Friday, August 31, 2007

குர்சார் இன மக்கள் மீது காவல்துறை அத்துமீறல்- 2

31,மேல் பொலி கிராமத்தில், பிற்பகல் ஒரு மணி அளவில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள், இலவச மதிய உணவிற்காக சென்று கொன்டிருந்தபோது காவல் துறையினரால் அச்சுறுத்தப்பட்டனர். சூன் 2,ல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், காவல் துறை 96 சுற்றுக்கள் துப்பாக்கியால் சுட்டனர் என்று மட்டும் உள்ளது, 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிக்கப்படவில்லை. ஆனால், 31ந் தேதி இரவே, அவசர அவசரமாக மருத்துவ மனையில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டு, நள்ளிரவிலேயே உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளன.



கொல்லப்பட்ட அனைத்து உடல்களிலும், துப்பாக்கி குண்டு காயங்கள் 3 அடியிலிருந்து 4அடி ஆழத்திற்கு, வயிற்று பகுதியின் பக்க வாட்டில் இருந்தன. இந்த மூன்று சம்பவங்களிலும், குறைந்த அளவு பாதிப்புகள் ஏற்படும் வண்ணம் காவல் துறை முயற்சிகள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயம் அடைந்தவர்களை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எந்த வித ஏற்பாடும் செய்யப்படவில்லை. சாலை ஓரங்களில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் இதரர், தாங்களாகவே மருத்துவ உதவியை நாடிச்செல்ல வேண்டிய துயரம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் குறித்த விவரம் மாநில அரசு நிர்வாகத்தால், இன்றுவரையிலும் அளிக்கப்படவில்லை.



கிடைக்கக் கூடிய ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, காவல் துறையினரின் தகவல் ஒத்திசைவாக இல்லை. பட்டோலி-பேப்பல் கேரா பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு இல்லாமலே துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது. தெற்குதிசை நோக்கி 200 கச நீளத்திற்கு இரத்த தொய்வை உண்மை அறியும் குழு காண முடிந்தது.

Thursday, August 30, 2007

"இசுலாமியன்"

"பாக்கி சட்டைகள்"
பதம் பார்த்து பஞ்சாக்க,
காக்கிச்சட்டையும்
களம் இறங்கியது
இரக்கமும் ஏங்கிட,

பகல் பொழுதில்,
பகல்பூரில்
விரட்டி விரட்டி,
புரட்டி புரட்டி,
போவோர், வருவோர்,
கடை வீதியில்.

வாகனத்தில் அமர்ந்து,
உருட்டியது தெருவெங்கும்,
"காவல் நாய்",
ஆவலுடன்,
"சனாதன சரக்குடன்",
"மிடுக்குடன்",

உடல் தேய்ந்து,
உருக்குலைந்து,
உயிருக்கு போராடும்,
"திருடன்"
-இந்தியன் அல்ல?

பதில் ஆமோ!

சிந்த வேண்டுமா!
இன்னும் இரத்தம்!
சிந்திக்க வேண்டாமா
மிச்சம்!

உ யிர் எடுப்பு!
உடல் சிதைப்பு!
உருப்படி வழியாமோ!

பழிக்கு பழி!
பதிலுக்கு பதில்!
பாதையாமோ! பயணப்படுமோ!

உணர்ச்சிக்குள் சிறையான
உணர்வுகள்,
உயர்வாமோ!

உன் பதம் உண்மை ஆமோ!
உன் வினை எதிர்வினை,
முடிவேது!

உலக நன்முறைக்கு,
வன்முறை
பதில் ஆமோ!

Wednesday, August 15, 2007

குர்சார் இன மக்கள் மீது மே மற்றும் சூன் மாதங்களில் காவல் துறை நடத்திய துப்பாக்கி சூடு-1

குர்சார் இன மக்கள் மீது மே மற்றும் சூன் மாதங்களில் காவல் துறை நடத்திய துப்பாக்கி சூடு---சிவில் உரிமைக் கழகங்கள் நடத்திய ஆய்வு.


மக்கள் சிவில் உரிமைக்கழகம், இராசசுத்தான், தில்லி மக்கள் சனநாயக உரிமைகள் கழகம், பஞ்சாப் சனநாயக உரிமைகளுக்கான சங்கங்கள் மற்றும் தேசிய சட்ட பல்கலைக் கழகங்களைச்சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இணைந்து, ஒரு வார காலமாக, இராசசுத்தான் மாநிலத்தைக் குலுக்கிய சாதிக்கலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

காவல் துறையினர் 5 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கலவரத்தில் 2 காவல் துறையினர் உட்பட 25 பேர் இறந்தனர்.

உண்மை அறியும் குழுவினர், கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட படொலி, பீப்பல் கேரா, பந்தி, கட்டா லால்சோட், பமன்வாச், போன்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் பேசினர். லால்சோட் காவல் நிலையங்கள், காவல் துறை கண்காணிப்பாளர், ஆட்சியர், பஞ்சாயத்து உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், சாதி அமைப்புகள் ஆகியோரையும் சந்தித்தனர்.

வன்முறை நிகழ்ந்த இடங்களையும், துப்பாக்கிசூடு நடந்த பகுதிகளையும் சூறையாடப்பட்ட பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்கள், ஆகியவற்றையும் பார்வையிட்டனர். குறிப்பாக குர்சார் மற்றும் மீனா வகுப்பினர் இடையே மோதல் நடந்த பமன்வாச் பகுதியையும் பார்வையிட்டனர்.

உண்மை அறியும் குழுவினர் தமது ஆய்வின் முடிவில் கீழ்க்காணும் முக்கிய முடிவுகளை வெளியிட்டனர்.

1.காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூடு அவசியமற்றது, அதிகப் படியானது, மனிதத் தன்மையற்றது.

28 மே இரவில் காவல்துறையினர் படோலி-பீப்பல் கேரா கிராமத்தில் இரவு வேளையில் புகுந்து குழந்தைகள், மகளிர், மற்றும் ஆடவர்களை அடித்து துன்புறுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வீட்டிற்குள் நுழைந்து பெண்களை இழுத்து, அடித்து இழிவாகப்பேசி, மானபங்கம் செய்தனர்

Sunday, August 12, 2007

சரிக்கட்டு!

உமக்கு பரிசு!

சிறந்த அமைப்பு!

"இவ்வாண்டு

ரொக்கமும் பாராட்டும்"

அரசாங்கத்தை

எதிர்த்தவர், விமர்சித்தவர்,

அப்படி இருந்தும் பரிசு!

"தொகுதியில் உள்ளாய்!

தொகை பெறலாம்,

சிறப்பு அடையலாம்"

இனிமேல் விமர்சிக்க,

'விமரிசை தேவை இல்லை',

பரிசுதான் கிடைத்து விட்டதே

பரிதவிப்பு அவசியமா!

பக்குவமாக

நடந்து கொள்வாய்!

Thursday, August 9, 2007

'தியாகிகள் விழா'

இறந்த காலம்,
எங்கள் காலம்,
எவருக்கும் சொந்தமில்லை.

சூலை 30, 1936,
பிரஞ்சுஅதிகார
சுழல் பீரங்கிகளின்,
கொடும்பசிக்கு இரையானவர்,
பன்னிருவர்,
எம்மவர்!

எங்கள் குருதி!
'உயருகிறது சுருதி'!

கூலி உயர்வு,
வேலை நேரப் போராட்டம்!
விடுப்பு உரிமைப் போராட்டம்!

காப்புரிமை!
எமக்கு மடுமே!

இருக்கட்டும்,

இறந்த காலம்,
வெற்றி என்றால்,
நிகழ் காலம் ???

Saturday, August 4, 2007

பகல் கொள்ளையா!

கல்வியில் புதுசேரி வளர்ந்து விட்டது! பல தனியார் கல்விக் கூடங்கள் அரசு ஆதரவுடன் முளைத்து ஆல மரமாகி செம்மாந்து நிற்கிறது! பிற தொழில் செய்தவர் கல்விமான்களாக, செம்மல்களாக, புதிய பரிமாணம். இப்போட்டியில் பின் தங்கிவிடவில்லை அரசியல்வாதிகள். தங்களின் அதிகாரம், செல்வாக்கு, உத்திகளை சரியாக பயன்படுத்தி தொழில் போட்டியில் இறங்கினர்.


'வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்'. அண்டை மாநிலத்தவரும், அரசியல்வாதிகளின் ஆசியுடன் ஆதரவுடனும், கூட்டணி அமைத்து, களம் இறங்கினர். விளை நிலங்கள் உழைப்பவரிடம் இருந்து அந்நியமானது!


பொறியியல் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள் 'இருசக்கர வாகனங்கள்' போல் பெருத்துவிட்டன. சில கல்லூரிகளுக்கு தனியார் இடத்தை, விளை நிலங்களை, அரசாங்கமே கையகப்படுத்தி விவசாயிகளை வஞ்சித்தது. (எ.டு.)பிம்சு மருத்துவமனை, கணபதி செட்டிக்குளம்.


அரசாங்கம் அளித்திடும் நீர், மின்சார வசதிகள். பொது நலம் கருதி அரசாங்கம் அனுமதி வழங்குகிறது. மக்களின் பேரால், கல்விக் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதனை திருப்பி அளித்திடும் ஏற்பாட்டையும் அரசாங்கம் 'மாணவர்களின் நலம் கருதி 'செய்து வருகிறது. மக்கள் வரிப் பணத்தில் ஒவ்வொரு ஆண்டும், 'கல்வித் தொழிற்சாலைகள்' கலங்கி விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு!


இதையும் மீறி, பகல் கொள்ளையாக, அனைத்து மாணவர்களிடமும் கூடுதலாக இலட்சகணக்கில் பணம் பறித்திடும் கொடுஞ்செயல், அரசு அறியாதது அல்ல! புகார்கள் வந்தாலும் விசாரணை, ஆய்வு, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே! கடமையாற்ற வேண்டுமே! என்பதப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஆட்சி! மக்கள் ஆட்சி!