Friday, November 2, 2018

'எதிரித்தா குன்று'

பிரான்சின் நார்மண்டி பகுதி- 'எதிரித்தா குன்று', வடக்கு பகுதியில்; ஆங்கில கால்வாய் அருகில், அழகிய கடற்கரை பள்ளத்தாக்கு.
எழில் கொஞ்சிடும் இயற்கை; சில்லென்ற காற்று தாலாட்ட; சிந்தை குளிர்ந்திட; கால்ப் மைதானம்; படகுகள் அணிவகுத்திட; கடைகள் அணி செய்ய; நடைபாதைகளிலும் உணவகங்கள்; கடல் உணவு வகைகள்;மீன், ஆளி, ஒயின், பல்வகை மதுப் புட்டில்களுடன், மக்கள் மகிழ்ச்சியுடன் தன்னை மறந்து.

குழந்தை,குட்டிகள், முதியவர்,இளைஞர் என பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கைகளில் கேமராக்கள், செல்போன்கள்,ஐ-போன்கள் சகிதமாக அடுத்தடுத்து கிளிக் செய்யும் அற்புதம், வெள்ளைக் குன்றுகள் உச்சியில்.மாதாக் கோவில் அடுத்த குன்றுத் தொடரில்.

கூழாங்கற்கள் கொட்டி நிரப்பிய இறங்கும் பகுதி, சிலர் படகில் சவாரி, சிறு கப்பல் பயணத்தில் குடும்பமாக சிலர் செல்லப் பிராணிகளை, படிக்கட்டுகளில். சரிவுப் பாதையில், வளைந்து, நெளிந்து,படிப்படியாக உயர்ந்து, சரளைக் கற்கள் பரப்பி, பாதை ஒழுங்கு செய்து, பக்குவப்படுத்திய, தடுப்பு ஏற்பாடுகள்.பிடித்துச் செல்ல, உட்கார்ந்து, இயற்கை எழில் ரசிக்க, முறையான முன்னேற்பாடுகள்.

 தொடக்க நிலையில் கழிவகங்கள், கார் நிறுத்தம், கட்டணச் சீட்டு/தானியங்கி என ஓர் ஒழுங்கிற்குள், ஒப்பற்ற சூழல். எண்ண ஓட்டத்தை சீர்படுத்திய, வண்ண ஓட்டம், வகை, வகையான காட்சிகள். கடல் பறவை, தாழப் பறந்து நம்மிடம் பேசுவது போன்று, உணவு அளித்த/உண்ட பழக்கத்தில் அச்சம் கொள்ளாது, அணுகி வரும் காட்சி அற்புதம்.அனைத்தும், இதுவரை கண்டிராத காட்சி, இதயத்திற்கு ஏற்ற மீட்சி.

போகும் பாதையெங்கும், குன்றுகளும், சரிவுகளும், வயல்வெளிகளும், கோதுமை நிலங்களும், சூர்ய காந்தி பயிர்களும், மந்தை, மந்தையாக மாடுகள் மகிழ்ச்சியாக மேய்ச்சலில்.

 உழுபடை எந்திரங்கள் ஊர்வலமும், இடையிடையே கடந்து செல்லும் கிராமங்கள், தொகுப்பாக வீடுகள், தனித்தனியாகவும், தோப்புகள், பைன் மரங்கள் என கண் கவரும், குளுமையான சூழல். சாரல் மழை11 டிகிரி செல்சியசுக்கும் குறைவான சூழல்.நெடுந்தொலைவு பயணக் களிப்பு நீக்கும்.

இடை நிறுத்தங்கள் பூங்காக்களாக, கழிவகங்கள் துப்புரவாக, நேர்த்தியான ஒழுங்கமைவு,சாரி,சாரியாக வாகனங்கள் அணி வகுப்பில், அக்கறை ஒழுங்கு.முந்தும், முட்டும் நிலை தொலைந்து, விதி முறைகள் அனுசரிக்கும் போக்குவரத்து. திசைவழி காட்டும் விளம்பரங்கள் தெளிவாக, தானியங்கி கட்டண நிறுத்தங்கள் அடுத்தடுத்து. தனிவழியாக முறையான ஏற்பாடு, முண்டியடித்துச் செல்லும் முணகல் இல்லை!

No comments: