Saturday, March 3, 2018

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பில் குறைவில்லா கவனம் தேவை!
குழந்தை பிறக்கும் போது காணும் உற்சாகம், பொங்கிடும் அன்பு, மாதங்கள் செல்லச் செல்ல, ஆண்டுகள் தொட, மங்கிடும் மகிழ்ச்சி, மாறுதலில் தளர்ச்சி.

பெற்றோர் முதல் பொறுப்பாளராக கவனம் செலுத்த வேண்டிய காலத்தில்,திட்டமிடாது ஏனோ, தானோ என்று குழந்தையை பராமரிப்பது தற்போதைய காலக் கட்டத்தில் அதிகமா, பரவலாக காணக்கிடக்கிறது.

படித்தவர்கள் மத்தியில் பல அடுக்குத் தடுமாற்றம்.

குழந்தையை காலைக் கடன் கழிக்க வைப்பது, குளிப்பாட்டுவது, பல்துலக்குவது  ,நல்ல ஆடை அணிவிப்பது, பக்குவமான உணவு வகைகளை, சத்தான வகைகளை, அறு சுவையும் படிப்படியாக பழக்குவது, கனிவாக உரையாடுவது, பெரியவர்களை மதிப்பது போன்ற நல்ல பழக்க, வழக்கங்களை விதைத்திடும் பருவம் ஆகும்.

 இந்த அணுகுமுறையில் பெரிய இடைவெளி தற்போது நிலவுகிறது. பெரியவர்கள் வாழ்க்கைச் சூழல், பதட்டம், கொந்தளிப்புடன், பிள்ளைகள் உளவியலை, உலகத்தை மறுத்து, மறந்து, உணர்ச்சியுடன் ஓடுவது, சாடுவது, இன்று பெரும்பாலும் நாம் காணக் கூடியதாக, பரவலாக இருக்கிறது.

செல்லிடைப்பேசி, தொலைக்காட்சி போன்ற ஊடக சாதனங்கள் நம்மை ஆதிக்கம் செலுத்திடும் அவலம் போதாது என்று, குழந்தையை சாப்பிட வைத்திட, தூங்க வைத்திட, ஏன்? அவர்களை சமாளித்திட வலிமையில்லாமல், வகை தெரியாமல் அவ் வளையத்திற்குள் தள்ளுவது பரிதாபமான குடும்ப அன்றாட நிகழ்வாக பல தருணங்களில் அமைகிறது.

விவரம் அறிந்த பெரியவர்கள் சுட்டிக்காட்டி, ஒழுங்கியக்க முனையும்போது எதிர்கொள்ளும் எதிர்வினை, நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.

குழந்தைக்கு கதை சொல்ல, பாட்டுப்பாட, அவர்களுடன் ஓடி விளையாட அவகாசம் எடுக்காது, நேரம் ஒதுக்காது, பொழுதை கழிக்கும் தந்தை, தாய் அவரவர் தன் விருப்ப போக்கில் தமது வேலையைப்  பார்த்திடும் ஒரு மோசமான சமூகம்.

இது குறித்து அக்கறை கொள்ளாத அரசாங்கம் மனிதவள மேம்பாடு, குழந்தைகள் நல மேம்பாடு, என பலப் பட்டியல் துறைகள், முழக்கங்களுடன் சாதனை வெளியிடும் சந்தடியுடன் சதா கால்மும். சமூக பொறுபுணர்ச்சி, அக்கறை இழந்து, முதல் பள்ளியான குடும்பமே இக்கோளாறில் தொடங்குகிறது என்றால், பள்ளிகள் குறித்து கேட்கவே வேண்டாம்.

அனைத்தும் சர்வதேச உயரத்தில், தகுதியில், விளம்பர பதாகை விரித்து தனியார் முயற்சி, தம்பிடி பிடுங்கிடும் தாளாளர் கூட்டம். குழந்தைகள் உளவியலை சிறுகச் சிறுக சீரழிக்கும் கல்வி வணிகத் தொழிலேற்புகள்.உடைந்த குடும்பம், போன்ற சிக்கலான சூழலில் பள்ளிக்கு வரும் குழந்தைகள். பள்ளிகளின் வகுப்பறைகள் தொகுப்பு வீடுகளாக, மாட்டுத்தொழுவங்களாக அடைத்து வைக்கப்படும் அவலம் அனைவரும் அறிவர்.

குளிரூட்டப்பட்ட வகுப்பறை விளம்பரம் விடுதியை நினவுபடுத்தும்.பள்ளி வளாகத்திற்குள் விளையாட்டுச் சாதனங்கள், ஏற்பாடுகள் அடையாளமாக, பெயரளவிற்கு மட்டுமே பெருமைச் சேர்க்கின்றன.

பயிற்சி பெறாத, திறன் போதாத ஆசிரியர்கள் சொற்ப சம்பளத்தில், ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளை சில மணி நேர வைத்திருப்பிற்கு பின், திருப்பி அளித்திடும் பண்டக பெட்டக காப்பீட்டு திட்டம் போல், அன்றாட அலுவல் மின்னும் விளம்பரம் முரசறைய,"மின்னல் பூச்சியாக", கூடங்கள் வரைமுறையின்றி, சுற்றிச் சுற்றி வலம் வருகின்றன. மளிகைக்கடை வியாபாரம்போல்.

குழந்தைக்கென நேரம் ஒதுக்கி அவர்களுடன், அவர்கள் பழகுவது ,உரையாடுவது,வெளியே உலா அழைத்துச் செல்வது, மனம் விட்டு ஆடுவது, பாடுவது போன்ற பழக்கங்கள் , அற்றுப்போய் விட்ட நிலைமை, நமது சமூகத்தின் மிகப்பெரிய தளர்ச்சி.

நல்ல குழந்தை வளர்ப்பு, சமுதாயத்தின் பொறுப்பு என்பதெல்லாம் ஊடக வெளிச்சமாகவே நின்று போய்விடுகிறது.உணர்வுகளில்  ஊன்றாது, உணர்ச்சிப் பெருக்கில் வாய்ப்பந்தல் போடப்படுகிறது நாள்தோறும்.

No comments: