Monday, April 30, 2018

தனிமைக்கு அப்பால்


எனது தனிமைக்கு அப்பால் மற்றொரு தனிமை,
அங்கே உறைகின்றவனின் தனிமையை விட,
எந்தன் தனிமை நெரிசல் மிகுந்த சந்தைக்கடை,
எந்தன் தனிமை சப்தங்களின் குழப்பம்,
அப்பால் நிலவும் தனிமையைக் காண தவிப்பு மிக அதிகம்,
ஆயினும் இளம் வயது எனக்கு,
மேல் பள்ளத்தாக்கின் குரல்கள்,
இன்னமும் என் செவிகளை ஈர்க்கிறது,
அவற்றின் நிழல்கள் எந்தன் வழியை தடுத்தது
என்னால் செல்ல முடியவில்லை!

இம் மலைகளுக்கு அப்பால் வசீகரிக்கும் தோப்பு
ஒன்று உண்டு,
அங்கே குடிகொண்டுள்ள எனது அமைதி
வேறொன்றும் இல்லை,
சுழல் காற்றாகும்.
என்னை ஈர்க்கக் கூடிய மகிழ்ச்சி
ஓர் இல்பொருள் காட்சியாகும்.

மிக இளையவன் நான்,
மிக கிளர்ச்சியானவனும் கூட
புனிதமான  அத்தோப்பினை நாட,
குருதியின் சுவை என் வாயில் இன்னமும்
 ஒட்டிக் கொண்டிருக்கிறது.
எனது முன்னோர்களின்
வில்லும், அம்பும்
இன்னமும் எனது கைகளில்,
என்னால் செல்ல இயலவில்லை!

இந்த சுமையான மனத்தினைத் தாண்டி
எந்தன் சுயேச்சையான மனம் இருக்கிறது
என்னுடைய கனவுகள்
சுயேச்சையான அகத்திடம்
அந்திப் பொழுதில்,சமர் செய்கிறது.

அகம், அதற்கு எம் கனவுகள்
யாவும்
அந்திப்பொழுதின் போர்க்களம்.
எம் விருப்பங்கள் யாவும்
எலும்புகளின் ஒலிப்பாகும்.

யான் மிகவும் இளையவன்
எனது சுயேச்சையான மனமாக இருந்திட,
மிகவும் வன்மம் கொண்டுள்ளேன்

சுமையான எனது சுயத்தை
நான் கொல்லாது அல்லது
அனைத்து மனிதர்களும் விடுதலை பெறாமல்,
யான் எனது சுயேச்சையான
மனதாக மாறுவது எவ்வாறு?

இருண்மையில் எனது வேர்கள்
அழிந்துவிடாமல்,
எமது இலைகள் காற்றில் கீதம்
இசைத்து,
எவ்வாறு பறக்க முடியும்?

எனது சொந்த அலகினால்
கட்டப்பட்ட கூட்டை விட்டு,
எமது குஞ்சுகள் வெளியில் கிளம்பாமல்,
எவ்வாறு என்னுள் இருக்கும்
சூரியக் கழுகு,
வெளிச்சத்தில் பறக்க முடியும்?


(கலீல் சிப்ரான் கவிதையின் மொழியாக்கம்.2003ல் செய்தது. தற்போது பதிவேற்றம் காண்கிறது.)

Sunday, April 29, 2018

சமூக நலன்?



உங்களால் என்ன செய்ய முடியும்? அவர் நிறைய பணம் வைத்திருக்கிறார்; செலவு செய்திருக்கிறார். மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவ மனைகள், கல்வி கூடங்கள் ஏக்கர் கணக்கில் நன்செய் நிலங்களையும், புன்செய் நிலங்களையும் விழுங்கியபோது, நீங்கள் என்ன செய்தீர்?  எங்கு போனீர்?

 புதுச்சேரி, திருவண்டார்கோவில் அருகில் மருத்துவக் கல்லூரி விளை நிலங்களை ஏப்பம் விட்டு எழும்பியபோது என்ன செய்தனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.இந்தப் பாதையின் தொடர்ச்சியாக, ஊசுட்டேரி தெற்குப் பகுதியில், ஏரிக்குத் தலைவாசலில், லட்சுமி அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி அமைத்து உருவாக்கி வந்தது.

 இதில் என்ன தவறு? ஏன்? இதை எதிர்க்க வேண்டும் அவர் கிறித்துவராக,வன்னியராக இருப்பதால், அவர் வளர்ச்சி பொறுக்கவில்லை! நீங்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தி வர வேண்டுமா?

இப்படியெல்லாம், பல பேச்சுகளை நாங்கள் சந்தித்து, கடந்த காலங்களில் சூழல் காக்கும், மக்கள் திரல் போராட்டங்களை முன்னெடுத்தும், அரசாங்கம் மசியவில்லை!

 கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில், மணக்குள விநாயகர் மருத்துவமனை/மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்றவைகளும் விளை நிலங்களை விழுங்கியவைதான்.புதுச்சேரி, கனகச் செட்டிக்குளம் பகுதியில் புன்செய் நிலப்பகுதியை விழுங்கிய, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்லூரி  இந்த வரையறைக்குள் வருகின்ற வணிக கல்வி முயற்சி/முன்னெடுப்புகள் தான்.

  புதுச்சேரி மாநிலத்தைச் சுற்றி, திருக்கனூர், திருபுவனை, கிருமாம்பாக்கம், கொரவளிமேடு, பாகூர், பரிக்கல்பட்டு போன்ற கிராம விளைநிலப் பகுதிகள், கல்வி வியாபாரத் தொழிற் கூடங்களால் உருமாறி, உருக்குலைந்து, கிராமியப் பொருளாதாரத்தை, நீர் நிலைகளை, ஆதாரத்தை மெல்ல,மெல்ல, அழித்து அடையாளம் தெரியாமல் ஆக்கிவிட்டன.

கல்விக் கூடங்கள் போதும், கழனிக் கூடங்கள் வேண்டாம் என்கின்ற மன மாற்றத்தை, நில வணிக நோக்கில், விளைபொருள் இலாபகரமாக இல்லாத வேளாண்மச் சூழலை பயன்படுத்தி, ஏற்படுத்தி உள்ளது முதலாளி வர்க்கம்.

படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள் வைத்திடும் வாதம் வேடிக்கையானது. எல்லாம் முடிந்து விட்டது, விவசாயம் வேலைக்கு ஆகாது. பத்தாண்டுகளில் புதுச்சேரியில் நீர் கிடைக்காது. மிகுந்த தட்டுப்பாடு ஏற்படும். நிறைய பணம் குவித்தவர்கள் காசு கொடுத்து தங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

அரசியல் உயர்மட்டத்தில் ஆலோசனை சொல்லக் கூடிய நீரியல் நிபுணர்களுக்கு இது தெரிந்துதான் நடக்கிறது. நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி வறண்ட நிலமாக ஆக்குவதில் கற்றறிந்தவர்களின் கயமை வள்ளுவருக்கும் ஏற்புடையதல்ல!

கட்சி அரசியல் முழுநேர பிழைப்பினர், ஒரு சிலரை தவிர்த்து, தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் என கல்வி நிலையங்களில் பெருமளவில் முதலீடு செய்து, உழைப்புச் சுரண்டலில் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர்.

இயற்கையே தாய், அதனை அழித்து, விளைநிலங்களை பாழடித்து, ஏரிகளை தூர்த்து, குளங்களை மாய்த்து உருவாக்கப்படும் வளர்ச்சி எவ்வளவு விலை கொடுத்து எவரின் நிலை கெடுத்து என்பதை நீண்டகால சமூக நலன்களின் அடிப்படையில் ஆய்ந்தறிதல் வேண்டும்.

காலச் சக்கரம் விரைவாக சுழல்கிறது.காடுகளை அழித்தது;கழனிகளை அமைத்தது; நீர் நிலைகளை கெடுத்தது, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் மணற்சாலைகளை, கான்கிரீட் சாலைகளாக, மூலை முடுக்கில் எல்லாம், சந்து பொந்துகளில் அமைத்தது சாதனைப் பட்டியல் அன்று. அது வேதனைப் பட்டியல்.பெய்யும் மழை நீர் பூமிக்குள் செல்லவிடாது, தடுப்புச் சுவர்களாக, அரண்களாக மாறி, சூழல் சீர்கேட்டை விரிவு படுத்தியுள்ளது.



Saturday, April 28, 2018

இழப்பு !

இறப்பு என்பது இயற்கை என்றாலும், துயரம், அழுகை, துடிப்பு ஆகிய உணர்ச்சிகள் நம்மை உலுக்கி விடுகின்றன. அதுவும், உறவுகளின் இழப்பு பலவித சங்கடங்களை ஏற்படுத்துகிறது.இயல்பு நிலை இழக்க வைக்கிறது.

நலக்குறைவினால் விளையும் இறப்பு, நமக்கு பல அனுபவங்களை உணர்த்துகிறது.இயற்கையை பேணாதது போலவே, இயற்கையின் அங்கமாகிய மனிதன் தன் உடல் நலத்தை பேணாது, மனம் போன போக்கில், மதி மயங்கி வாழ்கிறான்.பலவிதமான அவசியமற்ற பழக்க, வழக்கங்களுக்கு சிறையாகி, பின் இரையாகிறான்.

குடும்பப் பள்ளி அளித்திடும் கல்வி, அதன் வழி உருவாகிடும் முதற்கட்ட மனிதன், பள்ளியில் பக்குவப்படுத்தப்பட்டு, நடைபோட வேண்டும்.அதிலும், பல சிக்கல்கள். அமைந்திடும் ஆசிரியர், பள்ளிச் சூழல் ஆகிய புறநிலைகளின் செல்வாக்கு, மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.

பலகீனங்களின் பிடியில், அதன் பழக்கத்தில் வளரும் குழந்தை மனதின், பல ஆண்டு வாழ்க்கைப் பயணத்தில், பல புதிய தடங்களை பதித்தாலும், முதல் இரண்டு கட்ட பட்டறிவு அவனை தடுமாற வைக்கிறது.

உணர்வு நிலையில் இவை யாவும் அறிந்தாலும், பின்னுக்கு இழுக்கும் பலம் வாய்ந்தது.சரியான வளர்ப்பு முறை, பள்ளிக்கல்வி முறை, கல்லூரி வாழ்க்கை ஆகிய தொடர் பயண நெடுகிலும், சீரான வாழ்க்கை; நெறிபடுத்தும் வாழ்க்கை மிக முக்கியமான வாழ்க்கைத் திருப்பங்கள் ஆகும்.

அடித்தளம் அமைத்திடும், பதியம் போடப்படும்  பருவங்கள் எனில் அது மிகையில்லை. வளர்ந்த வாழ்க்கையின் இறப்பும் இதை ஒட்டியே அமைகிறது என்கின்ற உணர்வும் பட்டறிந்தவர் அனைவரும் அறிந்திடும் உண்மையாகும்.

அடையாளம்














அடையாளம் தேடி அலையவில்லை
அச்சாணி கழன்று நிற்கவில்லை
அறிவாளும் சபைக்கு பஞ்சமில்லை
அலுப்பும் அணுக துணியவில்லை
அனைத்தும் நான் என திரியவில்லை

பதின்பருவ காதல்!

காதல் என்னும் கத்தரிக்காய்!

 அவர் இல்லாமல் நான் இல்லை! நான் இல்லாமல் அவர் இல்லை! இவ்வகை உணர்ச்சி தெரிப்புகள், அவசர கோலத்தில் , ஆசைவெளியில் கொட்டிடும் வார்த்தைகள்.இணைய தளத்தின் பழக்கம், இதய தளத்திற்கு செல்லாத சுணக்கம்.புற தோற்றம், ஒருவர் அக எழுச்சி, விருப்பம் ஆகிய தரவுக்குள் எடுக்கப்படும் முடிவுகள். பரிசீலனை செய்யப்படாத வைப்புகள்.

தனி மனித உரிமை, அதன் வீச்சு, அளவீடு, ஒருவொருக்கொருவர் எல்லைக்கோடு; அடுத்தவர் உரிமையை புரிந்து கொள்வது யாவும் தெளிவற்று பயணத்தில் இலக்கு. திருமண ஏற்பாடு. பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கு வலைந்து கொடுப்பது, பொருள் செலவழிப்பு, ஒரு சடங்காக, சம்பிராதயமாக போகிவிடும் சூழலும் ஏற்படுகிறது.

ஆரம்ப ஆர்வம், மதிப்பு, புரிதல் போக்குகள் எதிரெதிர் திசையில். புதிர்போட பொங்கிடும் ஆசை வலையத்திற்குள் சிக்கி, நிராசை நிகரம் தான் எனும் வணிக மனப்பாங்கு மேலோங்கும் சமூகப்போக்கில். கடவுள், சடங்கு, வழிபாடு யாவும் கடந்து சென்றிடும் பாதைக் கோடுகளாக நிற்கிறது.

உடல் சார்ந்து நிற்கும் பிரியம். அதனால் ஏற்படும் ஈர்ப்பு, பதின்பருவத்தின் நிகழ்வு.இது அகவியல் அடிப்படை.இவ்வுணர்ச்சி மேலோங்க, கட்டுகளை விட்டு விலகும் சூழல், புறநிலை போக்குகளால் உந்தித் தள்ளப்படுகிறது.

காட்சி ஊடகங்கள், கைபேசி முன்னேற்றங்கள் கணினி தொழில் நுட்பம் போன்றவை பெரிதும் தொடர் செல்வாக்கு செலுத்தும் நிலையில், நடைமுறை நாகரிகமாகவே இளைய சமுதாயத்தினரால் அங்கீகரிக்கப்பட்டு அமைந்து விடுகிறது.

வாழ்க்கை முறிவு, உறவு விரிசல், உடைந்த உள்ளம், இயல் நிகழ்வாகி நிலைமாற்றம் நீள்கிறது..........

கூடும்.









இழக்கக் கூடாததை
 இழந்து,
இழக்கக் கூடியதை
 இரந்து,
பிழைக்கக் கூடும்.

பெரிய மனிதர்
 உறவு!
பிரியமான
 வரவு!

நேப்பாள துயரம்!

சில ஆண்டுகளுக்கு முன் இமயமலைப் பகுதியை மையம் கொண்டு ஏற்பட்ட நில நடுக்கம், இமயமலை இருப்பையே சில மீட்டர் நகர்த்தியுள்ள இயற்கையின் சீற்றம், நாம் மறந்திருக்க இயலாது. அதன் விளைவாக நேரிட்ட நேப்பாள துயரம் குறித்து.

பேரழிவின் தொடக்கம்!
இமயமலை அடுக்கம்,
எதிர்கொள்ளும்
நடுக்கம்.

புவி அடுக்கின் முடுக்கம்
பொருதி வெளிப்படும்
அழுத்தம்.

பூமி அதிர்வின் வெளிச்சம்
புரியாத மனிதம்,
பொருமி வீழ்ந்திடும்
அவலம்.

அரசு அதிகாரம்,
 அலறியடிக்கும்
கலக்கம்,
ஆக்கினை செய்திட
ஆரம்ப முதலே,
 சுணக்கம்.

பற்பசை












ஒடுங்கினாய்! உருக்குலைந்தாய்!
அமுக்கி, அதக்கி,
பிதுக்கி, நசுக்கி
ஏற்றி,
எறியும் முன்
ஒட்டாரமாய்,
துலக்கி........

Tuesday, April 24, 2018

கணக்கன் ஏரியும், கழிவு நீர் சுத்திகரிப்பும்- ஒரு பார்வை.

.

புதுவை மாநிலம் 493 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.புதுவைப் பகுதி மட்டும், 293 சுதுர கிலோ மீட்டர் அளவுடையது..புதுவை மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 86 ஏரிகள் உள்ளன.

கணக்கன் ஏரி:
புதுவை உழவர்கரை நகராட்சி எல்லைக்குள், வழுதாவூர் சாலைக்கு தெற்கில்; புதுச்சேரி நகரத்தின் இதயப் பகுதியில்;  13 எக்டேர் பரப்பளவில் 1.838 சதுர கிலோ மீட்டர் நீர்ப்பிடிப்பு;  கொள்ளளவு கொண்ட பழமையான ஏரியாகும்.

ஏரிக்கு நீர் கொண்டு சேர்க்கும் கால்வாய்கள்:

1.தெலாசுப் பேட்டை கால்வாய்
2.மேட்டுப்பாளையம் கால்வாய்
3.சண்முகாபுரம் வெள்ளவாரி

உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட வேளாண்மைப் பகுதிகள், நகரமயமாக்கல் தாக்குதலின் விளைவாக, இவ்வேரிக்கு ஆயக்கட்டு பகுதிகள், தற்போது அறவே இல்லை.

சாக்கடை நீர்- மாசு அடையாமல் பாதுகாப்பு:

3 வடிகால்கள் வழியாக, ஏரியை நோக்கி பாய்ந்து வரும் சாய்க்கடை நீர், உழவர்கரை மேட்டு வாய்க்கால் மற்றும் மோகன் நகர் சாய்க்கடை கழிவு வாய்க்கால்களுக்கு அனுப்பப்பட்டு, கணக்கன் ஏரி மாசடையாமல் காப்பாற்றப் பட்டு வருகிறது.புதுச்சேரி நகர புறப்பகுதியில், மழைநீர் பிடிப்பு பகுதியாக, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் ஏரியாகவும் விளங்குகிறது.

புதுவையில் பாதாள சாக்கடைத் திட்டம்:

கழிவுநீர் மேலாண்மை, பொதுநலம் ஆகியவற்றின் அடிப்படையில் முதன் முதலாக, 1980ல், ஒருங்கிணைந்த நகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பாதாள சாக்கடைத் திட்டம், புதுவை அரசு பொதுப்பணித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.

நகரம் மற்றும் நகர்ப்புறம்- மண்டலங்கள் பிரிப்பு:

1.புதுச்சேரி, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
2.முத்தியால்பேட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
3.முதலியார்பேட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
4.நெல்லித்தோப்பு, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
5.இலாசுப்பேட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
6. தட்டாஞ்சாவடி, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
7.முத்தரையர்பாளையம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்
8. மூலகுளம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்
9.ரெட்டியார்பாளையம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கழிவுநீர் சேகரிப்பு இறைப்பு / சுத்திகரிப்பு நிலையங்கள்:

1. குருசுக்குப்பம்
2.தெபசான்பேட்டை
3.துப்ராயப்பேட்டை
4.இலாசுப்பேட்டை

மேற்காணும் நான்கு நிலையங்கள், 98 கிலோ மீட்டர் அளவிற்கு பாதாள சாக்கடைத் திட்டத்தில் தம் பணியை செய்து வருகின்றன.இதன்படி 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு  செயல்பாடுகளினால், 30% விழுக்காட்டு மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.

இலாசுப்பேட்டை நிலையம், புதுவையின் வடக்கு பகுதியில், 7கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.நாள் ஒன்றுக்கு 12.5 மில்லியன் லிட்டர் கழிவு நீரை கையாள்கிறது. இது, 15.3 மில்லியன் லிட்டர் அளவிற்கு மேம்படுத்திடும் உத்தேசம் உள்ளது.துப்ராயப்பேட்டை நிலையம், நகருக்கு மேற்குப் பகுதியில், 2 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 2.5 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, கடலில் விடுகிறது. இலாசுப்பேட்டையில் 125 ஏக்கர் பரப்பளவில் கழிவு நீர் சுத்திகரிப்பு பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள்

14 சாக்கடை நீர் சேகரிப்பு திட்டங்கள் அரசாங்கத்தின் உத்தேசத்தில் உள்ளது. அதில், கழிவு நீர் சுத்திகரிப்பு, கீழ்க்காணும் இடங்களில்/பகுதிகளில், 2008 ஆம் நிதியாண்டில் செய்து முடிப்பது என முடிவு செய்யப்பட்டது.

1. கணக்கன் ஏரி- 24 மில்லியன் லிட்டர் நாள் ஒன்றுக்கு
2.துப்ராயப்பேட்டை, 24 மில்லியன் லிட்டர் நாள் ஒன்றுக்கு
3.இலாசுப்பேட்டை 24 மில்லியன் லிட்டர் நாள் ஒன்றுக்கு.

கணக்கன் ஏரியில் கழிவு நீர் சுத்திகரிப்பு - ஏன்?

கழிவு நீர் சேகரிப்பது, சுத்திகரிப்பு செய்ய வேண்டியது, நகர சீரமைப்புத் திட்டத்தில் அவசியமானது ஆகும். இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.எனினும், மழை நீர் சேகரிப்பு நீராதார அமைப்பாக பன்னெடுங்காலமாக விளங்கிடும் மிகப் பழமையான கணக்கன் ஏரிப் பகுதியில், இத்தகைய திட்டம் மேற்கொள்வது ஏரியின் நிலைப்புத் தன்மையை பாதிக்கும்.

படிப்படியாக கழிவு நீர் கலந்து, கழிவுத்தொட்டியாக உருமாறி, சீர்குலையும், சிறப்பிழக்கும். நெடிய நோக்கில் ஏரி இருந்த இடம் தெரியாமல், சுவடு மறைந்து போகும்


Sunday, April 22, 2018

கோபமில்லை!




 
ஆண்டவனிடம் கோபமில்லை,
ஆள்பவனிடம்.

மாண்டவனிடம் கோபமில்லை,
மாள்பவனிடம்.

தூண்டியவனிடம் கோபமில்லை,
துவண்டவனிடம்.

வேண்டியவனிடம் கோபமில்லை,
தாண்டியவனிடம்.

தடுத்தவன் மீது கோபமில்லை,
தடுக்கியவனிடம்.

ஒடுக்கியவன் மீது கோபமில்லை,
முடுக்கியவனிடம்.

விலக்கியவன் மீது கோபமில்லை,
விழுந்தவனிடம்.

Friday, April 13, 2018

வெளிச்சம்!



விதிகள் வீதிகளில்
குப்பை வீச்சுக்குள்.

அன்றாடம் சேகரிப்பு
அரசாங்க பரிகசிப்பு.

எம் விதி
உம் விதிகளுக்குள்.
நியதிகள்
விதி விலக்கு!
நீதி,
தெரு விளக்கு!

ஏற்றுபவன் எண்ணத்தில்
சுட்கி,
அவன் திசையில்,
இருள் கடந்து
ஏற்றப்படும்,
பொழுது புலர்ந்து.

வெளிச்சம் வெயிலில்!

"அல்லியோ, மல்லியோ, அல்லியோ, மல்லியோ"


எங்கள் தெருவில் பூ விற்பவன், மிதிவண்டியில் வழக்கமாக வியாபாரம் செய்பவன். வழக்கத்திற்கு மாறாக உரத்த குரலில் இன்று, சற்று பொழுது சாய்ந்த பிறகு, சுருதி கூட்டினான்.

பொழுதுபோன பிறகு, ஞாயிற்றுக்கிழமையின் இன்பம் துய்க்க, பொழுதை வீணாக்காமல்! தொலைக்காட்சி பெட்டியின் முன்.குடும்பம் , குடும்பமாக மகிழ்ச்சியுடன் இருக்கும் தருணத்தில், ஊடகத்திற்கு போட்டியாக கூவி அழைத்தான். என்றும் செல்லுபடியாகும் சரக்கு இன்று, இன்னிக்கு முடியலே! முணு முணுத்தான். இருந்தாலும், "அல்லியோ, மல்லியோ" அலறியது!

பேச்சு பெறாக்கில், அடுத்தவரிடம் கச்சைக் கட்டி, கச்சேரி வைக்கும்போது, வெளிப்படும் பல்வேறு வாக்கியங்களில், பூக்காரனின்,"அல்லியோ, மல்லியோ", தாயின் பேச்சு மொழியில் வெகுகாலம்," ஏண்டி? ஏண்டி?, நான் என்னா அல்லியோ மல்லியோன்னா இருக்கிறேன், உன்னைப்போல்",

 இதன் அர்த்தம் வெகுகாலமாக புரியாமல், பல ஆண்டுகள் கழிந்தது. அதன் தோற்றம்: பூ விற்க வாடிக்கையாளரை அழைப்பது, அலைச்சல் படுவது எனும் பொருளில், " நான் என்னா அலைகிறேன், உன்னைப்போல என்று ஒப்பிட்டு பேசும் மொழியாக வளர்ந்த, வாய்த்த தமிழ்.

தற்செயலாக, தெருவோசை குரல் கேட்டு, திகைத்துப்போய், புதிருக்கு விடை கிடைக்க,' 'யுரேக்கா', என்ற நியூட்டன் மன நிலை! கண்டு கொண்டேன்! புரிந்து கொண்டேன்! வினாடி வினாவில் கை தூக்கிடும் மாணவன் போல், விரைந்திடும் மன வண்டி!

Friday, April 6, 2018

"தீங்கான"/"ஆபத்தான மருந்துகள்"

"டைம்சு ஆப் இந்தியா", 6,ஏப்ரல் செய்தி--" ஒழுங்கமைப்பு அங்கீகாரம் இன்றி விற்பனையாகும் மருந்துகள் ஆபத்தானவை".

மத்திய அரசு நலவழித்துறை கவனத்திற்கு வந்துள்ள அதிர்ச்சி அளிக்கும் செய்தி/ சூழல், உள்ளூர் மருந்து நிறுவனங்கள், "தீங்கான" மருந்துகளை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகின்றன.

தயாரிக்கப்படும் மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளாதும், தேசிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பிடம் அனுமதி பெறாமலும் செயல்பட்டு வருகின்றன.

நிலைமையை மேலும் மோசமாக்கும் அம்சம் இவ்வாறான மருந்துகள் உலக அளவில் அங்கீகாரம் பெறாதது; இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது; நோயாளிகளை இடரில் தள்ளுகிறது.

ஏப்ரல், 3 ந்தேதி, மத்திய மருந்துகள் தரநிர்ணய கட்டுப்பாட்டு நிறுவனம் , டாமன், இந்தூர், பெங்களூர் மற்றும் மும்பாய் போன்ற பகுதிகளில் நடத்திய சோதனைகளில் பெரிய அளவில் அறியப்படாத மருந்து உற்பத்தியாளர்கள்-- ஓலிவ் எல்த் கேர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர தீர்மானித்துள்ளது.

அல்கெம், இன்டாஸ் பர்மா, கோயி பர்மாச்சுட்டிக்கல்ஸ், மேக்லியோட்ஸ் பர்மா, பர்மானோவா ஸ்பெசாலிட்டி மற்றும் அக்குமென்டிஸ் எல்த் கேர், ஆகிய நிறுவனங்கள், 'சந்தையிலிருந்து,' தமது மருந்துகளை  திருப்பி பெறவேண்டும் என்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டிலிருந்தே அனுமதியின்றி கீழ்க்காணும் மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

*என்கிலோமைபின் கேப்சுயுல்(டெஸ்டோஸ்டெரொன் பற்றாக்குறை) உலகில் எந்நாட்டிலும் அங்கீகரிக்கப்படாதது.
*யுலிபிரிஸ்டல் அஸிடேட் கேப்சுயுல் (மகளிர் கர்ப்பப் பை கட்டி மருத்துவத்திற்கு )
*செட்டிலிஸ்டேட் கேப்சுயுல்(கொழுப்பு கரைக்கும்/உடல் பருமன் குறைக்கும் மருத்துவம்)
*டைனோஜெஸ்ட் கேப்சுயுல்( கருத்தடை மருந்து/ கர்ப்ப வலி குறைப்பு)
*மினொடுரோனிக் ஆசிட் சாப்ட் ஜெலட்டின்(எலும்பு முறிவு-ஒஸ்டியோபோரொசிஸ்)

மருந்துகள் மற்றும் ஒப்பனைப் பொருள் சட்டப் பிரிவுகளின், ஓட்டையை பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் நன்கு பயன்படுத்துகின்றன.மருந்து விற்பனையாளர்/சந்தைப்படுத்துபவருக்கு சிக்கல் இல்லை.தயாரிப்பாளருக்கே இச்சட்டத்தின் கீழ் பொறுப்பு சுமத்தப்படுகிறது.மாநில அரசுகள் மருந்து உற்பத்தி அனுமதி வழங்கிட அதிகாரம் இல்லை.மத்திய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகார அமைப்பின் இசைவு பெற்றே தயாரிப்பில் ஈடுபடவேண்டும்.

சிக்கிம், டாமன், உத்தரகாண்ட் மற்றும் அசாம் மாநிலங்கள் மருந்து தயாரிப்பு உரிமங்களை, மத்திய அமைப்பின் ஒப்புதல் இன்றி வழங்கி வந்துள்ளது, தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Wednesday, April 4, 2018

பழங்குடி மொழி காத்திடும் பூர்வீகக் குடிகள்

ஏப்ரல் 3 ந்தேதி, டைம்சு ஆப் இந்தியாவில் வெளியான, அழிவின்  விளிம்பில் உள்ள  பழங்குடி மொழிகளைப் பாதுகாத்திடும் பூர்வீகக் குடிகள்.


அலு குரும்பா, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது, நீலகிரியில், சற்றேறக்குறைய 1000 பேர் பேசக்கூடிய ஒரு மொழியாகும்.இந்த ஏப்ரல் மாதத்தில் அதற்கு எழுத்திலக்கணம் மற்றும் சொற்றொடரியல் அமையவிருக்கிறது.இம்மொழி பேசும்,  33 வயது, மலைவாழ் சமூகத்தின்.ஆர்.விசுவநாதன்,பாரதியார் பல்கலைக்கழக மாணவர். இதற்கான ஆய்வு செயல்பாட்டிற்கு முனைவர் பட்டம் பெறுகிறார்.

" நாங்கள் கன்னட கிளைமொழியை பயன்படுத்துகிறோம், எழுத்து வடிவம் கிடையாது.எமது மொழியை எழுத தமிழ் மொழியை பயன்படுத்தியுள்ளோம். எமது பணி, அருங்காட்சியக பொருளாக இம் மலைவாழ் மக்களைப் பற்றி, பின்னாளில் அறிந்து கொள்ள இயலும்' என்கிறார் ஆய்வாளர்.

"எமது இளம் பழங்குடியின் வயது 20 ஆகும். வாழ்நாள் எதிர்பார்ப்பு எம் மக்களுக்கு, 60 ஆண்டுகளைத் தாண்டவில்லை.வேலைக்காக நகரங்களுக்கான மக்களின் புலப்பெயர்ச்சி, மக்கள் தொகை படிப்படியாக சரிவு" ஆகியவைகளும் மொழி அழிவிற்கு காரணம் என்கிறார் தமது ஆய்வுக் கட்டுரையில், கோத்தகிரி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் இவர்.

காலனியாதிக்கம், இடப்பெயர்ச்சி, மற்றும் நோய்க் கொடுமைகளிலிருந்து மீண்டு, வரி வடிவம் இல்லாது,பேச்சு வழக்கில், நினைவு நிலையிலேயே வாழ்வது என்பது சாதரணமான சாதனை அன்று.

 வாய்மொழி வழக்கு என்பது, அலுகுரும்பா, தோடா, கோடா, எரவல்லா மற்றும் பேடா பழங்குடி மொழிகளுக்குரிய  பாரம்பரியம் ஆகும்.மொழி வகைகள் மற்றும் கிளைமொழிகள் காலத்தின் தாக்கம், புலப்பெயர்ச்சி, பிரதான மொழிகளின், ஊடுருவல்,விசுவாசிகளின் தளம் இழப்பு ஆகிய காரணிகள் இம்மொழிகளை வாயடைத்து விட்டன.

அணமையில் வெளியான ஆய்வில், திராவிட மொழிக் குடும்பம், 80 வகையான மொழிகள், 220 மில்லியன்(22 கோடி) மக்கள் தொகுதியினரால் தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் பேசப்பட்டு வருகின்றன.4500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது என்றும் இம்மொழிகளில் எத்தனை நீடிக்கும் என்று உறுதியாக கூற இயலாது.

இந்திய மக்கள் மொழி அளவைத்துறை, கணேஷ்தேவி, இந்தியாவின் வாழும் மொழிகள் குறித்து பதிவு செய்பவர், வீழ்ச்சியில் உள்ள மொழிகள் யாவும், "கணினி ரீதியில் இறந்துவிட்டன", "தமிழ்நாட்டில், 17 மொழிகள் அவ்வாறு இறந்துவிட்டன, அவற்றில் சில பேட்டா குரும்பா மற்றும் எரவல்லா" என்கிறார்.

மேலும், ஒரு மொழியின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் இருக்கின்றன, கல்வி அமைப்பில் மொழி பயன்பாடின்றி இருப்பது முதல் அதை பேசும் மக்கள் புலம்பெயர்வது வரை உள்ளதும் ஆகும்.

 மைசூரில் உள்ள, மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர், வி.ஞானசுந்தரம், எரவல்லா மொழி குறித்து ஆய்வு செய்து அம்மொழியின் கடைசி பேச்சுக்குரியவர் முருகேசன் உள்ளிட்டோரை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியவர், " மொழிகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்....ஆனால் ஆய்வு என்பது ஒன்று, மொழி பேசுவது என்பது வேறு" என்று பதிவு செய்கிறார்.