Wednesday, November 21, 2018

கஜா புயல்










எட்டிய தூரம் கொட்டிய மழை,
சுற்றிய வளி, சூறாவளி
 சுருண்டது வேதாரண்யம்
 சுழல் விசையில்.

முற்றிய துயரம், வற்றிய கண்ணீர்!

தலை சாய்ந்த தென்னை,
குலை சாய்ந்த வாழை,
சரிந்த கருப்பம் கொல்லை,
பிஞ்சு பிளாகாய்,
பஞ்சு பஞ்சாய்ப் பறந்து ,

மாவடை, மரவடை யாவும் மல்லாந்து,
மடிந்தது வாழ்வாதாரம்,
சேர்ந்தது
உயிர்ச்சேதம் .

கால்நடைகள் கதறின,
கடுஞ்சீற்றத்தில் சிதறின
ஆயுள் முடிந்து.

குடிக்க நீரில்லை!
கொடுப்பார் யாரும் இல்லை!
உண்ண உணவில்லை!
உருப்படியும் தேறவில்லை!

ஓலைக் குடியும் இருந்த இடம்
தெரியவில்லை!
மின் கம்பங்கள் வில் கம்பாய்
வீழ்ச்சியில்!

நிமிர்ந்து நிற்க இயலவில்லை!
காவிரிப் படுகை மக்கள்
அல்லலுக்கு, அளவில்லை!

 வேனிற்காலத்தில்
 வெளிச்சம் இல்லை!
கொடி பிடித்தும், குரல் உயர்த்தியும்
கொடுப்பினை இல்லை!

வாழ்வாதார நீர்,
 வாய்தாவும் தீர்வில்லை!
கை கொடுக்கும் தை,
கனவும் வசமில்லை!

இருண்ட காலம் எதிரில்,
இம்மியும் இளிப்பில்லை!

நகரத்தின் துயரில் நாட்டம் கொள்வார்!
கிராமங்கள் என்றதும்
விலகிச் செல்வார்!


உழுவார் உடைந்தார்!
 உலகத்தார் மறப்பில்!

கதறுகிறார்!
கண்ணீரும் கம்பலையுமாக,
பதறுகிறார்!
பட்டினி, பசியில்.

குழந்தைக் குட்டிகள்
குளிரில், கொசுக்கடியில்,
மருத்துவமும்
எட்டிப்போக.

மறைக்க மாற்றாடை இன்றி,
மண் மாணிக்கமாய்
உறக்கம் தொலைத்து,
உறவை இழந்து.

எப்போதும் போல்,
நிவாரணம்
அடையாளமாய்!

நிரந்தர தீர்வு,
நித்திய தரித்திரராய்!

பல புயல்கள் கொடுத்த அடி,
தீரா வடுவாய்!
இடிமேல் இடி வாழ்க்கை ,
இயல்பாய்!

விதியை நம்பும் வேதனையாய்!
அடிப்படை அகன்று
அந்நியமாய்!

விளிம்பு நிலை விசாலமாகி,
மீளாக் கடனில்,
மிரட்டும் அதிகாரம்!
யதார்த்தமாய்!

நொடிந்து, நொந்து
கூலி உழைப்பாய்
பெயர்ந்திடுவான்,
விவசாயி-மீனவ உழைப்பாளி!










No comments: