடி, பெண்கள் மீதான வல்லாதிக்கம் கண்டு கொள்ளப்படாத செயல்களாக, இயக்கங்கள் தப்புத் தாளங்களின் பிடியில், சாமர்த்தியமாக சதுராடுகின்றன.

இதுபோன்ற, 'போர்வை வாதிகளை',' முகமூடி மாந்தர்களை, மக்கள் சமூகம் அறியும் சூழல் உருவாக வேண்டும். வர்க்க எதிரிகளை விட மோசமான, பண்பாட்டுச் சிதைவு விளைவிக்கும் இச் சக்திகள்/சகதிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.'

Saturday, May 12, 2018

'சோறு',

'சோறு', குறித்து அம்மாவின் உரையாடலில் உதிர்த்தவைகள். நினைவில் நின்றவை!

சட்டிச் சோறு
சாக்கடைச் சேறு

தண்டச் சோறு
உண்ட சோறு

திண்ண சோறு
மண்ணு சோறு

சோத்து மாடு
சோத்தால் அடித்த பிண்டம்
சோறு கண்ட இடம் சொர்க்கம்

இவையன்றி, பிள்ளைகளை திட்டும் வசை சொல்லாடல்கள் வரிசை,

 இதோ!

மாடு ஓட்டி வந்தேன், மணி ஆட்டி வந்தேன்
சோறு போடம்மா! சொக்கம்மா!

சோறு சாப்பிட்டா சொத்தை!
கூழு சாப்பிட்டா குண்டு!

வஞ்சனை நெஞ்சடைக்க, வரவு சோறு மாரடைக்க!

பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்,  என்கின்ற பக்குவம் கூறிடும் பதார்த்தமும் உண்டு.

84 அகவையில், பல வாழ்க்கை ஊடாட்டங்களில் தெறித்த, பழந்தமிழ்ச் சொல்லாடல்கள்/மரபு சொற்கள் மறைந்து கொண்டிருக்கிறது.புதிய தலைமுறை பேச்சு, வழக்கு, தாய் மொழியின் தடங்கள் இழந்து/தளங்கள் மறைந்து, மண்ணின் பெருமை அருகி வருகிறது!


வெம்பி!








சொல்லிக் காட்டாதே!
சோகம் கூடாதே!
தள்ளிப் போகாதே!
தளர்ந்து நிற்காதே!
அச்சம் சேர்க்காதே!
அலுத்துப் போகாதே!
வெம்பி சோராதே!
மனம்,
வெளுத்துப் போகாதே!

செரிமானம்.......












மாத்திரை மனிதன் யாத்திரை
தினமும்!
சிற்றுண்டிக்கு பின் குற்றுண்டி,
சிறு பொழுது அட்டவணை
அன்றாடம்,
அரைத்து தள்ளும்
செரிமானம்.......

Wednesday, May 9, 2018

பதில் யாது?

சிலை எடுப்பு அரசியல் சிறப்பு சேர்க்காது!
பொது நிலையில் செயற்பாடு உடையவர் இறப்பை, பகுத்தறிவில் சறுக்கி பதிவு செய்வது, மேலதிக சிறப்பியல்புகளை கூட்டுவது; மரணம் குறித்த பார்வையின் பழமைவாத, தொடர்ச்சியை மெருகேற்றுகிறது.

விமர்சனம் என்பதை விரோதமாக, குரோதமாக விளங்கிக் கொள்ளும் மனநிலை; நமக்கும் இறப்பு ஏற்பட்டால் இது போன்ற பாராட்டு/ நினைவேந்தல்/ சிலை எடுப்பு, நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்கின்ற அவா அழுத்தம், விவாதத்தில் உள்ளுறையாக அமைகிறது.

குடும்பம் என்னும் அமைப்பின்/ நிறுவனத்தின் கொந்தளிப்பு /குலைவு, தனிமனித சீற்றம், ஆவேசம், நிலைமையை சமாளித்திட இயலாது, தன்முனைப்பு அணுகுமுறையில்;

 பெண்ணுரிமையை புறந்தள்ளி; குழந்தைகள் உரிமையைக் குலைத்து; தப்பித்துக் கொள்ளும்.தாக்குப் பிடிக்க இயலாத மனோநிலை, மனச்சிதைவு சமூக வினையாட்டாளர் வசமாகி, வாழ்வை வலிந்து முடித்துக் கொள்ளும் போது, இவ்வகை தன் பார்வை அவசியம்.

 நெருக்கடிகள் தாண்டி வாழ வேண்டிய தேவை சமூக விதியாகும் நேர்வில், சமூகப் பிரச்னைகளில் நடைபோடும், தடம் பதிக்கும் சமூகச் செயற்பாட்டாளர் எவ்வாறு உழைத்திட வேண்டும்/ முடியும் என்கின்ற பகிரங்க/ வெளிப்படையான விமர்சனத்திற்கு, நம்மிடம் உள்ள பதில் யாது?