Friday, December 7, 2018

சென்டினலிஸ் பழங்குடிகள்



ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம்
கட்டும் வேண்டாம், கரவும் வேண்டாம்
காசும் வேண்டாம், மாசும் வேண்டாம்
ஆத்திகம் வேண்டாம், நாத்திகம் வேண்டாம்
அடிமை வேண்டாம், மிடிமை வேண்டாம்
கொஞ்ச வேண்டாம், கொடுமையும் வேண்டாம்
எஞ்சியே நிற்கிறோம்!
இயற்கைத் தாயிடம் கொஞ்சியே வாழ்கிறோம்!

இருப்பவர் கொஞ்சமானாலும்
இனிமையில் வாழ்கிறோம்,
இடம் பெயர்ந்து நிற்கிறோம்.

காட்சிப் பொருளல்ல நாங்கள்,
மனிதத்தின் மாட்சிப் பொருள்
அழித்த ஆதிக்கத்தின் ,
அடி தாளாமல்
இயற்கையின் இடி தாங்கி,
செடி கொடிகளுடன்
கடல் அலை தாலாட்டில்,
 காட்டின் அரவணைப்பில்
விலங்குகளின் உறவில்,
பூச்சிகளின் புரிதலில்.

காட்சி அரசியல்,
போலிமைச் சமூகத்தின்
அதிகாரம் நீங்கி,
ஆன்ம விடுதலையில்
வாழ்வை நேசித்து.


அழிவொன்றே அலுவல் பணியான
மனித விலங்கை கண்டஞ்சி!
காணாத தொலைவில் ,
கையடக்க வாழ்க்கையில்.

உம்மிடம் நிலவும் ஓராயிராம் கோளாறுகள்
 ஏற்றிட
சுற்றுலாவில் எம்மை வேட்டையாடாதே!
போடாதே திட்டம்!

நோய்களின் தொகையான மனித சமூகமே!
 உளவியல், உடலியல் தொற்றுகளை
 உம்மிடமே வைத்துக் கொள்,
நிரந்தர வைப்பாக!

 கயமையின் கருவூலமே!,
சகிப்பின்மையின் மத்திய வங்கியே!
சாகசமே!,
வெறுப்புணர்வின் வேள்வியே,
எட்டி நில்!.

எம் விடுதலையை குலைத்து விடாதே!
 காட்சியகம் இல்லை!
 எம் வாழ்க்கை,
 அந்தரங்கத்தை புரிந்து கொள்!

 உமக்குத்தான் அடிப்படை உரிமையா?,
மனித உரிமையா?
இயற்கையை அழித்து வரும்
சர்வதேசக் குற்றவாளியே!
எண்ணற்ற குற்றங்கள்,
கணினியும் கொள்ளாது
கழிசடை சரக்கு நீ!

தரவுகளில் எம்மை காவு கொடுக்கிறாய்!
தள்ளிப்போ!
நாகரிகம் நடத்திய நாசகர போரில்
அடையாளம் காத்திட ,
தற்காப்பு யுத்தத்தில் ,
கலைவரிகள், கலாச்சார நெறிகள்,
தலைமுறைகள் இழந்து.

அறிவியல்  ஆதிக்க சமூகத்தின்
 அடாவடி செய்கையில்
 சிதைந்து, சின்னாபின்னமாய்
 ஓடி, ஓடி, ஒடுங்கி
 மொழி இழந்து,
விழி இழந்து,
 பண்பாட்டு கூறுகள் பறிகொடுத்து
 அமைதி இழந்து,
 அணுக்கம் அகன்று.


இயற்கைப் பேரழிவுகளும் இம்சை சேர்த்து,
இடித்து நொறுக்கியும்,
இழந்த உறவுகள் போக ,
நைந்த இழையின் மிச்சம்
நம்பிகையுடன் ஒதுங்கி வாழும் .
உள்ளதை உயர்வாய்க் கொண்டு!

No comments: