Friday, March 9, 2018

தந்தையர் தினம்

(தந்தையர் தின நினைவாக 1985ல் மறைந்த எமது தந்தை குறித்து எழுதியது தற்போது பதிவேற்றம்)

எனக்கு வாழ்த்து கூறுகிறார்
நன்றி உணர்ச்சியுடன்.
வாழ்த்துக்குரியவர் நீங்கள் தானே!
உங்களின் தொடர்ச்சிதானே
நான்,
என் வாரிசுகள்.

இப் பதவிக்குரிய தகுதி சேர்த்தவர்
நீங்கள்தானே!
தோழனைப்போல் தோளில் கை போட்டு,
துருவித் துருவி கேள்விக் கணைகள்
தொடுத்து,
விடை கண்டாயே!

பல விவரங்களில் பகுப்பாய்வுத்தேடி
உம் பட்டறிவை பக்குவமாய்
பகிர்ந்தாயே!
பல்லனுபவம் எமக்குச் சேர்த்து
சுமந்தாயே!

வெண்சுருட்டை விட்டு விடுங்கள்
கடுமையான இலச்சினை என்றதும்,
மாற்றி இலச்சினை 'கத்தரிக்கு'
மாறினாயே!
இலட்சியம் துறந்து!

மதுவின் கொடுமையை மறந்திட இயலாமல்,
மயக்கும் கூட்டம்
உம்மீது செல்வாக்கு செலுத்தி
கரைத்த செல்வம்,

நிலை உணர்த்த முயன்றபோது
பிள்ளை சொல்லுக்கு பெருமை சேர்த்து,
பெரிய பிள்ளைக்காக

அளவைக் குறைத்து,
 அங்காடி தவிர்த்து
வீட்டிற்குள் பழக்கத்தை,
மறைவாக தொடர்ந்தாயே!

வளர வளர
எம் கல்விப் பெருமை
ஊர் அறிய,
உறவு அறிய உழைத்தாயே!

உணர்வுடன் உயர்த்தினாய்!
நம்பிக்கை சேர்த்து.

எமக்கு பிறகு தாயுடன்,
உடன் பிறந்தாரைக் காத்திடுவேன்
கரை சேர்த்திடுவேன் என்று,

உயிர் ஊசல் நிலையிலும்
மருத்துவ மனையில்
 உள்ளவர்முன்னிலையில்,
 உறுதியுடன் உரைத்தாயே!

உமது பெரு வாழ்வின்
நினைவுகள் சுமந்து,
விலகிச் செல்லாமல் விருப்புடன்
கடமை செய்து,

கவலை கடந்து களிப்புடன்,
சலிப்பு கழன்று
 சந்ததி பெருக்கி,
வளமுடன் நன்றியுணர்வுடன்!

No comments: