Wednesday, May 23, 2018

பெருவணிக இலாபப் பசி-' ஸ்டெர்லைட்'

சுடுவார்!
சுட்டுப் பொசுக்குவார்!
எதிரியைப் போலே, ஏறி படுத்து
குறிபார்த்து!
 ஆயுதந்தரித்து!
எண்ணிக்கை அதிகரிக்க
கெக்கலி கொட்டுவார்!
இறந்து விழும் உடல்கள் கண்டு
எள்ளி நகையாடுவார்!

வாழ்வாதாரத்திற்கான போராட்டம்!
உமக்கும் சேர்த்துதான்!
அதிகார வர்க்கமும்
சுவாசிப்பது' ஸ்டெர்லைட்
நச்சு' காற்றைத்தான்!

புற்றுநோய், பொல்லாத நோய்
பொசுகென போய்ச் சேர்வதும்
பொதுவானதுதான்.
சேவகம் செய்வதற்கும் அறம்
உண்டு!

ஊரைப் பகைத்து, உறவைப் பகைத்து
உயர்த்தும் கை! ஒடுக்கும் தடி!
வெடிக்கும் குண்டு!
ஒழுங்காகுமா?

சுருண்டு விழுந்தவர், சுய நலத்திற்காகவா
போராடினார்?
உயிர் துறந்தவர், ஓட்டு வாங்கவா?
ஓடி, ஓடி அடிபட்டார்!
 மிதிபட்டார்!

சந்ததி காத்திட
சத்தமிட்டு, ஓலமிட்டு
வாழ்வுரிமை காத்திட,
வக்கில்லா ஆட்சியின்
போக்கு உணர்த்திட,

 பெருவணிகக் கூட்டத்தின் இலாபப் பசிக்கு
இரையாக விருப்பமின்றி,
 இயற்கைத் தாயைக் காத்து,
காற்றையும் நீரையும் வாழ்வுரிமை
 என அறுதியிட்டு,
 ஆர்ப்பரித்த கூட்டத்தை,
அரச அதிகார வெறியில்,
ஆவி பறித்தனர்!

சகிப்பின்மை அரசியலின்
 இன்னொரு முகம்!
சனாதன  கூட்டணியின்
கோர முகம்!

தமிழ்ச் சமூகமே!
வீரத் தியாகம் வீண் போகாது!
ஒன்றுபடு! உரிமைக் குரல் எழுப்பு!

போராடு! பகையை எதிர்கொள்!
 எல்லைகளைக் கடந்து ஆதரவு தேடு!
 பயங்கரவாதத்தின் முகமூடி கழற்று!
 வ.உ.சி.பிறந்த மண்ணின் பெருமை உயர்த்து!
 பாரதியின்அக்னி குஞ்சாக
 பகை வெல்!

No comments: