Tuesday, April 24, 2018

கணக்கன் ஏரியும், கழிவு நீர் சுத்திகரிப்பும்- ஒரு பார்வை.

.

புதுவை மாநிலம் 493 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.புதுவைப் பகுதி மட்டும், 293 சுதுர கிலோ மீட்டர் அளவுடையது..புதுவை மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 86 ஏரிகள் உள்ளன.

கணக்கன் ஏரி:
புதுவை உழவர்கரை நகராட்சி எல்லைக்குள், வழுதாவூர் சாலைக்கு தெற்கில்; புதுச்சேரி நகரத்தின் இதயப் பகுதியில்;  13 எக்டேர் பரப்பளவில் 1.838 சதுர கிலோ மீட்டர் நீர்ப்பிடிப்பு;  கொள்ளளவு கொண்ட பழமையான ஏரியாகும்.

ஏரிக்கு நீர் கொண்டு சேர்க்கும் கால்வாய்கள்:

1.தெலாசுப் பேட்டை கால்வாய்
2.மேட்டுப்பாளையம் கால்வாய்
3.சண்முகாபுரம் வெள்ளவாரி

உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட வேளாண்மைப் பகுதிகள், நகரமயமாக்கல் தாக்குதலின் விளைவாக, இவ்வேரிக்கு ஆயக்கட்டு பகுதிகள், தற்போது அறவே இல்லை.

சாக்கடை நீர்- மாசு அடையாமல் பாதுகாப்பு:

3 வடிகால்கள் வழியாக, ஏரியை நோக்கி பாய்ந்து வரும் சாய்க்கடை நீர், உழவர்கரை மேட்டு வாய்க்கால் மற்றும் மோகன் நகர் சாய்க்கடை கழிவு வாய்க்கால்களுக்கு அனுப்பப்பட்டு, கணக்கன் ஏரி மாசடையாமல் காப்பாற்றப் பட்டு வருகிறது.புதுச்சேரி நகர புறப்பகுதியில், மழைநீர் பிடிப்பு பகுதியாக, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் ஏரியாகவும் விளங்குகிறது.

புதுவையில் பாதாள சாக்கடைத் திட்டம்:

கழிவுநீர் மேலாண்மை, பொதுநலம் ஆகியவற்றின் அடிப்படையில் முதன் முதலாக, 1980ல், ஒருங்கிணைந்த நகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பாதாள சாக்கடைத் திட்டம், புதுவை அரசு பொதுப்பணித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.

நகரம் மற்றும் நகர்ப்புறம்- மண்டலங்கள் பிரிப்பு:

1.புதுச்சேரி, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
2.முத்தியால்பேட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
3.முதலியார்பேட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
4.நெல்லித்தோப்பு, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
5.இலாசுப்பேட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
6. தட்டாஞ்சாவடி, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
7.முத்தரையர்பாளையம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்
8. மூலகுளம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்
9.ரெட்டியார்பாளையம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கழிவுநீர் சேகரிப்பு இறைப்பு / சுத்திகரிப்பு நிலையங்கள்:

1. குருசுக்குப்பம்
2.தெபசான்பேட்டை
3.துப்ராயப்பேட்டை
4.இலாசுப்பேட்டை

மேற்காணும் நான்கு நிலையங்கள், 98 கிலோ மீட்டர் அளவிற்கு பாதாள சாக்கடைத் திட்டத்தில் தம் பணியை செய்து வருகின்றன.இதன்படி 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு  செயல்பாடுகளினால், 30% விழுக்காட்டு மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.

இலாசுப்பேட்டை நிலையம், புதுவையின் வடக்கு பகுதியில், 7கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.நாள் ஒன்றுக்கு 12.5 மில்லியன் லிட்டர் கழிவு நீரை கையாள்கிறது. இது, 15.3 மில்லியன் லிட்டர் அளவிற்கு மேம்படுத்திடும் உத்தேசம் உள்ளது.துப்ராயப்பேட்டை நிலையம், நகருக்கு மேற்குப் பகுதியில், 2 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 2.5 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, கடலில் விடுகிறது. இலாசுப்பேட்டையில் 125 ஏக்கர் பரப்பளவில் கழிவு நீர் சுத்திகரிப்பு பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள்

14 சாக்கடை நீர் சேகரிப்பு திட்டங்கள் அரசாங்கத்தின் உத்தேசத்தில் உள்ளது. அதில், கழிவு நீர் சுத்திகரிப்பு, கீழ்க்காணும் இடங்களில்/பகுதிகளில், 2008 ஆம் நிதியாண்டில் செய்து முடிப்பது என முடிவு செய்யப்பட்டது.

1. கணக்கன் ஏரி- 24 மில்லியன் லிட்டர் நாள் ஒன்றுக்கு
2.துப்ராயப்பேட்டை, 24 மில்லியன் லிட்டர் நாள் ஒன்றுக்கு
3.இலாசுப்பேட்டை 24 மில்லியன் லிட்டர் நாள் ஒன்றுக்கு.

கணக்கன் ஏரியில் கழிவு நீர் சுத்திகரிப்பு - ஏன்?

கழிவு நீர் சேகரிப்பது, சுத்திகரிப்பு செய்ய வேண்டியது, நகர சீரமைப்புத் திட்டத்தில் அவசியமானது ஆகும். இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.எனினும், மழை நீர் சேகரிப்பு நீராதார அமைப்பாக பன்னெடுங்காலமாக விளங்கிடும் மிகப் பழமையான கணக்கன் ஏரிப் பகுதியில், இத்தகைய திட்டம் மேற்கொள்வது ஏரியின் நிலைப்புத் தன்மையை பாதிக்கும்.

படிப்படியாக கழிவு நீர் கலந்து, கழிவுத்தொட்டியாக உருமாறி, சீர்குலையும், சிறப்பிழக்கும். நெடிய நோக்கில் ஏரி இருந்த இடம் தெரியாமல், சுவடு மறைந்து போகும்


No comments: