Tuesday, March 20, 2018

கேளிக்கை வரி- இரட்டை வரி விதிப்பு!

கேளிக்கை வரி- இரட்டை வரி விதிப்பு- எதிர்த்து திரையரங்கினர் போராட்டம்!

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு காலத்தில், சிறியதும் பெரியதுமாக, 30க்கும் மேற்பட்ட திரையரங்கங்கள் இருந்தன.ஒரு காலத்தில் 'கெப்லே தியேட்டர்'; 'தகர கொட்டா'; 'டென்ட்டு கொட்டா' என்று எமது தந்தை கூற கேள்விப் பட்டிருக்கிறேன்.

 நான் அறிந்தது 'கந்தன் கொட்டா'; 'நியூடோன் டாக்கீஸ்'; 'கண்ணம்மை டாக்கீஸ்'; 'சிவகாமி டாக்கீஸ்'; 'வீனஸ் தியேட்டர்'; 'ராஜா டாக்கீஸ்' போன்றவைகள்.இராமன் திரையரங்கம்; 'ஜெயராம் திரையரங்கம்'; 'ஜீவா ருக்மணி' பிற்காலத்திய சேர்க்கைகள்.

 1980களில்,'ஆனந்தா மற்றும் லிட்டில் ஆனந்தா'- இரட்டை திரையரங்குகள் பலராலும் பேசப்பட்டு, சில ஆண்டுகள் கழித்து சினிமாத்தொழில் நலிவுற்றதால், தாக்குப் பிடிக்க இயலாமல் பல திரையரங்கங்கள் மூடுவிழா கண்டன, தொழில் மாற்றம் பெற்று, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற இலாபகரத் தொழிலுக்கு உருமாற்றம் பெற்றன.

இவ்வகையில் 20 திரையரங்குகள் மூடப்பட்டன. நிலைமையை உணர்ந்த அப்போதைய அரசாங்கம், தமிழ்த் தலைப்பிட்ட தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு தலைப்பிட்ட தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டும் 'கேளிக்கை வரி' விலக்கு தொடர்ந்து அளித்தது.

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் 25% விழுக்காடு கேளிக்கை வரியாக சினிமாத் தொழிலுக்கு நிர்ணயம் செய்து வசூல் செய்து வந்தது.இதில் 10% விழுக்காடு 'திரையரங்க பராமரிப்பு' செலவிற்கு போக, மீதம் திரையரங்கங்கள் செலுத்தி, நாள் ஒன்றுக்கு பல இலட்சங்கள் புதுவை அரசுக்கு வருவாயாக அளித்து வந்தன.

இந்நிலையில், 1.07.2017 முதல், மத்திய அரசு விதித்த 'சரக்குகள் மற்றும் சேவை வரிச் சட்டம், 2017, புதுவை அரசாங்கம் சட்டப்பேரவையில் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. அதன்படி, 100 உருவாய்க்கு குறைவான 'டிக்கெட் கட்டணத்திற்கு' 18% விழுக்காடு' கேளிக்கை வரியாகவும்; 100 உருவாய்க்கு மேல் உள்ள கட்டணத்திற்கு 28% விழுக்காடும்  கேளிக்கை வரியாக; விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திரையரங்குகள், மாநில அரசு விதிக்கும் 25% விழுக்காடு, மத்திய அரசு விதிக்கும் 28% விழுக்காடு, ஆக மொத்தம் 53% விழுக்காடு' கேளிக்கை வரியாக", ரசிகர்கள் தலையில் சுமத்தி, வசூல் செய்து வருகின்றது.

ஒரு குடும்பம் பொழுதுபோக்கு செலவாக, கூடுதலாக 28% விழுக்காடு கொட்டி அழவேண்டியிருக்கிறது. சம்பள உயர்வு; கூலி உயர்வு இத்தனை சதவீத உயர்வு காணாத நிலையில், மறைமுக வரி, இதுவரை இல்லாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உலக வங்கியே அதன் அறிக்கையில், அதிகமாக மறைமுக வரி  வசூல் செய்யும் நாடு என்று சுட்டிக் காட்டி உள்ளது.

'ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி விதிப்புக் கொள்கை' முழக்கம் என்னவாச்சு? சினிமாத் தொழிலுக்கே, "இரட்டை வரி விதிப்பு" இப்படியாக இருக்கும் போது மற்ற தொழில்கள் குறித்து சொல்ல வேண்டியது அவசியமில்லை. மக்களை வரி விதிப்பில் உறிஞ்சிடும் வஞ்சகம் மிகக் கொடுமையானது!

 இந்த இரட்டை வரி விதிப்பை எதிர்த்து, ஒரே தருணத்தில், " கேளிக்கை வரியாக", மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் செலுத்த இயலாது, ஒரு வரி மட்டுமே செலுத்துவோம் என்கின்ற போராட்டம், ஒரு வகையில், நுகர்வோர் உரிமைக்கான போராட்டமாகவும், நாம் காண வேண்டியுள்ளது.

 பல நுகர்வோர் அமைப்புகள் இது குறித்து, அதிக அக்கறை எடுக்காமல், எம்மால் தெளிவு படுத்திய பிறகும், நுகர்வோர் விழா கொண்டாட்டங்களிலேயே மூழ்கி உள்ளது.

16, மார்ச், 2018 முதல், தமது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் திரையரங்கள் குறித்து அரசாங்கங்கள் கண்டு கொள்ளவில்லை!

துணைநிலை ஆளுநர் , முதலமைச்சர்,  உள்ளாட்சித் துறை அமைச்சர், துறை செயலர் ஆகியோரைச் சந்தித்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தியும் உரிய சாதகமான உத்தரவு  கிடைக்கவில்லை!

அனைவரும்  விழிப்புணர்வு பெற்று, அணிதிரண்டு வெகு மக்களின் வாழ்வாதரத்தை பலமுனைகளிலும் நுட்பமாக அழித்திடும் சூழ்ச்சியை வெல்ல, போராட வேண்டும்!

No comments: