Monday, March 5, 2018

நினைப்பில்!

சனவரி மாதத்தில்(28) என நினைவு. ஒரு திருமண வரவேற்பிற்கு சென்றிருந்தேன்.பழைய நண்பரின் மகன் நிகழ்ச்சி. எப்படியாவது செல்ல வேண்டும் என்ற நினைப்பில்! கூடுதல் பயனாக பல பழைய நட்பு வட்டங்களையும் சந்திக்க இயலும் என்கின்ற ஆசையும்,ஆவலும் முந்தித் தள்ள விரைந்தேன்.

எதிர்பார்த்தபடியே பலரை சந்திக்க முடிந்தது. முகமன் கூற முடிந்தது.,சிலரிடம் உரையாடவும் வாய்த்தது. ஒரு சிலர் அக்கறையுடன், உடல் நலம் குறித்து உசாவினர். பொது நிகழ்ச்சியில் தற்போது சில சந்தர்ப்பங்களில் உங்களை சந்திக்க முடிகிறது என்கின்ற அவர்களின் விருப்ப உணர்வும் வெளிப்பட்டது.

சிலரிடம் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழையுங்கள் என்றும் கூற முடிந்தது.பத்திரிக்கையாளர் ஞானி அவர்களின் மறைவு அஞ்சலிக் கூட்டத்திற்கு என்னையும் அழைத்திருக்கலாமே! எனும் விருப்பார்வத்தையும் வெளியிட முடிந்தது.

பள்ளி நண்பன் குப்புராசுவிடம்,' பரிக்க்ஷா' வீதி நாடக இயக்க செல்வாக்கில், தாக்கத்தில், புதுச்சேரியில் 80களில் தொலைபேசித்துறை தோழர்கள்,சி.டி..பத்பநாபன் முன் முயற்சியில் பாவண்ணன்,மகேந்திரன்,மதியழகன், அன்பழகன்,வில்லியனூர் தோழர்கள் அருனன், சரவணன், மாலதி இன்னும் பலர் பங்குகொள்ள, ஒத்துழைப்புடன், 'விழிப்பு வீதி நாடக இயக்கம்' என்கின்ற பெயரில், பல முன்னெடுப்புகளை நிகழ்த்தியிருக்கிறோம்.

 'கூடங்குளம் அணு உலைத்திட்டம்',கருத்துருவான போதே அதற்கு கண்டனக்குரல் எழுப்பிய முதல் நிலம், புதுச்சேரி ஆகும்."அணு ஆபத்து தடுப்பு இயக்கம்" என்கின்ற பதாகையுடன், மேலங்கி அணிந்து, ஊர்வலமாக சென்று, புதுச்சேரி ஒதியஞ்சாலைத் திடலில் கூட்டம் நடந்தது.

நெடுமாறன், மணியரசன், அந்தன்கோமசு, அழகிரி ,ஞானி போன்றவர்கள் பங்குகொண்ட பெருந்திரள் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.இவை குறித்து எல்லாம் பழைய நினவுகளின் பதிவுகளை அசை போட இயன்றது.

இவை குறித்து விரிவாக பதிவு செய்யும் முனைப்பு,  ஒருங்கிணைப்பு யாவுமின்றி, தனி ஆவர்த்தனமாக, தன்முனைப்பு போக்கில் புதுச்சேரியில் சில பத்தாண்டுகளாக மேலோங்கி நிலவி வரும், ஆரோக்கியமற்ற  சூழல் விரிவாகியுள்ள  நேர்வு குறித்தும் எங்கள் விசனம் விரிந்தது

.மனநிறைவுடன், பேராசிரியர்.இளங்கோ அவர்களின் மகன் திருமண வரவேற்பு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. தனித்தீவாக இல்லாமல், தீவுக்கூட்டமாக செயல்பட, தோழர்.இரா.சுகுமாரன், பத்திரிக்கையாளர்.பி.எஸ்.பாண்டியன் போன்றோரிடம் என் விருப்பத்தை பகிர்ந்து கொண்டேன் .

No comments: