Sunday, March 18, 2018

"துப்பாக்கியால் சிதைத்திட முடியாது" "கெளரி லங்கேஷ்"

"துப்பாக்கியால் சிதைத்திட முடியாது"
"கெளரி லங்கேஷ்"

கறுப்புக் கருத்தின் வெறுப்புத் தீயில் வீழ்ந்தாய்!
துமிக்கியே அஞ்சும் துணிவுக் கருத்தின் துடிப்பு நீ!
நடிப்பு ஊடகரிடை எதிர் துடுப்பு போட்டாய்!
எது வரினும் ஏற்பேன் என்றாய்!

நக்கியே வாழும் மனிதரிடை, எக்கியே நடை பயின்றாய்!
ஏக்குழுத்து மிடுக்காய்!
நாவின் வலிமை நாள்தோறும் பறைசாற்றி,
நாச வெறியரின் நா வன்மை உடைத்தாய்!

கருத்துரிமை,சகிப்பு, சரிநிகர் உணர்வூட்டி,
சந்ததி ஒருங்கிணைத்தாய்!
தந்தை வழியில் சமரசம் துறந்து,
சனாதன சங்கிலி அறுத்தாய்!

அச்சுறுத்தல், அலறல், எச்சரிக்கை
அலட்சியம் செய்தாய்!
தபோல்கர், பன்சாரே, கல்புர்கி அணியில்
இலட்சியப் பயணம் கூட்டினாய்!

ஒற்றைப் பரிமாண அரசியல் இருப்பை,
ஓங்கி நொறுக்கினாய்!
கருத்தாயுதம் தரித்தாய்!

தோட்டாக்கள் தோற்கும்,
இழிவின் இருள் கிழித்த உம் சிந்தனைகள்!
ஊர் எட்டும் உலகு எட்டும்!
ஓயாது உம் பயணம்!

("புதிய உறவு", சிற்றிதழ், புதுச்சேரியில் நடத்திய கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கவிதை, தற்போது பதிவேற்றம் காண்கிறது)

No comments: