Monday, April 30, 2018

தனிமைக்கு அப்பால்


எனது தனிமைக்கு அப்பால் மற்றொரு தனிமை,
அங்கே உறைகின்றவனின் தனிமையை விட,
எந்தன் தனிமை நெரிசல் மிகுந்த சந்தைக்கடை,
எந்தன் தனிமை சப்தங்களின் குழப்பம்,
அப்பால் நிலவும் தனிமையைக் காண தவிப்பு மிக அதிகம்,
ஆயினும் இளம் வயது எனக்கு,
மேல் பள்ளத்தாக்கின் குரல்கள்,
இன்னமும் என் செவிகளை ஈர்க்கிறது,
அவற்றின் நிழல்கள் எந்தன் வழியை தடுத்தது
என்னால் செல்ல முடியவில்லை!

இம் மலைகளுக்கு அப்பால் வசீகரிக்கும் தோப்பு
ஒன்று உண்டு,
அங்கே குடிகொண்டுள்ள எனது அமைதி
வேறொன்றும் இல்லை,
சுழல் காற்றாகும்.
என்னை ஈர்க்கக் கூடிய மகிழ்ச்சி
ஓர் இல்பொருள் காட்சியாகும்.

மிக இளையவன் நான்,
மிக கிளர்ச்சியானவனும் கூட
புனிதமான  அத்தோப்பினை நாட,
குருதியின் சுவை என் வாயில் இன்னமும்
 ஒட்டிக் கொண்டிருக்கிறது.
எனது முன்னோர்களின்
வில்லும், அம்பும்
இன்னமும் எனது கைகளில்,
என்னால் செல்ல இயலவில்லை!

இந்த சுமையான மனத்தினைத் தாண்டி
எந்தன் சுயேச்சையான மனம் இருக்கிறது
என்னுடைய கனவுகள்
சுயேச்சையான அகத்திடம்
அந்திப் பொழுதில்,சமர் செய்கிறது.

அகம், அதற்கு எம் கனவுகள்
யாவும்
அந்திப்பொழுதின் போர்க்களம்.
எம் விருப்பங்கள் யாவும்
எலும்புகளின் ஒலிப்பாகும்.

யான் மிகவும் இளையவன்
எனது சுயேச்சையான மனமாக இருந்திட,
மிகவும் வன்மம் கொண்டுள்ளேன்

சுமையான எனது சுயத்தை
நான் கொல்லாது அல்லது
அனைத்து மனிதர்களும் விடுதலை பெறாமல்,
யான் எனது சுயேச்சையான
மனதாக மாறுவது எவ்வாறு?

இருண்மையில் எனது வேர்கள்
அழிந்துவிடாமல்,
எமது இலைகள் காற்றில் கீதம்
இசைத்து,
எவ்வாறு பறக்க முடியும்?

எனது சொந்த அலகினால்
கட்டப்பட்ட கூட்டை விட்டு,
எமது குஞ்சுகள் வெளியில் கிளம்பாமல்,
எவ்வாறு என்னுள் இருக்கும்
சூரியக் கழுகு,
வெளிச்சத்தில் பறக்க முடியும்?


(கலீல் சிப்ரான் கவிதையின் மொழியாக்கம்.2003ல் செய்தது. தற்போது பதிவேற்றம் காண்கிறது.)

No comments: