Monday, February 19, 2018

விரைந்து வரவேண்டும் ...............


விரைந்து வரவேண்டும் ...............

எதுவும் வணிகம் ஆன சமூகச் சூழலில் ஆதாயம், இலாபம், உபரி முன் நிற்க, முந்தி ஊக்க, வினையாவும் வியாபாரம் என்றாகி, வீணாகிப் போகக்கூடாது எனும் பதைப்புடன் முண்டியடித்து,முன்னேற்றம் காண விரைந்திடும் சமூகம். கிளர்ச்சி வேகத்துடன், உணர்ச்சிகள் உந்திட வளர்ச்சிக்கான வகைகளை வகுத்திடும் நொடிதொறும், மனித சமூகம்.

அருள், அன்பு, வாழ்க்கை விழுமியங்கள் எனப் பல நூறாண்டுகள் பதியம் போட்டு அறிவுரைகளாக,அறவுரைகளாக ஆன்மீகம் குழைத்தும்,  நீதி நெறிகளாக பள்ளிகளில் தொடக்க காலங்களில் ஏற்றிய உணர்வுகள், உனர்த்திய உண்மைகள் நடைமுறைக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி, ஓரங்கட்டி, எதிலும் காசு சேர்க்கும்,பொருள் குவிக்கும் போக்கு ஒரு கலாச்சாரமாக எவர் மனதிலும் வேர்விட்டு வளர்ந்து, வேகமாக, உறவுகள், நட்புகள், பழக்க வழக்கங்கள் யாவும் செல்வக் குவிப்பு சாளரத்தின் வழியாக சிலாகிக்கும் குணம் செறிவாக மேலோங்கி கிளைக்கும்.சமூகம் தடம் புரண்டு, பன்னாட்டு நிறுவனங்களின் "உயிர்ப்பண்புகளை" தனி மனிதனை சென்றடைவதில் வெற்றி கண்டுள்ளது.

எதுவும் வணிக அணுகுமுறையில், மண உறவுகளையும் சேர்த்தே, மனித வாழ்க்கை  பெரும் பண்பாட்டுச் சீரழிவில் தம் அடையாளத்தை படிப்படியாக இழந்து வருகிறது. மாற்றாக சில முன்னெடுப்புகள் இருந்தாலும், பல்கிப் பெருகியுள்ள அழும்புகளுக்கு எதிராக நிற்கும் பெரும்பலம் இன்றி, பலகீனமாக கருத்தளவில்/ செயல் அளவில், சிறுபான்மை சக்தியாக நிற்கிறது, நம்பிக்கையுடன். சமூக, பொருளாதார, அரசியல் சக்திகளும்கூட, பண்பாட்டு தளத்தின் அடிப்படை தகர்த்து ,தம் கட்சி அரசியல் அதிகாரத்தை ஊன்றி, உறுதியாக்கி ஒற்றை பரிமாண தன்னதிகார போக்குகளை, வளர்ச்சி முன்னேற்றம், என வெகு மக்களை திசைத் திருப்பி வாழ்க்கையின் விளிம்பிலே நாளும் தள்ளிக் கொண்டிருக்கிறது.

இடதுசாரி, மக்களாட்சி சக்திகள், மக்கள் அரசியல் ஆகிய இயக்கங்கள், இதுபோன்ற போக்குகளை நன்கு பரிசீலனைக்கு உட்படுத்தி, கள ஆய்வு நிகழ்த்தி, தரவுகள் பெற்று, பண்பாட்டு கூறுகளை செம்மைப் படுத்தி, மாற்று அரசியலை, சமூக அடிப்படை கட்டமைப்பிலிருந்து வளர்த்து, செயற் திட்டங்களை வளர்த்திட வேண்டும்.வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி , மக்களை ஒருங்கு திரட்ட வேண்டும்.இவை எளிதான காரியமன்று, நெடிய பயணமாகும்.ஆனால், நிகழும் போக்குகளை, இழிவுகளை அப்படியே விட்டுவிட இயலாது.

மக்கள் சனநாயகத்தை, மக்களுக்கான செயற்படும் அதிகாரத்தை, ஆட்சியை அமைத்திட, சுரண்டல் வகைகளை, பன்முகங்களை உள்ளூர், மாநிலம்,  நாடு, சர்வதேசியம் இவற்றுடன் பிணைந்துள்ள நிலையை, வெளிப்படுத்தி, பல்வேறு தளங்களில், தலைகளில் அடிமைப்பட்டு, உரிமை இழந்து, வாழ்க்கை ஆதாரம் இழந்து, படிப்படியாக, கால உழைப்பாளிகளாக, சோகம், துயரம், இடர், பேரிடர் இழப்பு/ பேரிழப்பு ஆகியவைகளை தேச உடமையாக வாழ்ந்து நசிந்திடும், இந்திய மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய தருணம் விரைந்து வரவேண்டும்.

No comments: