Wednesday, October 31, 2018

குறைவில்லை


மாசுக்கு குறைவில்லை,
தூசுக்கும்,
அடிக்கொரு பள்ளம்,
அடிக்கடி வெட்டு
துலங்கா அரசு,
விளங்கா மக்கள்.

நவராத்திரிசப்தங்கள் பிடியில்
நிசப்தம்,
மொட்டை மாடியும்
 தவிக்கிறது.

'ஞாயிறு'

'ஞாயிறு சந்தை', சில பர்லாங் தொலைவில்.பயண தொடக்கத்தில் சேர்ந்த முதல் கிழமை.காலையில் எழுந்து, துரிதமாகி, பாலாவுடன் குடை எடுத்துக் கொண்டு, காரில்.விசும்பின் துளிகள் பரவலாக மேலும் குளிரூட்டியது.

நிறுத்தம் அடைந்து, வரிசையாக கடைகள்:மீன் கடை, காய்கறி கடை,ரொட்டி, இனிப்பு கடை, காலணி/மூடணி கடை, ஒப்பனைப் பொருட்கள், பழக்கடைகள் வரிசையாக பிரஞ்சு மொழியில் கூவி அழைத்தனர், வாடிக்கையாளரை.
வண்டிகளில் இறக்கி, கூடாரம் அமைத்து, வண்ணக் கோலத்தில்.நம் ஊரில் காணாத காய்கறிகள், பழங்கள்.

'அவக்கெடா', போன்ற காய்/பழம், 'அவக்கேடு' என்று நினைக்காதீர். இலத்தின்_அமெரிக்க நாட்டிலிருந்து தோன்றிய வெள்ளரி ஒத்த தோற்றம்.ஆயினும் வெள்ளரி அன்று! அதை நறுக்கி, 'சலாத்' எனும் கலவை, தக்காளி நறுக்கித் துண்டுகள், மிளகுத்தூள் தூவி உணவுக்கு முன் சாப்பிடுகின்றனர்.வெண்ணய் போன்ற குழைவு/சுவை, புளிப்பும்/இனிப்பும் இன்றி, 62 ஆண்டு கால நாவின் சுவைக்கு, புதிய அனுபவம், சுவைத்து அறிந்திட முயன்றோம், முழுமையாக.

அதனூடே, இது என்ன காய்/பழம் என்ற சரித்திரம் அறியும் முயற்சி.மகளும் அளித்ததைக் கூற, மருமகனும் கூடுதல் விவரம் அளிக்க, விடை தேடும் மனம் இணையத்தை நாட; எண்ணங்கள் விரிந்திட, ஆவல் கூடிட.

காய் அல்ல, ஒரு வகை பழம், தெற்கு மத்திய மெக்சிகோவில் தோன்றியது.பூத்து காய்க்கும் தாவர குடும்பம்,'லாராசியே' என்ற தாவரவியல் பெயர் தாங்கியது.100 கிராம் பழத்தில், 160 கலோரி சத்து உள்ளது.

நம்மூர் பப்பாளி போன்ற வடிவம் அல்லது குண்டு சுரைக்காய் தோற்றம் என்றும் கூறலாம்.1.2 கிலோ வரை கூட ஒரு பழத்தின் அளவு இருக்கும்.மூன்று, நான்கு ஆண்டுகள் கழித்து காய்க்கும்/கனியும், சில 15 ஆண்டுகளுக்கு மேலாகவும் எடுத்துக் கொள்ளும்.மேலும், சில காய்க்காது போனாலும், கூடுதலான மரங்கள் தோன்ற, மகரந்த சேர்க்கைக்கு உதவிடும்.

உடலுக்குத் தேவையான, ஆரோக்கியமான கொழுப்பான -'மோனோ சேச்சுரேடட் கொழுப்பு' உள்ளடக்கியது.கொழுப்பை குறைத்து, இதய நலத்திற்கு ஏற்றது.குளிர் நாடுகளில், குளிர்ந்த காலத்தில், பனி தாக்காத வகையிலான, 'அவெக்கெடா' பயிரிட வேண்டும்.

தட்ப-வெட்ப, துணை தட்ப-வெப்ப, பருவ நிலைகளில் மட்டும் பயிரிட தோதானது.20லிருந்து, 40 அடிகள் வரை வளரும்.5 அல்லது 7 ஆண்டுகளில், 200லிருந்து 300 பழங்கள் தரும்..ஓராண்டு விட்டு அதிக மகசூல் அளிக்கும், 'அவெக்கெடோ' மரம்.ஆண், பெண் இரு பாகங்கள் உடையது.

இரண்டு நாட்கள் மட்டும் அதன் பெண் பகுதி மகரந்த சேர்க்கைக்கு இரண்டிலிருந்து, நான்கு மணி நேரம் திறந்திருக்கும்.இந்த ஒரு பழமே நமது சிந்தனையைத் தூண்டும், புரிதல் ஏற்படுத்தும் எனின்; மேலும் சில பழங்களைக் கண்டேன்.

அவை குறித்தும் அறிந்து கொள்ள  ஆவல் கொண்டேன்.அறிவார்ந்த அலசலுக்கு எல்லையேது?

 இது குறித்து அசை போட்டு, தக்காளிகள் பலவகை, பீச் பழங்கள் குண்டாகவும்,தக்காளி வடிவத்திலும்; கிவி பழங்கள்; பருத்த, தடித்த,நீளமான கத்தரிக்காய், ஒவ்வொன்று கால் கிலோவிற்கு குறையாமல்; கோசு நிறை பெரிது, எடை இலகுவாக;வெள்ளை உருளை அனைத்து காய் கறிகளும், ஒரு கிழமைக்கு உகந்த கொள்முதல் 20 'ஈரோ'க்குள் (பிரஞ்சு பணம் ஒரு ஈரோ உரு.85).

நமது ஊர் சந்தை கொள்முதல் ஒப்பீட்டில், சிக்கனமாகவே எமக்குத் தோன்றியது.நடுத்தர/கீழ் நடுத்தர வகுப்பினரின் வரவு செலவிற்கு ஏற்ற/உகந்த சந்தை.

பீச் பழம் தேர்வு செய்யும் தருணம், கொள, கொளவென்று இருந்தது.கடைக்கார பெரியவர், இரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும் என்று எச்சரிக்கை தந்தார்., பக்கத்தில் தக்காளி வடிவ பழத்தை சுட்டினார்.

இவர் கடை பின்னால், ஒரு வெள்ளை நிற 'வேன்', பிரெஞ்சு எழுத்துகளில் பளிச்சிட, "கேட்டலோனியா", என்கின்ற வார்த்தைகள், என்னை நிமிர வைத்தது.

"ஸ்பெயின்" நாட்டில், தன்னாட்சி உரிமைக்காக,, சனநாயக முறையில், வெகுண்டெழுந்து போராடிய மக்களின், உரிமை உணர்வு, எமது நினவலையில் நீண்டது.காய்கறிகள் ஸ்பெயினிலிருந்து விற்பனைக்கு, வருகின்ற விவரம் கேட்டறிந்தேன்.'பிளாஸ்டிக்' குவளைகள் இத்தாலியில் இருந்து விற்பனைக்கு விநியோகம் ஆவதையும் அறிந்தேன்.

சந்தையை இரண்டு, மூன்று சுற்றுகள். உடல் நடைகூட்ட, உள்ளம் சிந்தனை விரைவூட்ட, உணர்வுகள் ஊட்டம் பெற, திரும்பும் வழியில், ஒரு பெண்மணி, கையில் துண்டறிக்கையுடன், விநியோகம் செய்திட, உடன் ஒத்த ஒருவரும் கைகளில் துண்டறிக்கையுடன்.

பாலாவக் கண்டவுடன் அவர் பேசத் தொடங்கினார்.சில மணித்துளிகள் கழிந்த பிறகே, அது உசாவல் என்றறிந்தேன்.தொடக்கத்தில் நம்மூர் மத பிரசாரம் போல் நமக்குத் தோன்றியது.

நானும் ஒரு துண்டறிக்கையை வாங்கி, தத்து, பித்து என்று படிக்க முயன்று புரிந்து கொண்டது, முதாலளித்துவத்திற்கு எதிரான ஒரு கட்சி/அமைப்பு என்பதை"முதலாளியத்திற்கு எதிரான ஒரு புதிய கட்சி", என்பது எமக்கு புரிந்த மொழி பெயர்ப்பு, பிரஞ்சு மொழியில்,"nouveau parti anti-capitaliste",
என்று அச்சிடப்பட்டிருந்தது.

 என் ஆர்வம் அறிந்த பாலா, நடுத்தர வயதைக் கடந்த அப்பெண்மணி, பேராசிரியை என்றும், அவர் பெயர், 'கிளமோன்',பள்ளியில் கிளர்ச்சி எண்ணம் உடையவர் என்றறியப்பட்டவர்.பாடம் நடத்தும் சமயம், பொதுப் பிரச்னை குறித்து தொட்டு விட்டால், மணிக்கணக்கில், மாணவர்கள் பாடத்தை பிடிக்காமல், சில சந்தர்ப்பங்களில் அவரைக் கிண்டி விட்டு, கிளரி விட்டு, வேடிக்கைப் பார்ப்பார்கள் என்றான்.

படிக்கும் மாணவருக்கு "பூர்சு" என்கின்ற உதவித் தொகையை பிரஞ்சு அரசாங்கம் குறைத்தபோது, ஆயுதம் வாங்குவதற்கு நிதி இருக்கிறது.கல்விக்கு உதவிட நிதி இல்லை, என அரசைக் கண்டிக்கும் போராட்டத்தை நடத்தியவர், என்று அவரது அருமை, பெருமைகளை, அடுக்கிக் கொண்டே, காரில், வீடு திரும்பினோம்.

பிரஞ்சுமொழி சரளம் இருந்தால், அவரிடம் என் மனவுணர்வுகளை நேரிடையாக பரிமாறிக் கொண்டிருந்திருக்க இயலும். ஆதங்கம் அலை மோத, இரண்டாவது ஞாயிற்று சந்தை பட்டறிவு, இப்படியாக என்னுள் பலமான ஓட்டம்!

Monday, October 29, 2018

வாண வேடிக்கை!நள்ளிரவு வாண வேடிக்கை, நம் ஊரை மிஞ்சும் வாடிக்கை.ஆற்றங்கரையோரம் அணி,அணியாய் மக்கள் கூட்டம், அலை மோதாமல் அமைதியாக! விழித்திருந்து, விருந்து; மேசை தயாரிப்பில் ஒயின்/மது, உணவு வகைகள் சகிதமாக, இருண்ட சூழலில் மெழுகு வத்தி ஏற்றி, அமர்ந்து ஆற, அமர, உரையாடி, பிரஞ்சு விடுதலை நாள் பிறப்பை விரும்பி, வரவேற்று மகிழும் வெடிகள்.வியத்தகு வகைகள்.இதுவரை கண்டிராத இனிமையில். நம் மீது/நம் பக்கம் ஓடோடி வரும் செந்நிறம், பொன்னிறம்,நீலம், இளஞ்சிவப்பு என எண்ணற்ற வண்ணக் கூட்டில்,எண்ணக் குவியலில் பிசைந்து.

மரம் போன்ற காட்சி,இதய வடிவம், ஈச்ச மரம் போன்று, அவரவர் கற்பனைத் திறனுக்கு ஈடேற்றம்/விளக்கம் கூட்டிடும், விளக்கொளிகள்/விலக்கு ஒளிகள்.அரை மணி நேரத்திற்கு மேலும், அனைவரும், தன்னை மறந்து, விண்னை நோக்கி திருப்பிய விநோதம் அனுபவிப்பில் ஆனந்தம்.எழுத்தில் அவ்வுணர்வுகளை வடிக்க இயலாது.தளர்ச்சி போக்கிய, கிளர்ச்சி.குடைபோல் விரிந்து; காளான் போன்று கவிந்து, ஆல மரம் போல், அரச மரம் போல் தழைத்து; வேர் விழுது விட்டு; நீண்ட காட்சி, நெடிய மாட்சி!

குழந்தைகள், முதியோர், இளைஞர், ஆண்,பெண், நோயுற்றோர், மாற்றுத் திறனாளி உள்ளிட்ட மக்கள் திரள், தமது வாகனங்களை ஒழுங்காக நிறுத்தி, நடந்தே, "சான்த்ரு வீல்",- புளூவா-(பிரான்சின் ஒரு பிராந்தியம்), கடந்து,"லுவார்", ஆற்றங்கரை ஓரம் அமர்ந்து, கண்ணயராது கனிந்த/களித்த காட்சி விவரிக்க எழுத்துக்கள், போதா/ துணை நிற்கா !

Saturday, October 27, 2018

தோட்டம்/ துப்புரவு


மருகன் இல் அமைந்த தோட்டத்தில், ஊட்டத்துடன்
ஓடி,ஆடி, அமைதியாக.
இரைச்சல் என்பதும், கரைசல் என்பதும் புறாக்களின், ஓயாத,'குக்கூம்,குக்கூம்',
மைனாவின் வருகை, பருத்த பழுப்பு நிற அணில் வகுப்பு,தேனீக்கள் ரீங்காரம்; வண்ணத்து பூச்சிகளின் வகை,வகை.இவைகளின் நிரலில் கரைந்த பொழுது.

இடையிடையே,ஒன்றிரண்டு வாகனங்கள் ஒலி,காற்றில் அடைந்திடும், வாயிற் புற வரிசையில்.சாலை மருங்கில், நேர்கோட்டில் நிற்கும் மரங்கள், உயரம் கூட ஒரேயளவு. கழித்து செப்பனிடும் பணியாளர், கவனமாக , களிப்புடன் புதன்கிழமைகளில்.

சாலையோரம் துப்புரவு கவசம் அணிந்து, உறிஞ்சும் கருவி துணையுடன் ஒருவர்.சில மணி நேரம் கழித்து தெருக்களை சுத்தம் செய்திடும் வாகனம், வியாழக் கிழமைகளில்.

 குப்பை வாரும் உந்து, பெரிய அளவில், வண்ணப் பெயர் தாங்கி, ஊழியர் இருவர்- ஒருவர் இயக்க மற்றொருவர் இறங்கி,ஒவ்வொருவர் வீட்டு முன்பும், முதல் நாளே குப்பைகளை, கறுப்புத்தாள் பையில் நன்கு திணித்து, முடித்து வைத்து, 'கிரே' வண்ண அஞ்சல் பெட்டி உயரத்தில், சக்கரங்கள் ஒரு பக்க சாய்வாக உள்ள துப்புரவான பெட்டி. எப்படி வைக்க வேண்டுமோ, அப்படி வைத்துவிட, எடுத்து வண்டியில் ஏற்றுகிறார், சிந்தாமல், சிதறாமல், சீராக, சிறப்பாக; ஈடுபாட்டுடன் இன்பமாக.


சூழல்

" செர்ரி"

காய்த்தாய் அன்று.
கண்டேன் காட்சி: காணொலி.

அடர்ந்த கிளைகளில் அட்டி,
அட்டியாக,
ரொட்டியில் தடம் பதிக்க,
சிவந்தாய், கனிந்தாய்
உருட்சி திரட்சியாக.

வருகிறோம் உம்மையும் காண,
பறந்தோடி வந்தோம்.
ஏமாற்றாமல்.

உன் நிறத்திற்கு வெளிர் நிறத்தில்
இதயம் திறந்தது,
உன் ஏமாற்றம் தவிர்த்திட
தரையில் படர்ந்து,
தளிகர்களின் இடையில்,

ஒன்றிரண்டு என ஒய்யாரமாக,
எடுத்துக் கொள்ளுங்கள்,
பறித்துத் தின்னுங்கள்,

கடைக்குச் செல்ல வேண்டாம் என,
பரிசில் வழங்கிய
'ஸ்ட்ராபெர்ரி'.

இதமான, இனிப்பும், புளிப்பும் கலந்த,
புதுமை சுவை,
நலம் பேணும் நிலை
நாளெல்லாம்,

விருந்தினை ஓம்பி, ஓங்கிய அன்பு
தழைத்திட,
நாள்தோறும் பராமரிப்பு,
நீர் பாய்ச்சி
நானும், அவளும்
நடை பயின்றோம்,
 "புளுவா"வில்

(பிரான்சு, சுற்றுச் செலவில், புளுவா ஊரில், பாரிசில் இருந்து 204 மைல்கள் தொலைவில், தங்கி அனுபவித்த சுற்றுச் சூழல்)

கட்டு


திரும்பிய மெய்
திரும்பாத கை

நிரம்பிய பைய்
நிரம்பாத பொய்

அரும்பிய மொட்டு
அரும்பாத கட்டு

ஊட்டம்காலத்தின் சோகம்
கரவுகளின் ஆட்டம்
உண்மையின் நாட்டம்
உறவுகளின் ஊட்டம்

மகள்

ஓங்கிய உணர்ச்சி!
வீங்கிய கண்களின் வீழ்ச்சி
நீர்த் துளியாக,
தேங்கியும் தேங்காமல்;
தாங்கிய தாயிடம்
தஞ்சமடைந்த மகள்;
அரவணைப்பில்,
மருமகன் வரவேற்பில்.

Friday, October 26, 2018

மழைமழை முத்தமிடட்டுமே
வெள்ளி நீர்த் திவலைகள்
உம் தலை மீது தாளமிடட்டும்
மழை உமக்கு தாலாட்டு இசைக்கட்டும்
நடைபாதை ஓரங்களை தேங்கிடும் குட்டையாக்கிடும்
சாக்கடை கழிவை ஓடும் குட்டையாக்கிடும்
சிறிய உறக்க கீதம் வீட்டுக் கூரை மீது
இரவில் இசைத்திடும்
எமக்கு விருப்பமான மழை.

("ரெயின்", தலைப்பில் லாங்க்ஸ்டன் அக்ஸ் எழுதியகவிதையின் மொழியாக்கும்)


Thursday, October 25, 2018

காதல்

(காதல்- வில்லியம் சேக்சுபிரியர்-
மொழியாக்க முயற்சியில் அடுத்த அடி)

கற்பனை ஊறும் இடம் எங்கே
எம்மிடம் கூறு,
நெஞ்சத்திலா அன்றி நினைவிலா?
எங்ஙனம் பிறந்தது,
எவ்விதம் ஊட்டம் அடைந்தது?
பதில் கூறு, பதில் கூறு.

அது விழிகளில் விளைகிறது,
உற்று நோக்கில் உண்டு;
கற்பனை வீழ்கிறது,
தொட்டிலில் கிடக்கிறது.

வாரீர்! கற்பனை வீழ்ச்சியின்
மணி ஒலிப்போம்:
தொடங்குகிறேன் நான், - டிங், டாங்
அனைவரும்.
 டிங், டாங்.

'குழந்தைகள்'

மகிழ்ச்சியில், பெருமையில் பிஞ்சு இதயத்தை
ஒரு சொல் நிரப்பிடும்;
கொடுமையானது, இரக்கமற்றது,
அதை மறுத்திடும் போக்கு.

இருப்பினும் களைப்புறும் பொழுதுகள் எத்தனை என்பதறியுமா,
மகிழ்வுறும் பிஞ்சுகள்;
மூத்தோர் இழைத்திடும் துயரம், உரிமைத் தடை
எவ்வளவு அவர்களால் என்பதறியுமா!

நமது பிழைகளினால் எவ்வளவு துயரம் அடைகின்றனர்!
நமது தவறுகளினால் எவ்வளவு!
அடிக்கடி,கூடிடும், தவறான உற்சாகம்!
ஓர் குழந்தையின் துக்கம் இழைக்கிறது!

ஆட்சி செலுத்துகிறோம், அதிகம் கற்பிக்கிறோம்,
பறிக்கிறோம் அடைக்கிறோம்,
விரைவில் நெஞ்சத்தை விரைந்து பள்ளியில் ஒப்படைக்கிறோம்,
நமது குறுகிய வழியை கற்றிட.


இல்லை: அன்பினால் அன்பு செய்திட கற்பித்தோம்,
குழந்தை பருவத்தின் இயல் பணி;
பிரியம், பெருந்தன்மை மற்றும் நம்பிக்கை,
யாவும் சில காலம் வேண்டும்.

('குழந்தைகள்', எனும் தலைப்பில் லெட்டியா எலிசபத் லென்டன் இயற்றிய கவிதை மொழியாக்க வாய்ப்பு பிரான்சு நாட்டின் சுற்றுச் செலவில் எமக்கு கிட்டியது)

Wednesday, October 24, 2018

கண்டாயா?

அங்கிருந்தது போலே
இங்கிருப்பாயா?

எங்கிருந்தபோதும்
ஏற்றம் தொலைப்பாயா?

வந்திருந்தவர் உபசரிப்பு
மறந்து போனாயா?

உள்ளிருந்தவர் உளறல்
ஊன்றி நின்றாயா?

கண் இருந்த போதும்
காட்சி மறந்தாயா?

காலம் கரைகின்ற நிரல்,

ஞாலம் உணர்ந்தாயா?
நால் வழி கண்டாயா?

Tuesday, October 23, 2018

பழகு.

கரைந்த பொழுது
நிறைந்த நினைவு,
நீங்கிடா உணர்வு;
நீண்டிடும் மகிழ்வு.

நீலத்திரை
கடந்த துணிவு,
நின்றிலங்கிடும் கனிவு;
நேர்ந்திட்ட விழைவு.

இருள் நீளும்
காலைப் பொழுது,
இருளாத மாலைப் பொழுது.

நீண்டிடும் பகற்பொழுது,
நித்திரை
தள்ளிப் பழகு.

ஆமை

ஆமை கண்டாள்
தோட்டத்தில்,
அதிர்ந்து போனாள் நோட்டத்தில்;
பழமை பின்னுழுக்க பதறினாள்.

வீட்டினுள் வைப்பேன் காப்பாக
என்றவன்,
வாங்கிக் கட்டிக் கொண்டான்.

வீட்டிற்கு ஆகாது என்று அலறினாள்,
உணர்ச்சி பிழம்பாகி, உளறல் மேலிட,
பதில் அளிக்க இயலா
கேள்வி எழுப்பி

'ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும்'
பழமொழி நினைவு முன்னிறுத்தி,

'ஆமை பொம்மை வாங்கிய அண்ணன்
அன்றடைந்த துயரம் இதனால்,
சாங்கியம் சொன்ன வாய் அடைய
சதிராடினாள்.

சில மணி நேர போராட்டம்,
காணொலி காட்சி
ஆமையின் அருமை ஆய்வுக் காட்சி அனைவருக்கும்
தெளிவேற்படுத்த,

அடுத்த வீட்டு முதியவர், 'அரவணைப்பின் செல்லம்'
முப்பது வயது ,
கூடுதல் தெளிவேற்படுத்தியது
அயலகத்தில்,
பிரஞ்சு தேயத்தில்
Sunday, October 21, 2018

கோலம்

விட்டகன்று விரைந்தேன்,
விடுதலையானேன்.
சுட்ட சூழல் சொடுக்கி கற்கும் சூழல்
கரை கடந்தேன்.

காலம் தந்த பரிசு,
கவலை மீண்டேன்.

காலச் சக்கர சுழற்சியில்
காற்றாடியாக,
நேரிய பட்டறிவு
துலங்கிடும் உலகம்
அடைந்தேன்.

உல்லாசம் அன்று,
நல்வாசம் இன்று.

நாடிய பொழுது யாவும் நலமாக,
நாள்கள் நகர்ந்திடும்
விரைவாக;
ஞாலச் சுழற்சியின்
கோலம் உணர்ந்தேன்.

நானில வரையறை கடந்தேன்,
நக்கிய உலகியல் சுவை
நாட்டம் காட்டிட,

நாளொன்று கூடும் செலவு
விருப்ப அவா,
நாகரிகம் கூட்டினேன்;
நற்பயணம் வேண்டினேன்.

பொழுது

விடிந்த பொழுது
விடியாத கனவு
கலைந்த உறக்கம்
களையாத மயக்கம்

குப்பை

குப்பை எங்காயினும் நாறும்
அங்கே அப்படி வாருவார்
இங்கே இப்படி வாருவார்
எங்கே எப்படி வாரினும்

கழிவின் குணம்
கமழும் மணம்
சிந்தாமல், சிதறாமல் சேகரம்
சேர்த்திடும் கரம்

கையுறை,மெய்யுறை
கவசம் அணிந்து
வண்ண வாகனத்தில்

இலுப்பிக் கொள்ளாது
இட்ட பணி முடிக்கும்
இளிமுகம் ஏற்று

(பிரான்சு நாட்டில் சுற்றுச் செலவு மேற்கொண்ட சமயம் கண்ட குப்பை வாரும் காட்சி)

புரியாத பயணம்

மறக்க முனைந்தோம், பறந்தோம்
பறவையென எண்ணங்கள் சிறகு விரிக்க
விண் இரதத்தில்;
எல்லைகளைத் தாண்டி, தொல்லைகளை மறந்து
தொலை செலவில்;
தொய்வு தொலைத்து இலகுவாகி,
கூகுல் தொடுதிரை
ஊர்தி செல் பாதை சுட்டி,
வரைபடம் கண்ட காலம் கடந்து,
நீள்வரை நித்திலம்,
நிலம், மலை, முகடு, சமவெளி,
ஆறு, கணவாய், பள்ளத்தாக்கு
பூமியின் பரிமாணங்களை கண்டு,
வியந்து,
தொழில்நுட்ப அறிவை மெச்சி,
மச்சி வீட்டிற்கும் மேலான,
உச்சி வீட்டில் அமர்ந்து, ஒய்யாரமாக
எண்ணாயிரம் கல்கள் மேல் கடந்து
தரை தொட்ட நிலவுபோல்
புரிந்தும் புரியாத பயணம்,
உறவுகள் வரவேற்க....