Monday, January 21, 2019

"வேதனைப் பொங்கல்"

17.01 2019 காணும் பொங்கலை முன்னிட்டு,புதுவை, கருவடிக்குப்பம், சிவாஜி சிலை அருகில்,இந்தியக் கலைப் பண்பாட்டுப் பேரவை சார்பில் நடந்த, கவியரங்கில், வாசிக்கப்பட்ட கவிதை.


எங்கள் விழா! பொங்கல் விழா!
ஏரின் பெருமை ஏற்றிய விழா!
அறுவடை விழா! ஆதவன் விழா!

வெடியில்லை! வெறுப்பில்லை!
வேதனை இல்லை! தீவாளியில்லை!
கிழக்கின் வெளி உழைப்பில் தேக்கி,

கதிர் வணங்கி கலத்தில் சேர்க்கும்
வேளாண்மை விழா!
விருந்தோம்பி விடியல் கூட்டும்
உழவின் விழா!

இன்று,
மரபின் பெருமை! மங்கிடும் உரிமை!
நீரும், நிலமும், நின்னை விட்டு நீங்கிட
திண்ணை இழந்த வீடாய், தெருவில்.
உருக்குலையும் உழவு!

சந்தைப் பச்சையில்
வறுமை வெல்லம் சேர்த்து,
சம்பிரதாயப் பொங்கல்!
இயலாமை விறகெரியும்
அடையாளம் இழந்து!

பெருவணிகப் பசிக்கு அன்னமிட
இயலா அட்சயப் பாத்திரம்!
அசந்து போகும் ஆதிரையாய்!
தஞ்சைக் கழனிகள்
அந்நியமாதல் நிரலில்.

கரும்பாய் இனித்த வாழ்வும் கசப்பாய்!
இயற்கைப் பேரிடர், சூழல் அழிவில்
டெல்டா மாவட்டங்கள், பொட்டல் காடாய்!
சுருண்டிடும் தமிழகம் சுரும்பாய்!

No comments: