Sunday, July 29, 2007

சந்திக்காப்பான்

"பொங்க வைக்கணும், பிள்ளைங்க தெருவிலே வெலையாடுதுங்க, வெளியே தெருவே போவுது. செத்தை ஒரு கத்தை வாங்கியாங்க, கண்ணாறு கழிக்கணும்"."நீங்க போங்க","அந்த மனுசன் எப்ப வந்தான், வாங்க ஆயாவை அழைத்துக்கொண்டு, சாயுங்காலம் இருட்டுறதுக்குள்ள, பொங்க வைக்கணும்".


குடும்பமே, நாலு மூலை சாலை சந்திப்பில் உள்ள அந்த திடலில், வீட்டுக்கு சில நூறு மீட்டர் தொலைவில், திரண்டது. ஆயாவின் தலைமையில், கழுவி, பொட்டு இட்டு, பூ வைத்து ஒரு அணி வேலை செய்ய, மறு அணி செத்தையை வைத்து கல் அடுப்பில் பொங்கல் தயாரிப்பு, குணிந்து ஊதாங்குழல் கூட இல்லாது, கண்ணைக் கசக்கிக் கொன்டு தயாராகும். வாழை இலையில் படையல் வைத்து, மணிஅடித்து, மகிமை சேர்த்து தெருவில் உள்ளவர், அந்த 'வண்டி மேட்டில்' உள்ளவர், அனைவரும் கும்பலாக, விசாலமானத் திடலில் ஞாயிற்றுக்கிழமைகளில், தவறாது நடைபெறும்.


கோட்டக்குப்பம் பாய்க்கடையின் எதிரில், கொண்டாட்டம். படையல் முடிந்ததும் அனைவருக்கும் பரிமாற்றம்," புதுப்பானையில் உள்ளது எல்லாருக்கும் குடுக்கணும், வூட்டுக்கு எடுத்துச்செல்லக்கூடாது" ஆயாவின் கண்டிப்பான உத்தரவு.


ஒவ்வொரு வாரத்திலும், ஞாயிற்றுக் கிழமைகளில் அலங்கரிக்கப்படும் "சந்திக்காப்பான்" பற்றிய பயம், பக்தி, வெகு நாளாக இருந்து வந்தது. மிகவும் பிற்காலத்தில் தான் அந்த 'சந்திக்காப்பான்', பிரெஞ்சுக்காரன் காலத்தில் வைக்கப்பட்ட மைல் கல் என்பது புரிய வந்தது.


காலச்சக்கரத்தின் ஓட்டத்தில், இப்போது 'சந்திக்காப்பானும்' இல்லை, பாய்க்கடையும் இல்லை , வண்டிமேடும் இல்லை, ரிக்க்ஷா வண்டிகளும் இல்லை, வண்டி மேட்டில் உரிமையுடன் திரிந்தவர்களின் வாரிசுகளில் ஒரு சிலர், தட்டு வண்டி ஓட்டுகின்றனர்.

No comments: